இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 31 May 2021

பரம் - சொல்லாய்வு

*பரம்*

மேலானது, உயர்ந்தது, அப்பாலானது, அப்பழுக்கு இல்லாதது முதலிய பொருள்களைத் தரும் சொல் 'பரம்' என்பதாம். பரம்பொருள், பரமன், பரதேயி, பரமானது என்ப வற்றில் இப்பொருள்கள் முறையே அமைந்திருத்தல் அறிக.

'கடவுள்' என்பதிலுள்ள கடந்த என்னும் பொருள் 'பரம்' என்பதிலும் உண்மையைக் 'கடல், பரவை' என்பவற்றொடும் எண்ணிக் கொள்க..

மொழிபெயர் தேயத்தரே இரந்துண்பாராக இருந்த நாளில் எழுந்த சொல்லாட்சி 'பரதேயி' என்பதாம். 'பரதேசி' என வழங்குதல் 'தேஎம்' 'தேம்' தேயம் என்பவை தேசமென வேற்றுச் சொல்லாகக் கொள்ளப்பட்டதன் பின்னை வடிவமாம்.

பரம் என்பது பாரம் என்னும் பொருளிலும் வரும். பரவிய இடம் 'பார்' எனப்படுதல் போல், பரவிய சுமை 'பாரம்' ஆயிற்று பாரவண்டி, பாரச்சட்டம், பார், என்பவற்றை எண்ணுக.

"நிரைப் பரப் பொறைய நரைப்புறக் கழுதை"

எனக் கழுதையின் முதுகில் இருபாலும் சுமை ஒழுங்குபட அமைத்துச் செல்லும் முறைமை அகப்பாட்டிலே விளங்கு கின்றது (207). கழுதையின் முதுகுப் பரப்பினும் மிக்கு இருபாலும் நிரந்து பரந்து கிடக்கும் சுமை. 'நிரைப்பரம்' என்னும் சொல்லாட்சியால் விளங்குதல் நயமிக்கதாம்.

கள்ளமில்லாத வெள்ளைத் தன்மையைப் 'பரம்' என்பதும், அத்தகையரைப் 'பரமானவர்' என்பதும், அவர்தம் போக்கினை செயலினை-ப் 'பரம் போக்கு' என்பதும் வழக்கில் உள்ளமை அறியத் தக்கன. 'பரமேளம்' என்பதும் பரம்போக்கே.

அகன்ற வாயையுடைய அகல்வாய்ச் சட்டியைப் 'பரவச் சட்டி' என்பதும், அயலே இருந்து வரும் வாக்கைப் 'பரவாக்கு' என்பதும் நினையலாம். உடலுக்குப் 'பரம்' என்பதொரு சொல்லுண்டு.பரம், பாரம் என்னும் பொருளது. உடலைக் கொண்டே உயிர்வாழ்வு இயல்வது

என்றாலும், உடலைக் கொண்டே அருள் தொண்டு இயல்வது

என்றாலும், அவ்வுடலைப் பேணிக் கொள்ளவேண்டிய தீராக்கடனும் இருத்தலால், அவர்க்குத் தம்முடம்பு பேணுதலும் சுமையாய் அமைகின்றதாம். அதனாலன்றே,

"மற்றும் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பும் மிகை"

என்றார் திருவள்ளுவர் (345), "இப்பரந் துடைத்தவர்" என்னும் கம்பர் வாக்கு (கடிமணப் 69), பரம் என்பதற்கு உடல் என்னும் பொருளுண்மை காட்டும்.

பரம்பரம் :

பரம்பரம் அப்பாலுக்கு அப்பாலாம் வீடுபேற்றைக் குறிப்பது உண்டு. 'பத்திசெய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்' என்னும் திருவாசகம் (2.119) இதனைத் தெளிவிக்கும். பரம்பரத்து உய்ப்பவன் 'பரம்பரன்' என்க. (திருவாய்.4.3:9)

ஒன்றற்கு மேல் ஒன்றாய் உயர்ந்து விளங்கிவருதல் 'பரம் பரை' எனப்படுகின்றது. 'சென்று சென்று பரம்பரமாய்' எனவரும் திருவாய் மொழி (8.8:5) இதனைக் காட்டும்.

