இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 21 February 2020

உலகத் தாய்மொழி நாள்விழா. தேனிவையைத் தமிழ்ச்சங்கம் - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டிப்பட்டி


21-01-1020 இன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டிபட்டி- தேனி வையைத் தமிழ்ச் சங்கம் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் திருமதி சோ.கி.கல்யாணி அவர்கள் தலைமை ஏற்றார். முனைவர் பேராசிரியர் சுரேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.  இந்நிகழ்வில் தேனி வையை தமிழ் சங்கத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு *தமிழின் சிறப்புகள்* என்னும் தலைப்பில்  புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள் உலக மொழிகளுக் கெல்லாம் தமிழ் மொழி எவ்வாறு தாய் மொழியாக இருக்கிறது? தமிழ் மொழியின் தொன்மை,  தனித்தன்மை, இலக்கணச் செழுமை,  இலக்கிய வளமை என்பதோடு தமிழ்மொழி பல்வேறு மொழிகளுக்கு மூல வேராக இருக்கின்ற தன்மைகுறித்தும்,  தமிழ்ச் சொற்கள் பல்வேறு மொழிகளிலும் எவ்வாறு பரந்து கிடக்கின்றன  போன்றவற்றையும், தமிழ்மொழியின் தேவைகுறித்தும், தமிழ்மொழிக்கல்வியின் தேவை குறித்தும், தமிழால் கிடைக்கும் உயர்வு, புகழ் குறித்தும் பேசினார்.  சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கைதட்டி ஆர்ப்பரிப்போடு தமிழ் மொழியின் சிறப்புகளைக் கேட்டு மகிழ்ந்து விழாவினைச் சிறப்பித்தனர். இந்த இனிய நிகழ்வில் மதுரை தொல்காப்பியர் மன்றத்தலைவர் தலைவர் இருளப்பன், மதுரைக் கவிஞர்கள் மன்றத் தலைவர் சுந்தரம் பாண்டி, ஆண்டிபட்டி உமா நாராயணன் பதிப்பக உரிமையாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், திரைப்பட வசனகர்த்தா ராசி. தங்கத்துரை, பாவாணர் கல்வியகத்தம்பி கவிஞர் செல்வக்குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவினை பேரா.அழகர்சாமி அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் நிறைவில் மூன்றாம் ஆண்டு பொருளாதார மாணவர் அர்ஜுன் அவர்கள் நன்றியுரை நவின்றார்.

Tuesday, 18 February 2020

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் - 15- வள்ளுவமே வாழ்வின்நெறி, கவிஞர் சுந்தரம் பாண்டி மதுரை


*வள்ளுவமே   வாழ்வின் நெறி*
++++++++++++++++++++++++++++

ஒன்றே முக்கால்அடியில் உலகை
வென்றே சீர்மிகவாழத் தேற்றும்
பிறப்பு முதலேஇறப்பு ஈறாய்
அறநெறி பிறழாத் திரம்மிக  ஊட்டும்
(
திறன்மிக ஊட்டும்)
திருக்குறள் ஒருநூல்  விருப்புடன் கற்பவர்
திறம்பட மெய்ப்பட மறுநூல் தேர்வரோ
பொய்யில் புலவர் மெய்நிறைச்சூத்திரம்
பிறவிப் பெருங்கடல் பிறிந்திட நித்தியம்
ஒழுக்கம் அன்பின் வழியது ஒழுகிட
அழுக்கறு இயல்புஅழியாப் புகழ்தரக்
கற்பவை கற்றிடக் கடமை  அஞ்சிடச்
சிற்றினம் சேராச் சுற்றம் தழுவிட
இன்னா ஒறுத்திட இனியவை கூறிட
இடனறிச் செயலால் ஏற்றம் உற்றிட
நன்றி மறவா நெஞ்சு பெற்றிட
என்றும் செருக்கறக் குறிப்பு அறிந்திட
செவிச்சுவை உணர்ந்திடத் தெரிந்து தெளிந்திட
புவியில்பகையறப் பொருளுடன் வாழ்ந்திட
வள்ளுவம் ஒன்றே வகுத்திடும் நன்னெறி
உள்ளுக வள்ளுவம்உள்ளுக வள்ளுவம்

நன்றி
கவிஞர் மதுரை சுந்தரம் பாண்டி

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் -15 - குறளின் பெருமை.- க.நந்தகோபால் சின்னமனூர் தேனிமாவட்டம்


