முருகன் + கண்ணன் =
இளங்குமரன்.
பொதுவாக இளங்குமரன் என்ற பெயர் முருகன் என்னும் இறைவனைக் குறிப்பதாகப் பலரும் சொல்லி வருகின்றனர். அவ்வாறான பதிவுகளும், குறிப்புகளும் அதிகம். ஆனால் இளங்குமரன் என்ற சொல் கண்ணனையும் (திருமால்) குறிக்கும் என்கிற செய்தியை எமது ஆசான் பெரும் புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஐயா அவர்களது இயற்பெயர் கிருட்டினன் என்பது. தன்னுடைய இயற்பெயரை தந்தையாரின் இசைவோடு இளங்குமரன் என்று மாற்றிக் கொண்டவர். மதுரை அழகர் மலைக் கல்வெட்டில் இளங்குமரன் என்று பெயர் இருப்பதாக ஆசான் சொல்ல அருகமர்ந்து கேட்டிருக்கிறேன்.
இன்று காலை சுமார் நான்கு மணி அளவில் முனைவர் பட்ட ஆய்வேடு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் எதிர்பாராத செய்தி எனக்குக் கிடைத்தது. அதாவது கண்ணனுக்கு இளங்குமரன் என்ற பெயர் உண்டு என்ற எமது ஆசானின் கூற்று அடங்கிய அப்பாடலைக் கண்டதும் மனம் மட்டிலா மகிழ்ச்சியில் துள்ளியது. எமது ஆசான் திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையில் என்னிடம் பேசிய செய்தி பசுமரத்தானியாய் நெஞ்சில் நிழலாடியது.
அப்பாடலை இயற்றியவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார். மாலியர்களால் போற்றப்படும் 108 திருப்பதிகளுள் ஒன்றான திருக்கடிகைக் குன்றைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
அப்பாடல்...
"பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டங் குறைவாற்குக் கோயில்போல - வண்டு வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை #இளங்குமரன் றன்விண் ணகர்".
ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment