இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 24 December 2022

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

வையைத் தமிழ்ச் சங்கம் தேனி
                         நடத்தும்  
பன்னாட்டு திருக்குறள் திறன் போட்டி
           (இணையவழி நிகழ்வு)
                   பள்ளி மாணவ மாணவியர்களுக்கான போட்டி 

நாள் : 17-01-2023 
நேரம் காலை 10:30 மணி 

திருக்குறள் 39 ஆம் அதிகாரம் முதல் 48 ஆம் அதிகாரம் வரை. அதாவது பத்து அதிகாரங்கள் மட்டும்.

விதிகள்:
1- மேலே கொடுக்கப்பட்ட 10 அதிகாரத்தில் உள்ள குறள்கள் மட்டும் மனனம் செய்திருக்க வேண்டும்.

2- நடத்துபவர் திருக்குறளில் 10 அதிகாரங்களில் எந்த முறையில் கேள்விகள் கேட்டாலும் பதில் சரியாகச் சொல்ல வேண்டும்.

3- மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

4- தமிழ்நாட்டைக் கடந்து திருக்குறளின்பால் ஈடுபாடு உள்ள மாணவ மாணவியர் எந்த நாட்டில் இருந்தும் கலந்து கொள்ளலாம்.

5- போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மூவருக்குப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

6- போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

கலந்துகொள்ள விரும்பும் மாணவ மாணவியர் 9842370792 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

இனிய அன்புடன்
புலவர் ச. ந.இளங்குமரன், நிறுவுநர் 
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நகலபுரம்.

Tuesday, 13 December 2022

பாரதியின் தொலைநோக்கு

"பாரதியின் தொலைநோக்கு"

11-12-2022 பாரதியார் பிறந்தநாள் விழா 2022 கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணை வேந்தர் முனைவர் வைதேகி விஜயகுமார் அவர்கள் தலைமை உரை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் சீலா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  இவ்விழாவில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள் "பாரதியின் தொலைநோக்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் சந்திரமணி ஜெபராணி அவர்கள் வரவேற்று நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.  நிகழ்வின் நிறைவாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியரும் வையைத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலருமான முனைவர் சே.பத்மினி பாலா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Saturday, 29 October 2022

தமிழ் வளர்ச்சித்துறை விழா

29-10-2022 
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கிய கருத்தரங்கம் திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில்  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சா.விசாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ.இளங்கோ அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் தே.இலட்சுமி,
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நாகநந்தினி தமிழறிஞர் தமிழ்ப்பெரியசாமி, பேரா.முனைவர் மனோகரன், தமிழாசிரியர் குயிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இலக்கியக் கருத்தரங்கில் வீரமுரசு சுப்பிரமனிய சிவா குறித்து சா.சுஜாதா (ஜி.டி.என் கல்லூரி தமிழ்த்துறை தலைவர்)
மாயூரம் வேதநாயகம் பிள்ளை குறித்து தமிழறிஞர் துரை தில்லான், ஐராவதம் மகாதேவன் குறித்து வீ.குழந்தைராஜ் (மாவட்டத் தலைவர் தமிழகத் தமிழாசிரியர் கழகம்) நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை குறித்து முனைவர் பெ.சந்திரா (மேனாள் உலகத் தமிழ்ச்சங்க இயக்குநர்) கருத்துரை வழங்கினர். நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்துகொண்டு நெறிப்படுத்திய இனிய பொழுது. தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் இளங்கோ ஐயா அவர்களுக்கு நன்றி.

நிறைவாக அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள்  பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கும்,  தமிழறிஞர் நினைவுபோற்றும் இலக்கியக் கருத்தரங்கம் தொடர்பிலான பேச்சுப்போட்டியில்  வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கும் இன்று 29.10.2022 நடைபெற்ற கருத்தங்கக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் பாராட்டுச்சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். நன்றியுரை புலவர் ச.ந.இளங்குமரன்.

இனிய அன்புடன் 
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Thursday, 27 October 2022

தொல்காப்பியம் திருமணப் பொருத்தம்

சுப திருப்பதி

*தொல்காப்பியம் காட்டும் திருமண (பத்து) பொருத்தங்கள்* :

"பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு,
உருவு, 
 காம வாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"

 *ஐயா. தமிழண்ணல் உரை:* 
1. *பிறப்பு* :
நற்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
2. *குடிமை* :
அந்த நற்குடிக்கு ஏற்ற நல்ல ஒழுக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும்.
3. *ஆண்மை* :
இருவரிடமும் ஆளுமை ஒத்திருக்க வேண்டும்
4. *ஆண்டு* :
வயது ஒப்புமை வேண்டும்
5. *உருவு* :
வடிவு ஒப்புமையும் வேண்டும் பார்ப்பவர் பொருத்தமான சோடி கனல் வேண்டும்
6. *நிறுத்த காமவாயில்* :
 (தொல்காப்பியர் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்து)
 உடலில் அமைந்த காம நுகர்வுக்கான கூறுகள்.
 ஒருவர் மிக்க காம வெறி உடையவராகவும் மற்றவர் அளவாகத் துய்ப்பவராகவும் இருந்தால் ஒத்து வராது.
7. *நிறை* :
மனத்தைத் திருமணம் ஆன பின் கண்ட கண்டவாறு ஓட விடாது தடுத்து நிறுத்துதல்
8. *அருள்* :
அருள் உடைமை, அதன் அடிப்படையான அன்பும் உடையவர்களாக இருவரும் திகழ வேண்டும்
9. *உணர்வு* :
ஒருவரை ஒருவர் அறிதல்; புரிந்து கொள்ளுதல் வேண்டும்
10. *திரு* :
செல்வம்.
செல்வம் உடையமையால் வரும் மன மகிழ்ச்சியே திரு.
என்றும் எந்நிலையிலும் திரு உடையார் போன்ற மன நிறைவு அது.
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே

 இப்பத்துப் பொருத்தமுமே மிக இன்றியமையாதன

 *தொல்காப்பியம் - பொருந்தா குணங்கள்* 

"நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி
வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை,
இன்புறல், ஏழைமை, மறப்போடு, ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்."

 *ஐயா தமிழண்ணல் உரை:* 
மணமக்களிடம் அமையக் கூடாத குணங்கள்:
1. ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுவது
2. ஒருவர் மீது ஒருவர் தீமை செய்ய நினைக்கும் கொடுமை
3.ஒருவர் மற்றவரிடம் தம்மைப் பற்றி வியந்து பேசுதல்
4. ஒருவர் மற்றவரைப் பற்றி புறங்கூறுதல்
5. கடுஞ் சொற்களால் திட்டுதல்
6. ஒருவர் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையை மறத்தல்
7. இல்லறக் கடமைகளைச் செய்யாது சோம்பியிருத்தல்
8. ஒருவர் பிறர் குடியினும் தன் குடி மேலென நினைத்துப் பேசுதல்
9. ஒருவர் மற்றவரைவிட்டுத் தாமே இன்புற எண்ணிக்கொள்ளுதல். சேர்ந்து இன்புறாது, தனித்து இன்பங் காணுதல்
10. அறிவின்மை. வறுமையுமாம்
11. மறதி
12. கணவன் மனைவியைப் பிற மகளிரோடு ஒப்பிடுதலும், மனைவி கணவனைப் பிற ஆடவரோடு ஒப்பிடுதல்

Saturday, 10 September 2022

புலவர் ச.ந.இளங்குமரன் 10-09-22 வரை...

தகுதிக் குறிப்பு.

புலவர் ச.ந.இளங்குமரன்

1) நிறுவனர் - செயலர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, 

செயலர் திருவள்ளுவர் மன்றம், நாகலாபுரம்,

ஒருங்கிணைப்பாளர், செயலர் வாசிக்கலாம் வாங்க...தேனி

தலைவர், சங்கத்தமிழ் அறக்கட்டளை, தேனி,

தலைவர், தமிழர் உரிமை மீட்புக் குழு, தேனி மாவட்டம், தமிழ்நாடு.

உரிமையாளர், வையைப் பதிப்பகம்.

இயக்குநர் வையைத் தமிழ்ச்சங்கம், வலைக்காட்சி

அமைப்பாளர் : உலகத் தமிழ்க்கூடல்

2) எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர்,  இலக்கிய ஆய்வாளர், பட்டிமன்ற நடுவர், கவியரங்கத் தலைவர்.

3) எழுதிய நூல்கள்:-  

1) தமிழ் என் போர்வாள், 
2) கொலைவாளினை எடடா...! 
3) திருக்குறள் ஒரு மருந்தகம்
4)  இன்பத்துள் இன்பம் காமம் (உளவியல் ஆய்வு)
5) திருக்குறள்
 உலகப்பொதுவுரை (திருக்குறளுக்கு நான் எழுதியுள்ள உரை)
6) "வேட்டை" புதுக்கவிதை
7) தமிழ் - செம்மொழித் தகுதி வரலாறு

தொகுத்த நூல்கள்:- 
8) வையை மலர்கள்
9) விடியலின் விதைகள்
10) நெஞ்சின் அலைகள் 
11) தமிழ்நாடு பொன்விழா கவிதைகள். 

அச்சில் உள்ள நூல்கள்

12) வாழ்விக்க வந்த வள்ளலார்
13) காதலாகி.... (கவிதைகள்)
14) சொல்லும் பொருளும்
15) தொல்லியல் நோக்கில் தமிழர் தடம்.

4) * தமிழ் மொழிச் சேவைக்காக பல்வேறு தமிழ் அமப்புகள் தமிழ்மாமணி, தமிழ்ச்செம்மல், குறளாய்வுச் செம்மல், புரட்சிப் பாவலர், கவிமுரசு, குறளரசு, குறள்நெறிக்காவலர், மொழிக்காவலர், செம்மொழித் தென்றல், செம்மொழிச் செம்மல், நடமாடும் திருக்குறள் என 80 க்கும் மேற்பட்ட விருதுகள்' பரிசுகள், பட்டங்கள் என வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன். 

4) * பள்ளி, கல்லூரி மற்றும் இலக்கிய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் சுமார் 800 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளேன்.

5) * 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்திவருதல். இதுவரை 3000 பேருக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றுள்ளனர்.

6) * தமிழ்மொழி, இன மேம்பாட்டுக்கான இலக்கியக் கூட்டங்கள் நடத்திவருதல். கவியரங்கம், கருத்தரங்கம் என சுமார் 500 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியுள்ளேன்

7) * மரபுப் பா பயிலரங்கு நடத்தி இதுவரை 80 க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி வழங்கியுள்ளேன்.

8) * திருக்குறளை முதன்மைப்படுத்தி இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 230 திருக்குறள் நெறித் திருமணங்களை நடத்தியுள்ளேன்.

9) *குழந்தைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர்வைக்க வலியுறுத்தி பல்வேறு கூட்டங்களை நடத்தி வருதல், 

10) * பள்ளி, கல்லூரிகளில் தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறை சார்பிலும், தனித்தும் நடைபெற்ற 100 க்கும் மேற்பட்ட  கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு நடுவராகப் பணிசெய்துள்ளமை. 

11) பள்ளி கல்லூரி விழாக்களில் மாணவர்கள் பயனுறும் வகையில் இலக்கிய உரைகள் நிகழ்த்தி வருதல், 

10 சிறுகதைகள்.

