*வள்ளுவமே வாழ்வின் நெறி*
++++++++++++++++++++++++++++
ஒன்றே முக்கால்அடியில் உலகை
வென்றே சீர்மிகவாழத் தேற்றும்
பிறப்பு முதலேஇறப்பு ஈறாய்
அறநெறி பிறழாத் திரம்மிக ஊட்டும்
(திறன்மிக ஊட்டும்)
திருக்குறள் ஒருநூல் விருப்புடன் கற்பவர்
திறம்பட மெய்ப்பட மறுநூல் தேர்வரோ
பொய்யில் புலவர் மெய்நிறைச்சூத்திரம்
பிறவிப் பெருங்கடல் பிறிந்திட நித்தியம்
ஒழுக்கம் அன்பின் வழியது ஒழுகிட
அழுக்கறு இயல்புஅழியாப் புகழ்தரக்
கற்பவை கற்றிடக் கடமை அஞ்சிடச்
சிற்றினம் சேராச் சுற்றம் தழுவிட
இன்னா ஒறுத்திட இனியவை கூறிட
இடனறிச் செயலால் ஏற்றம் உற்றிட
நன்றி மறவா நெஞ்சு பெற்றிட
என்றும் செருக்கறக் குறிப்பு அறிந்திட
செவிச்சுவை உணர்ந்திடத் தெரிந்து தெளிந்திட
புவியில்பகையறப் பொருளுடன் வாழ்ந்திட
வள்ளுவம் ஒன்றே வகுத்திடும் நன்னெறி
உள்ளுக வள்ளுவம்உள்ளுக வள்ளுவம்
நன்றி
கவிஞர் மதுரை சுந்தரம் பாண்டி

No comments:
Post a Comment