நூல் : தமிழ்க்காடு
நூலாசிரியர் : பாவலர் வையவன்
வெளியீடு : நெசவுக்குடில்
அறம், பொருள், இன்பம் என்பது போல காதல், வீரம், மானம் எனும் மூன்று தலைப்புகளில் 66 உட்தலைப்புகளைக் கொண்டு 192 பக்கத்தில் நிறைவாகியிருக்கும் நூல் தமிழ்க்காடு.
படிக்கப் படிக்கத் திகட்டாத பாக்கள் படிப்பவரைப் பரந்த சிந்தனைக்கு நகர்த்துகிறது. மொழி, இனம், மானம் மூன்றன் சிறப்பு, இருப்பு, இழப்பு என்பதோடு கடந்து செல்லாமல் இழந்ததை மீட்கும் வழிமுறைகளோடு முறைப்படுத்தி தமிழ் சமூகத்திற்கு வழங்கி தமிழ்த் தாய்க்குப் பெருமை சேர்த்திருக்கிறார் பாவலர் வையவன் அவர்கள்.
தமிழ்க்காடு நூல் முழுமைக்கும் செழுமையான செந்தமிழ் நடை. அதே நேரத்தில் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் எளிய நடையில் இனிமை ததும்ப எழுதியிருக்கிறார்.
தாயவள் எனும் தலைப்பில் தொடங்கி தாய்த்தமிழ் மலரட்டும் என நிறைவாகி இருக்கிறது நூல். காதல் தலைப்பிலும் கூட வீரத்தையும் மானத்தையும் சொல்லி உணரவைத்திருப்பது நூலாசிரியருக்குரிய தனித்திறன் என்றே சொல்லலாம். அதேபோல் இந்நூலில் உள்ள கவிதைகளைப் படிக்கின்ற பொழுது மொழியும், இனமும், மானமும் நூலாசிரியரின் குருதி ஓட்டத்தில் இரண்டறக் கலந்து ஊறிக் கிடக்கிறது என்பதை உணர முடிகிறது. அவரைப் போலவே நாமும் ஊறித் திளைக்க வேண்டும் என்று கவிதைகள் முழுமைக்கும் நமக்கு உணர்த்திச் செல்கின்றன.
பல பாடல்கள் சங்க இலக்கியங்களை ஒட்டியே இருக்கின்றன. ஆனால் அது இன்றைய கால நிகழ்வுகளைப் பேசுகின்றன.
தலைவனைப் பற்றித் தோழியிடம் தலைவி இப்படிச் சொல்கிறாள்
" பேரன்பதுவோ தமிழன் தானாம் பெற்றவள் அவளும் பைந்தமிழ் தாயாம்
உயிருடல் மூச்சு உணர்வது வெல்லாம்
உயர்செந் தமிழே உயர்செந் தமிழே
நாடும் மொழியும் நாடா மனிதன் நடைப்பினம் என்றே நவிழ்கின்றானாம்"...
"தேன்மொழித் தமிழைத் தேர்ந்தவன்
நான் தவித்திருப்பதை நனி மறந்தனனே" இது காதலன் வரவு காய் ஏங்கும் காதலியின் கூற்றாய் ஒலிக்கும் கவிதை.
மனம் நிறைய படி" எனும் ஒரு தலைப்பு விடியும் முன் எழுந்து காலை
வினைகளை முடித்தல் வேண்டும்
படித்திடத் தொடங்கும் முன்னர்
பச்சைநீர் அருந்த வேண்டும்
படித்ததை மீண்டும் மீண்டும்
பாராமல் உரைத்தல் வேண்டும்
படித்ததைப் புரிந்து நெஞ்சில்
பதித்திட முயல்தல் வேண்டும்...
ஒருமையுள் கற்ற கல்வி
எழுமையும் ஏமாப் பென்றால்
பெருமைசேர் கல்வி மீது
பேரவா கொள்ள வேண்டும்
கருமைசேர் தீய எண்ணம்
கனவிலும் போக்க வேண்டும்
கருமுதல் வளர்த்த தாயின்
கனவினை ஆக்க வேண்டும்.
காதல் ஆணுக்கும் பெண்ணுக்குமானது மட்டுமல்ல, அது மண்ணுக்குமானது, தமிழ் மனம் சமூக அக்கறையுடன் கூடிய கல்வியின் மீதும் காதல் கொள்கிறது. தகப்பன் பாடிய தாலாட்டிலும் காதல் கொள்கிறது. மண் விடுதலைக்காய்ப் போராடிய ஈகியர் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும், சிதைப்பவரை எதிர்த்து மீட்டுருவாக்கம் செய்த பண்பாளர்கள் மீதும் காதல் கொள்கிறது இது பாவலர் வையவனாருக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஒவ்வொரு தமிழனுக்கும் சொந்தமாய் இருக்க வேண்டும் என்பதை உணர்த்திச் செல்கிறது காதல் தலைப்பு.
