இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 26 March 2022

திருக்குறளும் மனுதர்மமும் - நாவலர் இரா.நெடுஞ்செழியன்


திருக்குறளும் மனுதர்மமும்

நாவலர் நெடுஞ்செழியன்
வள்ளுவர் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்துகள் சிலவற்றைப் பரிமேலழகர், தம் உரையில் புகுத்தியுள்ளார் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக் காட்ட இயலும்.
பரிமேலழகர், திருக்குறளுக்கு உரை எழுதத் துவங்கும்போதே, எடுத்த எடுப்பிலேயே, “அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கிய ஒழித்தலும் ஆம்.’’ என்றும், “ஒழுக்கமாவது, அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப் பட்ட பிரமசாரியம் முதலிய நிலை களின்று அவ்வவற்றிற்கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.’’ என்றும், “அதுதான் (அவ்வொழுக்கம்) நால் வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறு பாடுடைமையின், சிறு பான்மையாகிய அச் சிறப்பு இயல்புகள் ஒழித்து, எல்லோர்க்கும் ஒத்தவின் பெரும்பான்மையாகிய பொது வியல்புபற்றி, இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடமொழியாளராகிய மனு, தமது சாத்திரத்தில் கூறுகின்ற ‘தருமம்’’ என்பது வேறு, வள்ளுவப் பெருந்கையார் திருக்குறளில் கூறுகின்ற ‘அறம்’ என்பது வேறு, மனுவின்படி மனிதகுலம் நான்கு வருணத் தாராகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு வகையான சட்டவிதியின் கீழ் நீதிகளும் தன்மையதே ‘தருமம் ஆகும். ஆனால், வள்ளுவரின் கருத்துப்படி மனிதகுலம் அனைத்திற்கும் அன்புநெறி, அருள்நெறி, அறிவு நெறி, பண்பு நெறி, ஒழுக்க நெறி போன்றவற்றின் கீழ் விதிக்கப்பட்ட கடமையைக் கூறும் தன்மையதே ‘அறம்’ ஆகும்.
(1) எல்லாம் மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட. ``பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’’ (குறள் 972) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
(2) கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் பிறந்திருந்து கற்றவர்களைப் போல பெருமை யுடையவராகக் கருதப்பட மாட்டார்கள் என்னும் கருத்துப்பட.... “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும், கற்றார் அனைத்திலர் பாடு’’ (குறள் - 409) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். ஆனால், ``பிராமணர் இந்த மனுநூலைப் படிக்கலாம். மற்ற வருணத்தார்க்கு ஒது விக்கக்கூடாது.’’ (மனு த.சா.அ.1சு.103) என்றும், ``சூத்திரன் பக்கத்தில் இருக்கும் போது, வேதம் ஓதக் கூடாது.’’ (மனு த.சா.அ.1 சு.99) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
(3) ஒருவர்தாம் தேடிய பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் நாம் மட்டும் தனியாக இருந்து, உண்ணுதல் என்பது வறுமையால் இரத்தலைக் காட்டிலும் கொடிது ஆகும் என்னும் கருத்துப்பட இரத்தலின் இன்னாதது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்’’ (குறள் 229) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், “சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையுங்கூட கொடுக்கலாகாது’’ (மனு த.சா.அ.4 சு.80) என்று கூறு வது மனுவின் தருமம் ஆகும்.
(4) பசுவின் நாவறட்சியைப் போக்க, நீர் தாரீர் என்று பிறரை நோக்கி இரந்து கேட்டாலும் அப்படி இரத்தலைவிட இழிவான செயல் வேறொன்றும் இல்லை என்னும் கருத்துப்பட “ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு, இரவின் இனி வந்தது இல்’’ (குறள் - 1066) என்பது வள்ளுவரின் அறம் ஆகும்.
‘சுழன்றும் ஏற்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’’ (குறள் 1031) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், “பயிர்த் தொழில் நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்டதாகும்.’’ (மனு த.சா.அ.10 சு.84) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
(6) ஒருவன் எப்பொழுது பொய் சொல்லாமல் இருப்பானேயானால், அவன் வேறு அறங்களைக் கூட எப்பொழுதும் செய்யவேண்டியதில்லை. அதுவே, எல்லா அறங்களின் பயனையும் தரும் என்னும் கருத்துப்பட “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற, செய்யாமை, செய்யாமை நன்று’’ (குறள் 297) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், “பல மனைவிகளையுடையவன் அவர்களின் புணர்ச்சிக்காவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை’’ (மனு த.சா. அ.8, சு.112) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
(7) உயிர்களைக் கொன்றும் நெய் முதலிய பொருள்களைச் சொரிந்தும் ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட ஒரு உயிரின் உயிரைப் போக்கி, அதன் ஊனை உண்ணாமல் இருத்தல் நல்லது ஆகும் என்னும் கருத்துப்பட ``அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன், உயிர் செகுத்து உண்ணாமை நன்று’’ (குறள் 259) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.’’
ஆனால், “உண்ணத்தக்க உயிர்களை நாள்தோறும் கொன்று உண்டாலும், பாவத்தை பிராமணன் அடையமாட்டான் பிரமனாலேயே உண்ணத்தக்க வையும், கொல்லத்தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றன.’’ (மனு த.சா.அ.5, சு.30) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
(9) எந்த ஒரு பொருளைப்பற்றி எவரெவர் என்ன சொல்லக் கேட்டாலும் கேட்டவாறு அப்படியே அதனை ஏற்றுக் கொண்டு விடாமல், அந்த பொருளினுடைய உண்மையான பொருளைக் கண்டறிவதே அறிவுடைமையாகும் என்னும் கருத்துப்பட ``எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’’ (குறள் 423) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால், ``வேதத்தைக் கருதி என்றும் தரும சாத்திரத்தை சுமிருதி என்றும், அறியத்தக்கன அவ்விரண்டையும் ஆராய்ச்சி செய்து மறுப்பவன் நாத்திகன் ஆவான்’’ என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
(10) குற்றம் இன்னதென்று ஆராய்ந்து பார்த்து, யார் பக்கமும் சாயாமல், நடுவு நிலைமை பொருந்துமாறு நின்று யாரிடத்திலும் குற்றத்திற்கான தண்டனையை ஆராய்ந்து அதற்கு ஏற்றபடி நீதி வழங்குவதே அரசனது செங்கோல் முறையாகும் என்னும் கருத்துப்பட ``ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார் மட்டும் தேர்ந்து செய்வதே முறை’’ (குறள் - 541) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். ஆனால், ``பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதைச் செய்து கொல்லுக. ஆனால், பிராமணன் சூத்திரனுடைய பொருளை அவன் விருப்பப்படி கொள்ளையிடலாம்’’ (மனு த.சா.அ.9 சு.248) என்றும், ``பிராமணன் எத்தகைய குற்றங்களையும் செய்தாலும் அவனைத் தூக்குப் போட வேண்டிய நிபந்தனை ஏற்பட்டால் அவன் தலையை மட்டும் மொட்டை அடிக்க வேண்டும். அதுவே, அவனுக்குத் தூக்குத் தண்டனைக்கு ஒப்பாகும் மற்ற வருணத் தாருக்குக் கொலையே தண்டனை’’ (மனு த.சா.அ.8, சு.379) என்றும், ``அரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனை கொல்ல நினைக்கக் கூடாது’’ (மனு த.சா.க.8 சு.381) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.
இவை மட்டுமல்லாமல் ``பெண்போகம் புலால் உண்ணல், கள் குடித்தல் ஆகிய இவை மனிதர்களுக்கு இயற்கையான குணங்களா கையால், இவைகளைக் குறித்து விதிகள் அவசிய மில்லை’’ என்றும்,
``நான்கு வருணத்தாரின் பெண்களையும் பிராமணன் மட்டும் அவன் விரும்பியவாறு திருமணம் முடித்துக் கொள்ளலாம்’’ என்றும்.
``விவாகக் காலங்களில் பொய் சொல்லலாம்’’ என்றும் ``தனது நாயகன் இறந்து விட்டால், அல்லது புத்திரப் பேற்றை விரும்புகின்ற பெண்ணானவள், விருது காலத்தில் உடம்பில் நெய்யைப் பூசிக்கொண்டு, தன் கணவனது சகோதரரையோ அல்லது அந்தக் குலத்தில் யாரையேனும் புணர்ந்து கொள்ளலாம்’’ என்றும், ``பிராமணன் பெற்றதாய் ஒருத்தியைத் தவிர மற்ற பெண்களையெல்லாம் புணரலாம்.’’ என்றும், வடமொழியாளரின் சுருதிகளும், சுமிருகிகளும் கூறியிருக்கும் தருமங்கள் போன்றவைகள் அனைத்தும், வள்ளுவருக்கு அறவே உடன்பாடில்லாத கருத்தாகும்.

