இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 22 December 2023

தமிழ் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி தேனி

21-12-2023
இன்று தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் குறித்து தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தொடக்க உரையாற்ற, தேனி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஜெயபாரதி அவர்கள் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் தேனி வையைத் தமிழ் சங்கம் சார்பில் கலந்துகொண்டு,  தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தின்படி தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்! அறிவிப்பு பலகைகளும், பதாகைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும்! கையொப்பங்கள் தனித்தமிழிலேயே இருக்க வேண்டும்!  என விழிப்புணர்வுப் பேரணியில் பரப்புரை வழங்கிய இனிய பொழுது....

ச.ந.இளங்குமரன், நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

நன்றி - ஒளிப்படங்கள் திரு செல்வம் ஐயா அவர்கள்.

Tuesday, 21 November 2023

செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் - புலவர் ச.ந.இளங்குமரன்.

செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் – ச.ந.இளங்குமரன்
November 21, 2023
 
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      22 November 2023      அகரமுதல

செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார்

தமிழ்வாழ்த்து

(கலித்துறை)

அகர முதலா னவளே அமிழ்தே அருள்வாய்

இகர உகர உடல்நீ உயிர்நீ உணர்வாய்

பகர்கிறே னிப்பா வரங்கில் பரவசம் கொள்வாய்

பகர்வாய்  பகர்வதி ளங்குமர னல்லதமிழ் தானென்றே!

(நேரிசை வெண்பா)

தந்தைக்கு வாய்த்த தவப்புதல்வன் செந்தமிழ்ச்சீர்

சிந்தை நிறைதிரு வள்ளுவன் – தந்தைதந்த

செந்தமிழ்க் காப்புக் கழகமதை செவ்வனே

முந்தியே காப்பார் முனைந்து

(நேரிசை வெண்பா)

தனித்தமிழை மீட்டெடுத்த தன்மான வீரன்

கனித்தமிழ்ச் சொல்லன் கணியன் – இனித்ததமிழ்

கல்விமொழி யாவதற்குக் கண்ணுறக்கம் விட்டொழித்த

வல்லார் இலக்குவனார் வான்.

பூவில் மதுவிருக்கும் பொன்னில் ஒளியிருக்கும்

காவில் மணமிருக்கும் கண்டிருப்பீர் – நாவினில்

நற்றமிழ்ச் சுவைமணக்க நாளெல்லாம் தொண்டுசெய்த

பொற்றமிழர் லக்குவனார் காண்.

(எண்சீர் விருத்தம்)

துள்ளிவரும் சொல்லடுக்கி உணர்வை ஊட்டி

தூயதமிழ்ப் பேச்சாலே படையைக் கூட்டி

எள்ளிநகை யாடியதீப் பகையை ஓட்டி

இன்றுவரைத் தென்புலத்தில் நிலைக்கா வண்ணம்

கள்ளிருக்கும் மலர்க்கூட்டம் கமழு கின்ற

காடாக்கிக் காட்டியவர்; இந்தி என்னும்

கள்ளியினைத் தோலுரித்துத் தொங்க விட்ட

உள்ளொளியாம் இலக்குவரைப் போற்ற வாரீர்!

(அறுசீர் விருத்தம்)

வாழ்நா ளெல்லாம் தமிழுக்காய்

வளமும் நலமும் சேர்த்திட்டார்

வீழ்நா ளில்லாத் தமிழ்த்தொண்டால்

வெள்ளம் போல மாணவர்கள்

சூழ்ந்து நின்று இந்திதனை

சூரை கொள்ளத் துணிந்திட்டார்

சூழ்கொள் மாணவர் போர்வாளாய்

சுழன்றார் களத்தில் இலக்குவனார்!

பொங்கும் தமிழின் புகழோங்க

சங்கத் தமிழ்நூல் ஆய்ந்தளித்தார்

எங்கும் தமிழே நிறைந்திருக்க

இலக்காய் உரைகள் பலதந்தார்

மங்காத் தமிழின் பெருமையினை

மாநில மெங்கும் எடுத்துரைத்தார்

தங்கத். தமிழே தமிழ்நாட்டின்

ஆட்சி கல்வி மொழியெனறார்.

உலகத் தமிழின் குடிப்பெருமை

உலகோர் பலரும் உணர்ந்திடவே

உலகின் முதல்தாய் ஈன்றெடுத்த
ஒல்காப் புகழ்த்தொல் காப்பியத்தை

உலக மொழியாம் ஆங்கிலத்தில்

ஒப்பில் லாமல் மொழிபெயர்த்த

உலகத் தமிழர் இலக்குவனார்

ஒல்காப் புகழைப் போற்றுவமே!

புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Saturday, 18 November 2023

தமிழ் வெல்லும்... (சிந்து கண்ணி) ச.ந.இளங்குமரன்

வெல்லும் தமிழ்...
(சிந்து கண்ணி)

தமிழே எனக்கு உயிராகும் -இன்பத்
தமிழே எனக்கு மூச்சாகும் - இன்பத் 
தமிழே எனக்கு உணவாகும் - இன்பத் தமிழே என்சொல் உற்றாகும்!
தமிழ்வெல்லும்! வெல்லுமே!

தமிழே எனக்கு மதுவாகும் - இன்பத்
தமிழே எனக்குப் பண்ணாகும் - இன்பத்
தமிழே எனக்குத் திருவாகும் - இன்பத் 
தமிழ்நான்  நூல்செயக் கருவாகும்!
தமிழ்வெல்லும்! வெல்லுமே!

தமிழே எனக்குப் போர்வாளாம் - இன்பத்
தமிழே எனக்கு உயர்தோளாம் - இன்பத்
தமிழே எனக்குத் துணைவேலாம் - இன்பத்
தமிழைப் பழிப்பார் தூள்தூளாம்!
தமிழ்வெல்லும்! வெல்லுமே!

உலகில் வாழும் அறிஞரெலாம் - போற்றும் 
உயர்ந்த நூல்தொல் காப்பியத்தை - என்றன்
உயிரில் கலந்த திருக்குறளை - என்றன்
உயிராம் தமிழை வணங்குகிறேன்!
தமிழ்வெல்லும்! தமிழ்வெல்லுமே!

