இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 30 October 2021

தேவர் சமயம் சன்மார்க்கம்

தேவர் சமயம் சன்மார்க்கம்...!

ஈரத் துறவி வள்ளல் பெருமான்!
வீரத் துறவி விவேகா நந்தர்!
இரண்டும் ஒன்றாய் இணைந்த உருவம் !
இறவாப் புகழுடன் வாழும் தெய்வம் !

திருக்குறள் தன்னில் தோய்ந்தவர் தேவர் !
அருட்பா வாழ்வு வாழ்ந்தவர் தேவர்!
கருப்படு பொருளை உருப்பெற வைக்கும் 
அறநெறி அண்ணல் பசும்பொன் தேவர்!

வள்ளல் பெருமான் வழியில் நின்ற
வெள்ளுடை வேந்தர் தேவர் பெருமான் !
உள்ளம் அனிச்ச மலரினும் மெல்லிது !
வள்ளல் தன்மையோ வானினும் உயர்ந்தது!

காவி உடையினை விரும்பிய தில்லை !
காவிக் கொள்கையை ஏற்றவர் இல்லை !
நாவலந் தீவினைத் தாண்டிய மதத்தையும் !
நாவால் பழித்து நயந்தவர் இல்லை !

அறச்செயல் அற்ற அரசியல் வாதிகள் !
திறம்படத் திரித்த பொய்களி னாலே !
அரசியல் களத்தில் சூழ்ச்சிகள் அறியா !
அறச்செயல் மறவர் பழிகளைச் சுமந்தார் !

தேவரை மதத்தில் அடைப்பது தவறு !
தேவரைச் சாதியில் அடைப்பதும் தவறு !
தேவர் நமது தேசியத் தலைவர்!
தேவர் மக்கள் அனைவருக்கும் பொதுவர் !

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி

Sunday, 17 October 2021

கார் நாற்பது (முலமும் உரையும். பாடல் எண் 8, 9) ச.ந.இளங்குமரன்

கார் நாற்பது (மூலமும் உரையும்) 

8) மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப் பெண்ணிய  னல்லாய் பிரிந்தார் வரல்கூறும் கண்ணிய லஞ்சனந் தோய்ந்தபோற் காயாவும் நுண்ணரும் பூழ்த்த புறவு.

அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு  என பெண்ணுக்கே உரிய இயல்பான குணங்கள் நன்கு அமையப் பெற்ற நல்லாய், மண்ணாலான இந்த உலகத்தில், நிலையான புகழை விரும்பிப் பிரிந்து சென்ற நமது தலைவர்,  மீண்டு வருவதைக் கண்ணிற்கு இயற்றப் பட்ட மையைப்  (கண்மை) பூசியிருப்பது போல் காயாஞ் செடிகளும், நுண்ணிய அரும்புகளும் மலரப் பெற்ற காடுகள்  கூறுகின்றன.

9) கருவிளை கண்மலர்போற் பூத்தன கார்க்கேற் றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து.

கருவிளம் பூக்கள் கண்மலர் போலப் பூத்தன.  கார்ப்பருவத்திற்குரிய  தீயினது நிறமுடைய சிவந்த தோன்றிப் பூக்கள் பூத்து வனத்தை அழகு செய்தன. இவை எதனைச் சொல்கிறதென்றால், வரியை உடைய வளையல்கள் முன்னங் கைகளிலிருந்து கழல  மனத்திற்கு இதமான இனிய சொற்கள் பலவும் சொல்லி, நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், வருவதைச் சொல்கின்றன.

உரை : 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

கார் நாற்பது மூலமும் உரையும் ச.ந.இளங்குமரன்

கார் நாற்பது 
(மூலமும் உரையும்)

6) தொடியிட வாற்றா தொலைந்ததோள் நோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்
சென்றாரை நீடன்மி னென்று.

