இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Tuesday, 30 January 2024

தமிழ்க்காடு (கவிதைகள்) பாவலர் வையவன்

நூல் : தமிழ்க்காடு
நூலாசிரியர் : பாவலர் வையவன்
வெளியீடு : நெசவுக்குடில்

அறம், பொருள், இன்பம் என்பது போல காதல், வீரம், மானம் எனும் மூன்று தலைப்புகளில் 66 உட்தலைப்புகளைக் கொண்டு 192 பக்கத்தில் நிறைவாகியிருக்கும் நூல் தமிழ்க்காடு.

படிக்கப் படிக்கத் திகட்டாத பாக்கள் படிப்பவரைப் பரந்த சிந்தனைக்கு நகர்த்துகிறது. மொழி, இனம், மானம் மூன்றன் சிறப்பு, இருப்பு, இழப்பு என்பதோடு கடந்து செல்லாமல் இழந்ததை மீட்கும் வழிமுறைகளோடு முறைப்படுத்தி தமிழ் சமூகத்திற்கு வழங்கி தமிழ்த் தாய்க்குப் பெருமை சேர்த்திருக்கிறார் பாவலர் வையவன் அவர்கள்.

தமிழ்க்காடு நூல் முழுமைக்கும் செழுமையான செந்தமிழ் நடை. அதே நேரத்தில் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் எளிய நடையில் இனிமை ததும்ப எழுதியிருக்கிறார். 

தாயவள் எனும் தலைப்பில் தொடங்கி தாய்த்தமிழ் மலரட்டும் என நிறைவாகி இருக்கிறது நூல். காதல் தலைப்பிலும் கூட வீரத்தையும் மானத்தையும் சொல்லி உணரவைத்திருப்பது நூலாசிரியருக்குரிய தனித்திறன் என்றே சொல்லலாம். அதேபோல் இந்நூலில் உள்ள கவிதைகளைப் படிக்கின்ற பொழுது மொழியும்,  இனமும், மானமும் நூலாசிரியரின் குருதி ஓட்டத்தில் இரண்டறக் கலந்து ஊறிக் கிடக்கிறது என்பதை உணர முடிகிறது. அவரைப் போலவே நாமும் ஊறித் திளைக்க வேண்டும் என்று கவிதைகள் முழுமைக்கும் நமக்கு உணர்த்திச் செல்கின்றன.

பல பாடல்கள் சங்க இலக்கியங்களை ஒட்டியே இருக்கின்றன. ஆனால் அது இன்றைய கால நிகழ்வுகளைப் பேசுகின்றன. 

தலைவனைப் பற்றித் தோழியிடம் தலைவி இப்படிச் சொல்கிறாள்
 " பேரன்பதுவோ தமிழன் தானாம் பெற்றவள் அவளும் பைந்தமிழ் தாயாம்
 உயிருடல் மூச்சு உணர்வது வெல்லாம்
 உயர்செந் தமிழே உயர்செந் தமிழே 
நாடும் மொழியும் நாடா மனிதன் நடைப்பினம் என்றே நவிழ்கின்றானாம்"...
"தேன்மொழித் தமிழைத் தேர்ந்தவன்
 நான் தவித்திருப்பதை நனி மறந்தனனே" இது காதலன் வரவு காய் ஏங்கும் காதலியின் கூற்றாய் ஒலிக்கும் கவிதை.

மனம் நிறைய படி" எனும் ஒரு தலைப்பு விடியும் முன் எழுந்து காலை 
வினைகளை முடித்தல் வேண்டும்
 படித்திடத் தொடங்கும் முன்னர் 
பச்சைநீர் அருந்த வேண்டும் 
படித்ததை மீண்டும் மீண்டும் 
பாராமல் உரைத்தல் வேண்டும் 
படித்ததைப் புரிந்து நெஞ்சில் 
பதித்திட முயல்தல் வேண்டும்...

ஒருமையுள் கற்ற கல்வி 
எழுமையும் ஏமாப் பென்றால் 
பெருமைசேர் கல்வி மீது 
பேரவா கொள்ள வேண்டும்
கருமைசேர் தீய எண்ணம் 
கனவிலும் போக்க வேண்டும்
கருமுதல் வளர்த்த தாயின்
கனவினை ஆக்க வேண்டும். 