கல்லாஞ் சரளை பரவிக்கிடக்கும் வறண்ட நிலம் 'பரம்பு' எனப்படும். பரவிய நிலம் என்னும் பொருளில் பரம்பு ஆளப்படுவதும் உண்டு. "பரம்பெலாம் பவளம்" என்னும் கம்பர் வாக்கு (நாட்டுப்.2) நிலப்பரப்பை அதிலும் மருத நிலப்பரப்பைக் காட்டுவதே வரம்பு வரப்பென வலித்தல் அடைவது போலப் 'பரம்பு 'பரப்பென ஆகும். பரம்பு அளவு என்பதே பரப்பளவு ஆயது வெளிப்படை. பரப்பு என்பது செண்டு வெளி எனப் பொருள் தருதல் பெருங்கதையில் கண்டது (3. 25 : 10). செண்டுவெளியானது குதிரையோடும் வெளி, முற்றம் என்பன.

(மொழி நூற்கதிரவன் இரா.இளங்குமரனார் அவர்களின் "வேர்ச்சொல் விரிவு" நூல்வழியாய் ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Saturday, 29 May 2021

தமிழே உலக மொழிகளின் தாய்.

தமிழ் முதற்றாய்மொழி யென்பதற்குக் காரணங்கள்

 1) மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்தி ( யுள்ளமை.

2) இதுபோதுள்ள மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையான
தாயிருத்தல்,

(3) தமிழ் எளிய வொலிகளைக் கொண்டிருத்தல்,

(4) தமிழிற் சிறப்புப்பொருள் தருஞ் சொற்கள் பிற மொழிகளில் பொதுப்பொருள் தருதல்.

எ-டு: செப்பு (தெ), தா (இலத்தீன்).

(5) தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி யுடைமை (செயற்கை யான சொல்வளர்ச்சியின்மை).

(6) ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்துக் கொண்டிருத்தல்.

(7) பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதுஞ் சிறிதும் ஒத்திருத்தல். 

(8) தாய்தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள்,
ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

(9) தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்திலின்மை.

(10) ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

(11) சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகட்கும் பொதுவாயிருத்தல்,

(12) பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள்

ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். எ-டு:இல் (தெலுங்கு), மனை (கன்னடம்), அகம் (கிரேக்கம்), குடி (பின்னியம்)

(13) பிறமொழிகட்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களின் மூல நிலைகள் தமிழிலிருத்தல். (எ-டு) ஆரிய மொழிகளின் அசை யழுத்தமும் சித்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போல்வன.

(மொழிஞாயிறு பாவாணர் பதிவிலிருந்து ச.ந.இளங்குமரன்வையைத் தமிழ்ச்சங்கம் தேனி)

Wednesday, 26 May 2021

ஆய் - தாய் - சொல்லாய்வு

ஆயீ - ஆய்... (சொல்லாய்வு)

ஆ-ஈ-ஊ - என்னும் நெட்டுயிர்ப்பு ஒலிகளே முதற்கண் உணர்ச்சியொலிகள் ! அவற்றில் ஆ-ஈ என்பவற்றைத் தொடர்ந்தொலித்து ஆஈ > ஆயி>ஆய்> அய்> ஐ என்றவாறு குறுக்கி யொலிக்கப் பயின்று அதனை வியப்புக்கான ஒலியீடாகப் பயன்படுத்த தொடங்கினான். ( இந் நிலையுண்மையின் பதிவுச் சாறம் தொல்காப்பி
எழுத்ததிகாரத்தின் மொழி மரபுப் பகுதியில் உள்ள "அகர இகரம்
ஐகாரம் ஆகும்'' என்னும் 21-ஆம் நூற்பாவில் உட்பொதிந்து தொக்கி நிற்பதை நுண்ணிதின் நோக்கின் தெளியவுணரலாம்!... )

''ஊ'' என்னுமாறு ஒலியிட்டு வந்தான் - அதனை ''ஓ" என்றவாறு திசைவித்து எளிமைப் படுத்திக் கொண்டான்!

