இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 25 December 2020

வடலூர் வரலாறு கற்காலம் முதல் தற்காலம் வரை.

நூல் : வடலூர் வரலாறு (கற்காலம் முதல் தற்காலம் வரரை)
நூல்வகை : ஊர்வரலாறு.
நூலாசிரியர் : முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
பதிப்பகம் : வெர்சோ பேஜஸ் - பன்முகமேடை.
விலை : 200
நூலின் பக்கங்கள் : 160

"ஒரு நாட்டின் வரலாறு கிராமத்தில் இருந்தே துவங்குகிறது என்ற பொருண்மை வாதத்தின் அடிப்படையில் மேற்கத்திய வரலாற்றாளர்கள் ஊரக தொல்லியல் குறித்த ஆய்வில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அரசு உருவாக்கத்தின் ஆணிவேர் தொல்குடி களிடமிருந்தே துவங்கப்படுவதை சங்க இலக்கியங்கள் ஊடாக அறியமுடிகிறது. அத்தொல்குடிகளின் வாழ்விடமே ஊர் உருவாக்கத்தின் திறவுகோலாகும். இந்நோக்குருவின்  தாக்கத்தை வடலூர் வரலாற்றில் காணமுடியும். இந்நூல் வடலூரைச் சுற்றி நடைபெற்ற முந்தைய கால அகழாய்வுச் சான்றுகள், நேரடிக்கள ஆய்வில் திரட்டப்பட்ட விபரங்கள், கல்வெட்டுத் தரவுகள், புவிசார் தகவல்கள், சமகால இலக்கிய மற்றும் தனிமனித ஆவணக் குறிப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டதாகும்.வடலூரை மையமாகக் கொண்டு மாவட்டத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுப் பின்புலத்தையும்  வெளிப்படுத்தும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது" என்பது இந்த நூலாசிரியர் சிவராமகிருஷ்ணன் அவர்களின் நூலாசிரியர் உரையாக இருக்கிறது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திராவிடமணி அவர்கள் வடலூரில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிருத்துவம், இஸ்லாம் போன்ற மதங்களின் தாக்கம் பற்றியும், அம்மதங்கள் எப்படி மனிதத்தையும் நல்லிணக்கத்தையும் சிறப்பாக ஏற்படுத்தி வருகின்றன என்பதையும்  இந்நூல் வரலாற்றுச் சான்றுகளின்படி விவாதிப்பது சிறப்பு.  கள ஆய்வில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய சான்றுகள், முந்தைய அகழாய்வுச் சான்றுகள், இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள், சிற்பங்கள், வெளிநாட்டினரின் குறிப்புகள் போன்ற தரவுகளைக் கொண்டு வடலூர் வரலாறு கட்டமைக்கப்பட்டதில் ஆய்வாளரின் பன்முகத்தன்மை வளரும் ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நூல் 9 இயல்களைக் கொண்டது. முதலாவது இயலில் முன்னுரையாக கட்டப்பட்டு இருக்கிறது. இதில் நிலவியல் அமைப்பு, வடலூர் அமைவிடம், வடலூர் பெயர் காரணம் ஆகியவை குறித்த முன்னோட்டம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டாவது இயல் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை விளக்குகிறது. அதாவது கற்காலம், பழைய கற்காலம், புதிய கற்காலம், நுண்கற்காலம், வெண்கலக் காலம், பெருங்கற்காலம், முதுமக்கள் தாழி, வடலூரில் இரும்புக் காலப் பண்பாடு,  இரும்புக் காலத்தைச் சார்ந்த பானை ஓடுகள், குறியீடுகள் போன்றவைகள் விளக்கப்பட்டுள்ளன.

பழைய கற்காலம் முதல் பழங்கற்காலம், இடைப் பழங்கற்காலம் கடைப் பழங்கற்காலம் என மூன்று பிரிவுகளைக் கொண்டதாகும். குறிப்பாக பழைய கற்காலம் கிமு இரண்டு லட்சம் முதல் கி-மு பத்தாயிரம் வரை தமிழகத்தில் நிலவியதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இக் காலத்தைச் சார்ந்த மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் தமிழகத்தின் வடபகுதியில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு தெற்கே உள்ள அரியலூர் போன்ற மாவட்டங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேபோன்று கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஓடப்பன் குளம் சின்ன ஓடையில் பழங்கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் வாயிலாக கடலூர் மாவட்டத்தின் தொல்லியல் சிறப்பும் பழைய காலத்தில் இருந்தே தொடங்குகிறது எனலாம்.

கண்டரக்கோட்டை

வடலூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் பண்ருட்டிக்கு அருகே கண்டரக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள அரசியப்பன் கோயில் எதிரே சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கோட்டைமேடு என அழைக்கப் படும் பண்பாட்டுப் பகுதி ஒன்று உள்ளது. இப்பருதியிலிருந்து 21 செமீ நீளமும், 9 செ.மீ அகலமும், 19 செமீ சுற்றளவும் கொண்ட கைகோடரியும், 15செமீ நீளமும், 8 செமீ அகலமும், 16 செமீ சுற்றனவும் கொண்ட சிறிய வகை கைக் கோடரி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இக் கருவிகளின் கைப் பிடியானது கூர்மையானதாகவும், வெட்டும் பகுதி பட்டையாக செதுக்கப்பட்டு கூர்மைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் சுமார் 9000 ஆண்டுகள் பழமையானதாகும்.

மூன்றாவது இயலில் வரலாற்றுக்காலம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.  சங்ககாலம்

சங்க காலம்

சங்ககாலம் என்பதன் காலவரையறை குறித்து வேறுபட்ட கருதுகோல்கள் வரலாற்று அறிஞர்களிடையே இருப்பினும், பெரும் பான்மையான அறிஞர்கள் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்ததையே சங்ககாலம் என்று கூறுகின்றனர். சங்ககாலத்தில் தமிழகம் இலக்கிய வளர்ச்சியில் அபார உயர்வை எட்டியது. மேலும் உலக நாடுகளுடன் ஏற்பட்ட வணிக தொடர்பியல் காரணமாக பொருளாதாரத்தில் தன்னிறைவை பெற்று பொற் காலமாகத் திகழ்ந்தது. இக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரங்களான மதுரை, உறையூர், கரூர், கொற்கை, அழகன் குளம், நாகைப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு, கொடுமணல் பொருந்தல், கீழடி போன்ற இடங்களில் கிடைத்த அகழாய்வு தரவுகளின் வாயிலாக சங்ககாலப் பண்பாட்டின் கூறுகளின் உயர்வைப் பற்றி விரிவாக அறிய முடிகிறது

சங்ககாலப் பண்பாடானது கிரேக்க, ரோம் மற்றும் எகிப்திய நாகரிகங்களுக்கு இணையானது என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இப்பண்பாட்டின் தாக்கம் கடலூர், பண்ருட்டி குறிஞ்சிப்பாபாடி, சிதம்பரம், விருத்தாசலம் போன்ற வட்டங்களுக்கு உட்பட்ட ஊர்களான காரைக் காடு, குடிகாடு, தியாகவல்லி, அன்னப்பன் பேட்டை, ஆண்டார்முள்ளிப்பள்ளம், பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம் மணிக்கொல்லை, தர்மநல்லூர், வடஹரி ராஜபுரம், மருங்கூர், குருவப்பன் பேட்டை, கொண்டாரெட்டிப்பாளையம், அவியனூர், மாளிகைமேடு செங்கமேடு போன்ற ஊர்களில் நிலைபெற்று இருந்துள்ளதை கள ஆய்வு மற்றும் அகழாய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக இப்பண்பாடானது கடலூர் மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டிய பகுதி களில் மட்டுமன்றி மாவட்டத்தின் உட்பகுதியிலும் அதன் தாக்கம் விரவிக் காணப்படுவது குறிபிடத்தக்க ஒன்றாகும்.

இவ்வியலில் காரைக்காடு என்னும் கிராமம் வடலூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் வங்கக்கடல் அருகே அமைந்துள்ளது. இங்கு 1966ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் கிடைத்த மட்கலங்கள்,  மணி வகைகள், ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 

காரைக்காடு அருகே உள்ள குடிகாடு என்ற இடத்தில் 1988இல் நடைபெற்ற அகழாய்வில் காணப்பட்ட மண் அடுக்குகள், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மேற்கே 24 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செங்கமேடு அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகள், செங்கற்கள் போன்றவைகள், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 1999ஆம் ஆண்டு நடைபெற்ற அகழாய்வில் அரிட்டைன் வகை மட்கலங்களின் உடைந்த பாகங்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி இப்பகுதி மக்கள், உரோம் நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்ததை உறுதிப்படுத்துகின்றன. என்கின்றார் தொல்லியல் ஆய்வாளர்கள்.

மேலும் மருங்கூர் என்ற ஊரில் நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் உட் பகுதியில் மக்கள் அ-தி(தீ)-ய-க-ன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான எழுத்துக் குறியீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

வடலூர் பகுதியில் வண்ண மணி தொழிற்சாலைகள் இருந்ததற்கான தொல்லியல் ஆவணங்கள் கிடைத்துள்ளன என்பதனை மூன்றாவது இயலில் உறுதிப்படுத்துகிறார்.

நான்காவது இயலில் பல்லவர் காலம் தொட்டு விஜயநகர நாயக்க மன்னர்களின் காலம் வரையில் உள்ள காலகட்டத்தில் இடைக்காலம் என்று வரையறை செய்கிறார். இக்காலத்தில்தான் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் அபார வளர்ச்சியை பெற்றிருந்தது. குறிப்பாக இலக்கியம், நிர்வாகக் கட்டமைப்பு, சிற்பக்கலை, கட்டடக்கலை, போன்றவற்றில் புதிய மறுமலர்ச்சியை பெற்றது. மக்கள் வாழ்விடங்கள் நகரம், ஊர், மங்கலம், தனியூர், பாக்கம், மணிக்கிராமம் என்று பரிணமித்தது இக்காலத்தில்தான். இடைக் காலத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கு கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், வெளிநாட்டினர் குறிப்புகள் போன்றவற்றின் மூலம் விரிவாக அறிய முடிகிறது. வடலூர் வரலாற்றை கட்டமைப்பதற்கு இடைக்கால சான்றுகள் பெரிதும் துணை நிற்கின்றன என்று சொல்லும் நூலாசிரியர் இப்பகுதியில் பல்லவர் காலம், சோழர் காலம், சோழர்களின் ஆட்சியில் கடலூர் மாவட்டம், சோழர்களின் ஆட்சியில் வடலூர், மற்றும் சிவன் கோயில், துர்க்கை சிலை, சிவலிங்கம்  கட்டடப் பகுதிகள் போன்றவற்றை ஆய்வு செய்து வடலூரில் தொன்மையை நிறுவுகிறார்.

அதாவது பல்லவர் காலம் முதல் பாளையக்காரர்கள் காலம் வரை இப்பகுதியில் நடந்த நிகழ்வுகளைத் தொல்லியல் தரவுகளோடு, அரசுகளுக்கு இடையே நடந்த மோதல், இப்பகுதியில் வெட்டப்பட்ட ஏரிகள், குளங்கள், நன்செய் புன்செய் நிலங்கள்
பற்றிய தகவல்கள், மக்களின் வாழ்வியல் சூழல், பண்பாட்டுச் சூழல் என பலவும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

