இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 7 May 2022

முருகன் + கண்ணன் = இளங்குமரன்

முருகன் + கண்ணன் = 
         இளங்குமரன்.

பொதுவாக இளங்குமரன் என்ற பெயர் முருகன் என்னும் இறைவனைக் குறிப்பதாகப் பலரும் சொல்லி வருகின்றனர். அவ்வாறான பதிவுகளும், குறிப்புகளும் அதிகம். ஆனால் இளங்குமரன் என்ற சொல் கண்ணனையும் (திருமால்) குறிக்கும் என்கிற செய்தியை எமது ஆசான் பெரும் புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஐயா அவர்களது இயற்பெயர் கிருட்டினன் என்பது.  தன்னுடைய இயற்பெயரை தந்தையாரின் இசைவோடு  இளங்குமரன் என்று மாற்றிக் கொண்டவர். மதுரை அழகர் மலைக் கல்வெட்டில் இளங்குமரன் என்று பெயர் இருப்பதாக ஆசான் சொல்ல அருகமர்ந்து கேட்டிருக்கிறேன்.

இன்று காலை சுமார் நான்கு மணி அளவில் முனைவர் பட்ட ஆய்வேடு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் எதிர்பாராத செய்தி எனக்குக் கிடைத்தது. அதாவது கண்ணனுக்கு இளங்குமரன் என்ற பெயர் உண்டு என்ற எமது ஆசானின் கூற்று அடங்கிய அப்பாடலைக் கண்டதும் மனம் மட்டிலா மகிழ்ச்சியில் துள்ளியது. எமது ஆசான்  திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையில் என்னிடம் பேசிய செய்தி பசுமரத்தானியாய் நெஞ்சில் நிழலாடியது.

அப்பாடலை இயற்றியவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார். மாலியர்களால் போற்றப்படும் 108 திருப்பதிகளுள் ஒன்றான திருக்கடிகைக் குன்றைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

அப்பாடல்...

"பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டங் குறைவாற்குக் கோயில்போல - வண்டு வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை #இளங்குமரன் றன்விண் ணகர்".

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி.

Thursday, 5 May 2022

மாத்திரை

குறில், நெடில், மாத்திரை.

3 குற்றெழுத்து

அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப.

தெளிவுரை : 

அவற்றுள் - முன்னர் சொன்ன முப்பது எழுத்துகளில் உயிரெழுத்து என்பவற்றுள்,  அ, இ, உ, எ, ஒ என்னும் அப்பால் ஐந்தும் - அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்து எழுத்துக்களும், ஓரளபு இசைக்கும் -  ஒரு மாத்திரை அளவாக ஒலிக்கும், குற்றெழுத்து என்ப -  குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்று தொல்லாசிரியர் சொல்வர்.

விளக்கம்

மாத்திரை என்பது எழுத்துகள் ஒலிக்கப்படும் கால அளவு. இதற்கான அளவுகோல்கள், கண் இமைக்கும் பொழுதும், கைநொடிப்பொழுதும் ஆகும். உயிர் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவை வைத்து குறில், நெடில் அதாவது குற்றெழுத்து, நெட்டெழுத்து என இருவகையாகப் பகுத்துள்ளனர் நம் முன்னோர்.

 4. நெட்டெழுத்து
 
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஒள என்னும் அப்பாலேழும் ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.

தெளிவுரை : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள ஆகிய, அப்பால் ஏழும் - ஏழு எழுதுகளும், ஈரளபு இசைக்கும் -  இரண்டு மாத்திரை அளவின தாக ஒலிக்கும் நெட்டெழுத்துகள் என்று முன்னாசிரியர் மொழிவர். 

விளக்கம் : எழுத்துகளை குறில், நெடில் என இரண்டாகப் பகுத்த முன்னாசிரியர் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவை வைத்து குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை எனவும் அளவுகோல வைத்தார்.

ச..ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி, நாகலாபுரம்.

Monday, 2 May 2022

தொல்காப்பியம் - சார்பெழுத்துகள்

சார்பெழுத்துக்கள்

 2. 

அவைதாம் 

குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன.

தெளிவுரை : 
அவைதாம் - சார்பு எழுத்துகள் மூன்று என்று சொல்லப்பட்ட அவை
குற்றியல் இகரம் - குறுகிய ஒலியை உடைய இகரமும்
குற்றியல் உகரம் - குறுகிய ஒலியை உடைய உகரமும்
ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் - ஆய்தம் என்று இலக்கணம் ஆய்ந்த புலவர் பெருமக்களால் ஆராய்ந்து வழங்கப்பட்ட மூன்று புள்ளி வடிவினதாகியதும் ஆகிய மூன்றும்
எழுத்து ஓர் அன்ன - எழுத்தோடு ஒப்ப அமைந்ததாம்.

