இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 19 December 2020

வல்லினம் மிகுதலும், மிகாமையும்.

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

தமிழில் இரு சொற்கள் ஒன்றுடன் ஒன்று என்று புணர்ச்சி என்று குறிக்கப்படுகிறது.

புணர்ச்சி இலக்கணத்தைச் செம்மையாகத் தெரிந்து கடைப்பிடித்தல் வேண்டும். அல்லாக்கால் ஒலிநயமுங் கெடும்; பொருள் மயக்கமும் உண்டாகும்.

வாழைப் பழத்தை 'வாளப்பளம்' என்பது போலவே வாழை பழம் என்பதும் பிழையானது; நகைப்புக்கு உரியது

'கலைக் கழகம்' என்று வல்லெழுத்து மிகுந்திருந்தால்தான் கலை வளர்க்கும் கழகமாக அது தலைநிற்கும்; 'கலை கழகம்' என்றால் அது கலைந்து போகும் கழகமாக நிலை குலையும்

வேலை கொடு' என்றால் செய்வதற்கு ஏதேனும் வேலை (பணி) கொடு என்றும் வேலைக் கொடு' என்றால் போர்க்கருவியாகிய வேலைக் கொடு என்றும் பொருள்.

இவ்வேறுபாடுகளை எண்ணிப் பாருங்கள்.

இனி புணர்ச்சிக்குரிய இரு சொற்களுள் முதலில் நிற்பது நிலைமொழி என்றும், அடுத்து வருவது வருமொழி என்றும் வழங்கப்படும்.

நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில், நிலைமொழியை யொட்டி, க், ச், த், ப் என்னும் வல்லின ஒற்றெழுத்துகளைச் சேர்த்து எழுதுதலே வலிமிகுதல் - வல்லெழுத்து மிகுதல் என்று குறிப்பிடப்படுகின்றது.

நிலைமொழியைப் பொறுத்தவரை உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளில் 'ய், ர்,வ், ழ் என்பவற்றையும் இறுதியாகக் கொண்ட சொற்கள் இங்கு நமக்குப் போதுமானவை.

வருமொழியில் 'க், ச், த், ப்' என்னும் எழுத்துகளை முதலிற் கொண்ட சொற்களை மட்டும் நாம் எடுத்துக்கொண்டால் போதும்.

க்” என்பது ‘க, கா, கி, கீ' முதலான அவ்வரிசை உயிர்மெய் எழுத்துகள் அனைத்தையும் குறிக்கும் 'ச், த், ப்' ஆகிய எழுத்துகளுக்கும் அப்படியே கொள்க.

2) பசுமைப் புரட்சி

'பசுமை' என்பது ஒரு நிறத்தின் பெயர். நிறம், குணம், அளவு, சுவை, வடிவம், தன்மை ஆகியன பண்புகள் ஆகும்

பண்புப் பெயர்கள், பசுமை, நன்மை சிறுமை, இனிமை, தண்மை என்பனவற்றைப் போல் பெறும்பாலும் 'மை' என்னும் இறுதிநிலை பெற்றும், நீலம் கசப்பு என்பவற்றைப் போல் சிறுபான்மை 'மை' இறுதி பெறாமலும் வரும்.

பண்புப் பெயர்கள் பண்பைக் கொண்டுள்ள வற்றின் (பண்பியின்) பெயர்களோடு சேரும் போது 'பசுமையாகிய புரட்சி' என்பது போல் நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் 'ஆகிய' என்னும் இடைச்சொல் (பண்புருபு) இடம் பெறுதல் வேண்டும்.

இப் பண்புருபு (ஆகிய) மறைந்து நின்று பொருள் கொடுப்பது பண்புத் தொகை எனப்படும்

பண்புத் தொகையில் வல்லெழுத்து மிகும்.

எ-டு :
இளமைக் காலம்
உண்மைக் கதை
கருப்புக் கொடி
சிவப்புச் சட்டை
புதுமைப் பெண்
முதுமைப் பருவம்
வெள்ளைத் தாள்
இனிப்புப் பண்டம்

3-வல்லெழுத்துகளாகிய க ச த ப மிகும் இடங்கள் மெய் எழுத்துப் பதினெட்டு, இவற்றுள் க்ச்ட்த்ப்ற் ஆகிய
ஆறும் வல்லின மெய்களாம். ஆறு வல்லின மெய்களும் பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து (6x12=72) எழுபத்திரண்டு வல்லின உயிர்மெய் எழுத்துகள் தோன்றும் மெய் எழுத்துகளும், உயிர்மெய் எழுத்துகளில் "ட" வரிசை எழுத்துகளும் "ற" வரிசை எழுத்துகளும் தமிழ்ச் சொற்களின் முதல் எழுத்தாக வாரா. அந்த, இந்த, எந்த அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி, அவ்வகை இவ்வகை, எவ்வகை, அவ்வித, இவ்வித, எவ்வித, அதற்கு இதற்கு, எதற்கு, அத்துணை, இத்துணை, எத்துணை, ஆண்டு ஈண்டு, யாண்டு, ஆங்கு, ஈங்கு. யாங்கு, இனி, தனி, முழு திரு. அரை, மீதி, பாதி, நடு, பொது, அணு, மற்று, மற்ற மற்றை முதலிய சொற்களின் பின் கசதப மிகும்.

அ) அ, இ,உ ஆகிய சுட்டெழுத்துகளின் பின் கசதப மிகும்.

அ +காலம் = அக்காலம் -
அ +சிலம்பு = அச்சிலம்பு
அ +தளிர் = அத்தளிர்
அ +பெண் = அப்பெண்
அ + காலம் = அக்காலம்
இ +சிலம்பு = இச்சிலம்பு
இ + தளிர் = இத்தளிர்
இ + பெண் = இப்பெண்
உ + பக்கம் = உப்பக்கம்

என்னும் சுட்டெழுத்து இந்நாளில் வழக்கில் இல்லை.

ஆ) இந்த, எந்த - என்னும் சொற்களின் பின் கசதப மிகும்.

அந்த + காலம் = அந்தக்காலம்
அந்த + சிலம்பு = அந்தச்சிலம்பு
அந்த + தளிர் = அந்தத்தளிர்
அந்த + பெண் = அந்தப்பெண்
இந்த + கழுகு = இந்தக்கழுகு
இந்த + சட்டம் = இந்தச்சட்டம்
இந்த + தட்டு = இந்தத்தட்டு
இந்த + பெட்டி = இந்தப்பெட்டி

(வல்லினம்...தொடரும்...)

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர் - வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

No comments:

Post a Comment