தோற்றவர் வெல்வது ஊடலில் மட்டுமே...
------------------------------------------------------------------
"ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்ச்கேட்க வீற்றிருக்க லாம்"
இது நத்தத்தனார் சூடிக்கொடுத்த திருவள்ளுவமாலையாகும். திருக்குறளின் சிறப்பு பற்றி விதந்தோத இவ்வுலகில் வேறு மொழி இலக்கண இலக்கியத்திற்கு செழுமை போதாது என்பது மாத்திரமல்ல, தமிழே தடுமாறும். பல மதத்தவரும், ஆன்மீகப் பிரிவினரும் சொந்தங்கொண்டாடி வருகின்ற இத்திருக்குறள் அவற்றிற்குள் சிக்கிக்கொள்ளும் மத நூல் அல்ல. மாறாக, இது ஒரு மறை நூல். இவ்வாறான மறைநூல் உலகில் எங்கிருந்தும் கிளம்பியதில்லை தமிழ்கூறும் நல்லுலகைத் தவிர. எனவே இதனை உலகப் பொதுமறை என்று சொல்லப்படுவதை உலகமே வியப்புடன் ஒப்புக்கொண்டுவிட்டது.
ஒரு மனிதன் போகின்ற பாதைகளிலெல்லாம் சந்திக்கின்ற அனுபவங்களிலெல்லாம் ஏதாவது ஒரு திருக்குறள் ஒலித்தே தீரும். ஒவ்வொரு குறளும் ஓராயிரம் பக்கங்களை எழுதித் தீர்ப்பதற்கான கருத்துக்களை தன்னடத்தே பொதிந்து வைத்திருக்கிறது என்பது உலக அனுபவம். அந்த வகையில் திருக்குறள் பற்றிய, அதனுடைய உள்ளடக்கங்கள் பற்றிய லட்சக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டுள்ளன, எழுதப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் திருவள்ளுவர் பகுத்தாய்ந்து உலகிற்கு கொடையாய்த் தந்த "இன்பத்துப்பால்" என்ற பகுதி குறித்து தன்னுடைய பார்வையை "இன்பத்துள் இன்பம் காமம்" என்ற தலைப்பில் நூலாகப் பதிவு செய்து தந்திருக்கிறார் ச.ந.இளங்குமரன் அவர்கள்.
தனித்தமிழ் ஆர்வலர்கள் மிகவும் அருகிவந்துவிட்ட நிலையில் தன்னைச் சுற்றிக் கடுமையான மொழிச்சிதைவுச் சூழல் நெருக்கிக்கொண்டிருக்கின்ற நிலையைத் தூக்கி நிறுத்த தன்னால் இயன்றவரை தனித்தமிழ் பற்றின தேவை குறித்தும், அதுபற்றின விழிப்புணர்வையும் பரப்புரையாக்கி வரும் இளங்குமரனின் அரும்பணி போற்றுதலுக்குரியது. அவரிடமிருந்து இத்தகைய நூல் பிறந்திருப்பது இயல்பே. திருக்குறளின் இன்பத்துப்பாலை ஐந்தினைக்குள் புகுத்தி அதற்குள் இருபத்தியோரு தலைப்புகளைப் பிரித்து வைத்து குறட்பாக்களைச் சொல்லி விளக்குகின்ற இந்நூல் காம உணர்வின் நயங்களையும், தலைவன் தலைவியின் நேர்மையையும், காமச் சுதந்திரம் பெண்களுக்கு தருகின்ற துணிவனையும் நேர்த்தியாகச் சொல்கிறது.
"காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இல் விரண்டு"
நெஞ்சொடு கிளத்தல் அதிகாரத்தில் சொல்லப்படும் இக்குறள், "நல்ல நெஞ்சமே! ஒன்று காம இச்சையை விடு! இல்லையேல் நாணத்தை விடு. அன்றி ஒன்றற்கொன்று மாறாய் இவ்விரண்டையும் சேர்த்துத் தாங்கும் வலிமை எனக்கு இல்லை" எனப் பொருள்படுத்துகிறது.
"கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்"
தலையணங்குறுத்தல் அதிகாரத்தில் சொல்லப்படும் இக்குறள், "இப்பெண் தனது சாயாத கொங்கைகளின்மேல் இட்ட மறைப்பாடையானது அக்கொங்கைகள் என்னைக் கொல்லாமல் காத்தலின், கொல்லும் இயல்புடைய மதயானையின் கண்களை மறைக்க இட்ட முகமூடித் துணியைப் போன்றதாகும்" என்கிறது.
இவையெல்லாம் ஆண்பெண்ணின் மெல்லிய உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்ற, அதேவேளையில் தலைவனுக்கானதும் தலைவிக்கானதுமான அன்பு, காதல், காமம் இம்மூன்றையும் இணைக்கின்ற அதிகாரப் புள்ளியை செருக்குடன் சொல்லுவதற்கான இணையற்ற மொழிவளத்தினை தமிழ் கொண்டிருப்பதைப் பறைசாற்றுகின்ற சிறு உதாரணங்களாகும். காமத்தின் இன்றியமையாமை குறித்துச் சொல்லும் இப்பகுதிகள், கட்டாயப்படுத்துவது காமமாகாது என்றும் சுட்டிக்காட்டும் நெறிகொண்டவையாகும். இயற்கையில் ஊற்றெடுக்கின்ற காமம் அந்த இயற்கைக்கு ஒப்பானது என்பதையும் அதை எவ்வாறு சுவைத்திட வேண்டும் என்பதோடு பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவே இன்பத்துப்பாலின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதன் உள்ளடக்கத்தை தன்னளவில் விளக்கியிருக்கிறார் இந்த இன்பத்துல் இன்பம் காமம் என்ற நூலில் ச.ந.இளங்குமரன்.
நவீனம் என்கின்ற இலக்கியம் தேவை என்கின்ற தமிழகச் சூழலில் மரபும், மறையும் எத்தகைய உன்னதமானவை என்பதை உணர்த்துகின்ற வழிப் பயணமும் தேவை, அவைகளை புறக்கணித்துவிடக்கூடாது எனவும் உரக்கச் சொல்லிவருகின்ற இளங்குமரனின் செயல்பாடு பாராட்டுக்குரியது. தமிழ் உணர்வோம், அதன் வளம் உணர்வோம், குறளாய் வாழ்ந்து அன்பால் இவ்வுலகம் வெல்வோம் என்பதே தமிழக மக்கள் நோக்கம். அத்தகைய நோக்கத்திற்கு வலு சேர்த்துவரும் இளங்குமரன் போன்றோர்களின் பணி சிறந்திட வேண்டும். அத்தகையோர்க்கு நாமெல்லாம் உறுதுணையாற்றிட வேண்டும்.
No comments:
Post a Comment