ஐந்தாவது இயலில் ஐரோப்பியர் வருகை குறித்தும் சுதந்திரப் போராட்டம் குறித்தும் இந்த மண்ணில் தோன்றிய சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கடலூர் மண்ணுக்கு வந்து சென்ற மகாத்மா காந்தியடிகள்,  சுதந்திர போராட்ட பெண் போராளி வீரமங்கை அஞ்சலையம்மாள்,  ஆஷ் துரையைக் கொல்வதற்கு புதுவையில் துப்பாக்கிப் பயிற்சி முடித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து புறப்பட்ட வாஞ்சிநாதன் போன்ற பல பேருடைய வரலாறு இங்கே பேசப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிறந்த சமூக மற்றும் சமய சீர்திருத்த வாதிகளை உலகிற்கு அளித்த பெருமைக்குரியது அப்பர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், திலகவதியார், ஞானியார் சுவாமிகள், வேதாந்த தேசிகர் போன்ற சமூக சமய சீர்திருத்த வாதிகள் வாழ்ந்தது இந்த மாவட்டத்தில்தான். அந்த வரிசையில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய வள்ளல் இராமலிங்க அடிகளார் மிகச் சிறந்த சமூக மற்றும் சமய சீர்திருத்த வாதியாவார் என்பதோடு வடலூர் என்பதன் பழைய வரலாற்றுப் பெயர் பார்வதிபுரம் என்பதையும், முதன்முதலில் அதனை "வடலூர்" என்று வள்ளலார் பதிவு செய்ததும் மற்றும்  பல்வேறு வரலாற்றுச் செய்திகளும் இவ்வியலில் பதிவுசெய்யப்பட்டு இருப்பதோடு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கும் சன்மார்க்க நெறிக்கும் உள்ள நெருக்கமான தொடர்பினை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலாசிரியர் ஆறாவது இயலில் சமயம் குறித்து பேசுகிறார். பண்டைய காலம் தொட்டு தற்காலம் வரையிலான  சமய வரலாற்றினை இந்த இயல் விளக்குகிறது. சமணம், பௌத்தம், சைவம், வைணவம், கிருத்துவம், இஸ்லாம், போன்ற சமய நெறிகள் இந்த மண்ணில் தழைத்தோங்கி வளர்ந்ததற்கான காரணங்களை வரலாற்று தரவுகளோடும்,  தொல்லியல் தரவுகளோடும் விளக்குகிறார்.

தொண்டை நாடு புதுக்கோட்டை மதுரை போன்ற பகுதிகளில் சமணசமய தடயங்கள் அதிகம் இருப்பதற்கான தொல்லியல் சான்றுகளை கொடுக்கும் நூலாசிரியர் சிவராமகிருஷ்ணன் பல்வேறு சமய நிலைகள் கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்ததற்கான காரணங்களை கடலூர், திருப்பாதிரிப்புலியூர், குமாரப்பேட்டை, கணிசப்பாக்கம், திருவதிகை, கீழ்காவனூர், எனதிரிமங்கலம், முகாசபரூர் போன்ற பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிலை வடிவங்களைக் கொண்டு நிறுவுகிறார்.

ஏழாவது இயலில் நாணய சான்றுகள் விளக்கப்பட்டுள்ளன. சங்ககால நாணயம், ரோமானிய நாணயம், பல்லவர் நாணயங்கள், முதலாம் மகேந்திரவர்மன் நாணயம், இரண்டாம் நரசிம்மவர்மன் நாணயம், பெயரில்லாத பல்லவர் நாணயம், முதலாம் ராஜராஜ சோழனின் செப்புக்காசுகள், வரதராஜன்பேட்டை தங்கப்புதையல், சோழர்கால அய்யனார் கோயில் தங்கப் புதையல்,  கங்கர்கள் கால பொற் காசுகள், விஜயநகர நாணயங்கள் போன்றவற்றின் ஆய்வுகள் ஏழாவது இயலில் கையாளப்பட்டுள்ளன.

எட்டாவது இயல் இந்த நூலின் ஏழு இயல்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாக அமைந்திருக்கிறது.

ஒன்பதாவது இயலாக பிற்சேர்க்கை என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப் பிற்சேர்க்கையில் கடலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருள் ஆவணங்கள் தொடர்பான ஒளிப்படங்கள் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டிருக்கிறது.இது இந்நூலுக்கான  தனிச்சிறப்பாகும். இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல். நிறைந்த தொல்லியல் சான்றுகளும், வரலாற்றுச் செய்திகளும் அடங்கிய அற்புதமான நூல். நூலை எழுதிய நூலாசிரியருக்கும், நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவனர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
& ஒருங்கிணைப்பாளர், வாசிக்கலாம் வாங்க தேனி.

