இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 13 February 2020

தேனிவையைத் தமிழ்ச்சங்கம் 15 ஆம் ஆண்டுவிழா. தலைமையுரை புலவர் ச.ந.இளங்குமரன்

தேனி வையைத் தமிழ்ச்சங்கத்தின் பதினைந்தாம் ஆண்டு விழா தலைமையுரை புலவர் .. இளங்குமரன்

அன்பிற்கினிய பெரியோர்களே உலகப் பொது மறையாம், உலகப் பொது முறை தந்த உலகப் பேராசான்  திருவள்ளுவர் நமக்களித்த திருக்குறள் புகழ்பாடும் திருவிழாவில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிச்சி அடைகிறேன்.

 தேனி வையைத் தமிழ் சங்கம் "தமிழ் எங்கள் உயிர்! குறள் எங்கள் மறை!" இன்னும் மந்திரச் சொல்லை உயிர் மூச்சாகக் கொண்டு 2005 ஆண்டு சனவரியில் தொடங்கப்பட்ட அமைப்பாகும். 

வையை என்பது உலகத் தாயைக் குறிக்கும் வண்ணம் வை என்றால் உலகம், என்றால் தாய். வையை என்பது உலகத் தாய்த்தமிழ் சங்கம் என்ற பொருளிலேயே இதன் பெயர் அமைக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து 15 ஆண்டுகளாக இந்த மண்ணில் இயங்கி வருகின்ற முதன்மையான தமிழ்ச் சங்கமாகும். தேனி மாவட்டத்தில் தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டதும் தேனிவையைத் தமிழ்ச் சங்கம்தான் என்பதை மெத்தப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மொழிஞாயிறு பாவாணர்,  பாவேந்தர் பாரதிதாசன், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, ஈகி சங்கரலிங்கனார், மகாகவி பாரதியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், உலகத் தமிழ்ப் பேராசான் திருவள்ளுவர் உள்ளிட்ட மாபெரும் தமிழ் அறிஞர்களை முன்வைத்து 15 ஆண்டு காலமாக இந்த மண்ணில் பல்வேறு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பேரமைப்பு தேனி வையைத் தமிழ்ச்சங்கமாகும்.

இதுவரையில் வையைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தொகுக்கப்பட்ட நூல்கள்  1)வையைமலர்கள் 2) விடியலின் விதைகள், 3) நெஞ்சின் அலைகள் 4) தமிழ்நாடு பொன்விழாக் கவிதைகள் என நான்கு கவிதை நூல்களைத் தொகுத்து வையைத் தமிழ் சங்கத்தின் மூலம் வெளியிட்டிருக்கின்றோம்.

தமிழினக்காவலர் பழ.நெடுமாறன் அவர்களின் மூன்றாவது அணிக்கு மக்கள் தயார். கட்சிகள் தயாரா?  என்ற நூலும்,  மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் இரா மோகன் அவர்களின் நகைச்சுவை நாயகர்கள் என்ற நூலும், புலவர் ..இளங்குமரன் எழுதிய திருக்குறள் ஒரு மருந்தகம், கொலைவாளினை எடடா ஆகிய நூல்களும்,  கவிஞர் இதய நிலவன் அவர்களின் உடைத்தோடல் என்னும் சிறுகதை நூலும், திரைப்படப் பாடலாசிரியர் .கவிக்கருப்பையா அவர்களின் மின்மினிகளின் ஊர்வலம் என்ற நூலும், கவிஞர் பா.கவிதா அவர்களின் எண்ணங்களின் எதுகை  என்ற நூலும் தேனிவையைத் தமிழ்ச்சங்கம் மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றன.

40
க்கும் மேற்பட்ட கவியரங்கங்கள் மற்றும்  கருத்தரங்கங்கள் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன. பக்தியின்மொழி தமிழ், பனித்துளிகள் ஆகிய நூல்களுக்கு ஆய்வரங்கம் நடத்தப்பட்டுள்ளது.

வாசிக்கலாம் வாங்க குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட நூலாய்வுகளுக்கு முன்னோடியாகச் செயல்பட்டிருக்கின்றோம்.

15
க்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் படைப்புகள் நூலாக்கம்பெற காரணமாக இருந்திருக்கின்றோம். 

தேனி வையைத் தமிழ்ச்சங்கத்தின் நூல் வெளியீட்டிற்காக தற்போது மூன்று நூல்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவைகள் எல்லாம் நமது தேனி வையைத் தமிழ்ச்சங்கத்தின் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றிகளாகும்.

கடந்த 15 ஆண்டுகளில் தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கின்ற, பெற்றோர்களை இழந்த நிலையில் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற குழந்தைகள் சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச சீருடைகளும், பாடக்குறிப்பேடுகளும்,  எழுதுகோல்களும், கல்வி உதவித் தொகையும் அறக்கொடையாளர்கள் மூலம் தேனிவையைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பெற்றுத் தந்திருக்கின்றோம்.