16 நாடகங்கள்,

100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்

12) *திருவள்ளுவருக்கு சிலைவைப்பது தொடர்பான பணிகளை முன்னெடுத்தமை. எமது சொந்த ஊரில் திருவள்ளுவர் சிலை நிறுவியுள்ளோம். கடமலைக்குண்டு சிதம்பரம் விலக்கு, வைகை அணைப் பகுதியில் முதலக்கம்பட்டி, தேனி அரசினர் தொழிற்பயிற்சிக் கல்லூரி என நான்கு இடங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுள்ளது.

 13) 1994 ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் மன்றத்தின் வழியாக 29 ஆண்டுகள்,

14) வையைத் தமிழ்ச் சங்கத்தின் வழியாக 18 ஆண்டுகள்...
இலக்கியப் பணி...

15) வாசிக்கலாம் வாங்க குழுவின் மூலம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்து வருவதோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 850 க்கும் மேற்பட்ட நூல்கள் குழுவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

16) தற்போது தொல்காப்பியத்தில் உலகச்சாதனை நிகழ்த்திய அரசுப்பள்ளி மாணவிகள் அ.முத்தமிழ் சாமினி, செந்தமிழ் சாலினி ஆகிய இரட்டையர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராக இருந்துள்ளேன்

17) பன்னாட்டுத் தமிழ் ஆளுமையர் கூட்டமைப்பு நடத்திய உலகத் தமிழர்நாள் பன்னாட்டு ஆய்வரங்கின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகவும், பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்துள்ளேன்.

18) தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை நடத்திவரும் தமிழ் ஆட்சி மொழிப்பயிலரங்கில் மொழிப் பயிற்றுநராகப் பணிசெய்துள்ளேன்.

19) உலகத் தமிழ்க்கூடல் இயங்கலை அமைப்பின் அமைப்பாளராக இதுவரை 433 நாட்களில் 433 நிகழ்சிகள் நடத்தியுள்ளோம்.

20) பன்னாட்டுத் திருக்குறள் திறன்போட்டி மூன்று போட்டிகளை நடத்தியுள்ளோம், நடத்தியும் வருகிறோம்

21) அக்கினிக்குஞ்சு,
ஏழாம் அறிவு,
நல்வழி இலக்கிய இதழ்களின் பொறுப்பாசிரியர்.... என விரிக்கின் விரியும் ஐயா.

22) நடித்த குறும்படங்கள் 2
23) பின்னனிக் குரல்கொடுத்த குறும்படம் 1
24) குறுப்படத் தயாரிப்பில் துணைநின்ற குறும்படம் 1

25) நடித்த திரைப்படம் 1

நன்றி ஐயா
இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்

Tuesday, 30 August 2022

கையில் ஊமன்

கையில் ஊமன்.

உண்ணவும் முடியாமல், உறங்கவும் இயலாமல், உடல் தளர்ந்து, மனம் வாடி தன்னந்தனியனாய் அங்கும் இங்குமாக உலவிக் கொண்டிருந்தான் இனியன்.

அந்த இரவுப் பொழுதில் தென்னங்கீற்றுகளின்  ஊடாக நிலவின் வெளிச்சம் அவ்வப்போது அவன் மேல் பட்டுத் தெறித்தது.

"என்ன இனியா நான் வந்தது கூடத் தெரியாம பலமான சிந்தனையில் உலவுராப்ல இருக்கு' என்ற குமரன் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் இனியன்.

" வா குமரா என்ன இவ்வளவு தாமதம்"
"நான் சரியான நேரத்துல வந்துட்டேன், மணியப் பாரு"
ஓ.. சரிசரி எனக்குத்தான் நேரம் அதிகமானதுபோல் தோணுது'
"சரி எதுக்கு இந்நேரத்துல வரச்சொன்ன" 
"இரண்டு நாளச்சுடா அவளப் பாத்து பேசி எனக்கு என்னமோ செய்யுற மாதிரியே இருக்கு" என்று படபடத்தான்  இனியன். தன்னை அழைத்த காரணத்தைப் புரிந்துகொண்டான் குமரன். 

இனியன் படிப்பிலும், பன்பிலும் ஒழுக்கத்திலும் மிகச்சிறந்தவன். பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் அவன் எப்போதாவது தன் நண்பன் குமரனோடு அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் செல்வான். அப்படியானதொரு நாளில்தான் இன்பவல்லியை அந்தக் கோயிலில் அவன் சந்தித்தான்.  காதல் கொண்டான்.  இன்பாவும் அவனை விரும்பினாள். எப்போதாவது கோயிலுக்குச் செல்லும் அவன் நாள்தோறும் செல்லத் தொடங்கினான். இன்பா தனியாக கோயிலுக்கு வராமல் தன்னுடைய தோழி மேகலையையும் உடன் அழைத்து வருவாள். மூவரும் அவ்வப்போது அந்தத் தென்னந்தோப்பில் அமர்ந்து பேசுவது வழக்கம். இனிய எப்போது பார்த்தாலும் இன்பாவின் நினைப்பிலேயே கலைதான் முழுக்க முழுக்க அவனை அவள் ஆட்கொண்டு இருந்தாள். கண்ணியமான காதல் தொடர்ந்தது.

வழக்கம் போல் இன்பாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தான் இனியன். நேரம் நீண்டுகொண்டே சென்றது, அவர்கள் வரவில்லை. காரணம் தெரியவில்லை. நீண்ட காத்திருப்புக்குப் பின் வீட்டிற்குச் சென்றான் இனியன். 
மருநாள் காலை மேகலையை அவளது வீட்டில் சந்தித்தான்.

இன்பாவின் காதல் அவர்கள் பெற்றோருக்குத் தெரிந்து விட்டதாகவும், எனவே கோயிலுக்கு செல்வதைத் தடுத்துவிட்டதாகவும்,  "உன் மீது உண்மையான காதல் இனியனுக்கு இருந்தால், அவன் ஏதாவது ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொண்டு பெற்றோர்கள் மூலம் பெண் கேட்டு வரட்டும்" என்ற செய்தியை மேகலையின் மூலம் அறிந்து கொண்டதாகவும், அதுபற்றிக் கலந்து பேசவே தன்னை வரச்சொல்லியிருக்கிறான் எனபதனைக் அறிந்துகொண்டான் குமரன். கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.

குமரன் தொடங்கினான். "நண்பா இன்பாவின் மேல் நீ கொண்டிருக்கும் காதல் உண்மையானது என்றும எனக்குத் தெரியும், அது இன்பாவுக்கும் தெரியும். என்றாலும் நீ முழு முழுவதுமாகக் காதல் வயப்பட்டு நீ செல்ல வேண்டிய பாதையில்,  தேட வேண்டிய வேலையில்  கவனம் செலுத்த மறந்திருப்பதையும் என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது. நண்பா இன்பாவின் மேல் உனக்கு இருக்கும் காதலை சிறிது நாள் தள்ளிப்போடு. உன் கடமைகளைத் தொடங்கு பின்பு காதல் கைகூடும்" என்றான்.

"நண்ப! என்னுடைய காதிலின் நீட்சி காமமாக மாறிக் கிடக்கிறது. அந்தக்  காமத்தை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தால் மிகவும் துன்பப் படுகிறேன். நீ சொல்வது போல் நல்லதொரு வேலையைத் தேடுவது நல்லதுதான். அதுவே என் விருப்பமும் ஆகும். ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் சூடான இடத்தில் வைத்திருக்கும் வெண்ணெய் வெப்பம் தாங்காமல் உருகியோட கையில்லாத ஊமை ஒருவன் கண்ணால் பாதுகாக்க முடியாமல் கலங்குவதைப் போல, உருகிய வெண்ணெயைப் போல்  இந்த காமம் என்னிடம் பரவியுள்ளது. அதைப்  பொறுத்துக் கொள்வதற்குக் கடினமாகவே இருக்கின்றது" என்ற இனியனின் பேச்சில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொண்ட குமரன் இனியனுக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றான்.

ஆக்கம்
ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாலாபுரம்.

Thursday, 30 June 2022

பெண்ணியம் பேணும் விலங்கு ச.ந.இளங்குமரன்

பெண்ணியம் பேணும் விலங்கு!

பூ விலங்கு தலையில்.
பொன் விலங்கு கையில்.
கல் விலங்கு மூக்கில்.
கால் விலங்கோ வெள்ளி.
தொங்கல் ஒட்டல் மாட்டல்
காதில் பூட்டிய விலங்குகள்.

எத்தனை எத்தனை விலங்குகள்.
பெண்ணின் உடையிலும் உடலிலும். 
அத்தனைக்கும் மேலாய் அவள்மேல்
சுமத்தப்படும் விலங்குகளாய்ச் சுமைகள்...

பூப்பெய்திய காலத்தில் பூரிப்பும்
கூட ஒருவகை விலங்கு. 

திருமணக் காலத்தில் வரதட்சணை
விலங்குகளை மாட்ட மறுத்தால்
வசைபாடித் திரும்பும் வந்தவிலங்குகள்.

சமூக விலங்குகளின் பார்வையிலும்,
பாலியில் தொல்லையிலும் சிக்காமல்
தற்காத்துச் செல்லும் பெண்ளுக்கு
எப்போதும் பூட்டப் பட்டிருக்கிறது
அவரவர் இல்லத்தில் அடிமைவிலங்கு!

ச.ந.இளங்குமரன்

வெளிச்சத்திற்கு வெளியே...

*** வெளிச்சத்திற்கு வெளியே ***

கருப்புத் திரையிட்ட
கண்ணாடிக் கூண்டுக்குள்
கருத்த கண்ணாடிக்குள்
மங்கிய வெளிச்சத்தைத்
தனக்காக மட்டுமே
பாய்ச்சிக் கொண்டிருந்தது 
அந்த விளக்கு!

கண்ணாடியைத் துடைத்து
திரியைத் தூண்டினால்
அறைக்கு மட்டுமல்ல
வெளியிலும் கிடைக்கும்
வெளிச்சமென் றெண்ணி
கதவைத் திறந்தேன்.
தானாகச் சாத்திக்கொள்ளும்
கதவு தலையில் சாத்தியது!

தடுமாறி உள்ளே புகுந்தேன்
விளக்கிடம் சென்றேன்
கருத்துக் கிடந்த 
கண்ணாடியைக்
கையிலெடுத்தேன்.
அறையெங்கும் வெளிச்சம்.
அனையும் நோக்கில் 
ஆடியது நெருப்பு.

உடுத்திய வேட்டியின்
ஒருபகுதியை விரலில்சுற்றி
கண்ணாடிக்குள் உள்நுழைத்து
துடைக்கத் தொடங்கினேன்
கையைக் கீறியது
கண்ணடித் துண்டு
கொட்டிய குருதியில் 
வலித்தது நெஞ்சு.

கருக்கேறிய திரியில்
கருக்கினை நீக்க
எரியும் நெருப்புக்குள் 
விரலை நுழைத்துத்
திரியை நசுக்கி 
மாசு நீக்கீனேன்.
நல்லது செய்கிறான்
நமக்கென உணராத 
விளக்கு கையைச் 
சுட்டு மகிழ்ந்தது. 

துடைத்த கண்ணாடியை
விளக்கில் பொருத்தினேன்
ஆட்டத்தை நிறுத்தி
அழகாய் நிமிர்ந்து
ஒளிர்ந்தது விளக்கு
அறையெங்கும் வெளிச்சம்
அறைக்கு வெளியேயும்...

கையில் கீறல்...
நெருப்பின் தீண்டல்...
விரலிலும் வேட்டியிலும்
புகையும், கருக்கும்.
ஆனாலும் மகிழ்ச்சி.
உதவும் உள்ளங்களுக்கு
எப்போதும் உண்டு
இதுபோன்ற பரிசுகள்!

ச.ந.இளங்குமரன், நிறுவுநர்
வையைத் தமிழ்ச்சங்கம், 
தேனி நாகலாபுரம்
தமிழ்நாடு.
நாள்- 01-07-2022

9842370792

Sunday, 26 June 2022

இன்பத்துள் இன்பம் காமம் நூலாசிரியர் புலவர் ச.ந.இளங்குமரன்

தோற்றவர் வெல்வது ஊடலில் மட்டுமே...
------------------------------------------------------------------
"ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்ச்கேட்க வீற்றிருக்க லாம்"

இது நத்தத்தனார் சூடிக்கொடுத்த திருவள்ளுவமாலையாகும். திருக்குறளின் சிறப்பு பற்றி விதந்தோத இவ்வுலகில் வேறு மொழி இலக்கண இலக்கியத்திற்கு செழுமை போதாது என்பது மாத்திரமல்ல, தமிழே தடுமாறும். பல மதத்தவரும், ஆன்மீகப் பிரிவினரும் சொந்தங்கொண்டாடி வருகின்ற இத்திருக்குறள் அவற்றிற்குள் சிக்கிக்கொள்ளும் மத நூல் அல்ல. மாறாக, இது ஒரு மறை நூல். இவ்வாறான மறைநூல் உலகில் எங்கிருந்தும் கிளம்பியதில்லை தமிழ்கூறும் நல்லுலகைத் தவிர. எனவே இதனை உலகப் பொதுமறை என்று சொல்லப்படுவதை உலகமே வியப்புடன் ஒப்புக்கொண்டுவிட்டது. 

ஒரு மனிதன் போகின்ற பாதைகளிலெல்லாம் சந்திக்கின்ற அனுபவங்களிலெல்லாம் ஏதாவது ஒரு திருக்குறள் ஒலித்தே தீரும். ஒவ்வொரு குறளும் ஓராயிரம் பக்கங்களை எழுதித் தீர்ப்பதற்கான கருத்துக்களை தன்னடத்தே பொதிந்து வைத்திருக்கிறது என்பது உலக அனுபவம். அந்த வகையில் திருக்குறள் பற்றிய, அதனுடைய உள்ளடக்கங்கள் பற்றிய லட்சக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டுள்ளன, எழுதப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் திருவள்ளுவர் பகுத்தாய்ந்து உலகிற்கு கொடையாய்த் தந்த "இன்பத்துப்பால்" என்ற பகுதி குறித்து தன்னுடைய பார்வையை "இன்பத்துள் இன்பம் காமம்" என்ற தலைப்பில் நூலாகப் பதிவு செய்து தந்திருக்கிறார் ச.ந.இளங்குமரன் அவர்கள். 

தனித்தமிழ் ஆர்வலர்கள் மிகவும் அருகிவந்துவிட்ட நிலையில் தன்னைச் சுற்றிக் கடுமையான மொழிச்சிதைவுச் சூழல் நெருக்கிக்கொண்டிருக்கின்ற நிலையைத் தூக்கி நிறுத்த தன்னால் இயன்றவரை தனித்தமிழ் பற்றின தேவை குறித்தும், அதுபற்றின விழிப்புணர்வையும் பரப்புரையாக்கி வரும் இளங்குமரனின் அரும்பணி போற்றுதலுக்குரியது. அவரிடமிருந்து இத்தகைய நூல் பிறந்திருப்பது இயல்பே. திருக்குறளின் இன்பத்துப்பாலை ஐந்தினைக்குள் புகுத்தி அதற்குள் இருபத்தியோரு தலைப்புகளைப் பிரித்து வைத்து குறட்பாக்களைச் சொல்லி விளக்குகின்ற இந்நூல் காம உணர்வின் நயங்களையும், தலைவன் தலைவியின் நேர்மையையும், காமச் சுதந்திரம் பெண்களுக்கு தருகின்ற துணிவனையும் நேர்த்தியாகச் சொல்கிறது. 

"காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இல் விரண்டு" 

நெஞ்சொடு கிளத்தல் அதிகாரத்தில் சொல்லப்படும் இக்குறள், "நல்ல நெஞ்சமே! ஒன்று காம இச்சையை விடு! இல்லையேல் நாணத்தை விடு. அன்றி ஒன்றற்கொன்று மாறாய் இவ்விரண்டையும் சேர்த்துத் தாங்கும் வலிமை எனக்கு இல்லை" எனப் பொருள்படுத்துகிறது. 

"கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்" 

தலையணங்குறுத்தல் அதிகாரத்தில் சொல்லப்படும் இக்குறள், "இப்பெண் தனது சாயாத கொங்கைகளின்மேல் இட்ட மறைப்பாடையானது அக்கொங்கைகள் என்னைக் கொல்லாமல் காத்தலின், கொல்லும் இயல்புடைய மதயானையின் கண்களை மறைக்க இட்ட முகமூடித் துணியைப் போன்றதாகும்" என்கிறது. 

இவையெல்லாம் ஆண்பெண்ணின் மெல்லிய உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்ற, அதேவேளையில் தலைவனுக்கானதும் தலைவிக்கானதுமான அன்பு, காதல், காமம் இம்மூன்றையும் இணைக்கின்ற அதிகாரப் புள்ளியை செருக்குடன் சொல்லுவதற்கான இணையற்ற மொழிவளத்தினை தமிழ் கொண்டிருப்பதைப் பறைசாற்றுகின்ற சிறு உதாரணங்களாகும். காமத்தின் இன்றியமையாமை குறித்துச் சொல்லும் இப்பகுதிகள், கட்டாயப்படுத்துவது காமமாகாது என்றும் சுட்டிக்காட்டும் நெறிகொண்டவையாகும். இயற்கையில் ஊற்றெடுக்கின்ற காமம் அந்த இயற்கைக்கு ஒப்பானது என்பதையும் அதை எவ்வாறு சுவைத்திட வேண்டும் என்பதோடு பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவே இன்பத்துப்பாலின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதன் உள்ளடக்கத்தை தன்னளவில் விளக்கியிருக்கிறார் இந்த இன்பத்துல் இன்பம் காமம் என்ற நூலில் ச.ந.இளங்குமரன். 

நவீனம் என்கின்ற இலக்கியம் தேவை என்கின்ற தமிழகச் சூழலில் மரபும், மறையும் எத்தகைய உன்னதமானவை என்பதை உணர்த்துகின்ற வழிப் பயணமும் தேவை, அவைகளை புறக்கணித்துவிடக்கூடாது எனவும் உரக்கச் சொல்லிவருகின்ற இளங்குமரனின் செயல்பாடு பாராட்டுக்குரியது. தமிழ் உணர்வோம், அதன் வளம் உணர்வோம், குறளாய் வாழ்ந்து அன்பால் இவ்வுலகம் வெல்வோம் என்பதே தமிழக மக்கள் நோக்கம். அத்தகைய நோக்கத்திற்கு வலு சேர்த்துவரும் இளங்குமரன் போன்றோர்களின் பணி சிறந்திட வேண்டும். அத்தகையோர்க்கு நாமெல்லாம் உறுதுணையாற்றிட வேண்டும். 

வாழ்த்துகள் ச.ந.இளங்குமரன்.

Thursday, 23 June 2022

கவியரசர் கண்ணதாசன் - கவிதை - ச.ந.இளங்குமரன்

---- கவியரசர் கண்ணதாசன்----- 
------- பிறந்தநாள் ------

கூடலிலே பிறந்தான் - சிறு
கூடலிலே பிறந்தான்!
குடியினிலே வளர்ந்தான் - காரைக்
காரைக்குடியினிலே வளர்ந்தான்
போதையிலே கிடந்தான் - தமிழ்ப்
போதையிலே கிடந்தான் 
புகழோங்கிச் சிறந்தான் - இப்
புவிபோற்றத் திகழ்ந்தான்!

மங்காப் புகழ்கொண்ட
மானமிகு தமிழினத்தின்
சங்கப் பாடல்களின்
சாரமது குறையாமல்
பொங்கற் சுவைசேர்த்துப்
பூந்தமிழின் நறுமணத்தை
எங்கும் பரவுதற்கு
ஏற்றவகை செய்தான்!

சித்தரது இலக்கியத்தைச் 
சீர்தூக்கி ஆய்ந்தான்!
இத்தரையின் மக்களெலாம்
விளங்கும்படி ஈந்தான்!
புத்தனையும் விஞ்சுகின்ற  புதுஞானம் பெற்றான்!
புத்துலகக் கவிஞருக்கு
புதுப்பொருளும் ஆனான்!

பாடாத பொருளில்லை!
பாரினிலே அவன்பாட்டைப்
பாடாத, கேக்காத
வாயில்லை செவியில்லை!
தேடாத விழியில்லை 
தேவனவன் செந்தமிழை
நாடாதோர் நானிலத்தில்
நற்பாடல் தருவதில்லை!

ஓவியமாய் நூல்கள்பல
ஒண்டமிழ்க்குத் தந்தவன்!
மேவிநிற்கும் புலவருக்கு
மேன்மையானய் நின்றவன்!
சாவதனைச் சாகவைத்துச்
சாகாமல் வாழ்பவன்!
காவியத்தாய் இளையமகன்!
கவியரசெம் காதலவன்!

ச.ந.இளங்குமரன், நிறுவுநர்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி

Saturday, 7 May 2022

முருகன் + கண்ணன் = இளங்குமரன்

முருகன் + கண்ணன் = 
         இளங்குமரன்.

பொதுவாக இளங்குமரன் என்ற பெயர் முருகன் என்னும் இறைவனைக் குறிப்பதாகப் பலரும் சொல்லி வருகின்றனர். அவ்வாறான பதிவுகளும், குறிப்புகளும் அதிகம். ஆனால் இளங்குமரன் என்ற சொல் கண்ணனையும் (திருமால்) குறிக்கும் என்கிற செய்தியை எமது ஆசான் பெரும் புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஐயா அவர்களது இயற்பெயர் கிருட்டினன் என்பது.  தன்னுடைய இயற்பெயரை தந்தையாரின் இசைவோடு  இளங்குமரன் என்று மாற்றிக் கொண்டவர். மதுரை அழகர் மலைக் கல்வெட்டில் இளங்குமரன் என்று பெயர் இருப்பதாக ஆசான் சொல்ல அருகமர்ந்து கேட்டிருக்கிறேன்.

இன்று காலை சுமார் நான்கு மணி அளவில் முனைவர் பட்ட ஆய்வேடு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் எதிர்பாராத செய்தி எனக்குக் கிடைத்தது. அதாவது கண்ணனுக்கு இளங்குமரன் என்ற பெயர் உண்டு என்ற எமது ஆசானின் கூற்று அடங்கிய அப்பாடலைக் கண்டதும் மனம் மட்டிலா மகிழ்ச்சியில் துள்ளியது. எமது ஆசான்  திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையில் என்னிடம் பேசிய செய்தி பசுமரத்தானியாய் நெஞ்சில் நிழலாடியது.

அப்பாடலை இயற்றியவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார். மாலியர்களால் போற்றப்படும் 108 திருப்பதிகளுள் ஒன்றான திருக்கடிகைக் குன்றைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

அப்பாடல்...

"பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டங் குறைவாற்குக் கோயில்போல - வண்டு வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை #இளங்குமரன் றன்விண் ணகர்".

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி.

Thursday, 5 May 2022

மாத்திரை

குறில், நெடில், மாத்திரை.