Wednesday, 23 December 2020

தமிழ் ஆட்சிமொழி வாரம்

*தமிழ் ஆட்சிமொழி வாரம்*.

*தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை தேனி மாவட்டம், வையைத் தமிழ்சங்கம் தேனி, சங்கத்தமிழ் அறக்கட்டளை தேனி, பசுமை இயக்கம் உத்தமபாளையம்* உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழ் ஆட்சிமொழி வார நிகழ்வை கொண்டாடின. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் *பெ.இளங்கோ* அவர்கள் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஆணையின்படி வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழில் பெயர்ப்பலகை இல்லாத வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்கக் கோரியும், தேனி மாவட்டம் தேனி நகர்ப்புறத்தில் உள்ள ஒவ்வொரு வணிக நிறுவனங்களுக்கும் சென்று, நிறுவனங்களின் மேலாளர்கள், மற்றும் உரிமையாளர்களை நேரில் சந்தித்து தமிழ் வளர்ச்சித் துறையின் சுற்றறிக்கை மற்றும் தமிழ்நாடு அரசாணை நகலையும் கொடுத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழில் மாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிகழ்வில் தமிழ்நாடு ஆரசின்  *தமிழ்ச்செம்மல்* விருதுபெற்ற அண்ணன் *இராஜதாசன்* அவர்களுக்கு தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் வாழ்த்தும், நிகழ்வில் திரளாகக் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வின் நிறைவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்ற *அம்மா மினி கிளினிக்* என்பதற்கு *அம்மா மருத்துவக் குடில்* என அழகுத் தமிழில் பெயர்சூட்டலாம் என புலவர் *இளங்குமரன்* முன்மொழிய  அனைத்துத் தமிழமைப்புகளைச் சார்ந்தவர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் செய்யப்பட்டது.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்.
நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Tuesday, 22 December 2020

எ என்னும் வினா எழுத்தின் பின் வல்லினம் மிகும்.

வல்லினம் மிகுதலும் மிகாமையும்...5

எ). எ - என்னும் வினா எழுத்தின் பின் கசதப மிகும்.

எ+காலம் = எக்காலம்?
எ + சிலம்பு = எச்சிலம்பு
எ+திசை = எத்திசை -
எ + பாடல் = எப்பாடல்?

ஏ) "எங்கு" எனப் பொருள் தரும் யாங்கு என்னும் சொல்லின் பின் கசதப மிகும்.

யாங்கு + குத்தினான் = யாங்குக் குத்தினான்
யாங்கு + சிக்கினான் = யாங்குச் சிக்கினான்
யாங்கு + தங்கினான் = யாங்குத் தங்கினான்
யாங்கு + பதித்தான் = யாங்குப் பதித்தான்

ஒ) எந்த இடம் எனப் பொருள் தரும் யாண்டு என்னும் சொல்லின் பின் கசதப மிகும்.

யாண்டு + கட்டினர் = யாண்டுக் கட்டினர்
யாண்டு + சிதைத்தனர் = யாண்டுச் சிதைத்தனர்
யாண்டு + தகர்த்தனர் = யாண்டுத் தகர்த்தனர்
யாண்டு - பெயர்த்தனர் = யாண்டுப் பெயர்த்தனர்.

ஓ) அவ்வகை, இவ்வகை, எவ்வகை ஆகியவற்றின் பின் கசதப மிகும்.

அவ்வகை+கலை = அவ்வகைக் கலை
அவ்வகை + செயல் = அவ்வகைச் செயல்
அவ்வகை + தாகம் = அவ்வகைத் தாகம்
அவ்வகை + பாடல் = அவ்வகைப் பாடல்
எவ்வகை + காட்சி = எவ்வகைக் காட்சி?
எவ்வகை + சீற்றம் = எவ்வகைச் சீற்றம்?
எவ்வகை + தேடல் = எவ்வகைத் தேடல்?
எவ்வகை + பயிற்சி = எவ்வகைப் பயிற்சி?

இவ்வகை + கிணறு = இவ்வகைக் கிணறு
இவ்வகை + சான்று =  இவ்வகைச் சான்று
இவ்வகை + தேற்றம் = இவ்வகைத் தேற்றம்
இவ்வகை + பெட்டி = இவ்வகைப் பெட்டி

ஐ) அவ்வித, இவ்வித, எவ்வித - இவற்றின் பின் கசதப மிகும்.

அவ்வித + கட்டமைப்பு = அவ்விதக் கட்டமைப்பு
அவ்வித + சிந்தனை = அவ்விதச் சிந்தனை
அவ்வித + தேடல் = அவ்விதத் தேடல்.
அவ்வித + போக்கு = அவ்விதப் போக்கு.
இவ்வித + கயிறு = இவ்விதக் கயிறு
இவ்வித + சிமிழ் = இவ்விதச் சிமிழ்
இவ்வித + தங்கம் = இவ்விதத் தங்கம்.
இவ்வித + பங்கு = இவ்விதப் பங்கு.
எவ்வித + காட்சி = எவ்விதக் காட்சி.
எவ்வித + சிலை = எவ்விதச் சிலை
எவ்வித + தவறு = எவ்விதத் தவறு.
எவ்வித + பலன் = எவ்விதப் பலன்.

       (வல்லினம்...தொடரும்..

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர் - வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Sunday, 20 December 2020

அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, போன்ற சொற்களின் பின் க ச த ப வல்லினம் மிகும்

வல்லினம் மிகுதலும், மிகாமையும். - 4.

ஆ) எந்த + காலம் = எந்தக்காலம்
எந்த + சிறுவன் = எந்தச்சிறுவன்
எந்த + தளிர் = எந்தத்தளிர்
எந்த +பையன் = எந்தப்பையன்

இ) அங்கு, இங்கு - என்னும் சொற்களின் பின் க ச த ப மிகும்

அங்கு+கண்டான் = அங்குக் கண்டான்
அங்கு + சென்றான் = அங்குச் சென்றான்
அங்கு+தங்கினான் = அங்குத் தங்கினான்
அங்கு+போனான் = அங்குப் போனான்
இங்கு+குத்தினான் = இங்குக் குத்தினான்
இங்கு+ சருக்கினான் = இங்குச் சருக்கினாள்
இங்கு + தூங்கினான் = இங்குத் தூங்கினான்
இங்கு +பாடினான் = இங்குப் பாடினான்

ஈ) ஆங்கு, ஈங்கு என்னும் சொற்களின் பின் கசதப
மிகும்.
ஆங்கு + கூடினர் = அங்குக் கூடினர்
ஆங்கு + சாத்தினான் = ஆங்குச் சாத்தினான்
ஆங்கு + தாவினான் = ஆங்குத் தாவினான்.
ஆங்கு + பதுங்கினான் = ஆங்குப் பதுங்கினான்

ஈங்கு + கடாசினான் = ஈங்குக் கடாசினான்
ஈங்கு + சாடினான் = ஈங்குச் சாடினான்
ஈங்கு + திருடினான் = ஈங்குத்திருடினான்
ஈங்கு + பகிர்ந்தான் = ஈங்குப்பகிர்ந்தான்

உ) அந்த இடம், இந்த இடம் எனப் பொருள் தருகின்ற ஆண்டு, ஈண்டு ஆகிய சொற்களின் பின் கசதப மிகும்.

ஆண்டு + கக்கினான் = ஆண்டுக் கக்கினான்
ஆண்டு + சாய்ந்தான் = ஆண்டுச் சாய்ந்தான்
ஆண்டு + துப்பினான் = ஆண்டுத் துப்பினான்
ஆண்டு + படைத்தான் = ஆண்டுப் படைத்தான்

ஈண்டு + கடந்தான் = ஈண்டுக்கடந்தான்
ஈண்டு + சென்றான்= ஈண்டுச்சென்றன்
ஈண்டு+ திருடினான் = ஈண்டுத்திருடினான்
ஈண்டு + படித்தான் = ஈண்டுப்படித்தான்
ஈண்டுக் + கடந்தான் = ஈண்டுக்கடந்தான்
ஈண்டு + படித்தான் = ஈண்டுப் படித்தான்

ஊ) அப்படி, இப்படி, எப்படி - என்னும் சொற்களின் பின் கசதப மிகும்.