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Saturday, 4 November 2023

இடைக்காட்டுச் சித்தர்,

இடைக்காட்டுச் சித்தர்

கொங்கணச் சித்தரின் சீடர் என்று சொல்லப்படும் இடைக்காட்டுச் சித்தர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்றும், இவர் இடையர் குலத்தில் பிறந்தவர் என்றும் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது  ஞானம் கிடைக்கப் பெற்றவர் என்றும் சொல்லப்படுகிறது. 

இடைக்காடு என்கின்ற ஊர் மானாமதுரைக்கு அருகில் இருக்கிறது. சிவ நெறியையும் சித்தர் நெறியையும் ஒருசேரப் பின்பற்றும் வழக்குரைஞர் தனுசுக்கோடிப் பாண்டியன் அவர்களும் நானும் மகிழுந்தில் பேசிக்கொண்டே வருகின்றோம். நல்ல மழை. வழியிலே சித்தர் ஆலயத்திற்கு சென்று விட்டு ஊருக்கு செல்லலாம் என்று நான் சொல்கிறேன். நல்ல மழையாக இருக்கிறது அண்ணா, மழை நின்றுவிட்டால் சித்தர் ஆலயத்திற்குச் செல்லுவோம், இல்லை என்றால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்வோம் என்றார், 

சரி என்று சொல்லிக் கொண்டே பெரும்பாலும் எந்தக் கோயில்களுக்கும் விரும்பி நான் செல்வது இல்லை, ஆனால் இறைவனுக்கு என்னைப் பார்க்கத் தோன்றினால் அவனாகவே என்னை அழைப்பான் என்றவாறு பல்வேறு செய்திகளைக் குறித்துப் பேசிக்கொண்டே வந்தோம்.  

இடைக்காட்டை நெருங்குகின்ற பொழுது அங்கு ஒரு துளி கூட மழை இல்லை. வழக்குரைஞர் சொன்னார் என்னண்ணே  வியப்பாக இருக்கிறது, இந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை என்று. இப்பொழுது நான் சொன்னேன் சித்தர் என்னைப் பார்க்க விரும்புகிறார் என்று.

இடைக்காட்டுப் பகுதியில் மிகப் பெரிய பஞ்சம் நிலவ இருக்கிறது என்னும் செய்தியினை, சித்தர் தான் பெற்ற ஞானத்தினால், தொலைநோக்குச் சிந்தனையினால் வருவதை முன்கூட்டியே அறிந்து  கொண்டார். அதை  மக்களிடம் சொல்லுகின்ற பொழுது யாரும் அவரை நம்பவில்லை. அவருக்கு ஏதோ கிறுக்குப் பிடித்து விட்டதாகப் பலரும் பேசியிருக்கிறார்கள்.  ஆனால் அப்பகுதியில் மிகப் பெரிய பஞ்சம் வந்திருக்கிறது. அந்தப் பஞ்சத்திலிருந்து தன்னை அவர் காத்துக் கொண்டிருக்கிறார். பஞ்சத்தில் அடிபட்ட பின்பு தான் மக்கள் சித்தரை நம்பத் தொடங்கி இருக்கின்றனர். பின்பு சித்தரின் வழியைப் பின்பற்றி மக்கள் தங்களது பஞ்சத்தைப் போக்கி இருக்கின்றனர் என்கின்ற செய்தி அவ் ஊரில் அறியப் பெற்றோம். மேலும் இடைக்காட்டுச் சித்தர் திருவண்ணாமலையில் உயிர் ஒடுக்க நிலை எய்தினார் என்ற செய்தியும் அறிந்தோம்.

மக்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தைச்  சரி செய்ய முயன்று கோள்களை வணங்கி, கோள்களின் நிலையை மாற்றி அமைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி மாற்றி அமைக்கப்பட்ட இடைக்காட்டுச் சித்தர் ஆலையத்தில் எடுத்த படம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு வழக்குரைஞர்,..

இப்பொழுது இடைக்காட்டுச் சித்தர் ஆலயத்தை விட்டு  மகிழுந்தில் கிளம்பினோம். வண்டியைக் கிளப்பினோம். இதமான சாரல் பெய்யும் அறிகுறி தென்பட்டது. சித்தர் ஆலயத்தை விட்டு வண்டியில் கிளம்பிய ஐந்து மணித் துளிகளில் பெருமழை பெய்யத் தொடங்கியது. 

என்னண்னெ ஒரு பெரிய அதிசயம், வரும் வழியெல்லாம் மழை, இடைக்காட்டூரில் மட்டும் மழை இல்லை. சித்தரைப் பார்த்து விட்டுக் கிளம்பிய உடன் பெருமழை பெய்கிறது என்று வழக்குரைஞர் பதிவு செய்ய, சித்தர் நம்மைப் பார்க்க வேண்டும் என்று அழைத்தார் பார்த்தோம், பேசினோம், பேசினார், விடைபெற்றுக் கிளம்பினோம். இனி வழி எங்கும் மழை தான்... என்று சொல்லிக் கொண்டே வந்தோம். தேனி நாகலாபுரம் வந்து சேரும் வரை தொடர் மழை பெய்து  கொண்டிருந்தது... மழையோடு இல்லத்தை அடைந்த நேரம் இரவு மணி 12-24....

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன், 
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், 
தேனி, நாகலாபுரம். 
02-11-2023

Sunday, 29 October 2023

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் - ச.ந.இளங்குமரன்

இவர்தான் பசும்பொன்...

"அப்பன் தொழிலை அவன் மகன் செய்ய வேண்டும் அதற்கு இளமையிலேயே பயிற்சி பெற வேண்டும் என்ற பத்தாம் பசலிக் கொள்கையை தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்". (26-03-1954 குலக்கல்விக்கு எதிராக சட்டமன்றத்தில்...) 

