இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 22 April 2022

தொல்காப்பியத் தூதர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி....

தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் வழிகாட்டுதலில் உலகத் தொல்காப்பியத் தூதர் விருது பெற்ற முத்தமிழ் சாமினி செந்தமிழ் சாலினி ஆகியோரது தொல்காப்பியச் சேவையைப்  பாராட்டி தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கும் பணமுடிப்பும், விருதும் வழங்கிச்  சிறப்பித்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களுக்கும், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர், இணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட அரசு அலுவலர் அனைவருக்கும்,  தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், உத்தமபாளையம் வட்டாச்சியர் அவர்களுக்கும், நன்றி....

மற்றும் இந்த தொல்காப்பியக் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணைநின்ற செந்தமிழ் இலக்கிய மன்றம் சின்னமனூர், உலகத் தொல்காப்பியர் மன்றம் அமெரிக்க, மதுரை தொல்காப்பியர் மன்றம், கோவை தொல்காப்பியர் தமிழ்ச் சங்கமம் உலகத் திருக்குறள் சமுதாய மையம் புதுச்சேரி, உலகத் தமிழ்க்கூடல், தேனீக்கள் அறக்கட்டளை கம்பம், தேனி மனிதநேயக் காப்பகம் உள்ளிட்ட அனைத்துத் தோழமைகளுக்கும் நன்றி. 

மேலும் உலகத் தொல்காப்பியர் தூதுவர்களின் வளர்ச்சிக்குத் துணை நின்ற அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி...

புலவர் ச.ந.இளங்குமரன்நிறுவுநர் தேனி வையைத் தமிழ்ச்சங்கம், -  சங்கத் தமிழ் அறக்கட்டளை தேனி திருவள்ளுவர் மன்றம் நாகலாபுரம்.

Friday, 8 April 2022

உலகின் முதல் தொல்காப்பியத் தூதர்

உலகின் முதல் தொல்காப்பியத் தூதர் விருது பெற்ற உலகச் சாதனையாளர்களை 

வாழ்த்துகிறது வையைத் தமிழ்ச்சங்கம் தேனி.

உலகத் திருக்குறள் சமுதாய மையம் ஏற்பாடு செய்த தொல்காப்பியம் மனன முற்றோதல் (03-04-2022) காலை 4.45 மணிக்கு நிறைவுற்றது. 

இந்நிகழ்வில் தேனி வையயைத் தமிழ்ச்சங்கத்தின் வழிகாட்டுதலின் மூலம் கலந்துகொண்டு
இந்த நிகழ்வினை நடத்திய திருக்குறள் மாமணி செல்வி அ. முத்தமிழ் சாமினி, திருக்குறள் மாமணி செல்வி அ.செந்தமிழ் சாலினி ( எட்டாம் வகுப்பு) ஆகிய சகோதரிகள் , தொடர்ந்து 12 மணி நேரம் தொய்வு இல்லாமல் நிகழ்த்தி, உலகச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

உலகத்தில் மாணவிகள் இருவர் தொல்காப்பியம் முழுவதும் ஆறு சுற்று அமைவில், மனனம் முறைமையில் முற்றோதல் செய்துள்ளமை, இதுவே முதன்மை.  இதுவே உலகச் சாதனை. 

இந்த நிகழ்வினைக் கண்காணித்த,  புதுச்சேரி அகில இந்தியா உலகச் சாதனை பதிவு மையத்தின் நிறுவனர் , தலைவர், உலகச் சாதனை நாயகர் திருக்குறள் முனைவர் வேங்கடேசன் அவர்கள், இவ்விரு மாணவிகளை வாழ்த்தி, "தொல்காப்பியத் தூதர்" என்னும் உயரிய விருதினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளார்.
திருக்குறள் மாமணி செல்வி அ. முத்தமிழ் சாமினி, திருக்குறள் மாமணி அ. செந்தமிழ் சாலினி. 
உலகிலேயே முதன் முறையாகத்"தொல்காப்பியத் தூதர்" என்னும் உயரிய விருதினை பெற்றவர்கள் என்னும் மாண்பினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 4 April 2022

அழகிலுண்டு....

அழகிலுண்டு...

அவ்வப் போது
முகம்காட்டி
அமுத மொழியில்
நஞ்சேற்றி
அகத்தில் குருதியில்
பாய்ச்சுகிறாய்
ஆசைத் தீயை 
மூட்டுகிறாய்

மூட்டிய தீயின்
தாக்கத்தால்
முட்டும் மூச்சில்
தடுமாற
ஈட்டி விழியால்
தாக்குகிறாய்
எட்ட நின்று
சுவைக்கின்றாய்.

சுவையிற் சிறந்த
சுவையாவாய்
சோர்வு நீக்கும் 
மருந்தாவாய்
அவையிற் சிறந்த
தமிழாவாய்
அனைத்துப் புகழும்
நீயாவாய்.

நீயே எல்லாம் 
என்றவனின்
நிம்மதி தன்னைக்
குழைத்துவிட்டு
சாவை நோக்கித்
தள்ளுவது
பாவை உனக்கு 
அழகாமோ....

அழகில் உண்டு
ஆபத்து
அழகே உன்னால்
அறிந்துகொண்டேன்.
அழகே உன்னை 
நீங்குகிறேன்
ஆபத்தில் இருந்து
விலகுகிறேன்.