குறளின் பெருமை

வாழிய நீ வாழி.! வள்ளுவமே வாழி.!
வானகமும் வண்டமிழும் வாழும் வரை வாழி.!
குழலிசையில் யாழிசையில் கொஞ்சிடும் குழந்தையே வாழி.!
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் எம் அன்னையே வாழி.!
அவையத்து முந்தி அமர வைத்த அப்பனே வாழி.!
பிறன்மனை நோக்காத பெருந்தகையே வாழி.!
கணவனே தெய்வமெனும் கற்பு நிறையே வாழி.!
கசடறக் கற்று கற்றபடிவாழும் மாணவனே வாழி.!
கடிதோச்சி மெல்ல எறிந்து கற்பிக்கும் குருவே வாழி.!
மிகுதிக் கண் மேற்சென்று எமைத்திருத்தும் நண்பனே வாழி.!
தொடிப் புழுதி கஃசா உணக்கும் வேளாளனே வாழி.!
எப்பொருளும் தமதென எண்ணிடும் நல் வாணிகனே வாழி.!
பிறன் வலியும் தன் வலியும் சீர் தூக்கிப் படைநடத்தும் வீரனே வாழி.!
கருவியும் காலமும் அறிந்து அருவினயாற்றும் அமைச்சனே வாழி.!
சமன் செய்து சீர்தூக்கும் சான்றோனே வாழி.!
நோய் நாடி நோய் தீர்க்கும் நல் மருந்துவனே வாழி.!
பாலொடு தேன் கலந்த பனிமொழியின் காதலனே வாழி.!
நோய் நோக்கும் அந்நோய்க்கு மருந்தாகும் காதலியே வாழி.!
அணுவுக்குள் அணுவாக அருஞ்செய்தி உரைத் திட்ட அமுதமே வாழி.!
முப்பாலுள் முழுதும் சொன்ன முத்தமிழே வாழி.!
வாழிய நீ வாழி.! வள்ளுவமே வாழி.!
வானகமும் வையகமும் வாழும் வரை வாழி.!

கா.நந்தகோபால்.பி.ஏ.
வட்டாட்சியர் (ஓய்வு)
தலைவர் செந்தமிழ் இலக்கிய மன்றம்,
சின்னமனூர் – 625515
தேனிமாவட்டம்.

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் -15 - முப்பால் கவியரங்கம் - கயமை - கவிஞர் செ.திராவிடமனி கூடலூர் தேனிமாவட்டம்



கயமை

பசும்பாலில் கலந்திட்ட  தண்ணீரை
ஆய்ந்தறிய அறிவியலில் எந்திரம் உண்டு.
மாந்தருள் உறவாடும் கயவர்மனம்
கண்டறிய  மந்திரம்தான் ஏதும் உண்டோ?

குவலயத்தின்  அவலங்கள்  எண்ணியெண்ணி
துன்பம் கொள்ளும் சான்றோரின் பேருள்ளம்..
சுயநலத்தினிலே குமைந்தே  கிடக்கும்
கயமையின் மனத்தினிலோ  வருத்தமது துளியுமில்லை..

கீழினும் கீழான  செயல்புரிவார்தம்மை
அவரினும் மேல்குடி தாமெனத் தம்மை
கேடுகெட்ட  புத்தியாலே அகந்தைகொண்டு
இறுமாந்து கொக்கரிக்கும்  கயவர்  சிந்தை.

உத்தமரென்றெண்ணி  உள்ளத்தின்  ரகசியமுரைக்க
சுமக்கவொண்ணா பெருஞ்சுமை அதுவெனக்  கருதி
கமுக்கத்தை தமுக்கடித்து தண்டோராபோடும்
சண்டாளத்தின் அடையாளம்தான் கயவர்  கூடம்.

பஞ்சைநிலைகூறி தஞ்சம்  தருகவென்றால்
வாஞ்சை  மிகக்கொண்டு  வழங்கிடுமே வள்ளல்குணம்
கயவர்களைக் கரும்பாக்கி  கசக்கிப்பிழிகையிலே
அச்சத்தால் அளிப்பரேயன்றி  அன்பினால்  ஈவதில்லை.

உடுத்தும்  உடை  கண்டால்
உண்ணும்  உணவறிந்தால்  கண்ணிலே  கனல்பறக்கும்
கயவரின் வயிற்றினிலே   உலைகொதிக்கும்
நெஞ்சகத்தில் தீமூட்டி  நேர்மையினை அதிலெரிக்கும்.

ஆக்கம்..
கவிஞர் செ.திராவிடமணி,
கூடலுார்.