இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 24 July 2024

செந்தமிழ் அந்தணரும் செழுந்தமிழும்

*செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரும் செழுந்தமிழும்*

புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்.
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

"அரசினர் கல்லூரி எதிலும் இளங்குமரனார் போல் அகரமுதலி பணியாற்றுவார் எவருமில்லை, ஆங்கிலப் பெரும் பட்டம் பெற்ற பண்டாரகருள்ளும் அவர் போல் இலக்கணம் கற்றாரும், ஆய்ந்தாரும் ஒருவரும் இல்லை" என்று மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பாராட்டப்பட்ட செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்கள் அன்பும் அமைதியும் அடக்கமும் கொண்டவர். எளிமையும் இனிமையும் ஒருங்கே அமையப்பெற்றவர். நெஞ்சில் உறுதியும், நேர்மைத் திறனும், நுண்மான் நுழைபுலம் மிக்க ஆய்வறிவும், அரிமா நோக்கும் கொண்டு பாவாணராய் வாழ்ந்த பாவாணர். 


சுமார் 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 4800க்கும் மேற்பட்ட குறள்நெறித் திருமணங்களை நிகழ்த்தியவர். பத்துக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களை மீட்டெடுத்தவர். எழுத்துப் பணிக்காக நாள்தோறும் 18 மணி நேரம் செலவு செய்தவர் செந்தமிழந்தணர் அவர்கள். ஐயாவின் ஆய்வுகள் அளப்பரியன. அவர் தமிழுக்கும் தமிழருக்கும் வாய்த்த தமிழ்க் கருவூலம் அவர். உலகத் தமிழர்களின் ஒப்பிலாச்ச் சொத்துமவர். பாவணரது நேரிய நெறியில் நின்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அவர் ஆக்கித் தந்திருக்கின்ற ஆய்வுகள் பற்பலவாம். 

சான்றாக செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் பத்துத் தொகுதிகள். இந்நூல்களின் வழியாக சுமார் 8000 சொற்களுக்கு வேரும் விரிவும் கற்றறிந்த எவரும் மறுக்க இயலாக் கோணத்தில் நமக்குக் கொடையாக வழங்கியிருக்கிறார். 

எமது ஆசான் செந்தமிழ் அந்தணரோடு 1997 முதல் செந்தமிழ் அந்தணரின்நிறைவுக் காலம்வரை அவரைத் தொடர்ந்திருக்கிறேன். அவரது பல விழாக்களில் கலந்திருக்கிறேன். சில கூட்டங்களை நடத்தியும் இருக்கிறேன். தன் வாழ்நாளில் எனக்குத் தெரிந்த வரையில் நேரம் தவறாமையைக் கடைப்பிடித்தவர் அவரைப்போல் இதுவரையில் யாரையும் நான் கண்டதில்லை.

ஐயா அவர்களது 75 ஆம் பிறந்தநாள் விழா திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடக்கிறது. இவ்விழாவிற்கு தமிழண்ணல் அவர்கள் தலைமை தாங்குகிறார். அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு அந்தணரை வாழ்த்தி மகிழ்கின்றனர். இப்பிறந்தநாள்  விழாவில் தான் ஐயா எழுதிய 75 நூல்கள் வெளியிடப்பட்டன. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு அறிஞருக்கும் இதுவரையில் நடக்காத நிகழ்வு. இந் நூல்களை தமிழ் மண் பதிப்பகம் வெளிக்கொண்டு வந்தது.

இந்நிகழ்வில் தலைமையேற்றிருந்த தமிழண்னால் அவர்கள் தன்னுடைய தலைமை உரையில் "என் இனிய இளவல் இளங்குமரனார், என்றாலும் அவர் தாழ் பணிந்து வணங்குகிறேன்" என்று சொன்னது எல்லோரையும் நெகிழவைத்தது.

இவ்விழா சுமார் எட்டு முப்பது மணிக்கு நிறைவாக வேண்டும். செந்தமிழ் அந்தணர் அவர்களது கையில் ஒலிவாங்கி கொடுக்கும் நேரம் 8-20. ஒலிவாங்கியைக் கொடுத்தவர் சொன்னார் "நாங்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டோம். இருப்பினும் உங்களது நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம்" என்று சொன்னார். 

இப்பொழுது ஐயா தொடங்குகிறார். 'காலம் பொன் போன்றது அல்ல, பொன்னை விட மேலானது. இவ்வுலகில் போனால் திரும்ப வராதது காலமும் உயிரும். எனவே நான் உரிய பொழுதுக்குள் நிறைவு செய்வேன் என்று சொன்னதோடு, ஒரு மணி நேரம் சொல்ல வேண்டிய செய்திகளின் சாரத்தை 10 நிமிடங்களில் சொல்லி எட்டு முப்பதுக்கு நிகழ்வை நிறைவு செய்தார். அவரின் காலம் தவறாமையை நேரில் கண்டவன் என்ற முறையில் இச்செய்தியைப் பதிவு செய்தேன். அவர் செல்லுகின்ற விழாக்களுக்கு உரிய நேரத்திற்கு முன்பாகவே விழா அரங்கில் அவர் இருப்பார். அப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

"தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்" இது செந்தமிழ் அந்தணர் எழுதிய நூல்களுள் ஒன்று. தமிழ் மொழியின் சிறப்பை, தமிழ்ச் சொற்களின் வேரை, தமிழ் இலக்கியங்களின் இனிமையை, தமிழ் எழுத்துகளின் மேன்மையை அதன் ஆழத்தை, நுட்பத்தை 16 கட்டுரைகளில் விளக்குகிறார்.

எழுத்துகள் பற்றி  "வட்டமே இயற்கை இயக்க வடிவம் எனக் கண்டனர் நம் முன்னோர். அதனை அடிப்படையாகக் கொண்டே உயிர் இயக்க எழுத்துக்களை அமைத்தனர்" என்கிறார். இந் நூலைப் படிக்கும் வரை நாம் நாளும் நாளும் எழுதி வரும், நம் தமிழ் மொழியின் எழுத்துக்கள் தொடர்பாக இப்படி ஒரு ஆய்வு இருப்பதை, கட்டமைப்பு இருப்பதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

மேலும் "அவ்வெழுத்துக்களையும் நாள் கோள் இயக்கம் போலவே வலச் சுழற்சியாகவே அமைத்தனர். இடச் சுழற்சி இயற்கையொடு மாறு பட்டது. ஊர்வலம், நகர்வலம், வலஞ் சுழி என்பவற்றை எண்ணுக.~

காற்று வகையில் ஒன்று சூறைக்காற்று. சுழன்று வளையமிட்டுக் கிளம்பும் அதனைக் கண்டவர், சூறைக் காற்று என்றனர்.

நீர் நிலையில் சுழல் உண்டு; நீர் நிலையில் எழும் அலை, ‘வட்டம்' என்பதை எவர் அறியார்? அலை வட்டம் என்பதுதானே பெயர்.

தீ, பற்றி எரிவது வட்டமாகவேயாம். நாய் வட்டமிடாமல் படுப்பது இல்லை. பருந்து வட்டமிட்டே பறக்கும்.

ஆடு மாடுகள் வட்டமாகச் சுழன்றே படுப்பன.

வாடையில் நடுங்குவார் கூனிக் குறுகி வட்டமாகவே படுப்பர்.

பூவும் காயும் தவசமணிகளும் வட்டவடிவினவே. 
நடைவண்டி முதல் எவ்வூர்தியும் 'வட்டை' உருள்கள் (சக்கரம்) அமைந்தனவே. என்று சொல்லி உயிர் எழுத்துகளின் தன்மையை விளக்குகிறார். 

செந்தமிழ் அந்தணர் அவர்கள் எழுதியவற்றுள் சுமார் 200 நூல்களைப் படித்திருப்பவன். எழுத நிறைய உண்டு. விரிவஞ்சி விடுகிறேன்.  

இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரின் படைப்புகளைச் செழுமையுடன் படித்துப் பாரங்கும் பரப்பத் தொடங்கினால் தமிழ் எழுட்சியுறும். தமிழினம் மீட்சியுறும்.

புலவர் ச.ந.இளஙகுமரன்

No comments:

Post a Comment