இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 16 February 2022

திருக்குறள் முற்றோதல் - தமிழ் வளர்ச்சித்துறை.

திருக்குறள் முற்றோதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
16.02.2022. இன்று, தேனி மாவட்ட 
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 
மாவட்ட ஆட்சியரகத்தில், 
"திருக்குறள் முற்றோதல் போட்டி" நடைபெற்றது.  நிகழ்வினுக்கு தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் திரு பெ. இளங்கோ ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு மூ.செல்வம் திரு ஆ.முத்துக்குமார் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் நடுவராக பணியாற்றினர்.

திருக்குறள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த மாணவ-மாணவியர்களுக்கு ரூபாய்.10 ஆயிரம் பரிசுத் தொகை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு வாழ்த்துகள்.

இந்நிகழ்வில் சிறப்பு 
அழைப்பாளராக, தேனி வையைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நானும் கலந்துகொண்டு நான் எழுதிய திருக்குறள் உலகப் பொதுவுர நூலைப் பரிசாக வழங்கிய இனியபொழுது...  சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும், போட்டியில் பங்கேற்ற மாணவியருக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் வாழ்த்தும் பேரன்பும்.

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி.

Tuesday, 15 February 2022

காதலோடு வாழ்... கவிதை.. ச.ந.இளங்குமரன்

காதலோடு வாழ்...

பெருந்தெய்வப் பெண்ணின் கண்ணை
கருங்குவளை மலரென் றெண்ணி
கள்ளுண்ணும் நோக்கத் தோடு
பெருவிருப்பங் கொண்டு தன்னின்
பெருங்கூட்டத் தோடு மோத
வருங்கூட்டம் தன்னைக் கண்டு
வளைக்கையால் மங்கை நல்லாள்
வாகாக விரட்டக் கண்டு

தாமரையின் மேலே மீன்கள்
தக்கபடி புரளக் கண்டும்
தன்னிரையைக் கொத்தித் தூக்க
தகுவாய்ப்பு இன்றி வீணே
விக்கித்துத் திரும்பும் புள்ளாய்
விரைவாகத் திரும்பும் வண்டே
தாமரையாள் கண்கள் சிந்தும் 
தாதெனக்கே சொந்தம் அன்றோ!

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி.

Monday, 14 February 2022

கம்பனில் வள்ளுவன்...

கம்பனில் வள்ளுவன்...
ச.இளங்குமரன்

போர் என்ன வீங்கும் பொருப்புஅன்ன பொலங்கொள் திண்தோள்
மாரன் அனையான் மலர்கொய்து இருந்தானை வந்த ஓர் கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண்புதைப்ப ஆர் என்னலோடும் அனல்என்ன அயிர்த்து உயிர்த்தாள்

இது கம்பனது அகலிகைப் படலத்தில் ஒரு பாடல்.

மலை போன்ற தோள்களையுடையவன். மாறன் போன்ற அழகுடையவன். அவன் ஏறு நடை போட்டு வருகிறான். அவளோ பூக்கொய்து கொண்டிருக்கிறாள். 

வந்த அழகன் தன்னுடைய நடையை மெதுவாக்கிக் கொள்கிறான். 
பின் புறமாகத் திரும்பி நின்று கொஞ்சம் இருமிக் கனைக்கிறான்.  அந்த அழகி  திரும்பிப் பார்க்கிறாள். 

தன் காதலன் தன்னை பார்க்கவில்லை என்று கருதிக் கொண்டு, மெதுவாக அவன் பின்னால் வந்து நின்று  அவனது கண்களைப் பொத்துகிறாள்.

அந்த அழகன் ஒன்றும் தெரியாதவன் போல் "யார்?"  என்று கேட்கிறான்.

உடனே அந்த அழகிக்கு சினம் வந்துவிடுகிறது. 

