உயிரை உருக்கு தேன்.
மலையில் தேன் எடுத்து விற்கும் வெள்ளந்தி மனிதன், இன்னொரு மலையில் வாழும் நாயகி. இரண்டு மலைவாசிகள் காதலித்து ஊரின் எதிர்ப்பை மீறி, வாழைமட்டையின் மூலமாக வரம் தர மறுத்த கடவுளையும் தாண்டி காதலர்கள் திருமணம் செய்து வெற்றி பெற்று சமூக அவலங்களோடு போட்டியிட முடியாமல் வாழ்வை இழந்த நிலையை புடம் போட்டுக் காட்டும் தேன் திரைப்படம் அருமை.
இந்த வெற்றிப் படக் கூட்டனியில் யாரைப் புகழ்வது? நடிகர்கள், இயக்குனர், கதாசிரியர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், என ஒவ்வொருவரும் தங்களது பணியைத் திறம்படச் செய்திருக்கின்றனர்.
பன்னாட்டுக் குழுமங்கள் பணம் சம்பாதிப்பதற்காக மலைப்பகுதியை ஆக்கிரமிப்பதும், கழிவுகளை அருவிநீரில் கலக்கவைத்து மலைவாழ் மக்களின் வாழ்வைச் சீரழிப்பதையும்,
மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கின்ற அரசியல்வாதிகளின் அப்பட்டமான வேடத்தையும்,
அரசுத்துறை அதிகாரிகள் மனிதாபிமானமற்ற நிலையில் குறைவின்றிக் கையூட்டுப் பெறும் மிகக் கேவலமான நிலைப்பாட்டையும் தோலுரித்துக் காட்டும் தேன்.
தனது காதல் மனைவியின் உடல்நலக் குறைவினைப் போக்க அரசு அதிகாரிகளை அணுகி கால் பிடித்துக் கெஞ்சும் கதாநாயகனின் வெகுளித்தனமான ஒவ்வொரு கட்ட நடிப்பும் உச்சம்...
இயல்பான கிராமத்துப் பெண்ணாகவே மாறி இருக்கின்ற கதாநாயகியின் நடிப்பும், வசனமும், உடல்மொழியும் அதி உச்சம்.
இந்த இருவரையும் தாண்டி இவர்களது குழந்தை தன்னுடைய தாயைப் பறிகொடுத்த நிலையி அழுகின்ற அவலநிலை,
இலவச அமர் ஊர்தியில் அம்மாவின் பிணத்தை ஏற்றுவதற்கு காசு கேட்கின்ற நிலையில் கையேந்தி அழும் குழந்தையின் நடிப்பு வியப்பின் எல்லை...
தேன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒருவர் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாமல் வெளியே வந்தாரென்றால் அவரது இதயம் கல்லால் செதுக்கப்பட்டு இருக்கிறது என்று முடிவு செய்து விடலாம்.
தேன் திரைப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், வசனமும் ஊனில் கலந்து உயிரினை உருக்குகின்றது.
மண் மணம் மாறாத வசனங்கள், சிற்றூர் மக்களின் புழங்கு சொற்கள், நடை, உடை நடவடிக்கைகள், பேச்சுமுறைகள் என அருமையாக திரைக்கதை வசனம் எழுதிய எமது மதிப்பிற்குரிய தோழமை அண்ணன் கவிஞர் ராசி தங்கதுரை அவர்களது வெற்றிப்படக் கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.
இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment