அனல்
இத்தூய செந்தமிழ்ச் சொல்லை வடசொல் என்றே சில அறிஞர்கள் எண்ணுகின்றனர்.
அனல் என்பது தன்னைச் சார்ந்த அல்லது தன்னை ஒட்டிய எதனையும் எரிப்பதும், அழிப்பதும், கரியாக்குவதும் அனல் ஆகும்.
தன் முன் வைத்தது என்னவாயினும் அதனை உண்டு அழிப்பது அனல்.
இவ்வனலானது சமைக்கவும் கருவிகள் அமைக்கவும் ஒளி வழங்கவும் குளிர் போக்கவும் உதவுகிறது என்றாலும் அதன் முன்னுள்ள பொருளை அதன் தன்மையை அகலச் செய்தலை விடாமல் இருக்கிறது. அரிசி காய்கறி ஆகியவற்றைப் பக்குவப்படுத்தினாலும் அவற்றின் இயல்பை மாற்றி அமைத்தலை எண்ணினால் உண்மை நமக்கு தெற்றெனப் புலப்படும்.
நமது தமிழ்நாடு வெப்பமண்டில பகுதி. இவ் வெப்பமண்டிலப் பகுதியில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தேய்ந்து பொருந்துதல் வழியாக தீ உண்டாவதைத் தெளிய உணர்ந்து தீ யினுக்குரிய பல்வேறு அடிப்படையான பெயர்கள் பலற்றையும் உருவாக்கிக் கொண்டனர்.
தழு > தழு + வு > தழுவு
தழு + அல் > தழல்
கய் (இது பொருந்துதல் கருத்து வேர்)
கய்+அல்>கயல்>கஞல்
கஞலுதல் = நெருங்குதல் "புதுமலர் கஞல" (புறம் :143) கஞல் > கனல் > அனல்
தகு : பொருந்து, சேர்
தகு + அம் > தகம் : நெருப்பு
தகு + அனம் > தகனம் எரிப்பு
தகனம் எனும் சொல் இன்றும் சிற்றூர்ப் புறங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இறந்து போன ஒருவரின் உடலை எரிப்பது தொடர்பாக அவர் உடலை தகனம் பண்ணியாச்சா என்று கேட்பது வழக்கம். அனல் அது தூய செந்தமிழ்ச் சொல்லே அன்றி வடசொல் அல்ல...
செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார்
சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்களது நேரிய நெறியில்...
இனிய அன்புடன் ச.ந.இளங்குமரன்.
No comments:
Post a Comment