இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 25 July 2025

கவிதையைக் காதல் செய் நூல் வெளியீடு

#தேனி #வையைத் தமிழ்ச் சங்கம் -  வையைப் #பதிப்பகம் சார்பில் "கவிதையைக் காதல் செய்" நூல் வெளியீட்டு விழாவும் தேனி மாவட்ட இலக்கிய அமைப்புகளின் சார்பில் #ஈரோடு மாவட்ட #ஆட்சியர் திரு #ச.#கந்தசாமி ஐயா அவர்களுக்குப் பாராட்டு #விழாவும் புலவர் ச.ந. இளங்குமரன் தலமை ஒருங்கிணைப்பில் ஈரோட்டில் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி ஐயா அவர்கள் நூலை வெளியிட ஈரோடு மாவட்டத் #தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் #பெ.#இளங்கோ அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு நூல் குறித்து மதிப்புரை வழங்கினார் நூல் ஆசிரியர் #விருமாண்டி #கன்னீசுவரி அவர்கள் ஏற்புரை வழங்கினார். 

தொடர்ந்து "காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் 
மீக்கூறும் மன்னன் நிலம்" எனும் வள்ளுவப் பெருந்தையின் வாய்மொழிக்கு ஒப்ப விளங்கும் எளிமையும், அன்பும், தமிழின்பால் ஈடுபாடும் கொண்டு விளங்கும் #மரபுக் #கவிஞரும், எழுத்தாளருமான  ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.#கந்தசாமி ஐயா அவர்களுக்குப் பாராட்டு விழா தேனி மாவட்ட #இலக்கிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்றது. கவிஞர் பா.#கவிதா கிராம நிர்வாக அலுவலர், முதுநிலை தமிழாசிரியர் ஆ.#முத்துக்குமார், தொல்லியல் ஆய்வாளர் மூ.#செல்வம், கவிஞர் செ.#திராவிடமணி, திருக்குறள் #கற்பூரபூபதி, பா.#செல்வகுமரன், பழ.#வேல்முருகன், குறளரசி #அர்சின் சனா, #மகேசுவரி தட்டச்சர் உள்ளிட்ட பலரும் ஆட்சியருக்கு நூலாடை அணிவித்தும் நூல்கள் வழங்கியும் பாராட்டிச் சிறப்பித்தனர். "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து" எனும் குறளின் பொருளாய் விளங்கிய ஆட்சியர் அவர்கள் அனைவரையும் தம் குடும்ப உறவினராக்கி உரையாடிய பாங்கு எல்லோரையும் வியக்க வைத்தது. இதை நாங்கள் தேனியில் ஐயாவோடு பயணித்த நாட்களிலேயே உணர்ந்திருந்தாலும் ஈரோட்டு நிகழ்வு நெகிழ்வாகவும் அமைந்தது.

நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச் சங்கம், வையைப் பதிப்பகம், வாசிக்கலாம் வாங்க தேனி, சின்னமனூர் செந்தமிழ் இலக்கிய மன்றம், உத்தமபாளையம் நூலக வாசகர் வட்டம், கூடலூர் தேடல் இலக்கிய மன்றம் உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் பேரன்பும் நன்றியும். 

இனிய அன்புடன்
-ச.ந.#இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.

Tuesday, 22 July 2025

நிறையுடைமை நீங்காமை நீங்காமை வேண்டின் குறள் - 154

நிறையுடைமை என்பது ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களின் சேர்க்கையைக் குறிக்கும். இது ஒருவரது நற்குணங்கள் மற்றும் நல்லொழுக்கங்கள் நிலைத்திருக்க, பொறுமையுடன் நடந்துகொள்வதைக் குறிக்கிறது. குறள் 154, "நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்" என்று, 

ஒருவரது நல்ல குணங்கள் நீங்காமல் இருக்க வேண்டுமானால், அவர் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறது. பொறுமையுடன் இருப்பது ஏன் முக்கியம்?