பொருள் : சார்ந்துவரும் மரபை உடைய எழுத்து சார்பெழுத்து என்று முன் நூற்பாவில் சொல்லப்பட்ட அவை, குற்றியலிகரம். குற்றியலுகரம் ஆய்தம் என்றழைக்கப்படும் மூன்று கூறாகிய புள்ளி ஆகிய மூன்றும் ஆகும் இவை முன்னர் கூறிய முப்பது எழுத்துக்களோடு ஒரு தன்மையாக விளங்கும்.

விளக்கம்  (1)

: சார்பெழுத்துக்கள் என்பவை தனித்தியங்கும் தன்மை இல்லாதவை. பிற எழுத்துக்களைச் சார்ந்தே அவை இயங்கும். அதாவது தம்முடைய ஒலிப்புக் கால அளவாகிய மாத்திரையை இழந்து, முந்தைய எழுத்தின் சார்பாக நின்று, குறுகி ஒலிக்கும். இகரம் குறுகி ஒலிப்பது, குற்றியலிகரம். ஆய்தம், தனித்தியங்காது. அது அஃகி, எஃகு, கஃறு போன்று பிறவற்றைச் சார்ந்து ஒலிக்கும். எனவே இதுவும் சார்பெழுத்து ஆயிற்று.

தொல்காப்பியர் காலத்தில் மூன்று புள்ளிகளையிட்டு எழுதும் வழக்கத்தை 'ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப் போல மூன்று புள்ளி (ஃ) வடிவிற்றென்பது' என்று நச்சினார்க் கினியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிவம் நச்சினார்க்கினியர் காலத்திலேயே மாறிவிட்டது. இதனை 'இக்காலத்தார் நடுவு வாங்கி இட்டெழுதுப' எனும் அவர் கூற்று உறுதிசெய்யும். இதற்கேற்ப 8 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட காசக்குடிச் செப்பேட்டில் வெஃகா என்ற சொல் 'வெ÷கா' என்று பொறிக்கப் பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

Sunday, 1 May 2022

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் -

1.நூன்மரபு

எழுத்தின் இலக்கணம் உணர்த்தும் பகுதி என்பதால் எழுத்ததிகாரம் என அழைக்கப்படுகிறது. இதன் முதல் இயல் நூன்மரபு ஆகும். நூலின் மரபு உணர்த்தும் பகுதி 'நூன் மரபு' ஆயிற்று. மொழிக்கு உறுப்பாகிய எழுத்துக்களால் ஆக்கப்படுவது நூல். எனவே 'நூன்மரபு' என்பது, ஆகுபெயராகி எழுத்துக்களின் மரபைக் குறித்தது. நூன்மரபில் எழுத்துக்களின் வகை, அவற்றின் பெயர், மாத்திரை, எண், வடிவு, மயக்கம், பிற மரபுகள் ஆகியவை கூறப்படுகின்றன.

 1. 
எழுத்துகளின் வகை
முதலெழுத்து.

எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃதென்ப

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

தெளிவுரை

எழுத்தெனப் படுப - எழுத்து  என்று சிறப்பித்துக் சொல்லப்படுபவை 
அகரம் முதல் - அகர எழுத்தை  முதலாகக் கொண்டு
னகர இறுவாய் - 'ன'கர ஒற்றெழுத்தை இறுதியாக உடைய (உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18. (12+18=30) முப்பது எழுத்துகள் என்று முன்னாசிரியர் சொல்வர். 

சார்ந்து வரல் மரபின் - முதல் எழுத்தைச் சார்ந்து வருதலை தனக்கு இயல்பாக உடைய 
மூன்று அலங்கடையே -  குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் மூன்று எழுத்துக்களும் நீங்கலாகத் தமிழ் எழுத்துக்கள் முப்பது மட்டுமே.

விளக்கம் :

இலக்கணத்தில் தேர்ந்த சான்றோரால் எழுத்து என்று சிறப்பித்துச் சொல்லப் படுபவை அகரத்தை முதலாகக் கொண்டு னகரத்தை இறுதியாக உடைய அதாவது உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆகிய முப்பது எழுத்துகள் மட்டுமே என்று கூறுவர். 

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி, நாகலாபுரம்.

(படம் சொல்லும் செய்தி கோவை பேரூர் ஆதீனம் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற தொல்காப்பியர் சிலை திறப்புவிழாவில் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநரும், தமிழ்ச் செம்மொழி உயராய்வு மையத்தின் தமிழ் அறிஞருமான முனைவர் பேரா.ப. மருதநாயகம் ஐயா அவர்களோடு)