இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 24 July 2024

செந்தமிழ் அந்தணரும் செழுந்தமிழும்

*செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரும் செழுந்தமிழும்*

புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்.
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

"அரசினர் கல்லூரி எதிலும் இளங்குமரனார் போல் அகரமுதலி பணியாற்றுவார் எவருமில்லை, ஆங்கிலப் பெரும் பட்டம் பெற்ற பண்டாரகருள்ளும் அவர் போல் இலக்கணம் கற்றாரும், ஆய்ந்தாரும் ஒருவரும் இல்லை" என்று மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பாராட்டப்பட்ட செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்கள் அன்பும் அமைதியும் அடக்கமும் கொண்டவர். எளிமையும் இனிமையும் ஒருங்கே அமையப்பெற்றவர். நெஞ்சில் உறுதியும், நேர்மைத் திறனும், நுண்மான் நுழைபுலம் மிக்க ஆய்வறிவும், அரிமா நோக்கும் கொண்டு பாவாணராய் வாழ்ந்த பாவாணர். 


சுமார் 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 4800க்கும் மேற்பட்ட குறள்நெறித் திருமணங்களை நிகழ்த்தியவர். பத்துக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களை மீட்டெடுத்தவர். எழுத்துப் பணிக்காக நாள்தோறும் 18 மணி நேரம் செலவு செய்தவர் செந்தமிழந்தணர் அவர்கள். ஐயாவின் ஆய்வுகள் அளப்பரியன. அவர் தமிழுக்கும் தமிழருக்கும் வாய்த்த தமிழ்க் கருவூலம் அவர். உலகத் தமிழர்களின் ஒப்பிலாச்ச் சொத்துமவர். பாவணரது நேரிய நெறியில் நின்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அவர் ஆக்கித் தந்திருக்கின்ற ஆய்வுகள் பற்பலவாம். 

சான்றாக செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் பத்துத் தொகுதிகள். இந்நூல்களின் வழியாக சுமார் 8000 சொற்களுக்கு வேரும் விரிவும் கற்றறிந்த எவரும் மறுக்க இயலாக் கோணத்தில் நமக்குக் கொடையாக வழங்கியிருக்கிறார். 

எமது ஆசான் செந்தமிழ் அந்தணரோடு 1997 முதல் செந்தமிழ் அந்தணரின்நிறைவுக் காலம்வரை அவரைத் தொடர்ந்திருக்கிறேன். அவரது பல விழாக்களில் கலந்திருக்கிறேன். சில கூட்டங்களை நடத்தியும் இருக்கிறேன். தன் வாழ்நாளில் எனக்குத் தெரிந்த வரையில் நேரம் தவறாமையைக் கடைப்பிடித்தவர் அவரைப்போல் இதுவரையில் யாரையும் நான் கண்டதில்லை.

ஐயா அவர்களது 75 ஆம் பிறந்தநாள் விழா திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடக்கிறது. இவ்விழாவிற்கு தமிழண்ணல் அவர்கள் தலைமை தாங்குகிறார். அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு அந்தணரை வாழ்த்தி மகிழ்கின்றனர். இப்பிறந்தநாள்  விழாவில் தான் ஐயா எழுதிய 75 நூல்கள் வெளியிடப்பட்டன. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு அறிஞருக்கும் இதுவரையில் நடக்காத நிகழ்வு. இந் நூல்களை தமிழ் மண் பதிப்பகம் வெளிக்கொண்டு வந்தது.

இந்நிகழ்வில் தலைமையேற்றிருந்த தமிழண்னால் அவர்கள் தன்னுடைய தலைமை உரையில் "என் இனிய இளவல் இளங்குமரனார், என்றாலும் அவர் தாழ் பணிந்து வணங்குகிறேன்" என்று சொன்னது எல்லோரையும் நெகிழவைத்தது.

இவ்விழா சுமார் எட்டு முப்பது மணிக்கு நிறைவாக வேண்டும். செந்தமிழ் அந்தணர் அவர்களது கையில் ஒலிவாங்கி கொடுக்கும் நேரம் 8-20. ஒலிவாங்கியைக் கொடுத்தவர் சொன்னார் "நாங்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டோம். இருப்பினும் உங்களது நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம்" என்று சொன்னார். 