"பரம்பரை பரம்பரையாக அரிசனங்களும் தேவர்களும் தோளோடு தோள் இணைந்து இருந்தவர்கள். அவர்களைத் தாக்குவதும் துன்புறுத்துவதும் என் ரத்தத்தைச் சிந்த வைப்பது போலாகும். அரிசன மக்கள் என் சகோதரர்கள், அவர்களைத் தாக்காதீர்கள். அவர்களைத் தாக்க வேண்டும் என நினைத்தால் முதலில் என்னைக் கொன்று விட்டு அப்புறம் அவர்களிடம் பேசுங்கள் (1957 முதுகுளத்தூர் பொதுக்கூட்டம்)

"இனியும் கைரேகைப் பதிவு சட்டத்திற்கு உட்பட வேண்டாம். நிர்பந்தத்தின் காரணமாக கைரேகையைப் பதிவு செய்யும்படி நேரிட்டால் உங்கள் கட்டை விரல்களை வெட்டிக் கொள்ளுங்கள்" (1948)

இன்றைய காலத்தில் உழைத்து உழைத்து ஓட்டாண்டியாகியிருக்கும் விவசாயிகளின் பெயரைச் சொல்லிக் கொண்டு கவலையின்றி உண்டு தூங்கிக் கொண்டிருப்பவர்கள் நிலச்சுவான்ந்தாரர்கள் தான். நேரிடையாக நிலத்தில் உழுது பயிரிடுபவர்கள் விவசாயிகளா? அல்லது உட்கார்ந்து கொண்டு,  உழைப்பவனை வேலை வாங்கிக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கம் நிலச்சுவான்தாரர் பரம்பரை விவசாயிகளா என்பது இன்னும் இந்த நாட்டில் சரியாக நிர்ணயிக்கப்படாதது ரொம்பவும் துரதிருசுட்டமான விசயமாகும். (1954)

"வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும், விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித் துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி, பசும்பொன் தேவர் தான் பண்டியகுமாரன் " என்று பாராட்டினார் பெரியார்.

"தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். ஆனால் அவர் பேசத்தொடங்கியதும் சிங்கத்தின் கர்ஜனை போலவே இருந்தது. தேவர் அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இளவல், சுத்தமான வீரர் பெரும் தலைவர்" என்றார் அண்ணா.

"தேசபக்திக்கும், மாவீரத்திற்கும் உச்சபட்ச மகத்துவம் எவ்வளவு உண்டோ, அவ்வளவுக்கும் உரியவர். நினைக்கும் போதே வணங்கத்தூண்டும் மகா உத்தமத் தலைவர். ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி அவர் மாதிரி நிறைவான தலைவரை நாடு உண்டாக்கியதும் இல்லை. உண்டாக்கப் போவதுமில்லை" என்று போற்றிப் புகழ் பாடியவர் யார் தெரியுமா? "இதய தெய்வம்" என்று எல்லோராலும் போற்றப்படும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

"கனல் உமிழும் சொற்பொழிவுகளும் தீரமிக்கச் செயல்களும் நாட்டு விடுதலைக்கான போர்த்தளவாடங்களாக இருந்தன" என்பார் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி.

"தேவர் பேச்சு உள்ளத்திலிருந்து வெளி வருகின்றது. உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசி விடுவதால் தேவர் பேச்சு தெய்வப் பேச்சின் தன்மையைப் பெற்று விடுகிறது" என்பார் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.

"முருகத் துடிப்புடைய மனிதருள் முருகன்" அருளாளர் திருமுருக கிருபானந்த வாரியார்.

"தேசியம் காக்கும் செம்மல்" திரு.வி.க., 

"வள்ளலாரின் நேரிய நெறியை வாழ்வியலாகக் கொண்டு வாழும் வள்ளலாராய் வாழ்ந்த சன்மார்க்கி பசும்பொன் தேவர் " ச.ந.இளங்குமரன்,

Thursday, 12 October 2023

நல்ல தமிழ் பேசு கல்லூரி மாணவர்களுக்கான போட்டி.

தேனி வையை தமிழ்ச்சங்கம் - நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் உலகத் தமிழ்க் கூடல் 677 ஆம் நிகழ்வு கல்லூரி மாணவ மாணவியருக்கான "நல்ல தமிழ் பேசு" என்னும் போட்டியாக நடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். 

ஆங்கிலமோ, பிறமொழிச் சொல்லோ கலவாமல் மூன்று நிமிடம் நல்ல தமிழில் பேசவேண்டும். கூறியது கூறல்,   திணறல் இருக்கக் கூடாது . தலைப்பு கொடுக்கப்பட்ட 7 வினாடிகளுக்குள் பேச்சைத் தொடங்கவேண்டும் என்பது போட்டியின் விதிமுறையாகும். இவ்விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவ மாணவிகள் பலரும் மிக அருமையாகப் பேசினர்.

நிகழ்வுக்கு வையைத் தமிழ்ச்சங்க நிறுவனரும், உலகத் தமிழ்க்கூடலின் அமைப்பாளருமான புலவர் இளங்குமரன் தலைமை ஏற்றார். போட்டி நடுவர்களாக இணை அமைப்பாளர் தமிழ்ச்செம்மல் முத்துமணி,  நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரன் ஆகியோரும், மதிப்பீட்டாளர்களாக தமிழ்ச்சுடர் முத்துக்குமார், தொல்லியல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர்.

முன்னதாக சென்னை அலைகடல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் மணிமேகலை சித்தார்த்தன் அவர்களும், தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப்பற்றாளர் முனைவர் தமிழ் மணிகண்டன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இலட்சிய ஆசிரியர் லட்சுமி குமரேசன் அவர்கள் நல்ல தமிழ் பேசு போட்டியை மிகச் சிறப்பாக நடத்தினார். 

இப்போட்டியில்  
மோனிஷ் முதலிடம் கிருட்டிணன் கல்லூரி
கோவை,  யோகேஷ்குமார் இரண்டாமிடம் கே.பி.ஆர் கல்லூரி கோவை, த.சுகன்யா மூன்றாம் இடம், கரியாபட்டினம், சின்ன செல்வம் நான்காம் இடம், சென்னை பல்கலைக்கழகம், ஸ்ரீமுகி ஐந்தாம் இடம் கிருட்டிணா கல்லூரி கோவை, செ.நுசரத் பாத்திமா, ஆறாம் இடம், ஔவையார் அரசு மகளிர் கல்லூரி. காரைக்கால்,  ச.பரத் ஏழாமிடம் சென்னை மாநிலக் கல்லூரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 இவர்களுக்குப் பரிசுத்தொகையாக  1000, 800, 700, 600, 600, 500, 500 ரூபாயை, நற்றமிழ் புலவர் ராசேந்தினரனார், முனைவர் பத்மினி பாலா, மகாலிங்கம் துரைராஜ், கவிஞர் செல்வி செல்வராணி, இலட்சிய ஆசிரியர் லட்சுமி குமரேசன், தொல்லியல் ஆய்வாளர் செல்வம், தமிழ்ச்சுடர் முத்துக்குமார்,  தொல்காப்பிய அறிஞர் இருளப்பன் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர். 