ஆ-ஈ-ஊ-ஓ - ( அய் > ) ஐ என்றவாறான உணர்ச்சி யொலிகளைப் பயன்படுத்தித் - தன்னின் இன்பவுணர்ச்சிகளை அல்லது துன்பவுணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு அவற்றின் வழிப் பழக்க மாக்கிக் கொண்டே மொழியைத் தொடங்கினான்.

"ஈ" என்னும் ஒலியிட்டு '"ஏ'' என்றவாறு அதனைத் திசை வித்து எளிமையாக்கிக் கொண்டான்! "ஏ" என்பதனை ஏ+ஈ>ஏயி>ஏய் என்றவாறு நீட்டியொலித்தமையில் சேய்மையிலிருந்த தன் தொடர்புடையாளனை அல்லது தொடர்புடையாளை எளிதாகவும்
அதே நேரத்தில் வலிதாகவும் விளித்து அழைக்கத் தொடங்கினான்.

"ஓ" என்றொலித்து விளிக்கத் தொடங்கியவன் பின்னர் ஓ + ஈ > ஓயி > ஓய் என்றவாறு நீட்டியொலிக்கப் பயின்றான் ! அதனால் எளிதே விளிக்கத் தெரிந்தான்!

உணர்ச்சியொலிகளையும் - விளியொலிகளையும் பயன்படுத்தி வருகையின் வளர்ச்சி வழியில் பிற உயிரிகளிட்ட ஒலியீடுகளைப் போலவே தானும் ஒலித்துப் பார்த்துப் பயின்று -அதனடிப்படையிலான பெயர்களால் அவற்றைச் சுட்டவும் படிப்படியே தேர்ந்தான்!

(ஒ நோ : கா கா> காக்கா >காக்கை,

மா> மா +டு மாடு. குர் > குர் + அங்கு > குரங்கு )

ஆ,ஈ,ஊ என்னும் இயற்கையாக இயன்ற இந்-நெட்டுயிர்ப் பொலிகளைக் கொண்டே உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தொடங்கி - இவ்வுணர்ச்சி வெளிப்பாட்டுக்குப் பயன்பெற்ற ஒலிகளையே சுட்டு வதற்குமுரிய ஒலிகளாக மாத்தன் பயன்படுத்தத் தொடங்கினான்.

''ஆ'' என்னும் ஒலியைச் சேய்மையைச் சுட்டுவதற்கென்று பயன்படுத்தினான். வாயை அகலித்து விரித்துத் திறந்து வெளிப் படுத்தியதால் உண்டாகிய ஆகார ஒலியைச் சேய்மைக்கும் - வாயைப் பக்கவாட்டுகளில் இழுத்தாற்போலும் இடவலப்பக்கத்திற்குச் சரிசமனாக வலித்து நின்று ஒலித்த ஈகார ஒலியைத் தனக்கு மிக அண்மைக்கும்.வாயிதழ்களை முன்னுக்குக் கூட்டிக் குவித்து முயற்சியோடு ஒலித்த ஊகார ஒலியைத் தனக்கு முன்மைக்கும் ஆகப் பயன்படுத்திச் சுட்டத் தொடங்கினான்.

ஆ,ஈ,ஊ என்னும் நெட்டொலிகளான முந்நிலைச் சுட்டு களே - முதற்கண் இம் மொழியில் சுட்டொலிகள். இவற்றின் பதன்பட்ட குறுக்கமே அ,இ,உ என்பன. இவ்வுண்மையை 'அ இ உ -அம் மூன்றும் சுட்டு '' என்றவாறு தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தில் நூல் மரபுப் பகுதியிலுள்ள 31- ஆம் நூற்பா சுட்டுகையில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் மொழியியல் தொடர்ச்சிப்பாடு கலங்கல் இல்லாமல் துலங்கி நிற்பது வியப்பானதாகும்.

இச் சுட்டொலிகளின் தோற்றமே "தமிழ்'' என்றும் மொழியைக் கருப்பெற வைத்தது ! பிறகுதான் செயற்கை மொழியாக (Artificial language ) வளங் கொழிக்கத் தொடங்கியது.

கருத்துப் பெருக்கமானது- ஒன்றையொன்று பற்றிப் படிப்படி யாகவே திகழும் தன்மைப் போக்கு உடையதாகும்.

ஆய்!

ஆ + ஈ > ஆஈ > ஆயீ> ஆயி>ஆய்.

இயற்கையான உணர்ச்சியொலிகளில் முதலாவதானதும் இரண்டாவதானதும் ஆன- நெட்டுயீர்ப்பொலிகளாகிய "ஆ" என்பதையும் ''ஈ'" என்பதையும் தொடர்ந்தொலிக்கக் கற்று ஆஈ> ஆயி > ஆய் என்றவாறு வளர்ச்சிப்பட்டுவிட்ட அவ் வொலியால்- தன்னை ஈன்ற தாயை முதற்கண்ணும் - அவள்வழித் தெரிந்துகொண்ட தன்னை ஈன்புறச் செய்த தந்தையை இரண்டாங்கண்ணும் விளிக்கவும் - பின்னர் சுட்டவும் மாந்தன் தெளிந்தமை சொல்லியல் வரலாற்றில் முதலாந்தரத்தன !

''ஆயி'' என்பதுவும் ''ஆய்'' என்பதுவும் முற்பொழுதுகளில் விளிநிலைகளிலேயே இருந்து - பிற்பாடு பெயர்நிலைகள் பெற்றுள்ளன !

''ஆய்'' என்னும் அவ் விளிச் சொல்லைத் தாய்க்கும் தந்தைக்கும் (ஆண்பாற்கும் பெண்பாற்கும்-) பொதுவாகச் சுட்டி வந்த உண்மை நிலை'' ஆய் '' என்பதுவே - தாயைக் குறித்த சொல்லாகவும்- பெண் பாலின் எதிர் பாலதாகிய ஆண்பாற் குறித்துத் தந்தைக்குரிய சொல்லாகவும் வழங்கியுள்ள நிலைகளாற் புலனாகின்றது!

'ஆய்'' - என்னும் கடையெழு வள்ளல்களில் ஒருவனுக்குரிய இயற்பெயரே இதனை மெய்ப்பிக்கப் போதுவதாகும். ''ஆய்'' என்னும் அரசவள்ளல் "ஆய் அண்டிரன் " என்னும் பெயராலும் குறிக்கப் பெற்றுள்ளான். (காண்க: " ஆர்வ நன்மொழி ஆயும்'' (சிறுபாண்: 99)  ''ஆய் எயினன்'' என்னும் பெயரிய குறுநில மன்னன் ஒருவனும் இத் தமிழகத்தில் ஆட்சி செலுத்தியுள்ளான். ஆக, ''ஆய்'' என்னும் பெயரை ஆண்பாற் பெயராகவும் மேற்கொண்டு வந்த வழக்கமானது இம்மொழி யுள் உள்ளமை பெறப்படுகின்றது !

(சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்களின் பதிவிலிருந்து ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி)

Monday, 24 May 2021

அகற்றுதல்..

*அகற்றுதல் -ஆற்றுதல்:*

அகற்றுதல் என்னும் சொல் ஆற்றுதல் எனத் திரியும். அதன் அகரக் குறில் நெடிலாக நீண்டு சுகரம் கெட்டு முற்கூறிய விதிப்படியே ‘ஆற்றுதல்' என அமையும். அகற்றுதல் பொருண் மையே, ஆற்றுதல் பொருண்மையாயும் நிலைக்கும்.

வெந்நீர், காய்ச்சுப்பால், தேநீர் முதலியவற்றை ஆற்றிக் குடிக்கிறோம். இவற்றில் ஆற்றுதல் என்பது என்ன? நீரிலும் பாலிலும் தேநீரிலும் இருந்த வெப்பத்தை வேண்டும் அளவுக்கு 'அகற்றுதலே' தணித்தலே-ஆற்றுதலாம் என்பது வெளிப் படப் புலப்படும் தெளிவான செய்தி.

ஒருவர் நோய்வாய்ப் படுகின்றார். அவர்தம் நோயை நோய்கூறு அறிந்து அகற்றவல்ல மருத்துவர் தக்க மருத்துவத்தால் அகற்றுகிறார். ஆதலால் அதுவும் ஆற்றுதலாகும்.

இனி, ஒருவர் அல்லல்பட்டு, ஆற்றாராய் அலமருகின்றார். அவர்தம் அல்லலை அவரே தம் தெளிவால் அகற்றிக்கொள்ள மாட்டாராய்த் துன்புறுகிறார். இந்நிலையில் உளவியல் அறிந்து உற்றுழி உதவும் உழுவலன்பரோ மனநோய் மாற்றவல்ல திறம் வாய்ந்த அறிஞரோ அவர்தம் மனத்துயரை அகற்றுகின்றார். அதுவும் ஆற்றுதலேயாகும்.

இவற்றால் அன்றோ தம் துயரையும் பிறர் துயரையும் தணிக்கும் திறம் இலாரை “ஆற்றமாட்டாதவர்" என உலகம் பழித்து ஒதுக்கவும் இழித்துரைக்கவும் துணிகிறது. ஆற்ற மாட்டாதவரை, 'ஆற்றாமாக்கள்' என்றும், 'ஆற்றாதார்' என்றும் இலக்கியமும் கூறலாயிற்று.

"ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி'

மணி. 17:64:

(தமிழ்க்கடல் மொழிநூற்கதிரவன் இரா.இளங்குமரனார் பதிவிலிருந்து ச.ந.இளங்குமரன்)

Saturday, 22 May 2021

திருமண வாழ்த்து (கவிதை)

அன்பும் அறனும் துணையாய்க் கொண்டு
பண்பும் பயனும் பெருக வாழ்க!
ஆற்றின் ஒழுக்கி அறவழி போற்றி
நோற்பார் நோன்பை வென்று வாழ்க!

இன்சொல் தன்னை நாளும் பேசி
இல்லறம் சிறக்க இனிதே வாழ்க!
ஈத்து உவக்கும் இன்பம் அறிந்து
ஈந்து மகிழ்ந்து இசையாய் வாழ்க!

உடலும் உயிரும் ஒன்றியே வாழும்
உண்மைத் தன்மை உணர்ந்து வாழ்க!
ஊருணி நீர்போல் யாவரும் பயனுற
உற்றார் உறவினர் சூழ்ந்திட வாழ்க!

என்புடன் சதையது இணைதல் போல
என்றும் நீவிர் இன்புடன் வாழ்க!
ஏரும் போரும் எம்குலத் தொழிலென
ஏரென நடந்து பீடுடன் வாழ்க!

ஒளியார் முன்னே ஒள்ளிய ராகி
ஒளியாய் ஒப்பில் மணியாய் வாழ்க!
ஓய்தல் இன்றி ஆய்தல் ஆய்ந்து
ஓதுதல் செய்து  உயர்ந்தே வாழ்க!

மங்கல மனையறம் சிறக்க வாழ்க!
மாநிலம் எல்லாம் போற்றிட வாழ்க!
வள்ளுவன் குறளாய் வான்புகழ் தமிழாய்
வையம் தன்னில் வாழ்வாங் குவாழ்க!

வாழ்த்துகளுடன்
ச.ந.இளங்குமரன் - நிறுவனர்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

Thursday, 13 May 2021

தொல்காப்பியர் வழியில் திருவள்ளுவர்

தொல்காப்பியர் வழியில் திருவள்ளுவர்.

திருக்குறளில் 'கடவுள்' என்னும் சொல்லோ, 'வாழ்த்து' என்னும் சொல்லோ திருக்குறள் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் இல்லை. திருக்குறள் நூலிலும் கடவுள் என்னும் பெயர் எங்குமே இடம்பெறவில்லை. அதனால் கடவுள் வாழ்த்து என்கின்ற அதிகார பெயர் பொருந்தாது என்று எண்ணியவர்கள் பலர். மாற்றி பெயரிட்டு உரை கண்டவர்கள் பலர். பின்னர் அதை மாற்றிக் கொண்டவர்களும் பலர். இதை திருக்குறள் சார்ந்த பல்வேறு உரையாசிரியர்களது  நூலைப் படிக்கும் பொழுது உணர்ந்து கொள்ள முடிகிறது.