நல்லொழுக்கம் நிலைத்திருக்க:
  • பொறுமை என்பது நல்லொழுக்கத்தின் அடித்தளம். ஒருவர் பொறுமையுடன் இருந்தால், அவரது நல்லொழுக்கங்கள் அவரை விட்டு நீங்காமல் இருக்கும் என்று குறள் கூறுகிறது.
  • சான்றாண்மை நிலைத்திருக்க:
    நிறையுடைமை என்பது சான்றாண்மைக்கு மிக முக்கியமானது. பொறுமையுடன் இருந்தால், சான்றாண்மை என்னும் பெருந்தன்மை ஒருவரிடம் நிலைத்திருக்கும், என்று குறள் விளக்குகிறது.
  • எல்லா நலன்களையும் தரும்:
    பொறுமை ஒருவரை பல நன்மைகளுக்கு உட்படுத்துகிறது. பொறுமையுடன் இருப்பவர், எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பார்.
சுருங்கச் சொன்னால், நிறையுடைமை என்பது ஒருவரிடம் இருக்கும் நற்குணங்கள் மற்றும் நல்லொழுக்கங்களை நிலைநிறுத்த உதவும் பொறுமையைக் குறிக்கிறது. 

-ச.ந.இளங்குமரன்

Friday, 11 July 2025

திருக்குறள் திருப்பணிக் குழு

திருக்குறள் திருப்பணிக் குழு ....

கன்னியாகுமரியில் 31-12-2024 அன்று நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பங்கேற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருக்குறள் திருப்பணிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, அறிவிப்பில் உள்ளபடி தமிழ் அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர், அரசு விருதாளர் இருவர், எழுத்தாளர் பேச்சாளர் ஒருவர் என்ற வகையில் தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட அமைக்கப் பெற்ற கண்காணிப்புக் குழுவின் கூட்டம் இன்று (11-7-2025) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப் பின்பு தேனி மாவட்ட ஆட்சியர் திரு ரஞ்ஜீத் சிங் இ.ஆ ப., (தலைவர், திருக்குறள் திருப்பணிகள் திட்டம்) அவர்களுடன் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்திற்கான கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் புலவர் ச.ந.இளங்குமரன்,  தேனி மு. சுப்பிரமணி, தேனி சீருடையான, கம்பம் பாரதன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி க. பாப்பாலட்சுமி (உறுப்பினர் மற்றும் செயலர், திருக்குறள் திருப்பணிகள் திட்டம்) மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை உதவியாளர் ஜா. புருசோத்தமன் ஆகியோர் எடுத்துக் கொண்ட ஒளிப்படம்.  

(ஒளிப்படம் - நன்றி: திருமதி மஞ்சுளா அவர்கள், தட்டச்சர், தமிழ் வளர்ச்சித் துறை, தேனி மாவட்டம்)

Sunday, 22 June 2025

இலக்கியத்தில் ஈடிலாத் தந்தையர் -ச.ந.இளங்குமரன்

"இலக்கியத்தில் ஈடிலாத் தந்தையர்" என்ற தலைபில் அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சியில் உரை வழங்குவதற்காக என் நூலகத்தில் உள்ள சில நூல்களை திருப்பினேன். ஆதன் தந்தை, அஃதை தந்தை, ஐயை தந்தை, சேந்தன் தந்தை, இவள் தந்தை, மகன் தந்தை, எந்தை, நுந்தை, தந்தை தந்தை என்ன சுமார் 143 இடங்களில் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் தந்தை எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
இதில் தந்தை : 70
எந்தை ( என் தந்தை)  : 42
நுந்தை (உன் தந்தை)  : 31 
ஒருமணிநேர உரைக்காக செலவிட்ட நேரம் காலை 9-30 தொடங்கி மாலை 3-30 வரை சுமார் 6 மணி நேரம்.

இலக்கிய நூல்களை மீள் பார்வை செய்யக்கூடிய தலைப்பைத் தேர்வு செய்து தந்த அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கவிஞர் திருமகள் அம்மா அவர்களுக்கும், நெறியாளர் சுகுணா சுதாகரன் (சுவிட்சர்லாந்து) அம்மா அவர்களுக்கும் இக்களத்தில் நான் இணைவதற்கு காரணமான எழுத்தாளர் கெங்கா ஸ்ரான்லி (செருமனி)  அம்மா அவர்களுக்கும் நெஞ்சம் நிறை நன்றியை உரித்தாக்குகிறேன்.

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.
22-06-2025

Thursday, 5 June 2025

தமிழே திராவிட மொழிகளின் தாய்

தமிழே திராவிட மொழிகளின் தாய். உலகமொழிகளின் வேர். 

திராவிட மொழி என தனித்த மொழி ஒன்றில்லை. பெரும்பான்மையான உலக மொழியியல் ஆய்வாளர்கள் இந்தியப் பகுதியில் தென் திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள் என மொழிகளைப் பகுக்கின்றனர். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் "இந்தியா முதுமைக்கும் ஒரு காலத்தில் தமிழே பேசப்பட்டு வந்தது" என்ற என்று கூறியிருக்கிறார். மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணர் உட்பட பல மொழி நூல் வல்லுநர்கள் இக்கருத்தினை ஏற்றுக் கொண்டுள்ளனர். மொழியியல் வேர்ச்சொல் ஆய்வின் மூலமாக அதை மெய்ப்பித்தும் இருக்கின்றனர். வெளிநாட்டு மொழியியல் அறிஞர்கள் பலரும் தங்களுடைய ஆய்வில் சொன்ன திராவிட மொழி என்பது தமிழன்றி வேறில்லை.

தமிழை வடபுல மக்கள் உச்சரிக்கின்ற பொழுது ஏற்பட்ட சிக்கலே திராவிடம் என்று ஆனது. 1904 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டு வரலாறும், தமிழ் மொழியியல் வரலாறும் முறையாக எழுதப்படவில்லை என்பதை மொழியியல் ஆய்வு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெற்றென விளங்கும். எனவேதான் 20 க்கு மேற்பட்ட மொழிகளில் புலமையும், 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆய்வுத்திறனும் மிக்க மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் தம்மின்  திரவிடத்தாய் நூலில்  தமிழ்மொழியின் திசைச்சொல் திராவிடம் என்றார். மூல மொழியான முதன்மை மொழியான தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்கள் குறிப்பாக சமற்கிருதம் கலந்து பல மொழிகள் உருவாகின. அப்படி தமிழில் திரிபுகளாக உருவாகியுள்ள மொழிகளே திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லப்பட்டு வருகின்ற கன்னடம் மலையாளம் தெலுங்கு துளு உள்ளிட்ட மொழிகளில் இருக்கின்ற வடமொழிச் சொற்களை மட்டும் நீக்கினால் மற்ற அனைத்துச் சொற்களும் தூய தமிழாகவே இருக்கும். மேலும் தற்போதைய இந்திய ஒன்றியத்தில் மூத்த மொழியாகச் சொல்லப்பட்டு வருபவை தமிழும் சமஸ்கிருதமும். சமஸ்கிருதம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. தமிழ் மட்டுமே பன்னெடுங்காலமாக பேச்சு மொழியாக எழுத்து மொழியாக பண்பாட்டு மொழியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மொழியியல் வல்லுனர்களின் கூற்றுப்படி மூத்த மொழி தமிழ் என்றால் தமிழ் மூல வேரிலிருந்தே பிற மொழிகள் கிளைத்திருக்க வேண்டும் என்பதே அறிவியல் பூர்வமான உண்மையும் மொழியியல் அறிஞர்களின் முடிவும் ஆகும். ஆய்வறிஞர் ப.அருளியார் அவர்களது ஆய்வுகளையும் தொடர்ந்து பார்த்தால் தமிழின் தனித் தன்மையும் தொன்மையும் தமிழில் இருந்து பிற மொழிகள் கிளைத்த வரலாற்று உண்மையையும் எளிதில் விளங்கிக்கொள்ளமுடியும்.

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி

Tuesday, 3 June 2025

தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது - ச.ந.இளங்குமரன்

திராவிட மொழிகளின் தாய் தமிழ்....

இன்று ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியத்தில் கி.பி 5ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட மொழிகள் மூன்று மட்டுமே அவை தமிழ் பிராகிருதம் பாலி. பாலி புத்தசமயம் சார்ந்தது எனவும், பிராகிருதம் சமணர் மொழியாக இருந்தது எனவும் மொழியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்விரண்டையும் தாண்டி இந்தியா முழுமைக்குமாக இருந்த மொழி தமிழ் மட்டுமே.

உலக மொழிகளில் மிகத் தொன்மை வாய்ந்ததாக ஆறு மொழிகள் கருதப்படுகின்றன். அவற்றுள் தமிழும் சமற்கிருதமும் இந்தியாவைச் சார்ந்தது. இதில் சமற்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சு மொழியாக இருந்தது இல்லை. எனவே பேச்சு மொழியாக இருந்தது தமிழ் மட்டுமே என்பது திண்ணம்.

தமிழ் மொழியை வடபுலத்தவர் திரித்துப் பேசியதின் விளைவாகவும் வடபகுதியிலேயே வெளிநாட்டவர்கள் வந்து தங்கிச் சென்றதன் விளைவாகவும் தமிழின் திரிபை திராவிடம் என்று பதிவு செய்தனர். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் திராவிடம் என்று சொல்லை திசைச்சொல் என்று பதிவு செய்கிறார். 

எனவே திராவிட மொழிக் குடும்பத்திற்கு மூல மொழியாகவும் முதன்மையான மொழியாகவும் இருப்பது தமிழாகும். காலப்போக்கில் தமிழ் மொழியில் இருந்த சொற்கள் திரிந்தும் புதிய சொற்கள் பிறந்தும் பல மொழிகள் கிளைத்துள்ளன. அப்படிக் கிளைத்த மொழிகளில் ஒன்று தான் கன்னடம் என்று மொழியியல் ஆய்வாளர்கள் முடிந்த முடிவாகச் சொல்லியுள்ளனர். எடுத்துக்காட்டாக தமிழில் காலங்காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் சொற்கள் கன்னடத்தில் எப்படி திரிந்திருக்கின்றன என்பதை பார்க்கலாம்.

தமிழில் கலந்துள்ள கன்னட மொழிச்சொற்கள் எவை? அவற்றுக்கான தமிழ் சொற்கள் எவை?
தமிழில் கலந்துள்ள கன்னட மொழிச் சொற்கள்

அட்டிகை=கழுத்தில் அணிவது பொன்னால் ஆனது

எகத்தாளம்=கேலி செய்தல்

சமாளித்தல்=சரி கட்டி செய்தல்

சொத்து=செல்வம்

பட்டாகத்தி=வாள்

குலுக்குதல்=அசைத்தல்

தாண்டல்=தாவுதல்
போன்றன.

தமிழ் மற்றும் கன்னட மொழிகளுக்கு இடையில் என்னென்ன பொதுவான சொற்கள் உள்ளன?