"யாரா...  அப்படி என்றால் வேறு சில பெண்களும் உன் கண்ணைப் பொத்தி இருக்கிறார்களா? நீ என் காதலன் அல்லன். கள்வன், காமுகன், பல பெண்களின் இச்சை என்னும் காமத்தில் விழுந்து கிடப்பவன்.  நான் கண்களை பொத்தியதும் கண்ணே!...  என்றல்லவா என்னை அழைத்திருக்க வேண்டும். நான் மட்டுமே உன் காதலியாக இருந்தால் அது தானே நடந்திருக்கவேண்டும். அப்படி நடப்பது தானே சரி?  என்று துள்ளிக் குதிக்கிறாள். துடித்து விழுகிறாள்.

அந்த அழகி அந்த அழகனாகிய தன் காதலனிடம் கற்பை எதிர்பார்க்கிறாள் என்பதே இதற்குப் பொருள்.

இந்தப் பாடலை எழுத கம்பனுக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் வள்ளுவர். அதாவது...

" யாரினும் காதலம் என்றேமா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று "

காதல் என்பது உடல் தொடர்புடையது அல்ல. அது உள்ளம் தொடர்புடையது. உள்ளம் மட்டும் செம்மையாக இல்லையென்றால் தலைவனும் தலைவியும் நெருங்கவே முடியாது.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்.

Thursday, 10 February 2022

நூல் மதிப்புரை - மேடைப் பூக்கள் - இரா.மணிகண்டன்

நூல் : மேடைப்பூக்கள்
நூலாசிரியர் : பேரா.பத்மினிபாலா
வையைப் பதிப்பகம் தேனி.
விலை - 120

வையைப் பதிப்பகத்தின் வெளியீடான முனைவர் பேராசிரியர் பத்மினிபாலா அவர்களது மேடைப்பூக்கள் கவிதை நூலைப் படித்தேன். அத்தனை கவிதைகளும் மிக அருமை. 

ஒவ்வொரு கவிதையையும் படிக்க படிக்க புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் தொடர்ந்து என்னை இழுத்துச் சென்றது.

சில கவிதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தேன். அதன் கருத்தாழத்தில் தேய்ந்து போனேன். சில சமூகம் சார்ந்த கவிதைகளைப் படித்தவுடன் நரம்புகள் முறுக்கேறத் தொடங்கி விட்டன. சில கவிதைகள் நெஞ்சை நெருடின. இப்படியான பல கவிதைகளில் உழவன் குறித்த ஒரு கவிதையைப் பதிவு செய்கிறேன். 

உழவன்

உயிர்க் குலத்தின் பசியினைப் போக்க பயிர்களை நெய்யும் பரம்பொருள் உழவன்!

காலுக்குச் செருப்பாய்க் கடும்வெயில் அணிவான்! மேலுக்கு உடையாய்க் காற்றினை உடுப்பான்!

வேளைக்குச் சோறு உண்பதைத் தவிர்ப்பான்! வேண்டிய எல்லாம் உலகுக்குக் கொடுப்பான்!

நாளெலாம் உழைப்பான் நலிந்து கிடப்பான் ! நாட்டின் நலிவைப் போக்கி நிமிர்வான் !

வீட்டில் வறுமைத் தாண்டவம் ஆடும் நாடும் ஏடும் அவன்புகழ் பாடும்!

ஏரின் பின்னால் உலகம் சென்றும் ஏற்றம் மட்டும் அவனுக் கில்லை!

உழவன் மட்டும் உழைக்க மறந்தால் உலகம் யாவும் பசியால் வாடும்!

மேலும்...
கருவின் உருவம் பெண்ணெனத் தெரிந்தால்..
எனத்தொடங்கும் வரி முதற்கொண்டு 
மணவரை தண்ணில் 
தலையது கவிழும்வரை...