3 குற்றெழுத்து

அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப.

தெளிவுரை : 

அவற்றுள் - முன்னர் சொன்ன முப்பது எழுத்துகளில் உயிரெழுத்து என்பவற்றுள்,  அ, இ, உ, எ, ஒ என்னும் அப்பால் ஐந்தும் - அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்து எழுத்துக்களும், ஓரளபு இசைக்கும் -  ஒரு மாத்திரை அளவாக ஒலிக்கும், குற்றெழுத்து என்ப -  குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்று தொல்லாசிரியர் சொல்வர்.

விளக்கம்

மாத்திரை என்பது எழுத்துகள் ஒலிக்கப்படும் கால அளவு. இதற்கான அளவுகோல்கள், கண் இமைக்கும் பொழுதும், கைநொடிப்பொழுதும் ஆகும். உயிர் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவை வைத்து குறில், நெடில் அதாவது குற்றெழுத்து, நெட்டெழுத்து என இருவகையாகப் பகுத்துள்ளனர் நம் முன்னோர்.

 4. நெட்டெழுத்து
 
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஒள என்னும் அப்பாலேழும் ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.

தெளிவுரை : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள ஆகிய, அப்பால் ஏழும் - ஏழு எழுதுகளும், ஈரளபு இசைக்கும் -  இரண்டு மாத்திரை அளவின தாக ஒலிக்கும் நெட்டெழுத்துகள் என்று முன்னாசிரியர் மொழிவர். 

விளக்கம் : எழுத்துகளை குறில், நெடில் என இரண்டாகப் பகுத்த முன்னாசிரியர் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவை வைத்து குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை எனவும் அளவுகோல வைத்தார்.

ச..ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி, நாகலாபுரம்.

Monday, 2 May 2022

தொல்காப்பியம் - சார்பெழுத்துகள்

சார்பெழுத்துக்கள்

 2. 

அவைதாம் 

குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன.

தெளிவுரை : 
அவைதாம் - சார்பு எழுத்துகள் மூன்று என்று சொல்லப்பட்ட அவை
குற்றியல் இகரம் - குறுகிய ஒலியை உடைய இகரமும்
குற்றியல் உகரம் - குறுகிய ஒலியை உடைய உகரமும்
ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் - ஆய்தம் என்று இலக்கணம் ஆய்ந்த புலவர் பெருமக்களால் ஆராய்ந்து வழங்கப்பட்ட மூன்று புள்ளி வடிவினதாகியதும் ஆகிய மூன்றும்
எழுத்து ஓர் அன்ன - எழுத்தோடு ஒப்ப அமைந்ததாம்.

பொருள் : சார்ந்துவரும் மரபை உடைய எழுத்து சார்பெழுத்து என்று முன் நூற்பாவில் சொல்லப்பட்ட அவை, குற்றியலிகரம். குற்றியலுகரம் ஆய்தம் என்றழைக்கப்படும் மூன்று கூறாகிய புள்ளி ஆகிய மூன்றும் ஆகும் இவை முன்னர் கூறிய முப்பது எழுத்துக்களோடு ஒரு தன்மையாக விளங்கும்.

விளக்கம்  (1)

: சார்பெழுத்துக்கள் என்பவை தனித்தியங்கும் தன்மை இல்லாதவை. பிற எழுத்துக்களைச் சார்ந்தே அவை இயங்கும். அதாவது தம்முடைய ஒலிப்புக் கால அளவாகிய மாத்திரையை இழந்து, முந்தைய எழுத்தின் சார்பாக நின்று, குறுகி ஒலிக்கும். இகரம் குறுகி ஒலிப்பது, குற்றியலிகரம். ஆய்தம், தனித்தியங்காது. அது அஃகி, எஃகு, கஃறு போன்று பிறவற்றைச் சார்ந்து ஒலிக்கும். எனவே இதுவும் சார்பெழுத்து ஆயிற்று.

தொல்காப்பியர் காலத்தில் மூன்று புள்ளிகளையிட்டு எழுதும் வழக்கத்தை 'ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப் போல மூன்று புள்ளி (ஃ) வடிவிற்றென்பது' என்று நச்சினார்க் கினியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிவம் நச்சினார்க்கினியர் காலத்திலேயே மாறிவிட்டது. இதனை 'இக்காலத்தார் நடுவு வாங்கி இட்டெழுதுப' எனும் அவர் கூற்று உறுதிசெய்யும். இதற்கேற்ப 8 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட காசக்குடிச் செப்பேட்டில் வெஃகா என்ற சொல் 'வெ÷கா' என்று பொறிக்கப் பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

Sunday, 1 May 2022

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் -

1.நூன்மரபு

எழுத்தின் இலக்கணம் உணர்த்தும் பகுதி என்பதால் எழுத்ததிகாரம் என அழைக்கப்படுகிறது. இதன் முதல் இயல் நூன்மரபு ஆகும். நூலின் மரபு உணர்த்தும் பகுதி 'நூன் மரபு' ஆயிற்று. மொழிக்கு உறுப்பாகிய எழுத்துக்களால் ஆக்கப்படுவது நூல். எனவே 'நூன்மரபு' என்பது, ஆகுபெயராகி எழுத்துக்களின் மரபைக் குறித்தது. நூன்மரபில் எழுத்துக்களின் வகை, அவற்றின் பெயர், மாத்திரை, எண், வடிவு, மயக்கம், பிற மரபுகள் ஆகியவை கூறப்படுகின்றன.

 1. 
எழுத்துகளின் வகை
முதலெழுத்து.

எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃதென்ப

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

தெளிவுரை

எழுத்தெனப் படுப - எழுத்து  என்று சிறப்பித்துக் சொல்லப்படுபவை 
அகரம் முதல் - அகர எழுத்தை  முதலாகக் கொண்டு
னகர இறுவாய் - 'ன'கர ஒற்றெழுத்தை இறுதியாக உடைய (உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18. (12+18=30) முப்பது எழுத்துகள் என்று முன்னாசிரியர் சொல்வர். 

சார்ந்து வரல் மரபின் - முதல் எழுத்தைச் சார்ந்து வருதலை தனக்கு இயல்பாக உடைய 
மூன்று அலங்கடையே -  குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் மூன்று எழுத்துக்களும் நீங்கலாகத் தமிழ் எழுத்துக்கள் முப்பது மட்டுமே.

விளக்கம் :

இலக்கணத்தில் தேர்ந்த சான்றோரால் எழுத்து என்று சிறப்பித்துச் சொல்லப் படுபவை அகரத்தை முதலாகக் கொண்டு னகரத்தை இறுதியாக உடைய அதாவது உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆகிய முப்பது எழுத்துகள் மட்டுமே என்று கூறுவர். 

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி, நாகலாபுரம்.

(படம் சொல்லும் செய்தி கோவை பேரூர் ஆதீனம் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற தொல்காப்பியர் சிலை திறப்புவிழாவில் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநரும், தமிழ்ச் செம்மொழி உயராய்வு மையத்தின் தமிழ் அறிஞருமான முனைவர் பேரா.ப. மருதநாயகம் ஐயா அவர்களோடு)

Friday, 22 April 2022

தொல்காப்பியத் தூதர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி....

தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் வழிகாட்டுதலில் உலகத் தொல்காப்பியத் தூதர் விருது பெற்ற முத்தமிழ் சாமினி செந்தமிழ் சாலினி ஆகியோரது தொல்காப்பியச் சேவையைப்  பாராட்டி தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கும் பணமுடிப்பும், விருதும் வழங்கிச்  சிறப்பித்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களுக்கும், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர், இணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட அரசு அலுவலர் அனைவருக்கும்,  தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், உத்தமபாளையம் வட்டாச்சியர் அவர்களுக்கும், நன்றி....

மற்றும் இந்த தொல்காப்பியக் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணைநின்ற செந்தமிழ் இலக்கிய மன்றம் சின்னமனூர், உலகத் தொல்காப்பியர் மன்றம் அமெரிக்க, மதுரை தொல்காப்பியர் மன்றம், கோவை தொல்காப்பியர் தமிழ்ச் சங்கமம் உலகத் திருக்குறள் சமுதாய மையம் புதுச்சேரி, உலகத் தமிழ்க்கூடல், தேனீக்கள் அறக்கட்டளை கம்பம், தேனி மனிதநேயக் காப்பகம் உள்ளிட்ட அனைத்துத் தோழமைகளுக்கும் நன்றி. 

மேலும் உலகத் தொல்காப்பியர் தூதுவர்களின் வளர்ச்சிக்குத் துணை நின்ற அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி...

புலவர் ச.ந.இளங்குமரன்நிறுவுநர் தேனி வையைத் தமிழ்ச்சங்கம், -  சங்கத் தமிழ் அறக்கட்டளை தேனி திருவள்ளுவர் மன்றம் நாகலாபுரம்.

Friday, 8 April 2022

உலகின் முதல் தொல்காப்பியத் தூதர்

உலகின் முதல் தொல்காப்பியத் தூதர் விருது பெற்ற உலகச் சாதனையாளர்களை 

வாழ்த்துகிறது வையைத் தமிழ்ச்சங்கம் தேனி.

உலகத் திருக்குறள் சமுதாய மையம் ஏற்பாடு செய்த தொல்காப்பியம் மனன முற்றோதல் (03-04-2022) காலை 4.45 மணிக்கு நிறைவுற்றது. 

இந்நிகழ்வில் தேனி வையயைத் தமிழ்ச்சங்கத்தின் வழிகாட்டுதலின் மூலம் கலந்துகொண்டு
இந்த நிகழ்வினை நடத்திய திருக்குறள் மாமணி செல்வி அ. முத்தமிழ் சாமினி, திருக்குறள் மாமணி செல்வி அ.செந்தமிழ் சாலினி ( எட்டாம் வகுப்பு) ஆகிய சகோதரிகள் , தொடர்ந்து 12 மணி நேரம் தொய்வு இல்லாமல் நிகழ்த்தி, உலகச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

உலகத்தில் மாணவிகள் இருவர் தொல்காப்பியம் முழுவதும் ஆறு சுற்று அமைவில், மனனம் முறைமையில் முற்றோதல் செய்துள்ளமை, இதுவே முதன்மை.  இதுவே உலகச் சாதனை. 

இந்த நிகழ்வினைக் கண்காணித்த,  புதுச்சேரி அகில இந்தியா உலகச் சாதனை பதிவு மையத்தின் நிறுவனர் , தலைவர், உலகச் சாதனை நாயகர் திருக்குறள் முனைவர் வேங்கடேசன் அவர்கள், இவ்விரு மாணவிகளை வாழ்த்தி, "தொல்காப்பியத் தூதர்" என்னும் உயரிய விருதினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளார்.
திருக்குறள் மாமணி செல்வி அ. முத்தமிழ் சாமினி, திருக்குறள் மாமணி அ. செந்தமிழ் சாலினி. 
உலகிலேயே முதன் முறையாகத்"தொல்காப்பியத் தூதர்" என்னும் உயரிய விருதினை பெற்றவர்கள் என்னும் மாண்பினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 4 April 2022

அழகிலுண்டு....

அழகிலுண்டு...

அவ்வப் போது
முகம்காட்டி
அமுத மொழியில்
நஞ்சேற்றி
அகத்தில் குருதியில்
பாய்ச்சுகிறாய்
ஆசைத் தீயை 
மூட்டுகிறாய்

மூட்டிய தீயின்
தாக்கத்தால்
முட்டும் மூச்சில்
தடுமாற
ஈட்டி விழியால்
தாக்குகிறாய்
எட்ட நின்று
சுவைக்கின்றாய்.

சுவையிற் சிறந்த
சுவையாவாய்
சோர்வு நீக்கும் 
மருந்தாவாய்
அவையிற் சிறந்த
தமிழாவாய்
அனைத்துப் புகழும்
நீயாவாய்.

நீயே எல்லாம் 
என்றவனின்
நிம்மதி தன்னைக்
குழைத்துவிட்டு
சாவை நோக்கித்
தள்ளுவது
பாவை உனக்கு 
அழகாமோ....

அழகில் உண்டு
ஆபத்து
அழகே உன்னால்
அறிந்துகொண்டேன்.
அழகே உன்னை 
நீங்குகிறேன்
ஆபத்தில் இருந்து
விலகுகிறேன்.

ச.ந.இளங்குமரன்

Friday, 1 April 2022

திருக்குறள் திறன் போட்டி வையைத் தமிழ்ச்சங்கம் தேனி

*வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி* & வையைப் பதிப்பகம் தேனி.
நடத்தும்

மாநில அளவிலான
*திருக்குறள் திறன் போட்டி -2* 
(மாணவ மாணவியர்களுக்கான போட்டி)

நாள் : 24-04-2020 
*நேரம் காலை 10-30 மணி*

திருக்குறள் 11 முதல் 22 அதிகாரம் வரை.

தலைப்புகள்
*செய்நன்றி அறிதல்*
*நடுவுநிலைமை*
*அடக்கமுடைமை*
*ஒழுக்கமுடைமை*
*பிறனில் விழையாமை*
*பொறையுடைமை*
*அழுகாறாமை*
*வெஃகாமை*
*புறங்கூறாமை*
*பயனில சொல்லாமை*
*தீவினையச்சம்*
*ஒப்புரவறிதல்*

**விதிகள்**
1 - மேலே கொடுக்கப்பட்ட 12  அதிகாரத்தில் உள்ள குறள்கள் மட்டும் மனனம்

2 - நடத்துபவர் கேட்கும் திருக்குறளில் விடுபட்ட சொற்களைச் சொல்ல வேண்டும்...

3 - இரண்டாம்  வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்...

4 - தமிழ்நாட்டைக் கடந்து திருக்குறளின் பால் ஈடுபாடுள்ள மாணவ மாணவியர் எந்த நாட்டிலிருந்தும் கலந்துகொள்ளலாம்.

போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர் தங்களது *பெயர், பயிலும் வகுப்பு, பள்ளியின் பெயர் ஆகியவற்றைப் பதிவு செய்யவும்*
பதிவு செய்யக் கடைசி நாள் : 20-04-2021

போட்டி நடுவர்கள்...

1) *கவிஞர் இலட்சுமி குமரேசன்*
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி
2) *கவிஞர் பா.கவிதா*
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி

3) *மதிப்புறு முனைவர் மூ.செல்வம்*
வையைத் தமிழ்ச்சங்கம்
4) *பா.செல்வக்குமரன்* . வையைத் தமிழ்ச்சங்கம்

திருக்குறள் வினாடிவினாப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் *பங்கேற்புச் சான்றிதழும்* வெற்றியாளர்களுக்குப் *பாராட்டுச் சான்றிதழும்* வழங்கப்படும்.

தொடர்புக்கு

தமிழ்மாமணி *புலவர் ச.ந.இளங்குமரன்* 
*98423 70792* 

நிகழ்வு - வையைத் தமிழ்ச்சங்கம் வலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகும்.

போட்டி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 12 போட்டிகள் நடைபெறும். 12 போட்டிகளிலும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் அனைவருக்கும் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் ஆண்டுவிழாவில் சிறப்புப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்படும்.

(அறிவிப்பை மற்றவர்க்கும் பகிர்ந்து உதவுக)

தூய தமிழ்ப் பேசு போட்டி

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் "உலகத் தமிழ் கூடல்" சார்பில் மாநில அளவிலான "தூய தமிழ்ப் பேச்சுப்போட்டி" இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது.  இதில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவ மாணவியர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் தூய தமுழ்ப் பேச்சுப் போட்டியில்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்
80 தலைப்புகள் இந்த போட்டியில் கொடுக்கப்ப்பட்டன. ஒவ்வொரு தலைப்பிலும் மாணவ-மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஆங்கிலம் கலவாமலும், பிறசொல் தவிர்த்தும்  அருமையாக பேசினார். ஐந்து சுற்றுகளாகப் போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்கள்...
வரிசைப் படி

1. அ.முத்தமிழ் சாலினி தேவாரம்,தேனி
2.க.ரா.விசாலி, மேல்மருவத்தூர்.
3. செ.காவியா சென்னை
4. மோகனசிவானி ராசபாளையம்
5.தேசிகாஸ்ரீ இராசபாளையம்
6.ரக்சிதா திருவள்ளூர்
7.கிருபானிகா இராசபாளையம்
8.அ.சு.யாழினி திருச்சி
8.சுபிக்சா நாகப்பட்டினம்
9.முவேதா கோவில்பட்டி
10. செந்தமிழ் சாமினி தேவாரம் தேனி பத்துப் பேர் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கான பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அனுப்பிவைக்கப்பட்டது

மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியினை தமிழ்ச்செம்மல் முத்துமணி, கவிஞர் லட்சுமி குமரேசன், கவிஞர் மூ.செல்வம், கவிஞர் செல்வராணி  ஆகியோர் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். தூய தமிழ்ப் பேச்சுப்போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகையினை கவிஞர் லலிதாசியாம், நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரனார், வழக்குரைஞர் ஆசைத்தம்பி ஆகியோர் இணைந்து வழங்கினர். நிறைவாக நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வினை தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவனரும் உலகத் தமிழ்க்கூடல் அமைப்பாளருமான புலவர் ச.ந.இளங்குமரன் இணைய வழியில் ஒருங்கிணைத்துச் செயல் படுத்தினார். நிகழ்வு தேனி வையைத் தமிழ்ச்சங்கம் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பானது.

நன்றி தினத்தந்தி நாளிதழ், உரிமைக்குரல் நாளிதழ்

Saturday, 26 March 2022

திருக்குறளும் மனுதர்மமும் - நாவலர் இரா.நெடுஞ்செழியன்


திருக்குறளும் மனுதர்மமும்

நாவலர் நெடுஞ்செழியன்
வள்ளுவர் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்துகள் சிலவற்றைப் பரிமேலழகர், தம் உரையில் புகுத்தியுள்ளார் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக் காட்ட இயலும்.
பரிமேலழகர், திருக்குறளுக்கு உரை எழுதத் துவங்கும்போதே, எடுத்த எடுப்பிலேயே, “அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கிய ஒழித்தலும் ஆம்.’’ என்றும், “ஒழுக்கமாவது, அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப் பட்ட பிரமசாரியம் முதலிய நிலை களின்று அவ்வவற்றிற்கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.’’ என்றும், “அதுதான் (அவ்வொழுக்கம்) நால் வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறு பாடுடைமையின், சிறு பான்மையாகிய அச் சிறப்பு இயல்புகள் ஒழித்து, எல்லோர்க்கும் ஒத்தவின் பெரும்பான்மையாகிய பொது வியல்புபற்றி, இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடமொழியாளராகிய மனு, தமது சாத்திரத்தில் கூறுகின்ற ‘தருமம்’’ என்பது வேறு, வள்ளுவப் பெருந்கையார் திருக்குறளில் கூறுகின்ற ‘அறம்’ என்பது வேறு, மனுவின்படி மனிதகுலம் நான்கு வருணத் தாராகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு வகையான சட்டவிதியின் கீழ் நீதிகளும் தன்மையதே ‘தருமம் ஆகும். ஆனால், வள்ளுவரின் கருத்துப்படி மனிதகுலம் அனைத்திற்கும் அன்புநெறி, அருள்நெறி, அறிவு நெறி, பண்பு நெறி, ஒழுக்க நெறி போன்றவற்றின் கீழ் விதிக்கப்பட்ட கடமையைக் கூறும் தன்மையதே ‘அறம்’ ஆகும்.
(1) எல்லாம் மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட. ``பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’’ (குறள் 972) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
(2) கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் பிறந்திருந்து கற்றவர்களைப் போல பெருமை யுடையவராகக் கருதப்பட மாட்டார்கள் என்னும் கருத்துப்பட.... “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும், கற்றார் அனைத்திலர் பாடு’’ (குறள் - 409) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். ஆனால், ``பிராமணர் இந்த மனுநூலைப் படிக்கலாம். மற்ற வருணத்தார்க்கு ஒது விக்கக்கூடாது.’’ (மனு த.சா.அ.1சு.103) என்றும், ``சூத்திரன் பக்கத்தில் இருக்கும் போது, வேதம் ஓதக் கூடாது.’’ (மனு த.சா.அ.1 சு.99) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
(3) ஒருவர்தாம் தேடிய பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் நாம் மட்டும் தனியாக இருந்து, உண்ணுதல் என்பது வறுமையால் இரத்தலைக் காட்டிலும் கொடிது ஆகும் என்னும் கருத்துப்பட இரத்தலின் இன்னாதது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்’’ (குறள் 229) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், “சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையுங்கூட கொடுக்கலாகாது’’ (மனு த.சா.அ.4 சு.80) என்று கூறு வது மனுவின் தருமம் ஆகும்.
(4) பசுவின் நாவறட்சியைப் போக்க, நீர் தாரீர் என்று பிறரை நோக்கி இரந்து கேட்டாலும் அப்படி இரத்தலைவிட இழிவான செயல் வேறொன்றும் இல்லை என்னும் கருத்துப்பட “ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு, இரவின் இனி வந்தது இல்’’ (குறள் - 1066) என்பது வள்ளுவரின் அறம் ஆகும்.
‘சுழன்றும் ஏற்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’’ (குறள் 1031) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், “பயிர்த் தொழில் நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்டதாகும்.’’ (மனு த.சா.அ.10 சு.84) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
(6) ஒருவன் எப்பொழுது பொய் சொல்லாமல் இருப்பானேயானால், அவன் வேறு அறங்களைக் கூட எப்பொழுதும் செய்யவேண்டியதில்லை. அதுவே, எல்லா அறங்களின் பயனையும் தரும் என்னும் கருத்துப்பட “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற, செய்யாமை, செய்யாமை நன்று’’ (குறள் 297) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், “பல மனைவிகளையுடையவன் அவர்களின் புணர்ச்சிக்காவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை’’ (மனு த.சா. அ.8, சு.112) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
(7) உயிர்களைக் கொன்றும் நெய் முதலிய பொருள்களைச் சொரிந்தும் ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட ஒரு உயிரின் உயிரைப் போக்கி, அதன் ஊனை உண்ணாமல் இருத்தல் நல்லது ஆகும் என்னும் கருத்துப்பட ``அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன், உயிர் செகுத்து உண்ணாமை நன்று’’ (குறள் 259) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.’’
ஆனால், “உண்ணத்தக்க உயிர்களை நாள்தோறும் கொன்று உண்டாலும், பாவத்தை பிராமணன் அடையமாட்டான் பிரமனாலேயே உண்ணத்தக்க வையும், கொல்லத்தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றன.’’ (மனு த.சா.அ.5, சு.30) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
(9) எந்த ஒரு பொருளைப்பற்றி எவரெவர் என்ன சொல்லக் கேட்டாலும் கேட்டவாறு அப்படியே அதனை ஏற்றுக் கொண்டு விடாமல், அந்த பொருளினுடைய உண்மையான பொருளைக் கண்டறிவதே அறிவுடைமையாகும் என்னும் கருத்துப்பட ``எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’’ (குறள் 423) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், ``வேதத்தைக் கருதி என்றும் தரும சாத்திரத்தை சுமிருதி என்றும், அறியத்தக்கன அவ்விரண்டையும் ஆராய்ச்சி செய்து மறுப்பவன் நாத்திகன் ஆவான்’’ என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
(10) குற்றம் இன்னதென்று ஆராய்ந்து பார்த்து, யார் பக்கமும் சாயாமல், நடுவு நிலைமை பொருந்துமாறு நின்று யாரிடத்திலும் குற்றத்திற்கான தண்டனையை ஆராய்ந்து அதற்கு ஏற்றபடி நீதி வழங்குவதே அரசனது செங்கோல் முறையாகும் என்னும் கருத்துப்பட ``ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார் மட்டும் தேர்ந்து செய்வதே முறை’’ (குறள் - 541) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். ஆனால், ``பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதைச் செய்து கொல்லுக. ஆனால், பிராமணன் சூத்திரனுடைய பொருளை அவன் விருப்பப்படி கொள்ளையிடலாம்’’ (மனு த.சா.அ.9 சு.248) என்றும், ``பிராமணன் எத்தகைய குற்றங்களையும் செய்தாலும் அவனைத் தூக்குப் போட வேண்டிய நிபந்தனை ஏற்பட்டால் அவன் தலையை மட்டும் மொட்டை அடிக்க வேண்டும். அதுவே, அவனுக்குத் தூக்குத் தண்டனைக்கு ஒப்பாகும் மற்ற வருணத் தாருக்குக் கொலையே தண்டனை’’ (மனு த.சா.அ.8, சு.379) என்றும், ``அரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனை கொல்ல நினைக்கக் கூடாது’’ (மனு த.சா.க.8 சு.381) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
இவை மட்டுமல்லாமல் ``பெண்போகம் புலால் உண்ணல், கள் குடித்தல் ஆகிய இவை மனிதர்களுக்கு இயற்கையான குணங்களா கையால், இவைகளைக் குறித்து விதிகள் அவசிய மில்லை’’ என்றும்,
``நான்கு வருணத்தாரின் பெண்களையும் பிராமணன் மட்டும் அவன் விரும்பியவாறு திருமணம் முடித்துக் கொள்ளலாம்’’ என்றும்.
``விவாகக் காலங்களில் பொய் சொல்லலாம்’’ என்றும் ``தனது நாயகன் இறந்து விட்டால், அல்லது புத்திரப் பேற்றை விரும்புகின்ற பெண்ணானவள், விருது காலத்தில் உடம்பில் நெய்யைப் பூசிக்கொண்டு, தன் கணவனது சகோதரரையோ அல்லது அந்தக் குலத்தில் யாரையேனும் புணர்ந்து கொள்ளலாம்’’ என்றும், ``பிராமணன் பெற்றதாய் ஒருத்தியைத் தவிர மற்ற பெண்களையெல்லாம் புணரலாம்.’’ என்றும், வடமொழியாளரின் சுருதிகளும், சுமிருகிகளும் கூறியிருக்கும் தருமங்கள் போன்றவைகள் அனைத்தும், வள்ளுவருக்கு அறவே உடன்பாடில்லாத கருத்தாகும்.

Tuesday, 22 March 2022

மேடைப் பூக்கள் நூல் விமர்சனம் - கவிஞர் ம.கவிக்கருப்பையா

அண்மையில் எமது வையைப் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் பத்மினிபாலா அவர்களது மேடைப்பூக்கள் நூல்குறித்து திரைப்படப் பாடலாசிரியர், பட்டிமன்ற நடுவர், கவிஞர் நூல் விமர்சகர் என பல்துறை வித்தகரான எமதினிய அண்ணன் ம.கவிக்கருப்பையா அவர்களது விமர்சனத்துக்கு நன்றி.

மேடை நாடுகளில் பெண் எழுத்தாளர்கள் அதிகம், நம் நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைந்தளவே உள்ளனர். அதிலும், தேனி மாவட்டத்தில் மிகமிகக் குறைவு.

இந்தச் சூழலில்,பெண் எழுத்தாளராக, கவிஞராக உரு வெடுத்திருக்கும் முனைவர் பத்மினிபாலா வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியவர்.

எத்தனையோ! கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளை நூலாக்கிப் பார்க்க பலபல வருடங்கள் காத்திருந்திருக்கிறார்கள். பற்பலருக்கு, தன் வாழ்நாளில், அது சாத்தியமில்லாமலும் போயிருக்கிறது. ஆனாம் 2019-இல் தான், தன் முதல் கவிதையையே எழுத ஆரம்பித்த இவருக்கு, 2022 - லேயே கவிதை நூல் போட்டு, வெளியிடும் வாய்ப்பமைந்திருப்பது, இறைவனின் ஆசியென்றே கூறலாம்.

தன் உள்ளக் கிடக்கையை சொற்களில் வடித்து அருமையாக கவிதைகளாக் கியிருக்கிறார் கவிஞர்.

தன் பெற்றோர், கணவர், குழந்தைகள் குறித்த கவிதைகள் உணர்வுப் பூர்வமானவை, அவைகள் மூலம் அவர் கொடுத்து வைத்தவர் என்பதை அறியமுடிகிறது.

காதல் கவிதைகள், மற்றும் சமூகம் பற்றிய கவிதைகள் என்று, இந்நூலில் உள்ள கவிதைகள் அனைத்தும் சிந்தனையைக் கிளருவதாக அமைந்திருகிறது. இந்நூலின்

அட்டைப்படம், அச்சாக்கம் ஆகியவற்றின் நேர்த்தி, வையைப் பதிப்பகம் ஒரு கைதேர்ந்த பதிப்பகம் என்பதைக் காட்டுகிறது.

இது, அனைவரும் படிக்க வேண்டிய கவிதை நூல்.

கவிஞருக்குப் பாராட்டுகள்!

தொடர்ந்து நூல்கள் எழுதி தமிழ்த் தொண்டு புரிய வாழ்த்துகள்!

ம.கவிக்கருப்பையா

Sunday, 20 March 2022

உயிரை உருக்கும் தேன்

உயிரை உருக்கு தேன்.

மலையில் தேன் எடுத்து விற்கும் வெள்ளந்தி மனிதன், இன்னொரு மலையில் வாழும் நாயகி. இரண்டு மலைவாசிகள் காதலித்து ஊரின் எதிர்ப்பை மீறி, வாழைமட்டையின் மூலமாக வரம் தர மறுத்த கடவுளையும் தாண்டி காதலர்கள்  திருமணம் செய்து வெற்றி பெற்று சமூக அவலங்களோடு போட்டியிட முடியாமல் வாழ்வை இழந்த நிலையை புடம் போட்டுக் காட்டும் தேன் திரைப்படம் அருமை.

இந்த வெற்றிப் படக் கூட்டனியில் யாரைப் புகழ்வது? நடிகர்கள், இயக்குனர், கதாசிரியர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், என ஒவ்வொருவரும் தங்களது பணியைத் திறம்படச் செய்திருக்கின்றனர்.

பன்னாட்டுக் குழுமங்கள் பணம் சம்பாதிப்பதற்காக மலைப்பகுதியை ஆக்கிரமிப்பதும், கழிவுகளை அருவிநீரில் கலக்கவைத்து மலைவாழ் மக்களின் வாழ்வைச் சீரழிப்பதையும்,

மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கின்ற அரசியல்வாதிகளின் அப்பட்டமான வேடத்தையும்,

அரசுத்துறை அதிகாரிகள் மனிதாபிமானமற்ற நிலையில் குறைவின்றிக் கையூட்டுப் பெறும் மிகக் கேவலமான நிலைப்பாட்டையும் தோலுரித்துக் காட்டும் தேன்.

தனது காதல் மனைவியின் உடல்நலக் குறைவினைப் போக்க அரசு அதிகாரிகளை அணுகி கால் பிடித்துக் கெஞ்சும்  கதாநாயகனின் வெகுளித்தனமான ஒவ்வொரு கட்ட நடிப்பும் உச்சம்...

இயல்பான கிராமத்துப் பெண்ணாகவே மாறி இருக்கின்ற கதாநாயகியின் நடிப்பும், வசனமும், உடல்மொழியும் அதி உச்சம்.

இந்த இருவரையும் தாண்டி இவர்களது குழந்தை தன்னுடைய தாயைப் பறிகொடுத்த நிலையி அழுகின்ற அவலநிலை,

இலவச அமர் ஊர்தியில் அம்மாவின் பிணத்தை ஏற்றுவதற்கு காசு கேட்கின்ற நிலையில் கையேந்தி அழும் குழந்தையின் நடிப்பு வியப்பின் எல்லை...

தேன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒருவர் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாமல் வெளியே வந்தாரென்றால் அவரது இதயம் கல்லால் செதுக்கப்பட்டு இருக்கிறது என்று முடிவு செய்து விடலாம்.

தேன் திரைப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், வசனமும் ஊனில் கலந்து உயிரினை உருக்குகின்றது.

மண் மணம் மாறாத வசனங்கள், சிற்றூர் மக்களின் புழங்கு சொற்கள், நடை, உடை நடவடிக்கைகள், பேச்சுமுறைகள் என அருமையாக திரைக்கதை வசனம் எழுதிய எமது மதிப்பிற்குரிய தோழமை அண்ணன் கவிஞர் ராசி தங்கதுரை அவர்களது வெற்றிப்படக் கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்

Monday, 14 March 2022

தேனி கிட்னி செண்டரில் நூல்வெளியீட்டுவிழா

13-02-2022 இன்று தேனி கிட்னி செண்டர் நடத்திய முப்பெரும்  விழாவில் வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில நானும் அண்ணன் சித்தர் சிவக்குமார், அண்ணன் க.ஜெயராம், அண்ணன் சர்ச்சில்துரை ஆகியோர் கலந்துகொண்டோம். நிகழ்வில் மருத்துவர் காமராசு அவர்கள் எழுதிய "டயாலிசிஸ் பின்னும் வாழ்க்கை இருக்கிறது" என்னும் நூல் குறித்துப் பேசிய இனிய பொழுது...

Friday, 4 March 2022

தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் - திண்டுக்கல்

தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் 03,04-03-2022 ஆகிய இரண்டு நாட்களாக தின்ண்டுக்கல் ஆட்சியர் வளாக அரங்கில நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 04-03-2021 ஆம் நாள் ஆட்சி மொழி பயிலரங்கில் ஓய்வு பெற்ற துணை கலெக்டர் வரதராசன், 'அலுவலக குறிப்புகள் வரைவுகள், செய்முறை ஆணைகள் தயாரித்தல்' எனும் தலைப்பில் பேசினார்.

உலகத் தமிழ்ச்சங்க மேனாள் இயக்குனர் சந்திரா, 'ஆட்சி மொழி ஆய்வும் குறைகளைவு, நடவடிக்கைகளும்'எனும் தலைப்பிலும், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, ‘ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள்' எனும் தலைப்பிலும் பேசினர்.

இதில் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய பழநி மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் திவ்யா, திண்டுக்கல் தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக உதவியாளர் பாபுவுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலா ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இலதா, நேர்முக உதவியாளர் இராணி, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் குயிலன், எழுத்தாளர் இளங்கோவன், தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர் இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

Wednesday, 16 February 2022

திருக்குறள் முற்றோதல் - தமிழ் வளர்ச்சித்துறை.