இப்பொழுது ஐயா தொடங்குகிறார். 'காலம் பொன் போன்றது அல்ல, பொன்னை விட மேலானது. இவ்வுலகில் போனால் திரும்ப வராதது காலமும் உயிரும். எனவே நான் உரிய பொழுதுக்குள் நிறைவு செய்வேன் என்று சொன்னதோடு, ஒரு மணி நேரம் சொல்ல வேண்டிய செய்திகளின் சாரத்தை 10 நிமிடங்களில் சொல்லி எட்டு முப்பதுக்கு நிகழ்வை நிறைவு செய்தார். அவரின் காலம் தவறாமையை நேரில் கண்டவன் என்ற முறையில் இச்செய்தியைப் பதிவு செய்தேன். அவர் செல்லுகின்ற விழாக்களுக்கு உரிய நேரத்திற்கு முன்பாகவே விழா அரங்கில் அவர் இருப்பார். அப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

"தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்" இது செந்தமிழ் அந்தணர் எழுதிய நூல்களுள் ஒன்று. தமிழ் மொழியின் சிறப்பை, தமிழ்ச் சொற்களின் வேரை, தமிழ் இலக்கியங்களின் இனிமையை, தமிழ் எழுத்துகளின் மேன்மையை அதன் ஆழத்தை, நுட்பத்தை 16 கட்டுரைகளில் விளக்குகிறார்.

எழுத்துகள் பற்றி  "வட்டமே இயற்கை இயக்க வடிவம் எனக் கண்டனர் நம் முன்னோர். அதனை அடிப்படையாகக் கொண்டே உயிர் இயக்க எழுத்துக்களை அமைத்தனர்" என்கிறார். இந் நூலைப் படிக்கும் வரை நாம் நாளும் நாளும் எழுதி வரும், நம் தமிழ் மொழியின் எழுத்துக்கள் தொடர்பாக இப்படி ஒரு ஆய்வு இருப்பதை, கட்டமைப்பு இருப்பதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

மேலும் "அவ்வெழுத்துக்களையும் நாள் கோள் இயக்கம் போலவே வலச் சுழற்சியாகவே அமைத்தனர். இடச் சுழற்சி இயற்கையொடு மாறு பட்டது. ஊர்வலம், நகர்வலம், வலஞ் சுழி என்பவற்றை எண்ணுக.~

காற்று வகையில் ஒன்று சூறைக்காற்று. சுழன்று வளையமிட்டுக் கிளம்பும் அதனைக் கண்டவர், சூறைக் காற்று என்றனர்.

நீர் நிலையில் சுழல் உண்டு; நீர் நிலையில் எழும் அலை, ‘வட்டம்' என்பதை எவர் அறியார்? அலை வட்டம் என்பதுதானே பெயர்.

தீ, பற்றி எரிவது வட்டமாகவேயாம். நாய் வட்டமிடாமல் படுப்பது இல்லை. பருந்து வட்டமிட்டே பறக்கும்.

ஆடு மாடுகள் வட்டமாகச் சுழன்றே படுப்பன.

வாடையில் நடுங்குவார் கூனிக் குறுகி வட்டமாகவே படுப்பர்.

பூவும் காயும் தவசமணிகளும் வட்டவடிவினவே. 
நடைவண்டி முதல் எவ்வூர்தியும் 'வட்டை' உருள்கள் (சக்கரம்) அமைந்தனவே. என்று சொல்லி உயிர் எழுத்துகளின் தன்மையை விளக்குகிறார். 

செந்தமிழ் அந்தணர் அவர்கள் எழுதியவற்றுள் சுமார் 200 நூல்களைப் படித்திருப்பவன். எழுத நிறைய உண்டு. விரிவஞ்சி விடுகிறேன்.  

இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரின் படைப்புகளைச் செழுமையுடன் படித்துப் பாரங்கும் பரப்பத் தொடங்கினால் தமிழ் எழுட்சியுறும். தமிழினம் மீட்சியுறும்.

புலவர் ச.ந.இளஙகுமரன்

Sunday, 14 July 2024

சுட்டொலிகள்

சுட்டொலிகள்

மூன்று இலக்கம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் முதலாவது தன்னுடைய கைகால் அசைவுகளையும், கண் அசைவினையும், முகக் குறிப்பையும் கருத்து வெளியிடும் வாயில்களாகக் கொண்டிருந்தான். பின்பு வாய்ச்சைகை காட்டும் முறையில் சில ஒலிகளைப் பிறப்பித்தான்.

சேய்மைச் சுட்டாக வாயைப் படுக்கையாய் அகலித்தபோது 'ஆ' எனும் ஒலியும்,அண்மைச் சுட்டாக வாயைக் கீழ்நோக்கி விரித்த போது 'ஈ' எனும் ஒலியும், முன்மைச் சுட்டாக வாயை முன் நோக்கிக் குவித்த போது 'ஊ' எனும் ஒலியும், உயரச்சுட்டாக வாயை ஒடுக்கி நட்டுக்கு அகலித்தபோது 'ஓ' என்னும் ஒலியும் பிறந்தன இவை வாய்ச்சைகையொலிகள்.