இக்கவிதையில் பெண்களைப் பேசுவதாக எண்ணி ஆண்களையே கண்ணாடி முன் நிறுத்துகிறார். ஆண்களின் பருவ முகங்களை மேடை போட்டு காண்பிக்கிறார். ஒவ்வொரு ஆணும் தன்னை உணர்வதற்கு வாய்ப்பாக வரிகளை அமைத்திருக்கிறார். 

மனித சமூகத்தில் பாதிக்கும் மேலாய் இருக்கின்ற பெண்களின் நிலையை ஆண் வர்க்கம் உணர மறுக்கின்ற உண்மையை உரக்கச் சொல்கிறார் கவிஞர்.

மேடைப்பூக்கள் என்னும் இந்தக் கவிதை நூலில் சமூக நிலையை எண்ணியே தனது எண்ணங்களை, செயல்பாடுகளை கவிதையாக  வடித்துள்ள சகோதரி கவிஞர் பத்மினிபாலா அவர்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள். 

இந்த அருமையான நூலினை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

நூல் வேண்டுவோர் பதிப்பகத்தாரைத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுங்கள். 98423 70792

சிறப்பான கவிதைகளுக்காக பேராசிரியர் பத்மினிபாலா அம்மா அவர்களுக்கும், அழகிய முறையில் நூலாக்கம் செய்த வையைப் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி 
கவிஞர் இரா.மணிகண்டன்
சோழா பைனான்சியல் சர்வீசஸ் மையம் தேனி.
பேச 90802 27258

Friday, 4 February 2022

அற்றைத் திங்கள்

அற்றைத் திங்கள்... 
(கடந்த ஆண்டு இதே நாளில்)

நேற்று இரவு ஆழ்ந்த படிப்பில் என்னையே மறந்து புத்தகத்தில் புகைந்து கொண்டிருந்த நேரம்.  தம்பி என்று அழைத்தவாறு தன்னுடைய மெல்லிய கைளால் என் தோளைத் தொட்டார் அவர். அந்தக் குரல் எனக்கு மிக நெருங்கிய தொடர்புடைய குரல்.

திடுக்கிட்டுத் திரும்பினேன்.
விளக்கின் ஒளி மங்கும் அளவிற்கு வெள்ளை வேட்டி சட்டையோடு மெல்லிய புண்ணகை தவழ எமது ஆசான் இளங்குமரனார் நின்று கொண்டிருந்தார். "ஆள்வருவது கூடத் தெரியாமல் அப்படி என்ன படிக்கிறீர்கள்" என்ற ஐயாவின் குரலைக் கேட்டவாறு அவரை கால்களில் வீழ்ந்து வணங்கினேன். மெதுவாகக் குனிந்து என்னை தூக்கி நிறுத்தினார். என் தோளைத் தொடும் அளவிற்கு நான் என்னையே மறந்து படித்துக்கொண்டிருந்த புத்தகம் ஐயா அவர்கள் எழுதிய "தமிழர் வாழ்வியல் இலக்கணம்" என்பதைச் சொன்னேன்.

இது தவச்சாலையில் கொடுத்தது தானே என்று என்று கேட்டார். ஆமாம் ஐயா என்று சொல்லிக்கொண்டே ஐயா அவர்களை இருக்கையில் அமர வைத்து பின்பு நானும் அமர்ந்து கொண்டேன். அந்த நூலில் எனக்கு இருக்கின்ற ஐயப்பாடுகளை நேரடியாகவே ஐயாவிடம் கேட்பது என்று கேட்கத் தொடங்கினேன். சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். 

