தமிழே திராவிட மொழிகளின் தாய். உலகமொழிகளின் வேர்.
திராவிட மொழி என தனித்த மொழி ஒன்றில்லை. பெரும்பான்மையான உலக மொழியியல் ஆய்வாளர்கள் இந்தியப் பகுதியில் தென் திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள் என மொழிகளைப் பகுக்கின்றனர். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் "இந்தியா முதுமைக்கும் ஒரு காலத்தில் தமிழே பேசப்பட்டு வந்தது" என்ற என்று கூறியிருக்கிறார். மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணர் உட்பட பல மொழி நூல் வல்லுநர்கள் இக்கருத்தினை ஏற்றுக் கொண்டுள்ளனர். மொழியியல் வேர்ச்சொல் ஆய்வின் மூலமாக அதை மெய்ப்பித்தும் இருக்கின்றனர். வெளிநாட்டு மொழியியல் அறிஞர்கள் பலரும் தங்களுடைய ஆய்வில் சொன்ன திராவிட மொழி என்பது தமிழன்றி வேறில்லை.
தமிழை வடபுல மக்கள் உச்சரிக்கின்ற பொழுது ஏற்பட்ட சிக்கலே திராவிடம் என்று ஆனது. 1904 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டு வரலாறும், தமிழ் மொழியியல் வரலாறும் முறையாக எழுதப்படவில்லை என்பதை மொழியியல் ஆய்வு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெற்றென விளங்கும். எனவேதான் 20 க்கு மேற்பட்ட மொழிகளில் புலமையும், 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆய்வுத்திறனும் மிக்க மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் தம்மின் திரவிடத்தாய் நூலில் தமிழ்மொழியின் திசைச்சொல் திராவிடம் என்றார். மூல மொழியான முதன்மை மொழியான தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்கள் குறிப்பாக சமற்கிருதம் கலந்து பல மொழிகள் உருவாகின. அப்படி தமிழில் திரிபுகளாக உருவாகியுள்ள மொழிகளே திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லப்பட்டு வருகிறது.
திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லப்பட்டு வருகின்ற கன்னடம் மலையாளம் தெலுங்கு துளு உள்ளிட்ட மொழிகளில் இருக்கின்ற வடமொழிச் சொற்களை மட்டும் நீக்கினால் மற்ற அனைத்துச் சொற்களும் தூய தமிழாகவே இருக்கும். மேலும் தற்போதைய இந்திய ஒன்றியத்தில் மூத்த மொழியாகச் சொல்லப்பட்டு வருபவை தமிழும் சமஸ்கிருதமும். சமஸ்கிருதம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. தமிழ் மட்டுமே பன்னெடுங்காலமாக பேச்சு மொழியாக எழுத்து மொழியாக பண்பாட்டு மொழியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மொழியியல் வல்லுனர்களின் கூற்றுப்படி மூத்த மொழி தமிழ் என்றால் தமிழ் மூல வேரிலிருந்தே பிற மொழிகள் கிளைத்திருக்க வேண்டும் என்பதே அறிவியல் பூர்வமான உண்மையும் மொழியியல் அறிஞர்களின் முடிவும் ஆகும். ஆய்வறிஞர் ப.அருளியார் அவர்களது ஆய்வுகளையும் தொடர்ந்து பார்த்தால் தமிழின் தனித் தன்மையும் தொன்மையும் தமிழில் இருந்து பிற மொழிகள் கிளைத்த வரலாற்று உண்மையையும் எளிதில் விளங்கிக்கொள்ளமுடியும்.
ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment