---- கவியரசர் கண்ணதாசன்-----
------- பிறந்தநாள் ------
கூடலிலே பிறந்தான் - சிறு
கூடலிலே பிறந்தான்!
குடியினிலே வளர்ந்தான் - காரைக்
காரைக்குடியினிலே வளர்ந்தான்
போதையிலே கிடந்தான் - தமிழ்ப்
போதையிலே கிடந்தான்
புகழோங்கிச் சிறந்தான் - இப்
புவிபோற்றத் திகழ்ந்தான்!
மங்காப் புகழ்கொண்ட
மானமிகு தமிழினத்தின்
சங்கப் பாடல்களின்
சாரமது குறையாமல்
பொங்கற் சுவைசேர்த்துப்
பூந்தமிழின் நறுமணத்தை
எங்கும் பரவுதற்கு
ஏற்றவகை செய்தான்!
சித்தரது இலக்கியத்தைச்
சீர்தூக்கி ஆய்ந்தான்!
இத்தரையின் மக்களெலாம்
விளங்கும்படி ஈந்தான்!
புத்தனையும் விஞ்சுகின்ற புதுஞானம் பெற்றான்!
புத்துலகக் கவிஞருக்கு
புதுப்பொருளும் ஆனான்!
பாடாத பொருளில்லை!
பாரினிலே அவன்பாட்டைப்
பாடாத, கேக்காத
வாயில்லை செவியில்லை!
தேடாத விழியில்லை
தேவனவன் செந்தமிழை
நாடாதோர் நானிலத்தில்
நற்பாடல் தருவதில்லை!
ஓவியமாய் நூல்கள்பல
ஒண்டமிழ்க்குத் தந்தவன்!
மேவிநிற்கும் புலவருக்கு
மேன்மையானய் நின்றவன்!
சாவதனைச் சாகவைத்துச்
சாகாமல் வாழ்பவன்!
காவியத்தாய் இளையமகன்!
கவியரசெம் காதலவன்!
ச.ந.இளங்குமரன், நிறுவுநர்
No comments:
Post a Comment