காதல் ஆணுக்கும் பெண்ணுக்குமானது  மட்டுமல்ல,  அது மண்ணுக்குமானது, தமிழ் மனம் சமூக அக்கறையுடன் கூடிய கல்வியின் மீதும் காதல் கொள்கிறது. தகப்பன் பாடிய தாலாட்டிலும் காதல் கொள்கிறது. மண் விடுதலைக்காய்ப் போராடிய ஈகியர் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும், சிதைப்பவரை எதிர்த்து மீட்டுருவாக்கம் செய்த பண்பாளர்கள் மீதும் காதல் கொள்கிறது இது பாவலர் வையவனாருக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஒவ்வொரு தமிழனுக்கும் சொந்தமாய் இருக்க வேண்டும் என்பதை உணர்த்திச் செல்கிறது காதல் தலைப்பு.

இரண்டாவது தலைப்பாக வீரம். வீரம் என்றால் என்னவென்று கேட்கத் தோன்றுகிறதா?  இழப்பு எதுவாக இருந்தபோதும் அதை மீட்பதே வீரமாகும் என்பது பதில்.  இழந்ததை மீட்பது கடினம் என்று நினைத்து ஊமையாகி உறங்கிக் கிடந்தால் நாளை நாம் உடுத்துவதற்கு ஒரு உடையும் கிடைக்காது. எனவே எதையும் இழந்துவிடக் கூடாது. இழந்த ஒன்றை மீட்காமல் இருந்து விடவும் கூடாது. இது பாவலர் வையவன் அவர்களது உள்ளக்கிடக்கை. வீரமாய் இருக்க என்னும் ஒவ்வொருவருடைய உள்ள கிடக்கையும் இதுதான். இக் கருத்துகளை உள்ளடக்கிய பாடல்கள் இத்தலைப்பில் உலா வருகின்றன. 

கலை என்னும் பெயரில் சிதைக்கப்படும் மொழி, சிதைக்கப்படும் பண்பாடு, சிதைக்கப்படும் நாகரிகம், சிதைக்கப்படும் ஒழுக்கம், திரைக்கலைஞர்கள் மேல் தீராத நோய் பிடித்து அலையும் இளைஞர்கள் என இவை திருத்தப்பட வேண்டும். அதேநேரம் இப்படியான கெடும்புகளைச் செய்யும் எவரானாலும் இம்மண்ணில் எவரையும் ஏமாற்றும் வழியின்றி  அந்த நச்சைத் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்கிறார் பாவலர் ஆங்கில மாயையில் சிக்குண்டு கிடப்பவர் மேல் இப்படிச் சீறுகிறார்.

'என்பேர் தமிழன்; என்னூர் தமிழ்மண் என்குலக் குடிதமிழ் நாடு ; என்தன் அப்பன் என்தன் பாட்டன் வாழ்ந்தது தமிழ்மண் வீடு ; எங்கள் வாயும் எங்கள் சேயும் தின்றது தமிழ்மண் சோறு ; எங்கள் நடுவே ஆங்கிலம் ஏனென' இனிநீ சினந்து சீறு!. 

களைபோலும் செந்தமிழ்ச்சொல் குறளும் கூட
 'இளைதாய முள்மரத்தைக் கொல்'லச் சொல்லும்
 களைந்தோமா சாதிமத வருணக் காடு?
 வளைப்பாம்பு ஆரியத்தை வணங்கும் கேடு! 
இளைப்பாறி இருக்கின்றோம் இந்நாள் தோழா 
விளைந்திடுமா பெருவெற்றி எண்ணிப் பாராய் 
தளைப்பட்ட விலங்கெல்லாம் தகர்த்துப் போக்கித் 
தடைதாண்டிப் பொங்கிடடா அன்புத் தோழா!

வீரத்தின் விளைநிலமாம் வ உ சி, தந்தைப் பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாவலர் தமிழேந்தி உள்ளிட்ட பல அறிஞர்களும் அவர்களது தலையாய பணிகளும் இன்னும் மீட்கப்படாமலேயே கிடக்கின்றன என்பதைச் சுட்டி மீட்கும் வீரத்தைத் தமிழர் பெற வலியுறுத்துகிறார்.

நாம் நமது மண்ணில் எத்தனையோ இழந்து விட்டோம். இழந்ததை மீட்கவும், இருப்பதைக் காப்பாற்றவும், இளைய சமூகம் எழுந்து வர வேண்டும். விழுந்து கிடக்கின்ற நம் மானத்தை, மண்ணை, மரபை மீட்க வேண்டும் என்னும் மான உணர்வோடு மானம் என்னும் இத்தலைப்பில் கவிதைகளைப் படைத்திருக்கின்றார். 

