மொழிப்பற்றும் மொழி வெறியும்.
தமிழ் இயற்கை மொழி. உலகின் மூத்த மொழி. உலக மொழிகள் பல கிளைப்பதற்கு வேராக இருந்து வரும் மொழி. வளர்ந்து வரும் அறிவியல் உலகத்திற்கு ஏற்றவாறு புதிய புதிய கலைச்சொற்களை உருவாக்குகின்ற ஆற்றல் படைத்த ஒரே மொழி உலகில் தமிழ் மட்டுமே என்பது மொழியியலாளர்களுடைய கருத்தாக இருக்கிறது.
இன்றைக்கு நாம் பேசுகின்ற மொழியில் 27 மொழிகளைக் கலந்து எழுதியும் பேசியும் வருகிறோம். தனித்தியங்கவல்ல தமிழ் மொழியில் தமிழர்களாகிய நாமே வலிந்து பிற மொழிகளைக் கலந்து வருகிறோம். தமிழ் மொழியைப் போல் இனிமையான எளிமையான மொழி எனக்குத் தெரிந்தவரையில் இல்லை என்கிறார் 11 மொழிகளைக் கற்றறிந்த பாரதியார். ஆனால் ஒரு மொழியையும் ஒழுங்காக, சரியாகக் கற்காத நாம்தான் தமிழ் எதற்கும் ஆகாது என்று வெட்டிப்பேச்சு பேசுகிறோம், எழுதுகிறோம். இப்படி பேசியும் எழுதியும் வரும் பலரும் தமிழைப் படித்து, தமிழில் எழுதி, தமிழால் வாழ்பவர்களே என்பதும் வேதனைக்குரியது.
பிற மொழிச் சொற்களை தமிழில் கலக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தால், அப்படி வேண்டுகோள் வைப்பவர்களை மொழி வெறியர் என்று தன்னிலை அறியாது கேலியும் பேசி கிண்டலும் வருகின்றனர்.
வெறி என்பது என்ன? விலங்குகளுக்கு வெறி பிடித்தால் அது எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறும், மிதித்துக்கொள்ளும். மனிதர்கள் சாதி வெறியும், சமய வெறியும், மதவெறியும் பற்றிக் கிடப்பதால் தான் இன்னொரு சாதிக்காரரை, இன்னொரு சமயத்தவரை, இன்னொரு மதத்தவரை இழித்தும் பழித்தும், தேவைப்பட்டால் கொலை கூடச் செய்தும் தங்கள் வெறியைத் தீர்த்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பற்றுடையபணிகளைர் இருந்தால் தங்கள் சாதியரை, தங்கள் சமயத்தவரை, தங்கள் மதத்தவரை முன்னேற்றும் பணிகளைச் செய்வர்.
ஒருவர் தன் தாய் மொழியின் மேல் கொண்டுள்ள பற்றின் காரணமாக தாய் மொழியில் பிற மொழிகளைக் கலந்து பேசுவதும், கலந்து எழுவதும் வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறார் என்றால் அவர் எப்படி மொழிவெறியர் ஆவார்?
எவரொருவர் தன் தாய் மொழியில் பிற மொழிகளைக் கலந்து எழுதுகிறாரோ, எவரொருவர் தன் தாய் மொழியில் பிற மொழிகளைக் கலந்து பேசுகிறாரோ அவரே மொழிக் கொலையர், அவரே மொழி வெறியர்.
"மொழிப்பற்று மிக்குடையோன் மொழிவெறியனல்லன்!
மொழியைக் கொல்லும் கழிசடையே மொழிவெறியன்" என்கிறார் பாவேந்தர். இதனை அவர்கள் எப்போது உணர்வார்களோ தெரியவில்லை.
வளர்ந்து வரும் அறிவியல் உலகில் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான கலைச் சொல்லாக்கங்கள் தமிழில் நிறைந்து வந்து விட்டன. அவற்றை அறிந்து கொள்ள முயல்வோம். அறிந்து கொண்ட சொற்களை நம் வாழ்நாளில் பயன்பாட்டில் வைப்போம். நடைமுறை வாழ்வில் பயன்படுத்தி மகிழ்வோம் அதுதான் தாய் மொழிக்கு நாம் செய்யும் நன்றிக் கடன். ஒரு மனிதனின் அடையாளம் அவன் பேசும் மொழியேயன்றி வேறொன்றுமில்லை. தாய்மொழி வளர்ப்போம், தரணியில் உயர்வோம்.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.
No comments:
Post a Comment