கண்- கண்ணு
கை- கை
வாய்- பாயி
மூக்கு- மூகு
கால்- காலு
தலை- தலெ
விரல்- பெரளு
அது- அது
இது- இது
நான்- நானு
நீ- நீனு
அவன்- அவனு
இவன்- இவனு
அவள்- அவளு
இவள்- இவளு
நம்ம- நம்ம
யார் - யாரு
இல்லை- இல்ல
அல்ல- அல்ல
அப்பா- அப்பா
அம்மா- அம்மா
தாய்- தாயி
தந்தை- தந்தெ
தாத்தா- தாத்தா
எல்லாம்- எல்லா
சரி- சரி
புல்- முல்லு
மகன்- மகனு
மகள்- மகளு
அண்ணன்- அண்ண
கெட்ட- கெட்ட
கண்ணாடி- கண்ணடி
கல்- கல்லு
வேண்டாம்-பேடா
இரு- இரு
நாய்- நாயி
நிழல்- நெரலு
ஓடு- ஓடு
விட்டு- பிட்டு
அழ- அளு
எண்ணெய்- எண்ணெ
வா- பா
பால்- ஹாலு
கொடு- கொடு
பெண்கள்- ஹெண்ணுகளு
மணல்- மணலு
குதிரை- குதுரெ
எலி- இலி
புலி- ஹுலி
மேல்- மேலெ
காடு- காடு
கொல்லு- கொல்லு
நம்பிக்கை- நம்பிக்கெ
நாளை- நாளெ
யானை- ஆநெ
கண்டிப்பா- கண்டித
இருள்- இருளு
வண்டி- பண்டி
கடல்- கடலு
கனவு- கனசு
அறிவு- அறிவு
காதல்- காதலு
வேறு- பேரெ
இலை- எலெ
உப்பு- உப்பு
கேள்- கேளு
மறை- மரெ
கட்டு- கட்டு
பத்து- ஹத்து
நூறு- நூறு

இப்படி நிறைந் சொற்களைச் சொல்லலாம். 
தாத்தாவின் வழியில் தான் மகனும் பெயரனும் வர முடியுமே தவிர பெயரின் வழியில் தாத்தா வர முடியாது... 

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி

Monday, 19 May 2025

பாவேந்தரின் பன்முகம் ச.ந.இளங்குமரன்

வளரி கவிதை இதழ், வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு, கடற்கரை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய பாவேந்தர் நினைவேந்தல் நூல் திறனாய்வு உரையரங்க விழா மிகச் சிறப்பாக நாகர்கோயில் தூயர் இல்ல (பிசப் கவுசு) அரங்கில் நடைபெற்றது. வளரி இதழின் ஆசிரியர் பாவலர் அருணா சுந்தர்ரராசன் ஐயா அவர்களது முன்னெடுப்பில், பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் மாநிலச் செயலாளர் சகாய சுசி அவர்களது நெறியாள்கையில் கடற்கரை இலக்கிய வட்டத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பாவேந்தரின் பன்முகம் என்னும் தலைப்பில் உரையாற்றுவதற்கான சூழலை எமது இளவல் அதிவீரபாண்டியன் அவர்கள் பெற்றுக் கொடுத்தார்.

பாவேந்தரின் பன்முகம்...
மொழியின் வழியாக ஒருங்கிணைந்த இந்திய தேசியத்தை கட்டமைக்க  முயன்றவர் பாரதி... 
தமிழ் மொழியையே தேசியமாகக் தமிழியத்தைக் கட்டமைத்தவர், தமிழ்த்தேசியத்தின் வித்து பாவேந்தர் பாரதிதாசன்...
எனது உரையின் தொடக்கம்....

நல்லதொரு விழா. குறிப்பாக ஒன்பது நூல்களைத் திறனாய்வு செய்த திறனாய்வாளர்கள் அனைவரும் ஒவ்வொரு கோணத்திலும் மிகச் சிறப்பாக நூல்களைத் திறனாய்வு செய்தனர். பேச்சாளர்களே திறனாய்வாளர்களாக இருந்தார்கள். திறனாய்வாளர்கள் நூலாசிரியர்களாகவும், பேச்சாளர்களாகவும் இருந்தது மகிழ்வையும், நெகிழ்வையும் தந்தது. குறிப்பாக இந்த அவை எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் படைப்பாளர்கள் கலந்து கொண்ட அவையாக மிளிர்ந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனை பேர்களுக்கும் பேரன்பும், வாழ்த்தும்.