தமிழ்க்காடு கவிதைகள் எங்கும் தமிழரின் உரிமை பேசுகிறது. உரிமையை மீட்கும் வீரம் பேசுகிறது. வீரத்தின் விளை நிலமாம் மானம் பேசுகிறது.  இந்த மொழிப்பற்றும், இனப்பற்றும், மானமும் இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. அருமையான சமூக எழுச்சிக்கான விதைகள் இத்தமிழ்க்காடெங்கும் செழித்து கிடக்கின்றன. இவை முளைக்க வேண்டும். ஒரு நாள் கட்டாயம் முளைக்கும் என்ற நிறைந்த நம்பிக்கையோடு நூலாசிரியர் பாவலர் வையவன் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம்
தேனி நாகலாபுரம்.

Monday, 22 January 2024

பழுப்பேறிய நாட்குறிப்பைத் திருப்புதல் - இர.அறிவழகன்

புத்தகப் பார்வை...

கவிஞர் இர.அறிவழகன் அவர்களது "பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்" திருப்பிப் பார்த்தேன். திருப்பிய பக்கங்கள் எங்கும் காதல் சுவை இழையோடிக்கிடந்தது.

காதல் காதல் காதல்! காதல் போயின் சாதல் சாதல் சாதல்! என்று வழிவழியாகத் தமிழ்ச்சமூகத்தில் எஞ்சியும், மிஞ்சியும் கிடக்கும்  வார்த்தை.  இது இது பாரதியின் வரிகளில் நிலைநிறுத்தப்பட்டது.

காதல் இல்லாத உயிர்களே கிடையாது! காதல் மட்டும் இல்லை என்றால் உலகம் தொடர்ந்து இயங்காது! அதனை விளங்கவும் முடியாது, விளக்கவும் முடியாது. உணர்வால் மட்டுமே உணர முடியும். சிலருக்கு இது கைகூடலாம். சிலருக்கு கையை விரிக்கலாம். எதுவாக இருப்பினும் காதல் ஒன்றுதான். 

பழுப்பேறியே நாட்குறிப்பில் கை கூடாத காதலை, ஆண்டுகள் பலகடந்து, கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறார் காதலனாக நூலாசிரியர். இளமைக் கால நினைவுகள் நூலெங்கும் இசை பாடுகிறது. தலைப்புகளே இல்லாத கவிதைகள், பாதங்களால் (வரிகளால்) நடையிடுகிறது. குறிப்பாக இக்கவிதைகளில் நிறைந்து பேசப்படுவது தனிமையின் வலிகள்...

" வெட்டுண்டு 
வீழ்ந்த மரத்தில் 
தன் கூடு தேடி அலையும் 
பறவையாய்த் தொடங்கினேன் 
உன்னுள் 
எனக்கான துஞ்சுமிடத்தை" இது தொடக்கக் கவிதை முதற்சொல்லே துண்டித்தல் பற்றியே தொடங்குகிறது. இது பெரும்பான்மையாக நூலெங்கும் தொடர்கிறது.

"என் பழுப்பேறிய நாட்குறிப்பின் 
மூலை மடித்த முப்பதாம் பக்கம் 
நிரப்பாமல் தவிர்த்து 
பிரிவின் தூசிபடிந்து புரட்டாமல் 
வெறுமை தாங்கலாக இருக்கிறது 
வா
மீதமிருக்கும் நாட்களை
இரண்டு பேர்களும் எழுதுவோம்..."  இது தலைப்பு குறித்த கவிதை நெடிய நாட்களுக்குப் பின் புரட்டப்படும் 30 ஆம் பக்கம் நிகழ்காலம் வரையிலும் நிறப்பப்படவில்லை.

"மவுனங்களில் கட்டுப்படாத
கசியும் கண்ணீர்
தற்போதைய தகவல்களில்
நனைப்பது இழந்த நாட்களையும்
இருக்கும் நாட்களையும்
நீயாகிய நானும்
நானாகிய நீயும்
இப்பிரபஞ்சத்தின்
முதுபெரும் அன்பை
சாய்வு நாற்காலியில் அமர்ந்தே வாசிப்போம்.... 

இது நிறைவுக் கவிதை. தொடக்கமும் நிறைவும் நூலுக்குள் இருக்கும் செய்திகளை நமக்கு தெளிய விளங்க வைத்து விடுகிறது. 

கடந்து போன காதலை கடைசி வரையிலும் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பவருக்கு இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.  இந்த நூலைப் படிக்கும் படிப்பாளிகள் தங்களுடைய இளமைக் கால நினைவுகளில் நீந்துவது திண்ணம். 

அருமையாக இந்த நூலை ஆக்கி இருக்கும் நூலாசிரியர் கவிஞர் இர.அறிவழகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நூல் வெளியீடு "பன்முக மேடை"  தேனி. விலை உரூபா 100. 

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்,
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

என் உயிர் தமிழுக்கே... (கவிதைகள்) கருங்கல் கி.கண்ணன்

புத்தகப் பார்வை 

என் உயிர் தமிழுக்கே...

நூலாசிரியர் : கருங்கல் கி.கண்ணன். 
நூல்குறித்து : புலவர் ச.ந.இளங்குமரன்.

"எந்நிலை வந்தாலும்
தன்னிலை தவறேன் 
என் தாய் தமிழ்
என் உயிர் தமிழ் 
என் இதயத்தின் ஓசை தமிழ் 
என் சுவாசத்தின் காற்றும் தமிழ்" 
என்று என் உயிர் தமிழுக்கே எனும் தலைப்பில் தொடங்கி ...

"காதல் வளர்த்ததும் தமிழ்
ஞானத்தை ஆண்டதும் தமிழ்
விழுப்பும் கண்டதும் தமிழ் 
வீரனை வணங்கியதும் தமிழ் 
இயல் இசை நாட்டியமும் தமிழ் 
அறத்தோடு வாழ்ந்ததும் தமிழ்
மறத்தமிழனின் தாயின் தமிழ்! தமிழே!
உணர்த்திட எமக்கு வரம்கொடு தாயே வல்லமை தாராயோ சக்தி 
வல்லமை தாராயோ" என வல்லமை தாராயோ என்னும் தலைப்பில் நிறைவு செய்திருக்கின்ற என் உயிர் தமிழுக்கே எனும் இந்நூல் 51 தலைப்புகளையும் 135 பக்கங்களையும் கொண்டது. இந்நூலின் ஆசிரியர் கருங்கல் கண்ணன். கோவை ரேணுகா பதிப்பகம் நூலினைப் பதிக்க தமிழன்னை தமிழ்ச் சங்கம்  இதனை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

தனித்து இயங்கவல்ல தமிழ்மொழி பல மொழிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்பதைப் பலரும் அறிவர். இதற்கு என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?. பெரும்பான்மையான அமைப்புகள் எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்? மொழியை அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்தவேண்டும்? என்கிற பல கேள்விகள் நம் நெஞ்சத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. 

இவ்வாறான சூழலில் தம்முடைய பேச்சு, தம்முடைய எழுத்து என அனைத்தும் பிற மொழி கலவாத தனித்த தமிழிலேயே இருக்க வேண்டும் என்பதோடு, வட எழுத்துகள் என்று சொல்லப்படுகின்ற கிரந்த எழுத்துகள் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும் என்ற இலக்கோடு இந்த நூல் முழுமைக்கும்மான செய்திகளாகக் கவிதை வடிவில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் கருங்கல் கண்ணன் அவர்கள்.

தொடர்ந்து ஆங்காங்கே சமூகம் குறித்தும், பெண்ணியம் குறித்தும்,  காதல், பக்திகுறித்தும் தன்னுடைய எண்ணங்களைப் பதிவு செய்யத் தவறவில்லை. 

நூலில் பல்வேறு கவிதைகளில் இயல்பாகவே சந்தம் மிளிர்கின்றது சில கவிதைகள் பாடல் வடிவிலேயே எழுதப்பட்டிருக்கிறது

"ஏர்முனையே பசி தீர்க்கும் 
பார் போற்றும் இயந்திரமே 
ஏர்முனையே இல்லையெனில் 
தீராது பட்டினியே" உழவுத் தொழிலே உலக உயிர்களை காக்கும் தலையாயத் தொழில் எனப் போற்றுவதோடு 

"உழை உழை 
உழைப்பில் சறுக்கல் வந்தாலும்
உழைப்பின் பின்னால் பார்க்காதே உழைப்பே உயர்வு நிச்சயமே" என உழைத்தும் பயனில்லாமல் கிடக்கும் உழைப்பாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகப் பதிவு செய்திருப்பது அருமை.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
 பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
 எட்டுத்திக்கும் இன்று ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண்..." எனும் பாரதியின் வைர வரிகளை "ஆளுகின்ற மங்கை என"  எனும் தலைப்பில் மிக அழகாகக் கவிதை வடித்துள்ளார்.

மாமதுரைக் கவிமன்றத்தின் தலைவர் கவிச்சித்தர் வீரபாண்டியத் தென்னவனாரின் நேரிய கொள்கையினை நெஞ்சில் தாங்கி, நூல் முழுமைக்கும் கிரந்த எழுத்து தவிர்க்கப்பட்டு எழுதியிருப்பது  மிகப் பாராட்டுவதற்குரியது. 