பின்பு சாகரம் மொழிமுதல் வராது என்று இன்றும் பல அறிஞர்கள் சண்டை போடுகிறார்கள் ஐயா இதற்கு எப்போது தீர்ப்பு வரும்? என்று கேட்டேன். அவர் சொன்னார் சகரம் மொழி முதல் எழுத்தாக வரும். தொல்காப்பியத்தை முறையாகப் படிக்கும் வரை இந்தச் சண்டை நீடித்துக் கொண்டே தான் இருக்கும் என்று சொன்னார். மொழி முதல் வரும் என்பதற்கு சான்று என்னய்யா என்று கேட்க அந்தக் காலத்தில் அவர்கள் சாப்பிடாமல் இருந்திருப்பார்களா? சட்டியில்லாமல், சமைத்து இருப்பார்களா என்று அடுக்கினார். அப்போதுதான் தொல்காப்பிய நுட்பத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 

அது இருக்கட்டும் இன்றைக்கு என்ன நாள் என்றார். 02-02-2022 என்றேன். நாளை என்று கேட்டார்... 03-02-2022 என்றேன். ஆம் நான் 30 ல் பிறந்தவன். நீங்கள் 3 இல் பிறந்தவர். நான் 1 ஆம் மாதம், நீங்கள் 2 ஆம் மாதம். கடந்த ஆண்டு நீங்களும் என் மகளும் என் இல்லம் தேடி நேரில் வந்து வாழ்த்து பெற்றீர்கள். இன்று நான் உங்கள் இல்லம் தேடி வந்து வாழ்த்துகிறேன் என்றார். நுண்மாண் நுழைபுலத்தராய் நீடுவாழ்க என்று வாழ்த்தினர். 

காலில் வீழ்ந்து வணங்கினேன். எழுந்தேன் ஐயாவைக் காணவில்லை. திடுக்கிட்டு விழித்தேன்... எல்லாம் கனவு நாளைய என் பிறந்த நாளுக்காய் இன்று வந்து வாழ்த்திய என் ஆசான் செந்தமிழ் அந்தணர் அவர்களை எண்ணி விழிகள் கசிந்தன. கடந்த ஆண்டு அவர் என்னிடம் சொன்ன திருக்குறளை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு"

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்

திருக்குறள் போட்டி

நீங்களும் வாழ்த்தலாமே...!
(தேனி மாவட்டம் - போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப்பள்ளி 03-02-2022)

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் "உலகத் தமிழ்க் கூடல்" சார்பில் மாநில அளவிலான திருக்குறள் சொல் போட்டி இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது.  

இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையான மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

போட்டியினை கவிஞர் லட்சுமி குமரேசன் அவர்களும் கவிஞர் செல்வராணி அவர்களும் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.

வெற்றி பெற்றவர்களைத் தாண்டி கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் சிறப்புப் பரிசும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில் திருக்குறள் சொல் போட்டியில் கலந்துகொண்ட

தேனி மாவட்டம் போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப்பள்ளியில்‌ பயிலும் மாணவி  அபிநயா அவர்கள் மாநில அளவில் இரண்டாம் பரிசினைப் பெற்றார். மாணவிக்கு புலவர் இராசேந்திரனார் வழங்கிய பணமுடிப்பும்,  மற்றும் பா.முனீஸ்வரி
சீ.தமிழ்க்குமாரன்
அ.கௌசிக்
கா.வீரஹர்சினி
செ.ஜனகீர்த்தன். ச.ஹர்சிதா
பா.ரமணி என கலந்துகொண்ட மாணவ மாணவியருக்கு செந்தமிழ்த் தேனியார் வழங்கிய சிறப்புப் பரிசும், வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் நூலும், உலகத் தமிழ்க்கூடல் சார்பில்  தலைமையாசிரியர் ‌முன்னிலையில் பங்கேற்புச் சான்றிதழும், வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மாணவிகளை போட்டிக் களத்திற்கு தயார் செய்து வழிநடத்திய லட்சுமி ஆசிரியர் அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்களுக்கும் நன்றி.

உலகத் தமிழ்க்கூடல் தமிழ்செம்மல் முத்துமணியார், நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரனார் உள்ளிட்ட பேராளுமைகளுக்கு நன்றி...

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம் தேனி & அமைப்பாளர் உலகத் தமிழ்க்கூடல்.