வெம்பக்கோட்டை அகழாய்வு
(மீட்டெடுக்கப்படும் தமிழர் வரலாறு)
30-06-2024 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகில் நடைபெற்று வரும் அகழாய்வுத் தளத்துக்கு நேற்று சென்றிருந்தேன். சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்யப்பட்டு வரும் இத்தளம் சேதுபதி, பாண்டி சேதுபதி எனும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியாகும்.
தொல்லியலாளர் பொன் பாசுகர் அவர்களது தலைமையில் நடைபெற்று வந்த அகழாய்வில் இதுவரை சுடுமண்ணாலான பொம்மைகள், சூதுபவளமணிகள், சங்கு வளையல்கள், கருப்பு சிவப்பு நிறத்தினாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பானையோடுகள், , கண்ணாடி, பாசிமணிகள் என 3500 க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் அக்கால மக்கள் பயன்படுத்திய அழகிய கைப்பிடியுடன் கூடிய சுடுமண்ணாலான தோசைக்கல்லும் கண்டெடுக்கப்பட்டுளது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும், இப்பொருட்கள் வைப்பாற்றங் கரையிலிருந்து தூத்துக்குடி கடல் வழியாக வணிகம் நடந்ததற்கான சான்றாக உள்ளன என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழகமெங்கும் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வில் மக்கள் வாழ்விடப் பகுதிகளில் சங்கு வளையல்கள் நிறைந்து கிடைத்திருக்கின்றன. அதைப் போலவே வெம்பக்கோட்டையிலும் சங்கு வளையல்கள் கிடைத்திருக்கின்றன. மற்ற இடங்களில் கிடைத்த வளையல்களுக்கும், இங்கு கிடைத்திருக்கின்ற வளையல்களுக்கும் வேறுபாடு என்னவென்றால் வெம்பக்கோட்டையில் கிடைத்திருக்கின்ற சங்கு வளையல்கள் கலை நயமிக்க வேலைப்பாடுகளுடன் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.
யானைத் தந்தங்களால் ஆன பதக்கங்கள், தங்கத்தில் கிடைக்கப்பட்ட அணிகலன்கள், அவற்றில் உள்ள வேலைப்பாடுகளை வைத்து இப்பகுதியில் வாழ்த்த மக்கள் கலைநயம் மிக்கவர்கள் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் திமிலுடன் கூடிய காளை உருவங்களும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை செய்யப்பட்ட இரண்டுகட்ட அகழாய்வில் கீழடியில் கிடைத்ததைப்போல் முதிர்ந்த எழுத்துக் குறியீடுகள் இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மூன்றாம் கட்டப் பணி தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
No comments:
Post a Comment