மூன்று நாடுகளை இணைத்த
#முப்பால்திருமணம்
மணமக்கள்
#ஜெ.#சக்திவேல் (எ) அலெக்சு பாண்டியன் - போடி தேனி மாவட்டம்
#கோ.#சசிதா - சுகார்போரோ ஒன்றாரியோ, ரொறன்ரோ, கனடா.
காதலாகி கசிந்த இவர்களது திருமணம் பெற்றோர்கள் ஒப்புதலோடு, சான்றோர் முன் உறுதி ஏற்று, திருக்குறள் நெறியில் தேனி வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் ச.ந. இளங்குமரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற இத்திருமணம், மனம் நிறை மகிழ்வோடும், நெகிழ்வோடும் நெஞ்சில் நிற்கக் கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனடா நாட்டின் தமிழுறவுகள் குடும்பம் குடும்பமாக வந்து குழுமி இருந்த நிகழ்வு. உள்ளூரிலிருந்து மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் உறவு முறையினர் மிகச் சிறக்கப் பங்கேற்ற நிகழ்வு.
சுமார் ஒரு மணி நேரம் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும், நிகழ்வுக்கு வந்திருந்த சான்றோர் பெருமக்களும், அமைதி காத்து முழு ஒத்துழைப்பு வழங்கிய நிகழ்வு இது. மணமக்களின் முழுமையான தமிழ்ப்பற்றும் மக்களின் வாழ்வு நலன் கருதி பெற்றோர்கள் அளித்த முழுமையான ஒத்துழைப்பும் மறக்கவியலாது.
திருமண வழிபாட்டு முறை குறித்து நான் ஒவ்வொரு முறையும் பேசும்போது குழுமியிருந்தோர் மிகு உற்சாகத்தோடு கைதட்டியும், ஆர்ப்பரித்தும் வியந்ததுமான நிகழ்வு.
திருமண விழா நிறைவுக்குப் பின்பாக மேடைக்கு முன்பிருந்த சான்றோர் பெருமக்கள் பலரும் அருகில் வந்து திருமண முறை குறித்து வியந்து பேசி, கை கொடுத்து, வாழ்த்துச் சொல்லி எங்கள் இல்லத் திருமணமும் இப்படியே நடைபெற வேண்டும் என்று தொடர்பு எண் பெற்றுக் கொண்டதுமான நிகழ்வு இது.
தமிழீழ உறவுகள் மொழி குறித்து அளவளாவிப் பேசி உற்சாகத்தோடு தற்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு. மணவீட்டார் இருவரும் ஒத்த உணர்வோடு திருமண மேடையில் எனக்கும் மாலையிட்டு மதிப்பு செய்து நிகழ்வு இது... எனக்குநானே வியந்த நிகழ்வு.
மணமகனின் உடன்பிறப்பான ஜெகதீசு பாண்டியன், சொக்கலிங்கம் உட்பட அனைவரது விருந்தோம்பும் பண்பும், மணமகளின் அண்ணன் மாமா என அனைத்து உறவுகளின் பாசப் பிணைப்பும் ஏதோ திரைப்படத்தில் பார்த்தது போன்றே இருந்தது. அன்பும் பாசமும் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்குச் சான்றாக நடந்து இத்திருமணம் மூன்று நாடுகளைச் சேர்ந்த உறவுகளை இணைத்து, முப்பால் திருமணமாக மலர்ந்து நெஞ்சில் நிறைந்தது. இத்திருமணம் திருக்குறள் உலகப் பொதுமறை என்று மீண்டும் ஒரு முறை நிறுவக் காரணமாக இருந்தது.
எல்லாப் புகழும் என்னுள் இருந்து இயங்கும் தமிழ்தாய்க்கும், என்னை வழிநடத்தும் ஆசான் மார்களுக்குமே உரியது.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.
98423 70792
நாள் 22-08-2024
No comments:
Post a Comment