இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Tuesday, 18 February 2020

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் -15 - குறளின் பெருமை.- க.நந்தகோபால் சின்னமனூர் தேனிமாவட்டம்


குறளின் பெருமை

வாழிய நீ வாழி.! வள்ளுவமே வாழி.!
வானகமும் வண்டமிழும் வாழும் வரை வாழி.!
குழலிசையில் யாழிசையில் கொஞ்சிடும் குழந்தையே வாழி.!
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் எம் அன்னையே வாழி.!
அவையத்து முந்தி அமர வைத்த அப்பனே வாழி.!
பிறன்மனை நோக்காத பெருந்தகையே வாழி.!
கணவனே தெய்வமெனும் கற்பு நிறையே வாழி.!
கசடறக் கற்று கற்றபடிவாழும் மாணவனே வாழி.!
கடிதோச்சி மெல்ல எறிந்து கற்பிக்கும் குருவே வாழி.!
மிகுதிக் கண் மேற்சென்று எமைத்திருத்தும் நண்பனே வாழி.!
தொடிப் புழுதி கஃசா உணக்கும் வேளாளனே வாழி.!
எப்பொருளும் தமதென எண்ணிடும் நல் வாணிகனே வாழி.!
பிறன் வலியும் தன் வலியும் சீர் தூக்கிப் படைநடத்தும் வீரனே வாழி.!
கருவியும் காலமும் அறிந்து அருவினயாற்றும் அமைச்சனே வாழி.!
சமன் செய்து சீர்தூக்கும் சான்றோனே வாழி.!
நோய் நாடி நோய் தீர்க்கும் நல் மருந்துவனே வாழி.!
பாலொடு தேன் கலந்த பனிமொழியின் காதலனே வாழி.!
நோய் நோக்கும் அந்நோய்க்கு மருந்தாகும் காதலியே வாழி.!
அணுவுக்குள் அணுவாக அருஞ்செய்தி உரைத் திட்ட அமுதமே வாழி.!
முப்பாலுள் முழுதும் சொன்ன முத்தமிழே வாழி.!
வாழிய நீ வாழி.! வள்ளுவமே வாழி.!
வானகமும் வையகமும் வாழும் வரை வாழி.!

கா.நந்தகோபால்.பி.ஏ.
வட்டாட்சியர் (ஓய்வு)
தலைவர் செந்தமிழ் இலக்கிய மன்றம்,
சின்னமனூர் – 625515
தேனிமாவட்டம்.

No comments:

Post a Comment