பிறமொழி கலவாமல் எழுத வேண்டும் என்ற என்று கொள்கையோடு கருங்கல் கி.கண்ணன் அவர்கள் தமிழ்த்தாய்க்குக் கோயில் அமைப்பதை தன் வாழ்நாள் குறிக்கோளாகவும் கொண்டு செயல்பட்டு வருகிறார். அன்னாரின் இலக்கும் கொள்கையும் வெல்க. தொடர்ந்து பல்வேறு எழுத்தாக்கங்களை மொழிக்குத் தந்து சிறக்க "தேனி வையைத் தமிழ்ச் சங்கம், வையைப் பதிப்பகம் சார்பில் வாழ்த்துகிறோம்.

"என் உயிர் தமிழுக்கே" நூலின் விலை உரூ 150. வாங்கிப் படித்துப் பயன் பெறுக...

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்.
வையைத் தமிழ்ச்சங்கம் & வையைப் பதிப்பகம், தேனி நாகலாபுரம்.

Wednesday, 3 January 2024

காதலாகி... கவிதை ச.ந.இளங்குமரன்

காதலாகி....

அவன்...

சித்திரமே செங்கரும்பே சித்தமதைத் தின்றவளே 
முத்துமணி ரத்தினமே முத்தத்தால் வென்றவளே 
தத்தையென நித்தநித்தம் தந்திட்ட  முத்தமெலாம் 
மொத்தமாய் தந்திடுவேன் வா!

அவள்...

கண்ணங் கருப்பழகா கட்டிவெல்லப் பேச்சழகா
எண்ணம் நிறைந்தவனே என்னுயிராய் ஆனவனே
எண்ணிக்கை இல்லாமால் ஏந்திழைநான் தந்ததெல்லாம்
என்னுயிரே உன்றனுக்கே தான்!

அவன்...

கூடிக் குலவிடுவோம் கொஞ்சுமொழி பேசிடுவோம்
சோடிப் புறவெனவே சொர்க்கவாழ்வு வாழ்ந்திடுவோம்
பாடிப் பறந்திடுவோம் பாரில் உலவிடுவோம்
வாடி வசந்தம்நீ வா!

அவள்

உலவும் நிலவுக்கோ உற்றவளாம் அல்லி
மலர்ந்திடும் தாமரைக்கோ மன்னவனாம் சூரியன் 
நிலவும் கதிரும் எனக்குநீ அத்தான்
பொழுதெல்லாம் நானுனக்குப் பொன்!

ச.ந.இளங்குமரன் 
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.

கலைஞர் பட்டிமனறம் போடி பொறியியல் கல்லூரி

தேனிமாவட்டத் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில்,  போடி அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழிச் சட்டவாரவிழாவில் "கலைஞரின் புகழுக்குக் காரணம் இலக்கியப்பணியா? சமூகப்பணியா? எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள் நடுவராக இருந்து வழிநடத்தினார்.

இலக்கியப்பணியே என முனைவர் பத்மினிபாலா, கிஷோர், அனுப்பிரியா, சமூகப்பணியே எனும் தலைப்பில் ஆ.முத்துக்குமார், காளீஸ்வரி, யுவனேஸ்வர் ஆகிய  ஆறு பேருடைய பேச்சும் மிக அருமை. குறிப்பாக மாணவ மாணவிகள் தங்களது தலைப்புகளில் முழுமையாகத் தேடலை மேற்கொண்டு நிறைந்த செய்திகளைப் பல்வேறு பட்டிமன்றங்களில் பேசிய புகழ்மிக்க பேச்சளர்களைப் போல மிக அருமையாகப் பேசி அரங்கத்தை அதிர வைத்தனர். 

இந்த நிகழ்வினுக்குத் தலைமை ஏற்று உரைவழங்கி பேச்சாளர்கள் பேசி முடிக்கும் வரை கல்லூரி முதல்வர் அவர்கள் முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது அனைவருக்கும் உற்சாகத்தைக் கொடுத்தது. 

மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் பார்வையாளர்களாக அமர்ந்து எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் கைதட்டி ஆரவாரம் செய்து அத்தனை பேச்சாளர்களையும் ஊக்கப்படுத்தினர். தமிழ் வளர்ச்சித்துறை உதவி அலுவலர் புருசோத்தமன். உதவியாளர் மஞ்சுளா, ஓட்டுநர் கண்ணன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகக் களப்பணியாற்றினர். 

 இச்சிறப்புகளுக்கெல்லாம் காரணமான தேனிமாவட்டத் தமிழ்வளர்ச்சிதுறையின் உதவி இயக்குநர் பெ.இளங்கோ ஐயா அவர்களுக்கும், கல்லூரி நிருவாகத்திற்கும் அனைவர் சார்பிலும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.