பொருள் : மா வடுவின் நடுவே பிளந்தாற் போன்ற அகன்ற கண்களை உடையவளே, நெடிய வழியில் பொருள் தேடிச் சென்றிருக்கும் நம் தலைவரை இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து செல்க என  வலியுறுத்தி, கடுமையாய் வானம் இடித்து முழங்கி அறிவித்திருக்கிறது. ஆதலால் தலைவனின் பிரிவால் வளையலிட ஆற்றாத உன் மெலிந்த தோள்களைப் பார்த்து  வருந்துதல் வேண்டாம்.

7) நச்சியார்க் கீதலும் நண்ணார்த் தெறுதலுந் 
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளிரியலாய்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல 
எச்சாரு மின்னு மழை.

தளிர்போலும் இயல்புடையவளே, தம்மை விரும்பி வந்தவருக்குக் கொடுத்து உதவவும், தம்மை விரும்பாத பகைவரின் செருக்கை அழிக்கவும், தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவுமான பொருளின் தன்மையறிந்து, அவற்றைத் தேடிச் சென்றிருக்கும் நமது தலைவரை மறப்பில்லாத புகழை உடைய வேள்வித் தீயைப் போல, எல்லாப் பக்கமும் மின்னி வானமானது நம்மிடம் கொண்டுவரும்.

உரை : 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி

Friday, 15 October 2021

கார் நாற்பது மூலமும் உரையும் - பதினெண்கீழ்க்கணக்கு ச.ந.இளங்குமரன்

தோழி பருவங்காட்டி தலைமகளை வற்புறுத்தியது

4) ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடும் கடுக்கை கவின்பெறப் பூத்தன
பாடு வண்டூதும் பருவம் பணைத்தோளி
வாடும் பசலை மருந்து.

கூத்தாடும் மகளிர் போல மயில்க அழகுபெற ஆடுகின்றன, காடுகள் அழகுபெறும் படியாக கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கின. பாடும் வண்டுகள் மலர்களின் தாதுக்களை ஊதி மகிழ்ந்தன. ஆகவே மூங்கிலையொத்த தோள்களை உடையவளே இந்தக் கார்காலப் பருவமானது உன்னை வாட்டுகின்ற பசலை நோய்க்கு மருந்தாகும்.


5) இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாப் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்
தவழுந் தகைய புறவு.

அம்புபோன்ற கூர்மையான கண்களை உடையவளே, பவழமானது சிதறிக் கிடப்பதுபோல் காடெங்கும் இந்திரகோபப் பூச்சிகள் பரந்து கிடக்கின்றன. தக்கார்க்கு ஈந்துவாழும் தகைசான்ற வாழ்வினுக்காய் பொருள் தேடிச் சென்ற நம் தலைவர் இக்காலத்தே வருவதாய்ச் சொல்லிச் சென்றது பொய்யல்ல மெய்.

உரை : 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Thursday, 14 October 2021

கார் நாற்பது (மூலமும் உரையும்) ச.ந.இளங்குமரன்

கார் நாற்பது
(மூலமும் உரையும்)

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தியது.

2. கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய் இன்னே வருவர் நமரென் றெழில்வான மின்னு மவர்தூ துரைத்து.

வளைந்த அழகிய காதணிகளை அணிந்தவளே, கதிரவனின் நிறைந்த செல்வமான வெப்பம் குறையும் படியாக, நெடிய காடானது மிகுந்த அரும்புகளை ஈன்று கார்காலத்தின் வளத்தை வெளிப்படுத்த, எழுச்சிமிக்க வானம் நமது தலைவர் இப்போதே வருவார் என்று  மின்னி தூதாக உரைத்தது.

3. வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்
தயிர்மணற் றண்புறவி னாலி - புரள
உருமிடி வான மிழிய வெழுமே
நெருந லொருத்தி திறத்து.

வேனிற் பூவான வரிநிறத்தை யுடைய பாதிரிப் பூக்கள் வாடும்படியாக காற்றானது உள்ளேபுக, நுண்ணிய இளமணலையுடைய குளிர்ந்த காட்டில் ஆலங்கட்டிகள் புரள, தலைவனை எண்ணித் தனித்திருக்கும் ஒருத்தி வருந்தும் படியாக வானமானது இடியிடித்து  மழையைப் பொழிந்தது.

உரை :- 
ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி.