16 11 2025 இன்று சிவகாசி அருகில் தனியார் கல்லூரியில் தொல்காப்பிய முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. சென்னை மாநகராட்சி இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வையைத் தமிழ்ச்சங்கம் தேனி உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவை, அகில இந்திய சாதனைப் பதிவு புத்தக நிறுவனம், மதுரைத் தொல்காப்பியர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளிலிருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் பத்தாம் வகுப்புப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவி செல்வி ப.உமாகேஸ்வரி மிகச்சிறப்பாகத் தொல்காப்பியம் முழுவதையும் 144 நிமிடத்தில் முற்றோதல் செய்தார்.
செல்வி உமா மகேஸ்வரி அவர்களுக்கு அகில இந்திய உலக சாதனைப் பதிவுப் புத்தக நிறுவனம் சார்பில் உலக தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவைத் தலைவர் புலவர் ச.ந.இளங்குமரன், ஒருங்கிணைப்பாளர் சி.கலைவாணி ஆகியோர் இணைந்து "இளம் சாதனையாளர்" எனும் விருது வழங்கிச் சிறப்பித்தனர். நிறுவுநர் செ.வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு நன்றி.
இந்த மாணவியை ஈராண்டு காலமாக உருவாக்கிய ஆசிரிய இணையர் திருமதி சான்சிராணி - இராசசேகர் ஆகியோர் மிகவும் போற்றுவதற்குரியர். இவ்விணையர் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்காக ஆசிரியராகப் பணி செய்துவிட்டு இயல்பாக அவரவர் பணியைப் பார்க்கலாம். ஆனால் உண்மையாகவே ஒரு ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்று உணர்ந்து திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் முற்றோதல் எனத் தொடர்ச்சியாக மாணவச் செல்வங்களை உருவாக்கி வருவதோடு, அவர்களது முற்றோதலுக்கும் காரணமாக இருந்து உயரிய பரிசையும் தங்களுடைய சொந்தப் பணத்திலிருந்து வழங்குவது நம்மை வியக்க வைக்கிறது, மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்விணையருக்கு நெஞ்சம் நிறை வாழ்த்து.
எங்களோடு தொல்காப்பியர் மன்றத் தலைவர் அ.இருளப்பன், பொருளாளர் சக்கையா செயலாளர் கரு.முருகேசன், வையைத் தமிழ்ச்சங்கத்தின் அரசியல் நாயகன் என் இளவல் பா.செல்வக்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் பேரன்பும் வாழ்த்தும்.
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
தலைவர் உலக தொல்காப்பியச் சாதனையாளர்கள் பேரவை.
No comments:
Post a Comment