வாழ்க்கைத் துணைநலத்தின் இறுதிக் குறள் "மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு"  என்றும், இது அடுத்த அதிகாரத்தின் தொடக்கமான   "பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற" என்றும் அமைந்திருக்கவும் அதைக் கருத்தில் கொள்ளாமல் மக்கட்பேறு என்ற அதிகாரத்தை மாற்றி புதல்வரைப் பெறுதல் என்று உரைகண்டாரும் உண்டு. அது வள்ளுவருடைய உள்ளமாகுமா? என்றால் ஆகாது. அதேபோல் அவாவறுத்தல் என்னும் அதிகாரத்தில் இறுதிக் குறளான "ஆரா இயற்கை அவாநீப்பின், அந்நிலையே பேரா இயற்கை தரும்"  என்றிருக்கவும் அடுத்த அதிகாரப் பொருளை "உலகத்து இயற்கை"  என தெரிவித்திருந்தும் 'ஊழ்' என்பதற்கு வேறு பொருள் கூறி பொருள்மயக்கம் செய்தவர் பலர்.  இது எப்படி வள்ளுவர் உள்ளமாகும்? ஆகாது. இவை அதிகாரப் பெயர் மயக்கும், குறள் பொருள் மயக்கும் ஆகியவை.  "கடவுள் வாழ்த்து" என்பது தொல்காப்பியர் வழியில் வள்ளுவர் அமைத்துக் கொண்டது என்பது தெளிவாதலால் அப் பெயர் அவ்வாறே கொல்லப்பட்ட தாம். ஏடுகளிலும் கடவுள் வாழ்த்து என்றே இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

கடவுள் என்பதன் பொருள் தெளிய வைக்க அமைந்ததொரு சொல் "இயவுள்" என்பது. '  பெரும் பெயர் இயவுள்' என்பது 'முருகியற்கை' வழி, முழுமுதற் பெயர் குறிப்பதாகும்.
இயக்கு ஆற்றல் - உலகத்தை இயல்பாக இயங்க செய்யும் ஆற்றல் எதுவோ அதற்கு  இயவுள்  என்று பெயர். வீடு விட்டு வீடு கடக்க வைத்த இடைவழி,  கடவு எனப்படும்.  அது அறிவியல் வளத்தால் நாடு விட்டு நாடு கடக்கவும்,  அண்டம் விட்டு அண்டம் கடக்கவும் ஆகியமையால் அதுவும் 'கடவு'  ஆனது.  அதனால் நாடு விட்டு நாடு கடந்து செல்ல வாங்கிய ஒப்புகைச் சீட்டு 'கடவுச்சீட்டு' என இந்நாளில் கலைச்சொல்லாக்கம் பெற்றது.  கடவு+ள் =  கடவுள் ஆனது.  கடவு= செலவு;  இயக்கம். இந்த இயக்க ஆற்றல் எங்கே உள்ளது? என்று கேட்டால்  அவ்வாற்றல்  எங்கும் உள்ளது என்பதை விளக்கவே 'இறை' என்ற சொல்லாட்சி பயன்படுத்தப் பட்டது. இறைவன் என்பது வள்ளுவ ஆட்சி.

இறை

எங்கும் பரந்து கிடக்கின்ற பொருள்களைப் பார்த்து இறைந்து
கிடக்கின்றன என்று குறிப்பிடுவோம். இறை என்பதற்கு, இங்குப்
பரந்து என்ற பொருள். பொதுவாக ‘இறை’ என்றால் தங்குதல்
அல்லது எங்கும் நிறைதல் (immanence) எனும் பொருள்கள்
உண்டு. எனவே, அங்கு, இங்கு எனாதபடி எங்கும் நிறைந்த
ஒரு பரம்பொருளை, இறை அல்லது இறைவன் என்று சுட்டுவர்.
மேலும் ‘இறைமை’ என்பதற்குத் தலைமை, தெய்வத்தன்மை,
அரசாட்சி, கடவுள், பரப்பு என்ற பொருள்களும் உள்ளன.
இறைமை என்பது பொதுவாகச் சமயங்களைப் பொறுத்த
வரையில் முழுமுதற் கடவுளையே குறிக்கும். இறைவனை ஆண், பெண் என்று நமது முன்னோர் உருவகப் படுத்தியுள்ளனர். இறைவன் - ஆண், இறைவி-பெண்.

