இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 26 August 2021

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - ச.ந.இளங்குமரன்


தேனி மாவட்டத்தில் வரலாற்றுக் காலத்தில் குழந்தைநகர் என்றும், தற்காலத்தில் பெரியகுளம் என்றும் போற்றப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், அகமலையின் அடித்தளமாகவும் இருக்கின்றது.

பெரியகுளத்தை வளப்படுத்தும் வராக நதியின் தென்கரையில்   அமைந்திருக்கிறது அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில். 

இக்கோயில் சோழர்காலக் கட்டடக் கலைக்குச் சான்றாகவும்,  தேனிமாவட்டத்தின் பெரியகோயில் என்றும் பேசப்பட்டு வருகிறது. முழுமைக்கும் கற்களால் ஆன கோயில் இது. இக்கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

ஒரு காலத்தில்  சோழ நாட்டிற்கு உட்பட பகுதியாக பெரியகுளம் இருந்திருக்கிறது.  சோழ மன்னன் இராசேந்திர சோழன் என்பவன் ஆட்சி செய்து வந்தான், இராசேந்திரச் சோழன் ஒருமுறை பெரியகுளத்திற்கு அருகே உள்ள அகமலைக் காட்டுப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். வேட்டையின் போது அவன் எய்த அம்பு ஒன்று, குட்டிகளை ஈன்றிருந்த பன்றியின் மீது பட்டதல்  பன்றி இறந்து போனது. தன் தாயை இழந்த பன்றிக் குட்டிகள் பசியால் துடித்தன. பசிக்குப் பால் கிடைக்காமல் சத்தமிட்டன. 

பன்றிக் குட்டிகளின் கதறலைக் கண்ட மன்னன், ‘தாய்ப் பன்றியைக் கொன்று, அதன் குட்டிகளுக்குப் பால் கிடைக்காமல் செய்து விட்டோமே’ என்று மனம் வருந்தினான்.

இந்தச் சூழலில்  அந்தப் பன்றிக் குட்டிகளின் மேல் இரக்கம் கொண்ட குன்றக் கடவுள் குமரன் அவ்விடத்தில் தோன்றி, பன்றிக்குட்டிகளின்  பசியைப் போக்கினார். குட்டிகளின் மேல் பரிவு கொண்ட குமரக் கடவுளின் கருணையைக் கண்ட மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்ற தனது பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கு அருளிய முருகப்பெருமானின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், அகமலையின் கீழ் தரைப்பகுதியில் புதிய கோயில் ஒன்றைக் கட்டினார்.

அந்த ஆலயத்தில்  சிவபெருமான், மலைமகள் (பார்வதி) ஆகியோருடன் முருகப்பெருமானையும் சேர்த்து மூன்று தெய்வங்களை முதன்மையான தெய்வங்களாக்கி வழிபட்டான் என்று இக்கோயில் அமைக்கப்பட்ட தல வரலாறு சொல்கிறது.

அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் இக்கோயில் குறித்த சிறப்புனைப் பாடியுள்ளார். 

இராசேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்தக் க இக்கோயிலில், மூலவராக இறைவன் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரை ‘இராசேந்திர சோழீசுவரர்’ எனும் பெயரில் வழிபடுகிறார்கள். அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் தனித கருவறையில் இருக்கிறார். மற்றொரு கருவறையில் முருகப்பெருமான் ஆறு முகங் களுடன் ‘பாலசுப்பிரமணியாக’ வள்ளி-தெய்வானை யுடன் சேர்ந்து அருள்காட்சி தருகிறார்.

இந்தக் கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரையிலும், நேரெதிராகப் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் இருக்கின்றன. காசிக்கு அடுத்ததாக இங்கு மட்டுமே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பயணிக்கிறது என்கின்றனர். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், பெரியகுளம் முருகப் பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

திருமணத்தடை உள்ளவர்கள், வராக நதியில் நீராடி, பின்னர் கோவிலுக்குச் சென்று, இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் அவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும். இதே போல், குழந்தைப்பேறு வேண்டும் கணவன் - மனைவி இருவரும் இங்கு நீராடிவிட்டு, கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பெரியகுளம் மக்களிடையே பேச்சு வழக்காக இருக்கிறது.

No comments:

Post a Comment