தொல்காப்பியம் எழுத்ததிகாரம் -
1.நூன்மரபு
எழுத்தின் இலக்கணம் உணர்த்தும் பகுதி என்பதால் எழுத்ததிகாரம் என அழைக்கப்படுகிறது. இதன் முதல் இயல் நூன்மரபு ஆகும். நூலின் மரபு உணர்த்தும் பகுதி 'நூன் மரபு' ஆயிற்று. மொழிக்கு உறுப்பாகிய எழுத்துக்களால் ஆக்கப்படுவது நூல். எனவே 'நூன்மரபு' என்பது, ஆகுபெயராகி எழுத்துக்களின் மரபைக் குறித்தது. நூன்மரபில் எழுத்துக்களின் வகை, அவற்றின் பெயர், மாத்திரை, எண், வடிவு, மயக்கம், பிற மரபுகள் ஆகியவை கூறப்படுகின்றன.
1.
எழுத்துகளின் வகை
முதலெழுத்து.
எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.
தெளிவுரை
எழுத்தெனப் படுப - எழுத்து என்று சிறப்பித்துக் சொல்லப்படுபவை
அகரம் முதல் - அகர எழுத்தை முதலாகக் கொண்டு
னகர இறுவாய் - 'ன'கர ஒற்றெழுத்தை இறுதியாக உடைய (உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18. (12+18=30) முப்பது எழுத்துகள் என்று முன்னாசிரியர் சொல்வர்.
சார்ந்து வரல் மரபின் - முதல் எழுத்தைச் சார்ந்து வருதலை தனக்கு இயல்பாக உடைய
மூன்று அலங்கடையே - குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் மூன்று எழுத்துக்களும் நீங்கலாகத் தமிழ் எழுத்துக்கள் முப்பது மட்டுமே.
விளக்கம் :
இலக்கணத்தில் தேர்ந்த சான்றோரால் எழுத்து என்று சிறப்பித்துச் சொல்லப் படுபவை அகரத்தை முதலாகக் கொண்டு னகரத்தை இறுதியாக உடைய அதாவது உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆகிய முப்பது எழுத்துகள் மட்டுமே என்று கூறுவர்.
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி, நாகலாபுரம்.
No comments:
Post a Comment