இவ்வகையிலேயே திருக்குறளில் முதல் அதிகாரப்  பெயர் இறைவழிபாடு, இறைவணக்கம், கடவுள் வாழ்த்து என்ற வகையில் அமைகின்றது. 
'அகரம்'  தமிழ் மொழியின் முதல் எழுத்து, என்று ஒல்காப் புகழ்  தொல்காப்பியனாரும் தனது தொல்காப்பியத்தில் "எழுத்தெனப் படுவ
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப"  என்று தம் நூலை தொடங்கினார். தொல்காப்பியர் வகுத்த நெறியில் வள்ளுவனாரும் 'அகர முதல...' எனத் தொடங்கி  'முயங்கப் பெறின்' எனத் தம் நூலான திருக்குறளை முடித்தார்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்.

Sunday, 9 May 2021

எப்படிப் புரியவைப்பேன்... கவிதை

*எப்படிப் புரியவைப்பேன்...*

உன்னைப் பாராமல்
கடலலை போல்
ஓலமிட்டுத் திரிகிறது
மனசு.

உன்னை
நினைத்து நினைத்து
உருகி வழிகிறது
மெழுகைப் போல்
உள்ளம்

உன்
காலடி ஓசைக்காய்
காத்துக் கிடக்கும்
செவிகள்

உன்
வரவை எதிர்பார்த்து
பூத்துக் கிடக்கும்
விழிகள்

இரண்டுமே
ஏக்கத்தால் அடைகின்றன
ஏமாற்றம்

உன்
பூவிதழின் புன்னகையால்
மட்டுமே வெளிச்சமாகும்
நெஞ்சம்

உன்
கிள்ளை மொழி
கேட்டால் போதும்
என் எலும்புக்குள்ளும்
தேன்சுரக்கும்.

உன்
உள்ளங்கைச் சூடு
அதுதான் எனக்கான
இளவேனிற் காலம்

உன்
மூச்சுக் காற்றில்
கலந்திருக்கிறது
எனக்கான உயிர்க்காற்று.

இனியவளே
உனக்கான என்னை
எப்போது புரிந்துகொள்வாய்?

என்
எழுத்துகளைப் புரிந்துகொள்ளாத
உனக்கு
எப்படிப் புரியவைப்பேன் நான்.

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Thursday, 6 May 2021

இதையம் என்பது தமிழ்ச்சொல்



தற்காலத்தில் தமிழ்மொழியில் பல்வேறு கலைச் சொல்லாக்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. என்றாலும் சில சொற்கள் தமிழா? தமிழ் இல்லையா என்ற ஐயப்பாடுகளும் நிலவி வருகின்றன. அவ்வகையில் "இதையம்" என்னும் சொல்குறித்து இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகிறது. 

பழங் காலத்தில்  கப்பல் ஓடுவதற்கு பாய்மரப்படகு வேண்டும்.  பாய்மரத்தினை காற்று தள்ளும். காற்று தள்ளும் நிலையினை அறிந்தே படகோட்டி படகினைச் செலுத்துவான். படகோட்டி படகினைச்  செலுத்துவதற்கு பாய்மரம்தான் தேவைப் பட்டிருக்கிறது. இதனை

"வளிதொழில் ஆண்ட உரவோன் மருக" 
என்கிறது புறநானூறு.

பருவக் காற்றின் நிலையறிந்து படகோட்டிய சேரமன்னன் "கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்எனப்பட்டான்.

கடல் விரிந்த பரப்பைக் கொண்டதால் அதற்கு "பரவைஎன்றும் பெயர் உண்டு. பரவையின் மேல் வலம் வந்தவர்கள் "பரதவர்எனப்பட்டனர். பரதவர்கள் வாழ்ந்த பகுதி "பரதகண்டம்".