 பல்வேறு புதிய படைப்பாளர்களை உருவாக்கியிருக்கிறோம்
 இதுவரையிலும் அதாவது கடந்த 15 ஆண்டுகளாக தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுமைக்குமாக இருக்கின்ற, தமிழுக்குத் தொண்டு செய்து வருகின்ற அறிஞர்கள்,, சமூக மேம்பாட்டிற்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற சமூக செயல்பாட்டாளர்கள், பல்வேறு துறைகளில் தனித்து விளங்கும் மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரையும் கண்டு தேர்ந்து சுமார் 140 க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிப் பெருமைப்படுத்தி வருகின்றோம்.

பல்வேறு பள்ளி கல்லூரிகளில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி , பேச்சுப் போட்டி ,கட்டுரைப் போட்டி,  கவிதைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஊக்கப்படுத்தி பரிசுகளை வழங்கிப்  பாராட்டி இருக்கின்றோம்
அந்த வகையில் 800 க்கும் மேற்பட்டவர்கள் நமது நிகழ்வுக்குள் அடங்குவர்.

இலக்கியப் பணிகளைத் தாண்டி நாட்டிற்கும் நாட்டு மக்களது வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கின்ற பணிகளை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறோம். அந்த வகையில் முல்லை பெரியாறு அணை தொடர்பாக 32 ஊர்கள் 64 மக்கள் விழிப்புணர்வுக் கூட்டங்கள், நியூட்ரினோ சிக்கல் தொடர்பாக, மீத்தேன் எரிவாயு தொடர்பாக, சல்லிக்கட்டு தொடர்பாக, கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, ஈழத்தமிழர்கள் பாதுகாப்பு தொடர்பாக, கேரளத்தமிழர்கள் பாதுகாப்புத் தொடர்பாக மதுவிலக்கு தொடர்பாக  சுமார் 250-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை நடத்தி  மக்களுக்கு  விழிப்புணர்வு  ஏற்படுத்தி இருக்கின்றோம்.

ஒரு இலக்கிய அமைப்பு இலக்கியத்தோடு மட்டும் நில்லாமல் பொது மக்களோடு கலந்து அவர்களின் வளர்ச்சிக்கு எதிரான செயல்திட்டங்களை கண்டு எதிர்த்துக் களமாடி, அதோடு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய முதல் அமைப்பாக தேனிவையைத் தமிழ்சங்கம் திகழ்கிறது என்பதனையும் தங்களின் மேலான கவனத்திற்குத் தெரிவிக்கின்றோம்

கூடுமானவரை நல்ல தமிழில் எழுத வேண்டும், நல்ல தமிழிலேயே பேசவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டது தேனி வையைத் தமிழ் சங்கம்.  தமிழ்நாடு அரசு கொண்டுவர இருந்த எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தி அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று எழுத்து சீர்திருத்தம் கூடாது என்றும் தவறு என்றும் சுட்டிக்காட்டியதன்   பயனாக எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்துவதை தமிழ்நாட்டு அரசு  நிறுத்திவைக்கக் காரணமாக தேனி வையைத்  தமிழ்ச்சங்கத்தின்  செயல்பாடும் இருந்துவந்திருகின்ற செய்தியை உங்களோடு பகிர்வதில் பெரிதும் மகிழ்கிறேன் என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் சிறப்பாக நடைபெற  பெரும்பகுதி பேருதவி செய்துவரும் தேனிவையைத் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள், மற்றும் அறக்கொடையாளர்களை நெஞ்சுருகி நினைக்கின்றேன். பாராட்டுகின்றேன்.

தேனிவையைத் தமிழ் சங்கத்தின் பால் அக்கறை கொண்ட பெருமக்கள் தானாக முன்வந்து கொடுத்த நன்கொடை யிலேயே விழாக்களை நடத்துகிறோம். மாறாக யாரிடமும் நிகழ்வுக்காக பணம் கேட்டுப் பெற்றதில்லை.

இந்த நிலையில்தான் 15 ஆண்டுகாலமாக உறுப்பினர்கள் செய்துவரும் உதவியோடு மக்களின் பேராதரவோடு பதினைந்தாம் ஆண்டு விழாவைத் திருக்குறள் திருவிழாவாகக் கொண்டாட, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 63 கவிஞர்கள் பெயர் கொடுத்திருக்கிறார்கள். அரங்கத்திலும் அமர்ந்திருக்கிறார்கள்.

இந்த விழா உங்களது அனைவர் ஒத்துழைப்போடு சிறக்கும் சிறந்த நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொண்டு எதிர்வரும் காலங்களில் தேனிவையைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் சேர்க்கையை விரிவு படுத்துவது என்றும்,, பல்வேறு நகரங்களில் வையைத் தமிழ்ச்சங்கத்தின்  கிளைகளை அமைப்பது என்றும் தீர்மானத்தோடு திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும், அதைத் தேசிய நூலாக ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டு என்னுடைய தலைமை உரையை நிறைவு செய்கிறேன் நன்றி.

No comments:

Post a Comment