இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Tuesday, 30 August 2022

கையில் ஊமன்

கையில் ஊமன்.

உண்ணவும் முடியாமல், உறங்கவும் இயலாமல், உடல் தளர்ந்து, மனம் வாடி தன்னந்தனியனாய் அங்கும் இங்குமாக உலவிக் கொண்டிருந்தான் இனியன்.

அந்த இரவுப் பொழுதில் தென்னங்கீற்றுகளின்  ஊடாக நிலவின் வெளிச்சம் அவ்வப்போது அவன் மேல் பட்டுத் தெறித்தது.

"என்ன இனியா நான் வந்தது கூடத் தெரியாம பலமான சிந்தனையில் உலவுராப்ல இருக்கு' என்ற குமரன் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் இனியன்.

" வா குமரா என்ன இவ்வளவு தாமதம்"
"நான் சரியான நேரத்துல வந்துட்டேன், மணியப் பாரு"
ஓ.. சரிசரி எனக்குத்தான் நேரம் அதிகமானதுபோல் தோணுது'
"சரி எதுக்கு இந்நேரத்துல வரச்சொன்ன" 
"இரண்டு நாளச்சுடா அவளப் பாத்து பேசி எனக்கு என்னமோ செய்யுற மாதிரியே இருக்கு" என்று படபடத்தான்  இனியன். தன்னை அழைத்த காரணத்தைப் புரிந்துகொண்டான் குமரன். 

இனியன் படிப்பிலும், பன்பிலும் ஒழுக்கத்திலும் மிகச்சிறந்தவன். பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் அவன் எப்போதாவது தன் நண்பன் குமரனோடு அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் செல்வான். அப்படியானதொரு நாளில்தான் இன்பவல்லியை அந்தக் கோயிலில் அவன் சந்தித்தான்.  காதல் கொண்டான்.  இன்பாவும் அவனை விரும்பினாள். எப்போதாவது கோயிலுக்குச் செல்லும் அவன் நாள்தோறும் செல்லத் தொடங்கினான். இன்பா தனியாக கோயிலுக்கு வராமல் தன்னுடைய தோழி மேகலையையும் உடன் அழைத்து வருவாள். மூவரும் அவ்வப்போது அந்தத் தென்னந்தோப்பில் அமர்ந்து பேசுவது வழக்கம். இனிய எப்போது பார்த்தாலும் இன்பாவின் நினைப்பிலேயே கலைதான் முழுக்க முழுக்க அவனை அவள் ஆட்கொண்டு இருந்தாள். கண்ணியமான காதல் தொடர்ந்தது.

வழக்கம் போல் இன்பாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தான் இனியன். நேரம் நீண்டுகொண்டே சென்றது, அவர்கள் வரவில்லை. காரணம் தெரியவில்லை. நீண்ட காத்திருப்புக்குப் பின் வீட்டிற்குச் சென்றான் இனியன். 
மருநாள் காலை மேகலையை அவளது வீட்டில் சந்தித்தான்.

இன்பாவின் காதல் அவர்கள் பெற்றோருக்குத் தெரிந்து விட்டதாகவும், எனவே கோயிலுக்கு செல்வதைத் தடுத்துவிட்டதாகவும்,  "உன் மீது உண்மையான காதல் இனியனுக்கு இருந்தால், அவன் ஏதாவது ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொண்டு பெற்றோர்கள் மூலம் பெண் கேட்டு வரட்டும்" என்ற செய்தியை மேகலையின் மூலம் அறிந்து கொண்டதாகவும், அதுபற்றிக் கலந்து பேசவே தன்னை வரச்சொல்லியிருக்கிறான் எனபதனைக் அறிந்துகொண்டான் குமரன். கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.

குமரன் தொடங்கினான். "நண்பா இன்பாவின் மேல் நீ கொண்டிருக்கும் காதல் உண்மையானது என்றும எனக்குத் தெரியும், அது இன்பாவுக்கும் தெரியும். என்றாலும் நீ முழு முழுவதுமாகக் காதல் வயப்பட்டு நீ செல்ல வேண்டிய பாதையில்,  தேட வேண்டிய வேலையில்  கவனம் செலுத்த மறந்திருப்பதையும் என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது. நண்பா இன்பாவின் மேல் உனக்கு இருக்கும் காதலை சிறிது நாள் தள்ளிப்போடு. உன் கடமைகளைத் தொடங்கு பின்பு காதல் கைகூடும்" என்றான்.

"நண்ப! என்னுடைய காதிலின் நீட்சி காமமாக மாறிக் கிடக்கிறது. அந்தக்  காமத்தை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தால் மிகவும் துன்பப் படுகிறேன். நீ சொல்வது போல் நல்லதொரு வேலையைத் தேடுவது நல்லதுதான். அதுவே என் விருப்பமும் ஆகும். ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் சூடான இடத்தில் வைத்திருக்கும் வெண்ணெய் வெப்பம் தாங்காமல் உருகியோட கையில்லாத ஊமை ஒருவன் கண்ணால் பாதுகாக்க முடியாமல் கலங்குவதைப் போல, உருகிய வெண்ணெயைப் போல்  இந்த காமம் என்னிடம் பரவியுள்ளது. அதைப்  பொறுத்துக் கொள்வதற்குக் கடினமாகவே இருக்கின்றது" என்ற இனியனின் பேச்சில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொண்ட குமரன் இனியனுக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றான்.

ஆக்கம்
ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாலாபுரம்.

No comments:

Post a Comment