பரதவர்கள் என்றால் "கடலோடிகள், கப்பலோட்டிகள்" என்ற பெயர்களும் உண்டு. மேலும் பரதவர்கள்
"நாவாய்கள்"  ஒட்டியதால் "நாய்கன்" என்றும் அழைக்கப் பட்டிருக்கின்றனர். நாய்கன் என்பவர் வெளிநாட்டு வாணிகம் செய்பவர் ஆவார். உள்நாட்டு வாணிகம் செய்பவர் "சாத்தன்எனப்பட்டார். கண்ணகியின் தந்தை "மா நாய்கன்கடல்வணிகம் செய்பவன். கோவலனின் தந்தை "மா சாத்தன்".

இதனை
"சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்தஎன்கிறது சிலப்பதிகாரம்.

படகினைக் காற்று தள்ளுவதை "இதை" என்னும் சொல்லால் குறிக்கிறது தண்டியலங்கார மேற்கோள். அதாவது படகினுடைய இயக்கத்திற்கு காரணமான பாய்மரத்திற்கு "இதைஎன்பது பெயர். அதுபோல உடலின் இயக்கத்திற்கு காரணமான இதை+அம்=இதையம் = இதயம் என்று தமிழாகக் கொள்ளலாம்.

இதயம் என்பது வடமொழி என்று சிலர் கூறிவருகின்றனர். இதயம் என்னும் சொல்லை ஆழ்ந்து நோக்கினால் அது தூய தமிழ் என்றும், இச்சொல் வடமொழிக்கு தமிழ்மொழி வழங்கிய கொடை என்பதும் விளங்கும். இப்போது நாம் திருமூலரின் திருமந்திரத்தைக் காண்போம்.

*அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்*
*மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்*
*இடப்பக்கமே இறை நொந்தது என்றார்*
*கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.*

(திருமந்திரம் : யாக்கை நிலையாமை : பாடல்148).

*இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டு விட்டு  எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு, இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு - படுத்தாரு அப்படியே போய்ட்டாரு"* என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது.

இதில் இடப்பக்கமே இறைநொந்தது என்ற சொற்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

*இறை* என்ற சொல் இறைத்தல், இயக்குதல், இயங்குதல், இறைஞ்சுதல், முதன்மை, தலைமை என்னும் பல தன்மைகளை உடையது.

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான்.  இறைவனே எல்லா உயிர்களையும் இயக்குகிறான் என்பது நம்பிக்கை சார்ந்த அறிவியல்.

உடலில் அத்தகைய  இயக்கம் நடைபெறும் இடத்தை *இறை* என்று குறித்தார் திருமூலர். அந்த *இறையின் வேலை உடலெங்கும் குருதியைப் பாய்ச்சி இயக்குவது*.  இறை+அம்= இறையம் = இதயம் என்றும் தமிழாகக் கொள்ளலாம்.

இதயம் சுருங்கி விரிந்து தானும் இயங்கி, உடலையும் இயக்கும் தன்மை கொண்டது. எனவேதான் இதயத்தில் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று சொல்கிறார்கள். அதாவது உடலின் இயக்கத்திற்கு இறையே, இறையமே இதயமே முதன்மையானது. இறையம் நின்றால் அதாவது இறையத்தின் இயக்கம் நின்றால் உடலின் இயக்கமும் நின்று விடுகிறது.

எனவேதான் *இறைவன் எங்கு குடியிருக்கிறான்* என்றால்  எல்லோரும் *நெஞ்சில் குடியிருக்கிறான்* என்று  சொல்கிறார்கள்.

இறை = இறைத்தல் என்றால் நீரை அள்ளி அல்லது முகந்து இறைப்பது/வீசுவது.

இறை என்ற கருவி செய்யும் வேலையும் அதே. குருதியை இழுத்து/அள்ளி பல இடங்களுக்கும் தள்ளி/வீசி விடுவதே அதன் தொழில்.

ஆகவே, இறை யோடு, அம் விகுதி சேர்ந்து  இறையம் ஆகிறது.

(இறை நொந்தது=இதயம் வலித்தது - மாரடைப்பு - heart attack)

இறை + அம் = இறையம் > இதயம் எனும் சொல்லை தமிழாகக் கொள்வதில் தவறில்லை தானே...

வடமொழிக்கு தமிழ் தந்த கொடையே இதயம் ஆகும்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன் நிறுவனர்,
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.