அப்படி + கூறினான் =அப்படிக் கூறினான்.
அப்படி + செய்தான் = அப்படிச் செய்தான்.
அப்படி + திரும்பினான் = அப்படித் திரும்பினான்.
அப்படி + பணிந்தான் = அப்படிப் பணிந்தான்.
இப்படி + கதறினான் = இப்படிக் கதறினான்.
இப்படி + சீண்டினான் = இப்படிச் சீண்டினான்.
இப்படி + தொட்டான் = இப்படித் தொட்டான்.
இப்படி + பண்ணினான் = இப்படிப் பண்ணினான்.
எப்படி + குதித்தான் = எப்படிக் குத்தினான்.
எப்படி + சிணுங்கினான் = எப்படிச் சிணுங்கினான்.
எப்படி + தாக்கினான் = எப்படித் தாக்கினான்.
எப்படி + பதறினான் = எப்படிப் பதறினான்.
              (வல்லினம்...தொடரும்..

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர் - வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

கொலை வாளினை எடடா...

"கொலைவாளினை எடடா" எனது நூல் மதிப்புரை...

நன்றி

#இகரமுதல்வி #மாத #இதழ்.
ஆசிரியர் கவிஞர் #அ.#பாண்டியமகிழன்
பொறுப்பாசிரியர்
#எம்.#ஆ.#சி.#திருமுருகன்
நூல்மதிப்புரையாளர்
#திரு #விஜயலட்சுமி திருச்சி

"கொலை வாளினை எடடா"*

(ஆசிரியர்: புலவர். ச.ந. இளங்குமரன்)

கொலை வாளினை எடடா" என்ற தலைப்பிலேயே நம் நரம்புகள் வீறு கொண்டு எழுகின்றன. வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பாரதியின் வரிகளுக்கு உள்ள வீரியத்தை நூல் முழுதும் விதைத்துச் செல்லும் இந்தக் கவிஞரின் அற்புதமான கவிதை நூல் என கைக்கு வந்தது. நான் செய்த பாக்கியம் இதற்காக நான் மதிப்பிற்குரிய திருமுருகன் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எழுதுகோல் தன் கூரிய முனையால் அடிமைச் சங்கிலியைக் களைந்தெறிவது போன்ற அட்டைப்பட ஓவியம் என்னை அசையவிடாமல் செய்துவிட்டதென்றால், இதை எழுதிய புலவர் ஒரு தையற் கலைஞர் என்பது இன்ப அதிர்ச்சியைத் தந்துவிட்டது! நூற்றி இருபது பக்கங்களை இரண்டு மணிநேரத்தில் வாசித்து முடித்தது இதுதான் முதல் முறை வார்த்தைக்கு வார்த்தை பக்கத்திற்கு பக்கம் என்னைப் புரட்டிப்போட்டது கவிதைகளின் சாராம்சம்

"ஈன்று புறந்தருதல் என் தலைக்கடளே, சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" என்ற சங்ககாலப் பெண்கவிஞர் பொன்முடியார் கூற்றுக்கேற்ப முதல் இரண்டு கவிதைகள் தாய் மற்றும் தந்தைக்காக ஒதுக்கியிருப்பது சிறப்பு அன்னையைப் பற்றிக் கூறும்போது

*"வறுமைப் பட்டு வாடிய போதும்
பெருமை குறையா தென்னை வளர்த்தாள்!
காற்றில் மழையில் தன்னைக் கரைத்தாள்!
கற்றோர் அவைக்கு என்னைக் கொடுத்தாள்"

என்ற வரிகள் மரபுக்கவியின் புலமையைப் பேச புரட்சிக்கவி பாரதி தாசனின் பாடல் வரியைத் தலைப்பாக்கியவரின் கவதைகளில் புரட்சிக்குப் பஞ்சமில்லை. பல கவிதைகள் பாடலாகப் பாடக்கூடிய வகையில் சந்தமாய் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு

"ஏடா! தமிழ்மகனே என்றுவுன் விழிகள் உறக்கந் தொலைக்கும்?
ஓடாய் கிடக்கும் வாழ்வில் எப்போதுதான் ஒளி பிறக்கும்?

