புத்தகப் பார்வை...
கவிஞர் இர.அறிவழகன் அவர்களது "பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்" திருப்பிப் பார்த்தேன். திருப்பிய பக்கங்கள் எங்கும் காதல் சுவை இழையோடிக்கிடந்தது.
காதல் காதல் காதல்! காதல் போயின் சாதல் சாதல் சாதல்! என்று வழிவழியாகத் தமிழ்ச்சமூகத்தில் எஞ்சியும், மிஞ்சியும் கிடக்கும் வார்த்தை. இது இது பாரதியின் வரிகளில் நிலைநிறுத்தப்பட்டது.
காதல் இல்லாத உயிர்களே கிடையாது! காதல் மட்டும் இல்லை என்றால் உலகம் தொடர்ந்து இயங்காது! அதனை விளங்கவும் முடியாது, விளக்கவும் முடியாது. உணர்வால் மட்டுமே உணர முடியும். சிலருக்கு இது கைகூடலாம். சிலருக்கு கையை விரிக்கலாம். எதுவாக இருப்பினும் காதல் ஒன்றுதான்.
பழுப்பேறியே நாட்குறிப்பில் கை கூடாத காதலை, ஆண்டுகள் பலகடந்து, கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறார் காதலனாக நூலாசிரியர். இளமைக் கால நினைவுகள் நூலெங்கும் இசை பாடுகிறது. தலைப்புகளே இல்லாத கவிதைகள், பாதங்களால் (வரிகளால்) நடையிடுகிறது. குறிப்பாக இக்கவிதைகளில் நிறைந்து பேசப்படுவது தனிமையின் வலிகள்...
" வெட்டுண்டு
வீழ்ந்த மரத்தில்
தன் கூடு தேடி அலையும்
பறவையாய்த் தொடங்கினேன்
உன்னுள்
எனக்கான துஞ்சுமிடத்தை" இது தொடக்கக் கவிதை முதற்சொல்லே துண்டித்தல் பற்றியே தொடங்குகிறது. இது பெரும்பான்மையாக நூலெங்கும் தொடர்கிறது.
"என் பழுப்பேறிய நாட்குறிப்பின்
மூலை மடித்த முப்பதாம் பக்கம்
நிரப்பாமல் தவிர்த்து
பிரிவின் தூசிபடிந்து புரட்டாமல்
வெறுமை தாங்கலாக இருக்கிறது
வா
மீதமிருக்கும் நாட்களை
இரண்டு பேர்களும் எழுதுவோம்..." இது தலைப்பு குறித்த கவிதை நெடிய நாட்களுக்குப் பின் புரட்டப்படும் 30 ஆம் பக்கம் நிகழ்காலம் வரையிலும் நிறப்பப்படவில்லை.
"மவுனங்களில் கட்டுப்படாத
கசியும் கண்ணீர்
தற்போதைய தகவல்களில்
நனைப்பது இழந்த நாட்களையும்
இருக்கும் நாட்களையும்
நீயாகிய நானும்
நானாகிய நீயும்
இப்பிரபஞ்சத்தின்
முதுபெரும் அன்பை
சாய்வு நாற்காலியில் அமர்ந்தே வாசிப்போம்....
இது நிறைவுக் கவிதை. தொடக்கமும் நிறைவும் நூலுக்குள் இருக்கும் செய்திகளை நமக்கு தெளிய விளங்க வைத்து விடுகிறது.
கடந்து போன காதலை கடைசி வரையிலும் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பவருக்கு இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலைப் படிக்கும் படிப்பாளிகள் தங்களுடைய இளமைக் கால நினைவுகளில் நீந்துவது திண்ணம்.
அருமையாக இந்த நூலை ஆக்கி இருக்கும் நூலாசிரியர் கவிஞர் இர.அறிவழகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நூல் வெளியீடு "பன்முக மேடை" தேனி. விலை உரூபா 100.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்,
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.
No comments:
Post a Comment