இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 22 April 2024

கசல் கவிதைகள். புலவர் ச.ந.இளங்குமரன்

1- 
எவரென்னை எந்நூலில் எழுத்தாக வடிப்பார்?
எவரெல்லாம் என்வாழ்வைப் புத்தகத்தில் படிப்பார்?

எவரெல்லாம் எம்உருவை ஓவியமாய் வடிப்பார் ?
எவரெல்லாம் தன்வீட்டுச் சுற்றிலெனை அடிப்பார் ?

எவரெல்லாம் என்பயணந் தனைஇடித்து உரைப்பார் ?
எவரெல்லாம் எனைஇங்குக் குழிதோண்டிப் புதைப்பார் ?

எப்போதும் வந்திடலாம் எமன்என்னைத் தேடி
இல்லாமல் போவேனோ மண்மீது மூடி?


நீயே என் வாழ்வு 
நிலைகுலைந்து போகும்என அறியவில்லை 
நீயே என்உலகம் 
நிலநடுக்கம் எப்போது தெரியவில்லை

நீயே என்கனவு 
விழிஉறக்கம் போகும்என நினைக்கவில்லை 
நீயே என்இன்பம் 
பருகுவது நஞ்சென்னும் நினைப்புமில்லை 

நீயேஎன் உயிரும் 
நடைப்பிணமாய் ஆனதைநான் உணரவில்லை
நீயே என்அனைத்தும் 
நொடிப்பொழுதும்  கொல்கின்றாய் உணர்வுமில்லை!

3-
நினைவுகளைச் சுமப்பதுவே வாழ்க்கை ஆச்சு 
நினைவுகளே சுழியமென மாறிப் போச்சு 

கனவில்லை தூக்கங்கள் மறந்து போச்சு 
காதலியாள் சொன்னதெலாம் பொய்யாய்ப் போச்சு

செம்பவள இதழிரண்டும் வெளுத்துப் போச்சு 
செஞ்சாயம் பூசியது தெரிய லாச்சு

எதிர்காலத் திட்டங்கள் என்ன வாச்சு 
நிகழ்காலச் செயல்பாடு கரியாப் போச்சு

4
உயிரின் உருக்கம் ஆன்மா அறியும்
நிலத்தின் உயிர்ப்பு நீரால் அமையும்

வெயிலின் அருமை நிழலில் தெரியும்
பிரிவின் பெருமை உறவில் புரியும்

உழவன் பெருமை உலகம் அறியும்
உணவுப் பஞ்சம் வந்தால் தெரியும்

பெண்ணின் அன்பும் சிலநாள் குறையும்
மண்ணின் உயிர்கள் யாவும் மறையும்


வான்வெளியில் நிலவெனவே வலம்வருவாய் - என
நினைத்தவனின் நினைவாகற்றிப் புலம்பெயர்ந்தாய்

வாவென்று வாஞ்சையுடன் அழைக்கின்றாய் - நீ
தொட்டுவிடும் தூரத்திலா இருக்கின்றாய்?

வீழ்ந்தபின்னும் எதற்காக வீசுகின்றாய் - ஓ
மரணமேநீ என்னசெயப் போகின்றாய்?

தேடித்தான் அலையவைத்தாய் தேவதையை - எனைத்
தேடித்தான் அலைகின்றேன் தேவதையே!

சொல்லாமல் பிரிந்துசென்றாய் காத்திருந்தேன் - பின்
பேசாமல் பிரிந்துநின்றாய் வேர்த்திருந்தேன்!

பிழைப்பேனா தெரியாது பேச்சில்லை - இனி
பிழைத்தாலும் பிணம்எனக்குப் மூச்சில்லை !

ச.ந.இளங்குமரன் 
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

No comments:

Post a Comment