இனிய அன்புடன்
முனைவர் புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
17-05-2025

Tuesday, 6 May 2025

திருக்குறளே உலகநூல் - ச.ந.இளங்குமரன்

"திருக்குறளை" தேசிய நூலாக அறிவிக்க  வலியுறுத்தி, புதுவையில் உலக திருக்குறள்  சாதனையாளர்கள் பேரவை சார்பில் மூன்றாவது திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்  வையைத் தமிழ்ச் சங்கம், தேனி  சார்பில் புலவர் ச.ந.இளங்குமரன் கலந்துகொண்டு "திருக்குறளே உலகநூல்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். 

உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல் திருக்குறள் மட்டுமே. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்நூலின் தொடக்கமே உலகத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கியுள்ளது. "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்பது அது.

இந்நூலில் உலகம் என்ற சொற்கள் 51 இடங்களில் பயின்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர உலகத்தைக் குறிக்கும் வையம் என்ற சொல்லும் சில இடங்களில் கையாளப்பட்டுள்ளது. 

திருக்குறள் ஒவ்வொரு தனி மனிதனின் மேன்மை, ஒழுக்கம், பண்பு நலம், உள்ளிட்ட பலவும் உள்ளடக்கி  எழுதப்பட்டுள்ளது. இந்நூல் தனி ஒருவருக்கான நூல் அல்ல, உலக மானுட இனத்திற்குப் பொதுவானது.

தமிழ்நாட்டு அறிஞர்களைத் தாண்டி, உலக அறிஞர்களான ஆல்பர்ட் சுவைச்சர், மெக்காலே, அத்தின்ரோவ், டால்சுடாய்சு, ஜி.யு.போப் உள்ளிட்ட பலராலும் உலக நூல் என்று போற்றப்பட்டுள்ளது திருக்குறள்.

அன்பு அறிவு அருள் அரசியல் ஒழுக்கம் பண்பு பொருள் காதல் இல்லறம் துறவறம் என மனிதக் கூறுபாடுகள் எந்த மனிதனுக்குச் சொந்தமானவை என்றால், உலக மனிதர்கள் அத்தனை பேருக்கும் இவை யாவும் பொதுவானவை என்பது முடிவாகும். இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக உள்ளடக்கி இருக்கின்ற திருக்குறளும் அதைப் போலத்தான். திருக்குறள் பிறந்த இடம் தமிழ்நாடு, அதில் எழுதப்பட்டிருக்கின்ற மொழி தமிழ், அதில் சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துகள் உலக மானுடம் சார்ந்தவை. எனவே திருக்குறளை உலக நூலாம். இது சமயம் கடந்தது, மொழி கடந்தது, இனம் கடந்தது, ஆனால் உலக மானுடம் சார்ந்தது. 

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

Thursday, 17 April 2025

அறநெறிச்சாராம் உலக சாதனை

#ஆறாவது #உலக சாதனை நிகழ்வு 

17-04-2025 இன்று #தொல்காப்பியம், #திருக்குறள், #சிலப்பதிகாரம், #யோகா, #சிலம்பம் ஆகிய உலக சாதனை நிகழ்வுகளைக் கடந்து ஆறாவது உலக சாதனை நிகழ்வாக நீதி நூல் வரிசையில் ஒன்றான #அறநெறிச்சாரம் மூலமும் உரையும் மனன முற்றோதல்  நிகழ்வில் #வையைத் தமிழ்ச் சங்கம், தேனி  நாகலாபுரம் சார்பில்  போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப்பள்ளியில் கண்காணிப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்த இனிய பொழுது. 

பள்ளி மாணவ மாணவியர் 170 பேர் ஒன்றிணைந்து 105 நிமிடங்களில் அறநெறிச்சாரம் 226 வெண்பாக்களையும் அதற்குரிய பொருளையும் ஒப்புவித்துச் சிறப்பித்தனர். 

பள்ளிச் செயலாளர் தலைமை ஏற்க தலைமையாசிரியர் சதீஷ்குமார் வரவேற்புரை வழங்க, வட்டாரக் கல்வி அலுவலர் ராஜமுருகன் சிறப்புரையாற்ற, சிறப்பாக பள்ளி மாணவ மாணவியரின் உலக சாதனை நிகழ்வு பள்ளி ஆசிரியர்களின் அருமையான ஒத்துழைப்போடு, பெற்றோர்களின் வாழ்த்துதலோடு அரங்கேறியது. 

