தற்காலத்தில் தமிழ்மொழியில் பல்வேறு கலைச் சொல்லாக்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. என்றாலும் சில சொற்கள் தமிழா? தமிழ் இல்லையா என்ற ஐயப்பாடுகளும் நிலவி வருகின்றன. அவ்வகையில் "இதையம்" என்னும் சொல்குறித்து இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகிறது.
பழங் காலத்தில் கப்பல் ஓடுவதற்கு பாய்மரப்படகு வேண்டும். பாய்மரத்தினை காற்று தள்ளும். காற்று தள்ளும் நிலையினை அறிந்தே படகோட்டி படகினைச் செலுத்துவான். படகோட்டி படகினைச் செலுத்துவதற்கு பாய்மரம்தான் தேவைப் பட்டிருக்கிறது. இதனை
"வளிதொழில் ஆண்ட உரவோன் மருக"
என்கிறது புறநானூறு.
பருவக் காற்றின் நிலையறிந்து படகோட்டிய சேரமன்னன் "கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்" எனப்பட்டான்.
கடல் விரிந்த பரப்பைக் கொண்டதால் அதற்கு "பரவை" என்றும் பெயர் உண்டு. பரவையின் மேல் வலம் வந்தவர்கள் "பரதவர்" எனப்பட்டனர். பரதவர்கள் வாழ்ந்த பகுதி "பரதகண்டம்".
பரதவர்கள் என்றால் "கடலோடிகள், கப்பலோட்டிகள்" என்ற பெயர்களும் உண்டு. மேலும் பரதவர்கள்
"நாவாய்கள்" ஒட்டியதால் "நாய்கன்" என்றும் அழைக்கப் பட்டிருக்கின்றனர். நாய்கன் என்பவர் வெளிநாட்டு வாணிகம் செய்பவர் ஆவார். உள்நாட்டு வாணிகம் செய்பவர் "சாத்தன்" எனப்பட்டார். கண்ணகியின் தந்தை "மா நாய்கன்" கடல்வணிகம் செய்பவன். கோவலனின் தந்தை "மா சாத்தன்".
இதனை
"சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த" என்கிறது சிலப்பதிகாரம்.
படகினைக் காற்று தள்ளுவதை "இதை" என்னும் சொல்லால் குறிக்கிறது தண்டியலங்கார மேற்கோள். அதாவது படகினுடைய இயக்கத்திற்கு காரணமான பாய்மரத்திற்கு "இதை" என்பது பெயர். அதுபோல உடலின் இயக்கத்திற்கு காரணமான இதை+அம்=இதையம் = இதயம் என்று தமிழாகக் கொள்ளலாம்.
இதயம் என்பது வடமொழி என்று சிலர் கூறிவருகின்றனர். இதயம் என்னும் சொல்லை ஆழ்ந்து நோக்கினால் அது தூய தமிழ் என்றும், இச்சொல் வடமொழிக்கு தமிழ்மொழி வழங்கிய கொடை என்பதும் விளங்கும். இப்போது நாம் திருமூலரின் திருமந்திரத்தைக் காண்போம்.
*அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்*
*மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்*
*இடப்பக்கமே இறை நொந்தது என்றார்*
*கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.*
(திருமந்திரம் : யாக்கை நிலையாமை : பாடல்148).
*இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டு விட்டு எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு, இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு - படுத்தாரு அப்படியே போய்ட்டாரு"* என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது.
இதில் இடப்பக்கமே இறைநொந்தது என்ற சொற்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
*இறை* என்ற சொல் இறைத்தல், இயக்குதல், இயங்குதல், இறைஞ்சுதல், முதன்மை, தலைமை என்னும் பல தன்மைகளை உடையது.
எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். இறைவனே எல்லா உயிர்களையும் இயக்குகிறான் என்பது நம்பிக்கை சார்ந்த அறிவியல்.
உடலில் அத்தகைய இயக்கம் நடைபெறும் இடத்தை *இறை* என்று குறித்தார் திருமூலர். அந்த *இறையின் வேலை உடலெங்கும் குருதியைப் பாய்ச்சி இயக்குவது*. இறை+அம்= இறையம் = இதயம் என்றும் தமிழாகக் கொள்ளலாம்.
இதயம் சுருங்கி விரிந்து தானும் இயங்கி, உடலையும் இயக்கும் தன்மை கொண்டது. எனவேதான் இதயத்தில் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று சொல்கிறார்கள். அதாவது உடலின் இயக்கத்திற்கு இறையே, இறையமே இதயமே முதன்மையானது. இறையம் நின்றால் அதாவது இறையத்தின் இயக்கம் நின்றால் உடலின் இயக்கமும் நின்று விடுகிறது.
எனவேதான் *இறைவன் எங்கு குடியிருக்கிறான்* என்றால் எல்லோரும் *நெஞ்சில் குடியிருக்கிறான்* என்று சொல்கிறார்கள்.
இறை = இறைத்தல் என்றால் நீரை அள்ளி அல்லது முகந்து இறைப்பது/வீசுவது.
இறை என்ற கருவி செய்யும் வேலையும் அதே. குருதியை இழுத்து/அள்ளி பல இடங்களுக்கும் தள்ளி/வீசி விடுவதே அதன் தொழில்.
ஆகவே, இறை யோடு, அம் விகுதி சேர்ந்து இறையம் ஆகிறது.
(இறை நொந்தது=இதயம் வலித்தது - மாரடைப்பு - heart attack)
இறை + அம் = இறையம் > இதயம் எனும் சொல்லை தமிழாகக் கொள்வதில் தவறில்லை தானே...
வடமொழிக்கு தமிழ் தந்த கொடையே இதயம் ஆகும்.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன் நிறுவனர்,
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
No comments:
Post a Comment