கயமை
பசும்பாலில் கலந்திட்ட
தண்ணீரை
ஆய்ந்தறிய அறிவியலில்
எந்திரம் உண்டு.
மாந்தருள் உறவாடும்
கயவர்மனம்
கண்டறிய மந்திரம்தான் ஏதும்
உண்டோ?
குவலயத்தின்
அவலங்கள் எண்ணியெண்ணி
துன்பம் கொள்ளும்
சான்றோரின் பேருள்ளம்..
சுயநலத்தினிலே குமைந்தே
கிடக்கும்
கயமையின் மனத்தினிலோ
வருத்தமது துளியுமில்லை..
கீழினும் கீழான
செயல்புரிவார்தம்மை
அவரினும் மேல்குடி
தாமெனத் தம்மை
கேடுகெட்ட புத்தியாலே
அகந்தைகொண்டு
இறுமாந்து
கொக்கரிக்கும் கயவர்
சிந்தை.
உத்தமரென்றெண்ணி
உள்ளத்தின் ரகசியமுரைக்க
சுமக்கவொண்ணா
பெருஞ்சுமை அதுவெனக் கருதி
கமுக்கத்தை
தமுக்கடித்து தண்டோராபோடும்
சண்டாளத்தின் அடையாளம்தான்
கயவர் கூடம்.
பஞ்சைநிலைகூறி தஞ்சம் தருகவென்றால்
வாஞ்சை மிகக்கொண்டு
வழங்கிடுமே வள்ளல்குணம்
கயவர்களைக் கரும்பாக்கி கசக்கிப்பிழிகையிலே
அச்சத்தால்
அளிப்பரேயன்றி அன்பினால்
ஈவதில்லை.
உடுத்தும் உடை
கண்டால்
உண்ணும் உணவறிந்தால்
கண்ணிலே கனல்பறக்கும்
கயவரின் வயிற்றினிலே உலைகொதிக்கும்
நெஞ்சகத்தில் தீமூட்டி நேர்மையினை
அதிலெரிக்கும்.
ஆக்கம்..
கவிஞர் செ.திராவிடமணி,
கூடலுார்.

No comments:
Post a Comment