இவ்வைந்து சுட்டுகளையும் ஒலிப்பதற்கேற்ற வாய் நிலைகள் வெவ்வேறு. ஒன்றுக்குரிய வாய்நிலையில் வேறொன்றை வேறொரு ஒலியை ஒலிக்க முடியாது.  'ஓ' எனும் நிலையில் மட்டும் 'ஆ' எனும் ஒலியைச் சிறிது ஒலிக்கலாம். இதனை நீங்கள் ஒலித்துப் பார்க்கலாம்.

பின்னர், வயிறார வுண்டபின் அடிவயிற்றிலிருந்து  மேல்நோக்கி யெழும் காற்று ஏகார வடிவாய் வெளிப்பட 'ஏ' என்னும் ஒலி எழுகைச்சுட்டாகக் கொள்ளப்பட்டது. உண்டபின் வயிற்றிலிருந்து எழும் ஒலியை ஏப்பம் என்று தமிழிலும் eructa- tion என்று ஆங்கிலத்திலும் ஏகார எகர முதற்சொல்லாகக் கூறுதல் காண்க. ஏப்பம் விடும்போதே சிலர் ஏவ் என்றும் சிலர் ஏப்பம் என்றும் ஒலிப்பது வழக்கம்.

ஆ,ஈ,ஊ,ஏ,ஓ என்னும் ஐந்து தனியுயிர் நெடில்களும் குறுகி முறையே அ, இ, உ,எ,ஒ என்னும் ஐந்து தனியுயிர்க் குறில்கள் தோன்றின. பின்னர், அகரத்தொடு இகர உகரங்கள் புணர்ந்து முறையே ஐ ஒள என்னும் உயிர்ப் புணரொலிகள் தோன்றின.

இங்ஙனம் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் தனியொலிகளான ஐந்நெடில் களும் சுட்டொலிகளாக முதலாவது தோன்றின. இவ்வொலிகளே பின்பு எழுத்துவடிவம் பெற்றன. 

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

Tuesday, 9 July 2024

தொலைபேசியா? தொலைப்பேசியா?

5- தொலைபேசியா? தொலைப்பேசியா?

வானும் இருந்தது; ஒலியும் இருந்தது; வானொலி கிடைத்தது.

தொலையும் இருந்தது; காட்சியும் இருந்தது; தொலைக்காட்சியாயது.

தொலையொடு காட்சி இணையத் தொலைக் காட்சி ஆயது என்றால், தொலையொடு பேசி இணையத் தொலைப்பேசி தானே ஆக வேண்டும். தொலைபேசி என்றால் தொலைந்து போன, தொலைந்து போகிற, தொலைந்து போகும் பேசி என வினைத் தொகையாக அல்லவோ ஆகிவிடும்.

தொலைவுக்குப் பேசுதல், தொலைவில் இருந்து பேசுதல் ஆகாதே! முதற்கண் இதனை எழுதிப் பரப்பி யவர் பிழைபடப் பரப்பி விட்டார்; பெருக வழங்கிவிட்டது எழுத்திலும் பிழையாக நின்று விட்டது. எழுத்தில் இருப்பது இத்தனை அத்தனையா?

'பொது தொலை பேசி' என்பது சந்து பொந்து களில் எல்லாம் சிற்றூர் பேரூர் மூலை முடுக்கு எல்லாம் இடம் பெற்று விட்டதே. இம்முச்சொல் இணைப்பில் இரு சந்திப் பிழைகள் உள்ளனவே!

பொதுவானது என்னும் பொருள் தர வேண்டும். என்றால் 'பொதுத் தொலைப்பேசி' என்றல்லவா இருக்க வேண்டும்.

'பொது' தொலைப்பேசி என்றால் பொதுக்கப் பட்ட, பொதுக்கப்படுகின்ற, பொதுக்கப்படும் தொலைப்பேசி என்றல்லவா ஆகும். பொதுத்தல் துளையிடுதல். பொத்து வடிதல் வழக்கில் உண்டே.

பல்கால் பழகிவிட்டால், அதிலும் பெரியவர்கள் வழங்கிவிட்டால் அதுவே 'சரி' என்னும் எண்ணத்தை யும் ஊட்டிவிடுமே! ஆதலால் சீரான கலைச் சொல்லை உருவாக்குதலோடு சீரான வடிவிலும் தந்து பரப்புதல் வேண்டும் என்பது தெளிவாம்.

(செந்தமிழ் அந்தணரின் செழுந்தமிழ்)
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.