திருக்குறள் முற்றோதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
16.02.2022. இன்று, தேனி மாவட்ட 
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 
மாவட்ட ஆட்சியரகத்தில், 
"திருக்குறள் முற்றோதல் போட்டி" நடைபெற்றது.  நிகழ்வினுக்கு தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் திரு பெ. இளங்கோ ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு மூ.செல்வம் திரு ஆ.முத்துக்குமார் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் நடுவராக பணியாற்றினர்.

திருக்குறள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த மாணவ-மாணவியர்களுக்கு ரூபாய்.10 ஆயிரம் பரிசுத் தொகை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு வாழ்த்துகள்.

இந்நிகழ்வில் சிறப்பு 
அழைப்பாளராக, தேனி வையைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நானும் கலந்துகொண்டு நான் எழுதிய திருக்குறள் உலகப் பொதுவுர நூலைப் பரிசாக வழங்கிய இனியபொழுது...  சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும், போட்டியில் பங்கேற்ற மாணவியருக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் வாழ்த்தும் பேரன்பும்.

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி.

Tuesday, 15 February 2022

காதலோடு வாழ்... கவிதை.. ச.ந.இளங்குமரன்

காதலோடு வாழ்...

பெருந்தெய்வப் பெண்ணின் கண்ணை
கருங்குவளை மலரென் றெண்ணி
கள்ளுண்ணும் நோக்கத் தோடு
பெருவிருப்பங் கொண்டு தன்னின்
பெருங்கூட்டத் தோடு மோத
வருங்கூட்டம் தன்னைக் கண்டு
வளைக்கையால் மங்கை நல்லாள்
வாகாக விரட்டக் கண்டு

தாமரையின் மேலே மீன்கள்
தக்கபடி புரளக் கண்டும்
தன்னிரையைக் கொத்தித் தூக்க
தகுவாய்ப்பு இன்றி வீணே
விக்கித்துத் திரும்பும் புள்ளாய்
விரைவாகத் திரும்பும் வண்டே
தாமரையாள் கண்கள் சிந்தும் 
தாதெனக்கே சொந்தம் அன்றோ!

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி.

Monday, 14 February 2022

கம்பனில் வள்ளுவன்...

கம்பனில் வள்ளுவன்...
ச.இளங்குமரன்

போர் என்ன வீங்கும் பொருப்புஅன்ன பொலங்கொள் திண்தோள்
மாரன் அனையான் மலர்கொய்து இருந்தானை வந்த ஓர் கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண்புதைப்ப ஆர் என்னலோடும் அனல்என்ன அயிர்த்து உயிர்த்தாள்

இது கம்பனது அகலிகைப் படலத்தில் ஒரு பாடல்.

மலை போன்ற தோள்களையுடையவன். மாறன் போன்ற அழகுடையவன். அவன் ஏறு நடை போட்டு வருகிறான். அவளோ பூக்கொய்து கொண்டிருக்கிறாள். 

வந்த அழகன் தன்னுடைய நடையை மெதுவாக்கிக் கொள்கிறான். 
பின் புறமாகத் திரும்பி நின்று கொஞ்சம் இருமிக் கனைக்கிறான்.  அந்த அழகி  திரும்பிப் பார்க்கிறாள். 

தன் காதலன் தன்னை பார்க்கவில்லை என்று கருதிக் கொண்டு, மெதுவாக அவன் பின்னால் வந்து நின்று  அவனது கண்களைப் பொத்துகிறாள்.

அந்த அழகன் ஒன்றும் தெரியாதவன் போல் "யார்?"  என்று கேட்கிறான்.

உடனே அந்த அழகிக்கு சினம் வந்துவிடுகிறது. 

"யாரா...  அப்படி என்றால் வேறு சில பெண்களும் உன் கண்ணைப் பொத்தி இருக்கிறார்களா? நீ என் காதலன் அல்லன். கள்வன், காமுகன், பல பெண்களின் இச்சை என்னும் காமத்தில் விழுந்து கிடப்பவன்.  நான் கண்களை பொத்தியதும் கண்ணே!...  என்றல்லவா என்னை அழைத்திருக்க வேண்டும். நான் மட்டுமே உன் காதலியாக இருந்தால் அது தானே நடந்திருக்கவேண்டும். அப்படி நடப்பது தானே சரி?  என்று துள்ளிக் குதிக்கிறாள். துடித்து விழுகிறாள்.

அந்த அழகி அந்த அழகனாகிய தன் காதலனிடம் கற்பை எதிர்பார்க்கிறாள் என்பதே இதற்குப் பொருள்.

இந்தப் பாடலை எழுத கம்பனுக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் வள்ளுவர். அதாவது...

" யாரினும் காதலம் என்றேமா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று "

காதல் என்பது உடல் தொடர்புடையது அல்ல. அது உள்ளம் தொடர்புடையது. உள்ளம் மட்டும் செம்மையாக இல்லையென்றால் தலைவனும் தலைவியும் நெருங்கவே முடியாது.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்.

Thursday, 10 February 2022

நூல் மதிப்புரை - மேடைப் பூக்கள் - இரா.மணிகண்டன்

நூல் : மேடைப்பூக்கள்
நூலாசிரியர் : பேரா.பத்மினிபாலா
வையைப் பதிப்பகம் தேனி.
விலை - 120

வையைப் பதிப்பகத்தின் வெளியீடான முனைவர் பேராசிரியர் பத்மினிபாலா அவர்களது மேடைப்பூக்கள் கவிதை நூலைப் படித்தேன். அத்தனை கவிதைகளும் மிக அருமை. 

ஒவ்வொரு கவிதையையும் படிக்க படிக்க புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் தொடர்ந்து என்னை இழுத்துச் சென்றது.

சில கவிதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தேன். அதன் கருத்தாழத்தில் தேய்ந்து போனேன். சில சமூகம் சார்ந்த கவிதைகளைப் படித்தவுடன் நரம்புகள் முறுக்கேறத் தொடங்கி விட்டன. சில கவிதைகள் நெஞ்சை நெருடின. இப்படியான பல கவிதைகளில் உழவன் குறித்த ஒரு கவிதையைப் பதிவு செய்கிறேன். 

உழவன்

உயிர்க் குலத்தின் பசியினைப் போக்க பயிர்களை நெய்யும் பரம்பொருள் உழவன்!

காலுக்குச் செருப்பாய்க் கடும்வெயில் அணிவான்! மேலுக்கு உடையாய்க் காற்றினை உடுப்பான்!

வேளைக்குச் சோறு உண்பதைத் தவிர்ப்பான்! வேண்டிய எல்லாம் உலகுக்குக் கொடுப்பான்!

நாளெலாம் உழைப்பான் நலிந்து கிடப்பான் ! நாட்டின் நலிவைப் போக்கி நிமிர்வான் !

வீட்டில் வறுமைத் தாண்டவம் ஆடும் நாடும் ஏடும் அவன்புகழ் பாடும்!

ஏரின் பின்னால் உலகம் சென்றும் ஏற்றம் மட்டும் அவனுக் கில்லை!

உழவன் மட்டும் உழைக்க மறந்தால் உலகம் யாவும் பசியால் வாடும்!

மேலும்...
கருவின் உருவம் பெண்ணெனத் தெரிந்தால்..
எனத்தொடங்கும் வரி முதற்கொண்டு 
மணவரை தண்ணில் 
தலையது கவிழும்வரை...

இக்கவிதையில் பெண்களைப் பேசுவதாக எண்ணி ஆண்களையே கண்ணாடி முன் நிறுத்துகிறார். ஆண்களின் பருவ முகங்களை மேடை போட்டு காண்பிக்கிறார். ஒவ்வொரு ஆணும் தன்னை உணர்வதற்கு வாய்ப்பாக வரிகளை அமைத்திருக்கிறார். 

மனித சமூகத்தில் பாதிக்கும் மேலாய் இருக்கின்ற பெண்களின் நிலையை ஆண் வர்க்கம் உணர மறுக்கின்ற உண்மையை உரக்கச் சொல்கிறார் கவிஞர்.

மேடைப்பூக்கள் என்னும் இந்தக் கவிதை நூலில் சமூக நிலையை எண்ணியே தனது எண்ணங்களை, செயல்பாடுகளை கவிதையாக  வடித்துள்ள சகோதரி கவிஞர் பத்மினிபாலா அவர்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள். 

இந்த அருமையான நூலினை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

நூல் வேண்டுவோர் பதிப்பகத்தாரைத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுங்கள். 98423 70792

சிறப்பான கவிதைகளுக்காக பேராசிரியர் பத்மினிபாலா அம்மா அவர்களுக்கும், அழகிய முறையில் நூலாக்கம் செய்த வையைப் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி 
கவிஞர் இரா.மணிகண்டன்
சோழா பைனான்சியல் சர்வீசஸ் மையம் தேனி.
பேச 90802 27258

Friday, 4 February 2022

அற்றைத் திங்கள்

அற்றைத் திங்கள்... 
(கடந்த ஆண்டு இதே நாளில்)

நேற்று இரவு ஆழ்ந்த படிப்பில் என்னையே மறந்து புத்தகத்தில் புகைந்து கொண்டிருந்த நேரம்.  தம்பி என்று அழைத்தவாறு தன்னுடைய மெல்லிய கைளால் என் தோளைத் தொட்டார் அவர். அந்தக் குரல் எனக்கு மிக நெருங்கிய தொடர்புடைய குரல்.

திடுக்கிட்டுத் திரும்பினேன்.
விளக்கின் ஒளி மங்கும் அளவிற்கு வெள்ளை வேட்டி சட்டையோடு மெல்லிய புண்ணகை தவழ எமது ஆசான் இளங்குமரனார் நின்று கொண்டிருந்தார். "ஆள்வருவது கூடத் தெரியாமல் அப்படி என்ன படிக்கிறீர்கள்" என்ற ஐயாவின் குரலைக் கேட்டவாறு அவரை கால்களில் வீழ்ந்து வணங்கினேன். மெதுவாகக் குனிந்து என்னை தூக்கி நிறுத்தினார். என் தோளைத் தொடும் அளவிற்கு நான் என்னையே மறந்து படித்துக்கொண்டிருந்த புத்தகம் ஐயா அவர்கள் எழுதிய "தமிழர் வாழ்வியல் இலக்கணம்" என்பதைச் சொன்னேன்.

இது தவச்சாலையில் கொடுத்தது தானே என்று என்று கேட்டார். ஆமாம் ஐயா என்று சொல்லிக்கொண்டே ஐயா அவர்களை இருக்கையில் அமர வைத்து பின்பு நானும் அமர்ந்து கொண்டேன். அந்த நூலில் எனக்கு இருக்கின்ற ஐயப்பாடுகளை நேரடியாகவே ஐயாவிடம் கேட்பது என்று கேட்கத் தொடங்கினேன். சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். 