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Thursday, 28 September 2023

கூடா நட்பு திருக்குறள்

திருக்குறள் 821

எமது ஆசான் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்களது பொருளியல் உரை குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன். பொருளியல் உரையில் திருவள்ளுவரின் நட்பு குறித்து பல்வேறு வியத்தகு செய்திகளைக் கொடுத்தார்.  முனைவர் சரசுவதி அம்மா அவர்கள் ஓரம்போகியார் காட்சியில் நீட்சி வள்ளுவம் என்று எமது உலகத் தமிழ்க் கூடல் நிகழ்வில் பேசினார்.  சங்க இலக்கியப் பாடல்களின் சாரம் குறித்தும், வள்ளுவம் குறித்தும் அவர் சொன்ன செய்தியைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வு நடைபெற்றது... இப்போது புறநானூற்றுச் செய்தி கூடா நட்பின் குறள் குறித்து எமது ஆசான் பதிவு செய்த செய்தியும், குறிப்பாக  திருக்குறளின் சொல்லும் பொருளும் புறநானூற்றில் பதிவவாகி இருந்ததை விளக்கும் முகமாக "கூடா நட்பு" 

*கூடா நட்பு* 821.

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு

*விளக்கம்*

*சீரிடம் காணின்*

தப்பிப் போக முடியாமல் தக்க இடம் வாய்த்தால்

*எறிதற்கு*

அழித்து ஒழிப்பதற்கு ஏற்ற

*பட்டடை*

கொல்லர் உலைக்களத்துக் காய்ந்த இரும்பைத் தாக்குவதற்கு அமைந்த பட்டடைக்கல் போல்வது

*நேரா நிரந்தவர் நட்பு*

நெஞ்சால் கலவாமல் உருவால் கலந்தவர் நட்பு.

*பட்டடை* என்பது உலைக்கல் 
காய்ந்த இரும்பைச் சம்மட்டியால் அடிக்கத் தாங்கும் கல்லாக - இரும்பாக -இருப்பது.

 *"இரும்புபயன் படுக்கும் கருங்கைக் கொல்லன்*

*விசைத்தெறி கூடமொடு பொரூஉம் உலைக்கல் அன்ன வல்லாளன்னே"*

என்பது (புறம்.170)

பிட்டங் கொற்றன் என்பானை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது. இன்றும் கூடட *உலைக்கல்* *பட்டடை* என்பவை வழக்கில் உள்ளவையே!

அடுத்த ஊருக்கு விரைவாகப் போய்வர வேண்டும். காட்டு வழியாக இருப்பதால் நீ துணைக்கு வந்தால் நல்லது என்றான். நண்பன் சொல்லை நம்பினேன். அவன் சொன்ன விரைவு நடையில் இல்லை. பிந்திப் பிந்திப் பின்னே வந்தான். யாரையோ எதிர் நோக்கி வருவது போல் வந்தான். ஒரு சிற்றாறு வந்தது. நீராடிச் செல்லலாம் என்றான். நான் கரையில் நின்றேன். அவன் உடையை அவிழ்த்து வைக்கும் போது அதனுள் ஒரு கத்தி இருக்கக் கண்டேன்.

அவன் நீருள் மூழ்கி வளைய வரும் போது அவன் அறியாமல் கத்தியை எடுத்துப் பார்த்தேன். அதில் என் காதல் பகைவன் பெயர் இருந்தது. எனக்கு ஐயம் உண்டாகியது. செறிந்த காட்டுள் மறைந்து கொண்டேன்.

என் காதல் பகைவனொடு மூவர் உடன் வந்தனர். என்னைக் காணாமல் என் பெயரை ஓங்கி ஓங்கி அழைத்தான். நான் என்னை மேலும் செறிவாக்கிக் கொண்டேன். வந்தவர்கள் நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டாயே என்று அவனைக் கடிந்தனர். என்னைக் காணாதவர்களாய் அவனைத் திட்டிக் கொண்டே திரும்பினர். அவர்கள் போனதைத் தெளிவாக அறிந்து கொண்டு ஊர்க்குப் போகாமல் வேற்றூர் போய்விட்டேன்.

புனைகதை; மலர்ந்த வாழ்வு 26-27, கூடா நட்புக்கு 'நேரா நிரந்தவர்' என்றது அரிய ஆட்சி. நெஞ்சத்தால் நேராதவர். நேர்ந்தவர் போல் காட்டி நிரந்துவிட்டவர் - கலந்து விட்டவர் - என்பதாம். உவமையணி அமைந்தது இப்பாடல்

பொருள்

உள்ளத்தொடு பொருந்தாமல் பொருந்தியது போல் காட்டுவார் நட்பு, சரியான இடம் வாய்க்கக் கண்டால் தாங்குவது போல் இருந்து வெட்டுதற்கு உதவும் (கொல்லா) பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.

( பட்டடை என்பது பட்டறை எனப் பிழை வழக்கில் வழங்கப்படுகிறது)

எமது ஆசான் செந்தமிழ் அந்தணர் பதிவிலிருந்து...

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Sunday, 27 August 2023

தேனியில் நூல்வெளியீட்டு விழா

தேனி வையைத் தமிழ்ச் சங்கம், வையைப் பதிப்பகம், சங்கத்தமிழ் அறக்கட்டளை இணைந்து மூன்று பெண் அரசு ஊழியர்களின் நூல்கள் வெளியீட்டு விழா தேனியில் நடைபெற்றது. 

நிகழ்வுக்கு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமை தாங்கினார்.
கவிஞர் பா கவிதா எழுதிய புத்தரின் ஆசை, இலட்சிய ஆசிரியர் அ.லட்சுமி குமரேசன் எழுதிய நிலாச்சோறு, முனைவர்  புனிதராணி எழுதிய பக்தி இலக்கியங்களில் பன்னிரு ஆழ்வார்கள் ஆகிய மூன்று நூல்களையும்  ச.கந்தசாமி (மரபு அலுவலர் சென்னை, ) அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார், பெ.இளங்கோ (தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்) அவர்கள்  பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழ்னக்கினார்.  

கவிஞர் சி.ஜெயபாண்டி வரவேற்புரையாற்ற புலவர் இராசேந்திரன் வாழ்த்துரைக்க,  கவிஞர் அ.பாண்டிய மகிழன் மா.தங்கப்பாண்டியன், சிவக்குமார் சிங்காரவேல் ஆகிய மூவரும் மூன்று நூல்கள் குறித்து மதிப்புரை வழங்கினர். 

நிகழ்வு ந.வீ.வீ.இளங்கோ, பொன் பாலமுருகன்,  நீல பாண்டியன், வி.மு.ஜெயதுரை,  மா.பால்ப்பாண்டி, முனைவர் யாழ் ராகவன், ஆ.முத்துக்குமார், ஆகியோர். முன்னிலையில் கவிஞர் ராஜிலா ரிசுவான், ஈசுவரன், மு.வேணுகோபால், மு.ஜெயபாரதி, பா.செல்வக்குமரன் ஆகியோர் நூல்களின் சிறப்புப்படிகளைப் பெற்றுக்கொண்டனர்.

முனைவர் பத்மினி பாலா அவர்கள் நிகழ்ச்சியை தொகுக்க ப.வேல்முருகன் அவர்கள் நன்றி கூறினார். முன்னதாக செல்வன் ஜெ.திருப்புகழ் அவர்களது பலகுரல் நிகழ்வு நடைபெற்றது.  எழுத்தாளர்கள் மூவருக்கும்  படைப்பாளர் விருது 2023 வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நூலாசிரியர் மூவரும் ஏற்புரை வழங்கினர்.

நிகழ்வு வையயைச் தமிழ்ச்சங்க வலைத்தளத்தில் நேரலை செய்யப்பட்டது. நிகழ்வில் தேனிமாவட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், நூலாசிரியர்கள் தமிழார்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

27-08-2023

Sunday, 14 May 2023

கஞ்சம் _கஞ்சி ச.ந.இளங்குமரன்

கஞ்சம் _ கஞ்சி

இப்படி ஒரு சொல் மணிமேகலையில் இருக்கிறது.
இச்சொல்லுக்கு..
 
கஞ்சா
கைத்தாளம்
தாமரை
துளசி
நீர்
பாண்டம்
வஞ்சனை
வெண்கலம்

என  பல பொருள்கள் இருக்கின்றன. 

"கஞ்ச வேட்கையில் காந்தமண் வேண்ட  என்பது மணிமேகலை பாடலின் வரி. (பதிகம் 10)"

'காந்தமன் எனும் சோழ அரசன் தன்னுடைய நாட்டில் நீர் பெருக வேண்டும் என்ற ஆசையினால் வேண்டிக் கொள்ள' என்பது இந்தப் பாடல் வரியின் பொருள்.

கஞ்சம் - நீர் 
நமது வீட்டில் பெரியவர்கள் நம்மைத் திட்டும்போது உன்னைக் கஞ்சி கஞ்சியா ஆக்கிடுவேன் என்பது இன்றும் வழக்கில் உண்டு. அதாவது மிக வலுவாக இருப்பதை வலுவிழந்து போகச் செய்வதையே அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

நீரானது அடர்த்தி குறைவாக இருப்பதால் அதனைக் குறிப்பதற்காக கஞ்சம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. 

கஞ்சு + அம் = கஞ்சம் 
அம் என்ன்பது பகுதிப் பொருள் விகுதி.
கஞ்சுதல் _ குறைதல், நீர்த்தல்.  அடர்த்தி குறைந்து நீர்த்தன்மையில் இருக்கும் உணவுக்கு கஞ்சி என்பது பொருள்  'கஞ்சி   குடிச்சாச்சா' எனும் வழக்குச் சொல்லில் குடிப்பு என்னும் சொல் கஞ்சி யின் நீர்த்தன்மையைக் குறிக்கும்....

நன்றி 
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம்,
 தேனி, நாகலாபுரம்

Friday, 5 May 2023

மீட்கப்படுமா கண்ணகி கோயில்? - ச.ந.இளங்குமரன்

தமிழ்நாட்டு வரலாற்றில் புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்த கண்ணகிக்கு, சேரன் செங்குட்டுவனால் அமைக்கப்பட்ட கோயிலில்  திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் காவல் தெய்வமாக இருக்கின்ற கண்ணகியை வழிபடுவதற்கு கேரள அரசின் அனுமதி பெற்றே செல்ல வேண்டிய அவலச் சூழல் இன்றும் தொடர்ந்து நிலவுகிறது.

கேரளத்தின் பிடியிலிருந்து கண்ணகி கோவிலை மீட்கக் கோரியும், ஆண்டுக்கு ஒரு நாள் விழா என்பதைத் தாண்டி ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு சென்று வருவதற்கு மக்களுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், கண்ணகி கோயிலுக்குத் தமிழ்நாட்டின் வழியாகவே  பாதை சரி செய்யப்பட வேண்டும் என்றும், கோயில் வழிபாட்டிற்கு கேரளா அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டரசுக்கு இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆண்டுகளில் தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த உயர்திரு பல்லவி பல்தேவ் அவர்களிடம் கண்ணகி கோயில் உரிமை மீட்பு குழுவின் தலைவர் என்ற முறையில் நேரடியாக  விண்ணப்பம் கொடுத்தோம்.

மேலும் கண்ணகி கோயிலின் முகப்பு வாயில் தமிழகத்தை, குறிப்பாக மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. எனவும் 1817 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய அளவையே (சர்வேதான்) மிகவும் பழமையானது என்றும்,  இதில் கண்ணகி கோயில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதியிலேயே இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்பதையும் விளக்கினோம்.

அதன்பின்னர் 1893, 1896 ஆம் ஆண்டுகளில்  நடத்தப்பட்ட அளவையின் (சர்வேயும்) பட்சியும் 1913, 1915 இல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதனையே வலியுறுத்துவதாக உள்ளன என்பதையும் வலியுறுத்தினோம். 

1959 ஆம் ஆண்டு வரை கேரள அரசு, கண்ணகி கோயில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 ஆம் ஆண்டு தமிழக கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய அளவையிலும் (சர்வேயிலும்) கண்ணகி கோயில், கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழ்நாடிற்குள்தான் இருக்கிறது என்பதையும் ஆட்சியர் அவர்களிடம் எடுத்துரைத்தோம். 

இச்செய்தி அன்றைய தினத்தந்தி நாளிதழிலும் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி  குறித்து உறுதியாக மேல் நடவடிக்கை எடுப்பாதாக தேனிமாவட்ட  ஆட்சியர் பல்லவி பல்தேவ் சொன்னார்கள்.  ஆனால்  நாங்கள் முன்வைத்த  கோரிக்கைகள் இதுவரையில்  கண்டு கொள்ளப்படாமலேயே இருக்கிறது. 

தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தக்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுத்து கண்ணகி கோயிலின் உரிமை தமிழ்நாட்டுக்கு உரியது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை முன் வைக்கிறோம்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன், தலைவர் கண்ணகிகோயில் மீட்புக்குழு
தேனிமாவட்டம்.

Monday, 1 May 2023

தமிழ் செம்மொழித் தகுதி வரலாறு - ச.இளங்குமரன்

தேனி வையைப் பதிப்பகம்  சார்பில் நூலாக்கம் செய்யப்பட்ட எனது "தமிழ்-செம்மொழித் தகுதி வரலாறு" நூல் மதுரையில் நடைபெற்ற தமிழன்னை தமிழ்ச் சங்கம் நடத்திய விழாவில் கவிச்சித்தர்  வீராபண்டியத் தென்னவனார் 68 ஆம் பிறந்தநாள் விழாவில் தமிழ்ச்சங்க நிறுவுநர் கருங்கல்.கி கண்ணன் ஐயா அவர்கள் வெளியிட தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர் துரை. அனுராசு அண்ணன்அவர்கள் பெற்றுக்கொண்ட இனிய பொழுது... 

நன்றி - தமிழன்னை தமிழ்ச்சங்கம் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் ...

இனிய அன்புடன்
வையைத் தமிழ் சங்கம்  தேனி நாகலாபுரம்.

Wednesday, 26 April 2023

தெருவெங்கும் தமிழ் வளர்ப்போம் - கவிதை

தெருவெங்கும் தமிழ் வளர்ப்போம்.

ஆட்சிமொழிச் சட்டத்தில் தமிழும் உண்டு
ஆட்சியர்கள் தமிழாலே வளர்ந்த துண்டு
காட்சியிலும் ஆட்சியிலும் தமிழ்தான் இல்லை
கச்சியிலும் கல்வியிலும் தமிழே  இல்லை
பாட்டினிலும் பைந்தமிழைக் காண வில்லை
பாட்டெழுதும் ஏட்டினிலும் தமிழே இல்லை
வீட்டினிலும் வெளியினிலும் தமிழைக் காணோம்
வீழ்ந்தனையோ நீதமிழா எங்கே மானம்?

ஆண்டுகளோ ஒருபோதும் நிற்ப தில்லை
அகவையதும் அவ்வாறே மாற்ற மில்லை
ஆண்டவரும் ஆள்பவரும் தமிழைக் காவார்
அந்நியரும் அடிமையரும் அதுபோ லாவார்
மீண்டுமொரு புரட்சியொன்று தேவை இங்கு
மீட்டிடுவோம் தமிழ்த்தாயை சினந்து பொங்கு
மாண்புநிறை தமிழ்மக்காள் வாரீர் வாரீர்
மண்டுதமிழ்க் காத்திடுவோம் விரைந்து வாரீர்.

கற்றாரின் உள்ளமெலாம் களிப்புற் றாட
கவியருவி மனதுக்குள் கட்டற்  றோட
உற்றாரும் உறவினரும் உவந்து போற்ற
உலகாண்ட தமிழ்த்தாயின் உள்ளம் தேற்ற 
அற்றாரின் அழிபசியைத் தீர்க்கும் வண்ணம் 
அருந்தமிழை வளர்த்திடுதல் நம்மின் எண்ணம் 
வற்றாத வாரியெனத் திரண்டு வாரீர்
வண்டமிழைத் தெருவெங்கும் வளர்க்க வாரீர்!

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

Wednesday, 12 April 2023

சொற்கள்

படிந்த சொற்கள்...

உதிர்ந்து கிடக்கின்றன
என்னைச் சுற்றி
இப்போதும் ...
கூரிய நகங்களோடும்
கோரைப் பற்களோடும்
சிலபல சொற்கள்!

சிலநேரங்களில் 
கைகள் உயிர்ப்புற்று
நீண்டு கூரிய நகங்கள்... 
குரல்வளையை நெறித்து
உடலெங்கும் கூறுபோட்டு
கூத்ததாடி மகிழ்கின்றன.
கீறல்களில் வழியும் 
குருதியோடு உடல்நனைக்க
வலியில் போரடி
அலரித் துடிக்கிறேன்!
சோர்வுற்று வீழ்கின்றன
சொற்கள்...!

என்னை அமைதிப் 
படுத்துவற்குள்...
உயிரோட்டத்தைத்
தடைசெய்யும் நோக்கோடு
குருதி நரம்புகளைக் 
கடித்துக் குதறி 
கொண்டாட்டம் போடுகின்றன
கோரைப் பற்கள்...

தளரா முயற்சி 
தன்னம்பிக்கை என
இரண்டின் துணையோடு 
மன அதிர்வுகளை 
மரணிக்கச் செய்கிறேன்
அச்சம் அகல்கிறது
நடுக்க்கம் தொலைகிறது

உதிர்ந்து கிடக்கும்
சொற்களின் தாக்கம்
உரமற்றுப் போகின்றன.
நான் உயிர்ப்புறுகிரேன்.

நமத்துப் போகின்றன
கூரிய நகங்களும், 
கோரைப்பற்களும்
என் அடுத்த நகர்வுக்கான
படிக்கற்களாய்...
மலர்ப்படுக்கையாய்...

ச.ந.இளங்குமரன்
13-04-2023

Sunday, 9 April 2023

எங்க ஆத்தா சொன்ன சொலவம் புத்தக மதிப்புரை.

மதிப்புரை
""""""""""""""""""

     ‌       "எங்க ஆத்தா சொன்ன சொலவம்" தலைப்பே மண்மணக்கிறது. நூலைப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.

             திருக்குறள், ஆத்திசூடி,கைக்கூ போன்ற கவிதைகள் வடிவம் குறுகியது எனினும் அவை வழங்கும் பொருள் விரிந்தது.

             அத்தகைய தன்மை உடையவைகளே சொலவங்கள் என்றால் அது தவறாகாது.

             1800 க்கும் மேற்பட்ட (சொலவடைகள் ) சொலவங்களைத் தேடித் தொகுத்து நூலாக்கியிருப்பது சிறப்பாகும்.

             என்னவோ! சொலவம் சொன்ன கணக்கா "சொல்றது சுலபம் செய்யுறது தான் கடினம்" அப்படி ஒரு கடினமான பணியை அழகாகச் செய்திருக்கும் நூலாசிரியர் கவிஞர் அ.பாண்டிய மகிழன் அவர்களைப் பாராட்டலாம்.

              சொலவங்களை யாரும் சுலபமாக எண்ண வேண்டாம், அதை இந்த நூலிலுள்ள ஒரு சொலவத்தாலயே சொல்கிறேன்,"சிற்றுளியால் மலையே பிளக்கும் "அதாவது,சிறிய சொலவம், எவ்வகை பெரிய உண்மையையும் மிக எளிதாக விளக்கும் ஆற்றல் உடையதாகும்.

            இத்தகைய சொலவ நூலை, தேனி வையை பதிப்பகம் வாகாகப் பதிப்பித்திருக்கிறது.அழகான அட்டைப்படமும் கண்கவர்கிறது.

            நம் வீட்டு நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று.அனைவரும் அடிக்கடி வாசித்தால் சிறப்பு உண்டு.

           வாழ்க! வளர்க! நூலாசிரியரின் தமிழ்த்தொண்டு! பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

                          கலைச்சுடர்மணி 
                       ம.கவிக்கருப்பையா

Tuesday, 28 February 2023

தமிழில் பெயர்ப்பலகை

தேனி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி பெரியகுளம் ராமானுஜர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.   பெரியகுளம் நகர வணிகர் சங்கத் தலைவர் முன்னிலை வகித்தார்.  மேனாள் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் பெ.சந்திரா, வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள் வைப்பதற்கான சட்டம் குறித்தும், வைக்கவேண்டிய தேவை குறித்தும், அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்களும் தமிழில்தான் இருக்கவேண்டும் வலியுறுத்தியும் பேசினர். 
நிகழ்வில் பெரியகுளம் வணிகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் அன்புக்கரன், தாமோதரன், மணிகார்த்திக், பாண்டியமகிழன், கவிக்கருப்பைய, நித்தியானந்தன் ஆகியோர் வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் மாற்றுவது தொடர்பான தங்களது ஆலோசனைகளை வழங்கினர். புருசோத்தமன் நன்றி கூறினார்.

Monday, 27 February 2023

தமிழ் ஆட்சிமொழிப் பட்டிமன்றம்

தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா நடத்தப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டக் கம்மவார் சங்கக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் ஆட்சிமிழிச் சட்டச் செயலாக்கத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது! போதுமானதல்ல! என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 
பட்டிமன்றத்தின் நடுவராக வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் நடுவராகச் செயல்பட்டார். 

நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் கோ.சீனிவாசன் தலைமையுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பேரா.இரதிதேவி அனைவரையும் வரவேற்றார். தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் பெ.இளங்கோ தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பாகச் சிறப்புரையாற்றினார்.

பட்டிமன்றத்தில் அரசு அலுவலர்களின் ஆர்வம் போதுமானது என்று ஆசிரியர் ஆ.முத்துக்குமார், முனைவர் சுகன்யா, மாணவர் மணிகண்டபிரபு ஆகியோரும், போதுமானதல்ல என ஆசிரியர் இலட்சுமிகுமரேசன், முனைவர் தாழைச்செல்வி, மாணவர் பாலகணபதி ஆகியோர் மிகச் சிறப்பாகத் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். 

தமிழ்நாட்டில் 80 க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இருக்கின்றன. ஆட்சி மொழிச் சட்டத்தை அரசு அலுவலர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் அந்த அரசாணைகளைச் செயல்படுத்துவதில் பெரும்பான்மையான அரசு அலுவலர்கள்  ஆர்வம் காட்டுவதில்லை. காட்டியிருந்தால் வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருந்திருக்கும். அரசு அலுவலர்களுடைய கையொப்பம் தமிழிலேயே இருந்திருக்கும். அரசு அலுவலகங்களில் பின்பற்றப்படுகின்ற கோப்புகள் தமிழிலேயே இருந்திருக்கும். பெரும்பான்மையான அரசுத் துறை நிறுவனங்களில் இந்த நிலை இல்லை என்றும்,  ஆட்சி மொழிச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுப் பணியாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான பல்வேறு சன்றுகளை முன்வைத்துத் பட்டிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

நிகழ்வில் புருசோத்தமன், அழகுமாரி, கண்ணன் மற்றும் பேரசிரியப் பெருமக்கள் எனப் பலரோடு மாணவ மாணவிகள் திரளாகாக் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

Friday, 24 February 2023

வரைவுகள்

24-02-2023 
இன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழிச்சட்ட  விழிப்புணர்வு வார விழாவில் நான்காம் நாள் நிகழ்வில் அரசு அலுவலகப் பணியாளருக்கு தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறையின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ச.வினோத்குமார் அவர்கள் பயிற்சியை வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பெ.இளங்கோ அவர்கள் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் சிறப்பு வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழ் மொழி குறித்தும், அதன் முதன்மை குறித்தும், ஆட்சி மொழிச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு குறித்தும் பேசினேன். 

நிறைவாக பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கிச்சிறப்பிக்கப்பட்டது.

நிறைவாக தமிழ் வளர்ச்சி உதவி அலுவலர் புருசோத்தமன்  அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன் நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

தமிழ் ஆட்சிமொழி

21-2-2023 இன்று தேனி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வினை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா அவர்கள் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். உடன் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உமேஷ் டோங்கரே அவர்களும் கலந்து கொண்டார்.  தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் இளங்கோ அவர்கள் ஆட்சி மொழிச் சட்டம் தொடர்பான அறிமுக உரையோடு வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு தமிழ் விழிப்புணர்வுச் சொற்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் தாங்கி ஊர்வலமாகச் சென்றனர்.

இந்நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம், சங்கத்தமிழ் அறக்கட்டளை, வராகநதி தமிழ்ச்சங்கம்,  நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம், பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம், தமிழ்நாடு புலவர் பேரவை உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பரப்புரையாக வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன்  தமிழ் ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வு தொடர்பான முழக்கங்களை முழங்கினார. பட்டிமன்ற நடுவர் கவிக்கருப்பையா, கவிஞர் பாண்டியமகிழன் ஆகியோரும் தொடர்ந்து தமிழ் மொழி விழிப்புணர்வு முழக்கங்களை முழங்கியவாறு பரப்புரையில் தொடர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஊர்வலம் நடைபெற்றது. 

பின்பு இந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிச்  சிறப்பிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி உதவி அலுவலர் புருசோத்தமன்  அழகுமாரி, கண்ணன் ஆகியோர் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து விழா சிறப்புர ஒத்துழைப்பு நல்கினர்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்,
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

(நன்றி ஒளிப்படம் அண்ணன் தேனி  பாலா)

Saturday, 28 January 2023

தூய தமிழ்ப்போற்று - கவிதை

*தூய தமிழ்ப் போற்று*

தமிழ்நாட்டில் தனித்தமிழைப் போற்றுதற்கு 
தஞ்சையிலே கூடியுள்ளோம் பாவரங்கில் 
இமிழ்கடல்சூழ் உலகாண்ட இன்மொழிக்கு 
இப்படியோர் நிலைதன்னை ஈந்தவர்யார்?
அமிழ்தினிய செந்தமிழில் அயல்மொழியை
உமிழ்ந்தவர்கள் தமிழரென்று அறிந்திலரோ?
தமிழென்றும் தமிழரென்றும் மேடைங்கும் 
முழங்கியதன் னலக்கேடர் செயலன்றோ.

ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதுகின்றார் 
அயல்மொழியில் பெயர்சூட்டி மகிழ்கின்றார் 
தீங்கில்லா செந்தமிழில் நாள்தோறும் 
தீங்கிழைக்கும் பிறசொல்லைக் கலந்தெழுதி
பாங்குறுநல் தமிழ்மொழியைச் சிதைக்கின்றார் 
பழம்பெருமை தனைமூடிப் புதைக்கின்றார்
ஈங்கிவர்கள் செயல்தன்னைத் திருத்துதற்கு
இவ்வரங்கில் பாவலர்கள் பாடுகின்றோம்.

தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் கல்விவேண்டும் 
தமிழ்நாட்டின் கடைகளிலே பொருட்பெயர்கள்
தமிழிலேயே இருக்கவேண்டும். எந்நாளும்
தமிழ்நாட்டு வணிகரது நிறுவனங்கள் 
தமிழ்ப்பெயரே தாங்கவேண்டும். ஏடெல்லாம்
தமிழ்மொழியில் எழுதவேண்டும் இசையெல்லாம்
தமிழாக இருக்கவேண்டும் எங்கெங்கும்
தமிழ்வளர்ச்சி காணவழி செய்குவமே!

புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம்,
தேனி, நாகலாபுரம்.

Saturday, 21 January 2023

பன்னாட்டுத் திருக்குறள் திறன்போட்டி...

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் வையைப் பதிப்பகம் சார்பில்  திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு இணைய வழியிலான பன்னாட்டுத் திருக்குறள் திறன் போட்டி புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, அமெரிக்கா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ மாணவியர் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

போட்டியின் நடுவர்களாக கவிஞர் லட்சுமிகுமரேசன், முனைவர் பத்மினிபாலா,  மூ.செல்வம், ஆ.முத்துக்குமார் ஆகியோரும், மதிப்பீட்டாளராக தமிழ்ச்செம்மல் முத்துமணி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முனைவர் முகமது நாசர் வாழ்த்துரை வழங்கினார்.

போட்டியில் பொருட்பாலில் முதல் 10 அதிகாரங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. போட்டியின் விதிமுறையாக குறள்எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்வது குறளைச் சொன்னால் எண்ணைச் சொல்வது, முதல் சொல்லைச் சொன்னால் முழுக் குறளையும் சொல்வது, கடைசிச் சொல்லைச் சொன்னால் முழுக் குறளையும் சொல்வது, அதிகாரத்தைச் சொன்னால் 10 குறளையும் சொல்வது என பல்வேறு வகைகளில் மாணவர்களின் திறன் போட்டி நடைபெற்றது. 

பன்னாட்டுத் திருக்குறள் திறன்போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவர்தன் முதல்பரிசும் அமெரிக்காவைச் சேர்ந்த ரக்சித்சீத்தாராமன் இரண்டாம் பரிசினையும், காரைக்குடியைச் சேர்ந்த சாம்பவிகா/ சம்யுக்தா ஸ்ரீ, தேனி வடபுதுப்பட்டியைச் சேர்ந்த 
சஹானா/ சங்கரேஸ்வரி, காரைக்குடியைச் சேர்ந்த
ஸ்ரீ தா/ சந்தோஷிஸ்ரீ ஆகியோர் முறையே மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசினை ஆசிரியப்பெருமக்கள் திருமலைக் குமரன், சண்முகநாதன், கற்பூர பூபதி, ரேணுகாதேவி ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர். போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

பொங்கல் திருநாள் (கவிதை)

பொங்கல் திருநாள்

உலகெங்கும் செழிப்பதற்கும் உலகுயிர்கள்
உவப்புற்று வாழ்வதற்கும் நாளெல்லாம்
உலவுகின்ற பகலவனைப் போற்றுகின்ற
ஒளித்திருநாள் ஒப்பற்ற தைமுதல்நாள்
நிலவெனவே நெஞ்சமது குளிர்ந்திருக்கும்
நினைவுகளில் மகிழ்ச்சிவெள்ளம் நிறைந்திருக்கும்
கலகலப்பாய் உறவெல்லாம் ஒன்றுகூடி
கரும்போடு வைப்பர்கா ணுப்பொங்கல்

மாடாக உழைக்கின்ற             மாண்புமிகு
உழைப்பாளர் உழைப்பினுக்கு உறுதுணையாம்
மாடதனின் பாடதனைக் கொண்டாடும்
பாங்குறுநல் திருநாளாம் பைந்தமிழர்
நாடெங்கும் கொண்டாடும் நல்லுழவர்
திருநாளில் வீதியெல்லாம் தோரணங்கள்
வீடெல்லாம்  காண்கிறது விழாக்கோலம் 
பட்டியெலாம் பொங்குதம்மா பாற்பொங்கல்.

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி 

திருக்குறள் முற்றோதல்

10-01-2023 தேனி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்து கொண்ட இனிய  பொழுது. இன்றைய திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் சிறப்பான முறையில் திருக்குறள் முற்றோதல்  போட்டியில் கலந்துகொண்டு முற்றோதல்  செய்து விருது/பரிசு பெறத் தேர்வாகினர். நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் திரு.இளங்கோ ஐயா அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கும் நடுவர்களாக பணியாற்றிய பேராசிரியப் பெருமக்களுக்கும், ஆ.முத்துக்குமார்,  மூ.செல்வம் உள்ளிட்ட  தோழமைகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்தினை உரித்தாக்கு கின்றோம்.