ஆல் இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனத் தலைவர் செ.வெங்கடேசன் அவர்களும், ஆசியின் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் தலைவர் விவேக் அவர்களும் கலந்து கொண்டு, உலக சாதனையாக அறிவித்த இந்நிகழ்வில் இலட்சிய ஆசிரியர் அ.லட்சுமி குமரேசன் அவர்கள் இணைப்புரையோடு நன்றியுரை வழங்கினார்.

Friday, 24 January 2025

கீழடி பொங்கல் விழாக் கவியரங்கம்

15-01-2025 (02-01-2056)
வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடியில் தொன் பெருமை இயக்கம் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழா, மாட்டுப் பொங்கல் விழாநடைபெற்றது. 

இதில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் நிறுவவுர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாச் சிறப்புக் கவியரங்கில் ஏர், ஏறுதழுவல், உழவன், பொங்கல், தைமகள் வந்தாள், கீழடி நாகரிகம் ஆகிய தலைபுகளில் முனைவர் பேராசிரியர் நாவினி நாசர், தமிழ்ச்செம்மல் ப.முத்துமணி, வையை நாவன் இராஜசேகர் இலட்சிய ஆசிரியர் லட்சுமி குமரேசன், கவிஞர் திருவருள் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மிகச் சிறப்பாகக் கவிதை பாடினர். 

மாணவ மாணவியரும் ஊர்ப் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வு மிகச் சிறப்பாக அமைந்தது. கீழடி சிற்றூர் என்றாலும் கூட கவியரங்கத்தில் கவனம் செலுத்தி ஒவ்வொருவருடைய கவிதைகளையும் பொதுமக்கள் மாணவ மாணவியர் சுவைத்து மனமகிழ்ந்து கைதட்டி ஆரவாரம் செய்து ஊக்கப்படுத்தினர். இந்நிகழ்வை ஒருங்கிணைத்ததோடு தானும் ஒருவராகக் கவியரங்கில் மிகச் சிறப்பான பாடலோடு கவிதை பாடினார் கவிஞர் மூவேந்தர பாண்டியன்.

இந்நிகழ்வினை ஒளிப்படங்கள் ஆக்கியதுடன் நேரலை செய்தார் எமது இனிய இளவல் தம்பி செல்வக்குமரன். மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவினை ஊர்ப் பொதுமக்கள் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

அனைவருக்கும் பேரன்பும் நன்றியும்.
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம் தேனி நாகலாபுரம்.

ஓராண்டு தமிழ்ப்பணிகள் - ச.ந.இளங்குமரன்

தை - 1 முதல் மார்கழி 29 வரை ஓராண்டு நிகழ்வுகள்...

இணைய வழி நிகழ்வுகள்-158 
நேரடி நிகழ்வுகள்   51
பதிப்பித்த நூல்கள்    7
மெய்ப்புப் பார்த்தநூல்கள் 9
ஆய்வுக்கட்டுரைகள்.    8
கவிதைகள்     47
புதுமனை புகுவிழா    2
தமிழ் மரபுத் திருமணங்கள்8
உலகச் சாதனை நிகழ்வுகள் - 4
திருக்குறள் திறன் போட்டி 3
பட்டிமன்றம்    6 
கவியரங்கம்.  - 5
படித்த நூல்கள்    22
விருதுகள்        -    8
என்னைப்பற்றிய படைப்பு-1
என்னுடைய நேர்காணல் -  1

ஓராண்டில்
தமிழுக்காக மட்டும் செலவிட்ட நேரம் 2952 மணிநேரம்
பயணம் 24583 கி.மீட்டர்
மணிக்கணக்கில் நாள்கள் 123

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்

ச.ந.இளங்குமரன் எனும் நான்...

ச.ந.இளங்குமரன் எனும் நான்... 

1- நிறுவுநர் 
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி 
2- தலைவர், சங்கத் தமிழ் அறக்கட்டளை, தேனி, 
3- தலைவர், உலக தொல்காப்பியச் சாதனையாளர் பேரவை, 
4- செயலர் வாசிக்கலாம் வாங்க, தேனி.
5- செயலர் திருவள்ளுவர் மன்றம், நாகலாபுரம்.
6- அறங்காவலர், வைகைத் தமிழ்த்தாய் அருளக அறக்கட்டளை, சிதம்பர விலக்கு,
7- அமைப்பாளர் உலகத் தமிழ்க்கூடல்.
8- உறுப்பினர், வள்ளலார் சபை தேனி,
9- தலைவர், தமிழர் உரிமை மீட்புக்குழு

பணிசெய்த அமைப்புகள் அமைப்புகள்

1- மாநிலக் கழக நெறியாளர், குறளரசுக் கழகம், சென்னை,
மாவட்ட அமைப்பாளர் தேனி
2- தேனி மாவட்ட அமைப்பாளர், உலகத் தமிழ்க்கழகம், 
3- பொருளாளர், முல்லைப்பெரியாறு அணைமீட்புக்குழு
4- உறுப்பினர், உரத்தசிந்தனை, தேனிக்கிளை
5- தமிழ் எழுத்தாளர் சங்கம் தேனிக்கிளை
6- உறுப்பினர் த.மு.எ.க.ச., பாராஸ்ட்ரோடு கிளை. 
7- அறங்காவலர் - முக்குலத்தோர் கல்வி அறக்கட்டளை
8- மாநிலத் துணைப்பொதுச் செயலர், தமிழ்நாடு புலவர் பேரவை

இதழ்கள் :- 
பொறுப்பாசிரியர் - அக்கினிக் குஞ்சு மாத இதழ், 
பொறுப்பாசிரியர் - ஏழாம் அறிவு
சிறப்பாசிரியர் - நல்வழி
ஆசிரியர் குழு - புனித குறளரசு

(இயக்கம், அரசியல் அமைப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.)

(நன்றி ஒளிப்படக் கலைஞன் தேனி பாண்டி)

Wednesday, 1 January 2025

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா தேனி

கன்னியாகுமரி அறிவுலகப் பேராசான் திருவள்ளுவர் சிலையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு, தமிழ்நாட்டரசு அரசு விழாவாகக் கொண்டாட அறிவித்திருந்த நிலையில் தமிழ் நாடெங்கும் திருக்குறள் விழாக்கோலம் பூண்டது.

இந்நிலையில் தேனி மாவட்டப் பொது நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, நூலக இயக்ககம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர், அரசு ஊழியர், ஆசிரியர், என அனைவருக்கும் திருக்குறள் ஒப்பி வித்தல், பேச்சு, வினாடி வினா ஆகிய போட்டிகளோடு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்ட 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இதில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், 30க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

ஒரு வார காலமாகத் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வின் நிறைவாக பரிசளிப்பு விழா தேனிமாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட மைய நூலகர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூலகர் விசுவாசம் வரவேற்புரையாற்ற, தேனி மாவட்ட நூலக வாசகர் வட்டத் தலைவர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் அவர்களும், சின்னமனூர் நூலக வாசகர் வட்டத் தலைவர் இரா.மனோகரன் அவர்களும் முன்னிலை வகித்தனர். தேனி வையைத் தமிழ்ச் சங்க நிறுவனர் புலவர் ச.ந.இளங்குமரன் சிறப்புரை வழங்க பெரியகுளம் துணை ஆட்சியர் ரஜத் பீடன் இ.ஆ.ப., அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தார். கவிஞர் ராஜசேகர் அவர்கள் நன்றியுரை வழங்க இந்நிகழ்வினை வெளிச்சம் சிதம்பரம் அவர்கள் நெறியாள்கை செய்து சிறப்பித்தார்.

இனிய அன்புன் 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.