Friday, 5 July 2024

மொழிப்பற்றும் மொழிவெறியும்

மொழிப்பற்றும் மொழி வெறியும்.

தமிழ் இயற்கை மொழி. உலகின் மூத்த மொழி. உலக மொழிகள் பல கிளைப்பதற்கு வேராக இருந்து வரும் மொழி. வளர்ந்து வரும் அறிவியல் உலகத்திற்கு ஏற்றவாறு புதிய புதிய கலைச்சொற்களை உருவாக்குகின்ற ஆற்றல் படைத்த ஒரே மொழி உலகில் தமிழ் மட்டுமே என்பது மொழியியலாளர்களுடைய கருத்தாக இருக்கிறது.

இன்றைக்கு நாம் பேசுகின்ற மொழியில் 27 மொழிகளைக் கலந்து எழுதியும் பேசியும் வருகிறோம். தனித்தியங்கவல்ல தமிழ் மொழியில் தமிழர்களாகிய நாமே வலிந்து பிற மொழிகளைக் கலந்து வருகிறோம். தமிழ் மொழியைப் போல் இனிமையான எளிமையான மொழி எனக்குத் தெரிந்தவரையில் இல்லை என்கிறார் 11 மொழிகளைக் கற்றறிந்த பாரதியார்.  ஆனால் ஒரு மொழியையும் ஒழுங்காக, சரியாகக் கற்காத நாம்தான் தமிழ் எதற்கும் ஆகாது என்று வெட்டிப்பேச்சு பேசுகிறோம்,  எழுதுகிறோம். இப்படி பேசியும் எழுதியும் வரும் பலரும் தமிழைப் படித்து, தமிழில் எழுதி, தமிழால் வாழ்பவர்களே என்பதும் வேதனைக்குரியது. 

பிற மொழிச் சொற்களை தமிழில் கலக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தால், அப்படி வேண்டுகோள் வைப்பவர்களை மொழி வெறியர் என்று தன்னிலை அறியாது கேலியும் பேசி கிண்டலும் வருகின்றனர். 

வெறி என்பது என்ன? விலங்குகளுக்கு வெறி பிடித்தால் அது எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறும், மிதித்துக்கொள்ளும். மனிதர்கள் சாதி வெறியும், சமய வெறியும், மதவெறியும் பற்றிக் கிடப்பதால் தான் இன்னொரு சாதிக்காரரை, இன்னொரு சமயத்தவரை, இன்னொரு மதத்தவரை இழித்தும் பழித்தும், தேவைப்பட்டால் கொலை கூடச் செய்தும் தங்கள் வெறியைத் தீர்த்து வருகின்றனர். 

அதே நேரத்தில் பற்றுடையபணிகளைர் இருந்தால் தங்கள் சாதியரை, தங்கள் சமயத்தவரை, தங்கள் மதத்தவரை முன்னேற்றும் பணிகளைச் செய்வர். 

ஒருவர் தன் தாய் மொழியின் மேல் கொண்டுள்ள பற்றின் காரணமாக தாய் மொழியில் பிற மொழிகளைக் கலந்து பேசுவதும், கலந்து எழுவதும் வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறார் என்றால் அவர் எப்படி மொழிவெறியர் ஆவார்? 

எவரொருவர் தன் தாய் மொழியில் பிற மொழிகளைக் கலந்து எழுதுகிறாரோ, எவரொருவர் தன் தாய் மொழியில் பிற மொழிகளைக் கலந்து பேசுகிறாரோ அவரே மொழிக் கொலையர், அவரே மொழி வெறியர்.

"மொழிப்பற்று மிக்குடையோன் மொழிவெறியனல்லன்!
மொழியைக் கொல்லும் கழிசடையே மொழிவெறியன்" என்கிறார் பாவேந்தர். இதனை அவர்கள் எப்போது உணர்வார்களோ தெரியவில்லை.

வளர்ந்து வரும் அறிவியல் உலகில் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான கலைச் சொல்லாக்கங்கள் தமிழில் நிறைந்து வந்து விட்டன. அவற்றை அறிந்து கொள்ள முயல்வோம். அறிந்து கொண்ட சொற்களை நம் வாழ்நாளில் பயன்பாட்டில் வைப்போம். நடைமுறை வாழ்வில் பயன்படுத்தி மகிழ்வோம் அதுதான் தாய் மொழிக்கு நாம் செய்யும் நன்றிக் கடன். ஒரு மனிதனின் அடையாளம் அவன் பேசும் மொழியேயன்றி வேறொன்றுமில்லை. தாய்மொழி வளர்ப்போம், தரணியில் உயர்வோம்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.
05-07-2024