இரண்டாவது தலைப்பாக வீரம். வீரம் என்றால் என்னவென்று கேட்கத் தோன்றுகிறதா? இழப்பு எதுவாக இருந்தபோதும் அதை மீட்பதே வீரமாகும் என்பது பதில். இழந்ததை மீட்பது கடினம் என்று நினைத்து ஊமையாகி உறங்கிக் கிடந்தால் நாளை நாம் உடுத்துவதற்கு ஒரு உடையும் கிடைக்காது. எனவே எதையும் இழந்துவிடக் கூடாது. இழந்த ஒன்றை மீட்காமல் இருந்து விடவும் கூடாது. இது பாவலர் வையவன் அவர்களது உள்ளக்கிடக்கை. வீரமாய் இருக்க என்னும் ஒவ்வொருவருடைய உள்ள கிடக்கையும் இதுதான். இக் கருத்துகளை உள்ளடக்கிய பாடல்கள் இத்தலைப்பில் உலா வருகின்றன.
கலை என்னும் பெயரில் சிதைக்கப்படும் மொழி, சிதைக்கப்படும் பண்பாடு, சிதைக்கப்படும் நாகரிகம், சிதைக்கப்படும் ஒழுக்கம், திரைக்கலைஞர்கள் மேல் தீராத நோய் பிடித்து அலையும் இளைஞர்கள் என இவை திருத்தப்பட வேண்டும். அதேநேரம் இப்படியான கெடும்புகளைச் செய்யும் எவரானாலும் இம்மண்ணில் எவரையும் ஏமாற்றும் வழியின்றி அந்த நச்சைத் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்கிறார் பாவலர் ஆங்கில மாயையில் சிக்குண்டு கிடப்பவர் மேல் இப்படிச் சீறுகிறார்.
'என்பேர் தமிழன்; என்னூர் தமிழ்மண் என்குலக் குடிதமிழ் நாடு ; என்தன் அப்பன் என்தன் பாட்டன் வாழ்ந்தது தமிழ்மண் வீடு ; எங்கள் வாயும் எங்கள் சேயும் தின்றது தமிழ்மண் சோறு ; எங்கள் நடுவே ஆங்கிலம் ஏனென' இனிநீ சினந்து சீறு!.
களைபோலும் செந்தமிழ்ச்சொல் குறளும் கூட
'இளைதாய முள்மரத்தைக் கொல்'லச் சொல்லும்
களைந்தோமா சாதிமத வருணக் காடு?
வளைப்பாம்பு ஆரியத்தை வணங்கும் கேடு!
இளைப்பாறி இருக்கின்றோம் இந்நாள் தோழா
விளைந்திடுமா பெருவெற்றி எண்ணிப் பாராய்
தளைப்பட்ட விலங்கெல்லாம் தகர்த்துப் போக்கித்
தடைதாண்டிப் பொங்கிடடா அன்புத் தோழா!
வீரத்தின் விளைநிலமாம் வ உ சி, தந்தைப் பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாவலர் தமிழேந்தி உள்ளிட்ட பல அறிஞர்களும் அவர்களது தலையாய பணிகளும் இன்னும் மீட்கப்படாமலேயே கிடக்கின்றன என்பதைச் சுட்டி மீட்கும் வீரத்தைத் தமிழர் பெற வலியுறுத்துகிறார்.
நாம் நமது மண்ணில் எத்தனையோ இழந்து விட்டோம். இழந்ததை மீட்கவும், இருப்பதைக் காப்பாற்றவும், இளைய சமூகம் எழுந்து வர வேண்டும். விழுந்து கிடக்கின்ற நம் மானத்தை, மண்ணை, மரபை மீட்க வேண்டும் என்னும் மான உணர்வோடு மானம் என்னும் இத்தலைப்பில் கவிதைகளைப் படைத்திருக்கின்றார்.
தமிழ்க்காடு கவிதைகள் எங்கும் தமிழரின் உரிமை பேசுகிறது. உரிமையை மீட்கும் வீரம் பேசுகிறது. வீரத்தின் விளை நிலமாம் மானம் பேசுகிறது. இந்த மொழிப்பற்றும், இனப்பற்றும், மானமும் இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. அருமையான சமூக எழுச்சிக்கான விதைகள் இத்தமிழ்க்காடெங்கும் செழித்து கிடக்கின்றன. இவை முளைக்க வேண்டும். ஒரு நாள் கட்டாயம் முளைக்கும் என்ற நிறைந்த நம்பிக்கையோடு நூலாசிரியர் பாவலர் வையவன் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம்
தேனி நாகலாபுரம்.
No comments:
Post a Comment