இனத்தை மீட்க நினைத்தா ரில்லை இழிவைப் போகாத துணிந்தா ரில்லை...

இற்றைக் தமிழன் இவனே ஏற்றைக் குணர்வான் தனையே

வந்தவரை வாழ வைத்து வாழ்விழந்து போனவன் சொந்தமண்ணில் ஏதிலியாய் நொந்து நொந்து வாழ்பவன் கொஞ்சு தமிழ் மொழிமறந்து கொள்கையற்றுப் போனவன்.

என்ற கவிதைகள் பல தலைப்புகளில் கவிஞரின் தீரா மொழிப் பற்றையும், நாட்டுப் பற்றையும் பறைசாற்றுகின்றன.

மூன்று வரிகளில் நறுக்குத் தெறித்தாற்போல் கவிதைகளை "நறுக்குகள்" என்றே தனியாகத் தலைப்பிட்ட கவிஞரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

"ஒரு நாள் வாழ்க்கை வெளிச்சத்தைத் தேடியது
ஈசல்"

"எல்லோரும்
நல்லவரே
விழிக்கும் வரை"

"வீட்டில் உலை காய தோட்டத்தில் காய்ந்தான் தொழிலாளி"

வெண்பாக்களை இயற்றும் இவர் தையல் தொழில் செய்து கொண்டே கவியரங்குகளில் கவிதைகள் வாசித்து, சிற்றிதழ்களில் படைப்புகள் தந்து தன் மொழியறிவை வளர்த்துக்கொள்ள நிறைய வாசித்திருக்கிறார் என்பதை இவரின் பன்முகம் கண்டு பெருமிதமடைந்தேன்.

"பன்மொழிகள் கற்றறிந்தும் பைந்தமிழே இன்மொழியாம்

நன்றிது தேர்ந்திடுவீர் நானிலத்தீர் என்றார்த்தே பாரதத்தை மீட்டெடுக்க பா"யாத்த போர்க்குரலோன் பாரதியின் பண்பினைப் பார்"!

சமூக அக்கறை கொண்ட இவரின் கவிதைகள் சமூகத்திற்கு சாட்டையடியே!

"மகப்பேற்றை மண்ணிழக்க விதைக்கப்படுகிறது வேதியல் உரங்கள்!"

புதுக்கவிதைகள் பலவற்றில் இவரின் ஆளுமை அசர வைக்கிறது.

"ஆடுமாடுகள் அன்பளிப்பு அரசின் திட்டம்!
எங்கே போவது புல்லுக்கு?
பயனாளி"

"எல்லாம் சரிதான் வயதான காலத்தில் வறட்டு இருமலுக்கு தண்ணீர் தருவது யார்?"

"நாதியற்றவர்களாய் பணத்திற்காய் பாசம் தொலைத்தவர்கள்"

சத்தமின்றி சமூக சேவைகள் செய்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வளம்பரமேதுமின்றி பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவர் வாசகர் மனதில் இமையமாய் உயர்ந்து நிற்கிறார்! பதினெட்டு ஆண்டுகளாக திருக்குறள் பேச் சுப் போட்டி கட்டுரைப் போட்டிகள் வைத்துக்கொண்டிருக்கும் இவர் 180க்கு மேற்பட்ட குறள் வழித் திருமணங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார்.

பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழறிஞர்களுக்கு சிறப்பு செய்து விருதுகள் வழங்கி வரும் இவர் கவிதை, கட்டுரை, தமிழ் ஆய்வு நூல்கள் பலவற்றை எழுதியிருப்பது வியப்பிலும் வியப்பே!

இந்நூல் எல்லோரும் படிக்க, பரிசளிக்க, பயன்பெற அத்தனைத் தகுதிகளும் பெற்று விளங்குகிறது, நூல்கள் பெற அணுகவேண்டிய தொடர்பு எண். 95001 72822.

தனலெட்சுமி திருச்சி 8526999595