ச.ந.இளங்குமரன்

Friday, 1 April 2022

திருக்குறள் திறன் போட்டி வையைத் தமிழ்ச்சங்கம் தேனி

*வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி* & வையைப் பதிப்பகம் தேனி.
நடத்தும்

மாநில அளவிலான
*திருக்குறள் திறன் போட்டி -2* 
(மாணவ மாணவியர்களுக்கான போட்டி)

நாள் : 24-04-2020 
*நேரம் காலை 10-30 மணி*

திருக்குறள் 11 முதல் 22 அதிகாரம் வரை.

தலைப்புகள்
*செய்நன்றி அறிதல்*
*நடுவுநிலைமை*
*அடக்கமுடைமை*
*ஒழுக்கமுடைமை*
*பிறனில் விழையாமை*
*பொறையுடைமை*
*அழுகாறாமை*
*வெஃகாமை*
*புறங்கூறாமை*
*பயனில சொல்லாமை*
*தீவினையச்சம்*
*ஒப்புரவறிதல்*

**விதிகள்**
1 - மேலே கொடுக்கப்பட்ட 12  அதிகாரத்தில் உள்ள குறள்கள் மட்டும் மனனம்

2 - நடத்துபவர் கேட்கும் திருக்குறளில் விடுபட்ட சொற்களைச் சொல்ல வேண்டும்...

3 - இரண்டாம்  வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்...

4 - தமிழ்நாட்டைக் கடந்து திருக்குறளின் பால் ஈடுபாடுள்ள மாணவ மாணவியர் எந்த நாட்டிலிருந்தும் கலந்துகொள்ளலாம்.

போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர் தங்களது *பெயர், பயிலும் வகுப்பு, பள்ளியின் பெயர் ஆகியவற்றைப் பதிவு செய்யவும்*
பதிவு செய்யக் கடைசி நாள் : 20-04-2021

போட்டி நடுவர்கள்...

1) *கவிஞர் இலட்சுமி குமரேசன்*
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி
2) *கவிஞர் பா.கவிதா*
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி

3) *மதிப்புறு முனைவர் மூ.செல்வம்*
வையைத் தமிழ்ச்சங்கம்
4) *பா.செல்வக்குமரன்* . வையைத் தமிழ்ச்சங்கம்

திருக்குறள் வினாடிவினாப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் *பங்கேற்புச் சான்றிதழும்* வெற்றியாளர்களுக்குப் *பாராட்டுச் சான்றிதழும்* வழங்கப்படும்.

தொடர்புக்கு

தமிழ்மாமணி *புலவர் ச.ந.இளங்குமரன்* 
*98423 70792* 

நிகழ்வு - வையைத் தமிழ்ச்சங்கம் வலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகும்.

போட்டி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 12 போட்டிகள் நடைபெறும். 12 போட்டிகளிலும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் அனைவருக்கும் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் ஆண்டுவிழாவில் சிறப்புப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்படும்.

(அறிவிப்பை மற்றவர்க்கும் பகிர்ந்து உதவுக)

தூய தமிழ்ப் பேசு போட்டி

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் "உலகத் தமிழ் கூடல்" சார்பில் மாநில அளவிலான "தூய தமிழ்ப் பேச்சுப்போட்டி" இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது.  இதில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவ மாணவியர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் தூய தமுழ்ப் பேச்சுப் போட்டியில்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்
80 தலைப்புகள் இந்த போட்டியில் கொடுக்கப்ப்பட்டன. ஒவ்வொரு தலைப்பிலும் மாணவ-மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஆங்கிலம் கலவாமலும், பிறசொல் தவிர்த்தும்  அருமையாக பேசினார். ஐந்து சுற்றுகளாகப் போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்கள்...
வரிசைப் படி

1. அ.முத்தமிழ் சாலினி தேவாரம்,தேனி
2.க.ரா.விசாலி, மேல்மருவத்தூர்.
3. செ.காவியா சென்னை
4. மோகனசிவானி ராசபாளையம்
5.தேசிகாஸ்ரீ இராசபாளையம்
6.ரக்சிதா திருவள்ளூர்
7.கிருபானிகா இராசபாளையம்
8.அ.சு.யாழினி திருச்சி
8.சுபிக்சா நாகப்பட்டினம்
9.முவேதா கோவில்பட்டி
10. செந்தமிழ் சாமினி தேவாரம் தேனி பத்துப் பேர் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கான பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அனுப்பிவைக்கப்பட்டது

மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியினை தமிழ்ச்செம்மல் முத்துமணி, கவிஞர் லட்சுமி குமரேசன், கவிஞர் மூ.செல்வம், கவிஞர் செல்வராணி  ஆகியோர் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். தூய தமிழ்ப் பேச்சுப்போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகையினை கவிஞர் லலிதாசியாம், நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரனார், வழக்குரைஞர் ஆசைத்தம்பி ஆகியோர் இணைந்து வழங்கினர். நிறைவாக நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வினை தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவனரும் உலகத் தமிழ்க்கூடல் அமைப்பாளருமான புலவர் ச.ந.இளங்குமரன் இணைய வழியில் ஒருங்கிணைத்துச் செயல் படுத்தினார். நிகழ்வு தேனி வையைத் தமிழ்ச்சங்கம் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பானது.

நன்றி தினத்தந்தி நாளிதழ், உரிமைக்குரல் நாளிதழ்