பின்பு சாகரம் மொழிமுதல் வராது என்று இன்றும் பல அறிஞர்கள் சண்டை போடுகிறார்கள் ஐயா இதற்கு எப்போது தீர்ப்பு வரும்? என்று கேட்டேன். அவர் சொன்னார் சகரம் மொழி முதல் எழுத்தாக வரும். தொல்காப்பியத்தை முறையாகப் படிக்கும் வரை இந்தச் சண்டை நீடித்துக் கொண்டே தான் இருக்கும் என்று சொன்னார். மொழி முதல் வரும் என்பதற்கு சான்று என்னய்யா என்று கேட்க அந்தக் காலத்தில் அவர்கள் சாப்பிடாமல் இருந்திருப்பார்களா? சட்டியில்லாமல், சமைத்து இருப்பார்களா என்று அடுக்கினார். அப்போதுதான் தொல்காப்பிய நுட்பத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 

அது இருக்கட்டும் இன்றைக்கு என்ன நாள் என்றார். 02-02-2022 என்றேன். நாளை என்று கேட்டார்... 03-02-2022 என்றேன். ஆம் நான் 30 ல் பிறந்தவன். நீங்கள் 3 இல் பிறந்தவர். நான் 1 ஆம் மாதம், நீங்கள் 2 ஆம் மாதம். கடந்த ஆண்டு நீங்களும் என் மகளும் என் இல்லம் தேடி நேரில் வந்து வாழ்த்து பெற்றீர்கள். இன்று நான் உங்கள் இல்லம் தேடி வந்து வாழ்த்துகிறேன் என்றார். நுண்மாண் நுழைபுலத்தராய் நீடுவாழ்க என்று வாழ்த்தினர். 

காலில் வீழ்ந்து வணங்கினேன். எழுந்தேன் ஐயாவைக் காணவில்லை. திடுக்கிட்டு விழித்தேன்... எல்லாம் கனவு நாளைய என் பிறந்த நாளுக்காய் இன்று வந்து வாழ்த்திய என் ஆசான் செந்தமிழ் அந்தணர் அவர்களை எண்ணி விழிகள் கசிந்தன. கடந்த ஆண்டு அவர் என்னிடம் சொன்ன திருக்குறளை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு"

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்

திருக்குறள் போட்டி

நீங்களும் வாழ்த்தலாமே...!
(தேனி மாவட்டம் - போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப்பள்ளி 03-02-2022)

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் "உலகத் தமிழ்க் கூடல்" சார்பில் மாநில அளவிலான திருக்குறள் சொல் போட்டி இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது.  

இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையான மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

போட்டியினை கவிஞர் லட்சுமி குமரேசன் அவர்களும் கவிஞர் செல்வராணி அவர்களும் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.

வெற்றி பெற்றவர்களைத் தாண்டி கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் சிறப்புப் பரிசும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில் திருக்குறள் சொல் போட்டியில் கலந்துகொண்ட

தேனி மாவட்டம் போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப்பள்ளியில்‌ பயிலும் மாணவி  அபிநயா அவர்கள் மாநில அளவில் இரண்டாம் பரிசினைப் பெற்றார். மாணவிக்கு புலவர் இராசேந்திரனார் வழங்கிய பணமுடிப்பும்,  மற்றும் பா.முனீஸ்வரி
சீ.தமிழ்க்குமாரன்
அ.கௌசிக்
கா.வீரஹர்சினி
செ.ஜனகீர்த்தன். ச.ஹர்சிதா
பா.ரமணி என கலந்துகொண்ட மாணவ மாணவியருக்கு செந்தமிழ்த் தேனியார் வழங்கிய சிறப்புப் பரிசும், வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் நூலும், உலகத் தமிழ்க்கூடல் சார்பில்  தலைமையாசிரியர் ‌முன்னிலையில் பங்கேற்புச் சான்றிதழும், வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மாணவிகளை போட்டிக் களத்திற்கு தயார் செய்து வழிநடத்திய லட்சுமி ஆசிரியர் அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்களுக்கும் நன்றி.

உலகத் தமிழ்க்கூடல் தமிழ்செம்மல் முத்துமணியார், நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரனார் உள்ளிட்ட பேராளுமைகளுக்கு நன்றி...

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம் தேனி & அமைப்பாளர் உலகத் தமிழ்க்கூடல்.

Saturday, 29 January 2022

வையைப் பதிப்பகம் நடத்தும் மேடைப் பூக்கள் நூல் வெளியீட்டு விழா.

நூல் வெளியீட்டு விழா 
தேனி  மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தில் தனியார் மண்டபத்தில் வையைத் தமிழ் சங்கம் & வையைப் பதிப்பகம் தேனி  நடத்தும் முனைவர் பேராசிரியர் சே .பத்மினி பாலா அவர்களது "மேடை பூக்கள் " கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. புலவர் இளங்குமரன் தலைமையேற்று சிறப்புரை செய்தார். பொன்பாலமுருகன் தலைவர் வழக்கறிஞர் வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்புரை நிகழ்த்தி சிறப்புரையாற்றினர். புலவர் ராஜரத்தினம் ,MKM முத்துராமலிங்கம ,சந்திரசேகர்,செல்லப்பாண்டியன் , ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார் .நூல் வெளியீடுபவர் வி எஸ் பி கண்ணகி சேகர்  , நூல் பெறுபவர் PT சிதம்பர சூரியவேலு நூல் மதிப்புரை கவிவித்தகர் பொற்கைப்பாண்டியன் நூலைப்பற்றி சிறப்புரையாற்றினார். மு அர்ச்சுனன், மா. தங்கப்பாண்டியன்  நூல் குறித்து உரையாற்றினார்.நூலாசிரியர் சே .பத்மினி பாலா ஏற்புரையாற்றினார். ஈஸ்வர்ராஜா, நீலப்பாண்டியன்,அன்புக்கரசன், பாண்டிமகிழன் லட்சுமி, மணிகார்திக், கணேசன், கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .இந்நிகழ்வில் வைகை தமிழ் சங்கம் தேனி , சங்கத் தமிழ் அறக்கட்டளை நண்பர்கள் கலந்து கொண்டனர். இச்சிறப்பு ஏற்பாட்டினை  வழக்கறிஞர் பாலமுருகன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். இவருடைய சிறப்பு அனைவர் இடத்திலும் பாராட்டை பெற்றார். தமிழக அரசின் உத்தரவின்படி முகக்கவசம் கிருமிநாசினி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது .

நன்றி காஞ்சித் தலைவன் செய்தியாளர் திரு தெய்வேந்திரன்.

மேடைப்பூக்கள் நூல் வெளியீட்டு விழா

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மேடைப் பூக்கள் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் புலவா் ச.ந.இளங்குமரன் தலைமை வகித்தாா். பெரியகுளம் வழக்குரைஞர்கள் சங்கம் பொன் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். புலவர் இராசரத்தினம், வழக்குரைஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொற்கைபாண்டியன், தங்கப்பாண்டியன் , அர்ச்சுனன் ஆகியோர் மதிப்புரை வழங்கினா். தொழிலதிபா் வி.எஸ்.பி. கண்ணகி சேகா் மேடைப் பூக்கள் நூலை வெளியிட்டாா். வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.டி. சிதம்பசூரியவேலு நூலை பெற்றுக்கொண்டாா். நூலாசிரியா் பேராசிரியா் சே. பத்மினி பாலா ஏற்புரையாற்றினாா்.

இவ்விழாவில் பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வையைத் தமிழ்ச் சங்கத்தினா் செய்திருந்தனா்.

Wednesday, 19 January 2022

திருவள்ளுவர் மன்றம் 29 ஆண்டுவிழா

நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றத்தின் 29 ஆம் ஆண்டு விழா 14-01-2022 ஆம் நாள் தமிழ்நாடு அரசின் ஊரடங்கு விதிகளைப் பின்பற்றி, தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் தமிழர் திருநாள் விழாவாக  நாகலாபுரம் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. 

தை முதல் நாளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை இரா.மு.சிவராமன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 40 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாலை நிகழ்வாக  "இன்றைய பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் சமுதாயத்திற்கு வளர்ச்சியா? தளர்ச்சியா?"  என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது பட்டிமன்றத்திற்கு பீட்டர்பால்ராஜ் ஆசிரியர் தலைமை வகித்தார். வளர்ச்சியே என்ற அணியில் மு.திலகவதி, ஆ.கவியரசி,  நிவேதா ஆகியோரும், தளர்ச்சியே என்ற தலைப்பில் பா.கவிச்செல்வன், மா.பா.மெய்கண்டார், க.தமிழழகு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். 

அதனை தொடர்ந்து "தமிழ் நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது நேற்று தலைப்பில் தமிழாசிரியை அ.கிருஷ்ணவேணி,  இன்று தலைப்பில் இரா.மருது,   நாளை என்ற தலைப்பில்  மு.கருப்பசாமி ஆகியோர் மிகச் சிறப்பாகப் பேசினர்.  இந்த இனிய நிகழ்வுக்கு மருத்துவர் சி.இராமசாமி தலைமை தாங்க, பா.தமுழ்ச்செல்வன் வரவேற்க, கு.கார்த்திக் நன்றியுரை வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து புலவர் ச.ந.இளங்குமரன் தொகுப்புரை ஆற்றினார்.

15-01-2022 நாள் காலை 10 மணிமுதல் மாலை 6-00 மணிவரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இரவு 7-00 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது. விழாவிற்கு திருவள்ளுவர் மன்றத் தகைவர் பா.அமுதவல்லி தலைமை வகித்தார். பெரியகுளம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் பொன்.பாலமுருகன் முன்னிலை வகித்தார். பெரும்புலவர் இளங்குமரனார் அவர்களுக்கு நினைவேந்தலோடு நிகழ்வு தொடங்கியது. இரா.மு.சேதுபதி வரவேற்க, அ.முருகன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பி கவிஞர் பா.கவிதா மற்றும்   முனைவர் பத்மினிபாலா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  முன்னிலை மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு திருவள்ளுவர் மன்றம் மற்றும் சிவசங்கர் அறக்கட்டளை சார்பில் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

திருக்குறளில் உலகச் சாதனை படைத்த முத்தமிழ் சாமினி,  செந்தமிழ் சாலினி ஆகியோருக்கும், அரசு தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்ற பனிமொழி அவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது புலவர் ச.ந.இளங்குமரன் பாராட்டுரையோடு நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். நிறைவாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 1330 திருக்குறள் சொன்ன பைந்தமிழ் ரோசினி அவர்களுக்கு உரூ 1000 பரிசாக வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. திருக்குறள் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், பிறபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் திருவள்ளுவர் மன்றம் மற்றும் சிவசங்கரனார் நினைவாக பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. நிறைவாக  ப.முத்துக்குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Thursday, 6 January 2022

மரம் கவிதை

கோடை வெயிலில்
குளிர்ந்த நிழல்தரும்
கடவுளை வழிபடப்
பூக்களும் தரும்
கடும்பசிக்கும் தரும்
உணவும் நீரும் 

அம்மணம் மறைக்கும்
ஆடை தன்னை
அழகாய் நெய்ய 
நூலைத் தரும்

கூடிநாம் வாழ்திடக்
கூடுதரும்
குழந்தை நடக்க
வண்டி தரும்

பிணியைப் போக்க
மருந்து தரும்
பிள்ளை தூங்க
தொட்டில் தரும்
தள்ளாடு வோர்க்கும்
தருமே ஊன்றுகோல்

காற்றில் மாசைக்
கணக்காய்க் களையும்
கைகளை அசைத்து
மழையை அழைக்கும்

எத்தனை பயன்கள்
மரத்தால் விளைந்தன
மறந்தான் மனிதன்
மரத்தின் பயனை
மணந்தான் மனிதன்
மரணம் தன்னை

இயற்கைத் தாயின்
இதயம் தன்னை
வெட்டிச் சிதைக்கும்
வேடிக்கை மனிதா
சிதைவது மரங்களல்ல
உனது வாழ்க்கை...!

ச.ந.இளங்குமரன்