Tuesday, 22 March 2022

மேடைப் பூக்கள் நூல் விமர்சனம் - கவிஞர் ம.கவிக்கருப்பையா

அண்மையில் எமது வையைப் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் பத்மினிபாலா அவர்களது மேடைப்பூக்கள் நூல்குறித்து திரைப்படப் பாடலாசிரியர், பட்டிமன்ற நடுவர், கவிஞர் நூல் விமர்சகர் என பல்துறை வித்தகரான எமதினிய அண்ணன் ம.கவிக்கருப்பையா அவர்களது விமர்சனத்துக்கு நன்றி.

மேடை நாடுகளில் பெண் எழுத்தாளர்கள் அதிகம், நம் நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைந்தளவே உள்ளனர். அதிலும், தேனி மாவட்டத்தில் மிகமிகக் குறைவு.

இந்தச் சூழலில்,பெண் எழுத்தாளராக, கவிஞராக உரு வெடுத்திருக்கும் முனைவர் பத்மினிபாலா வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியவர்.

எத்தனையோ! கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளை நூலாக்கிப் பார்க்க பலபல வருடங்கள் காத்திருந்திருக்கிறார்கள். பற்பலருக்கு, தன் வாழ்நாளில், அது சாத்தியமில்லாமலும் போயிருக்கிறது. ஆனாம் 2019-இல் தான், தன் முதல் கவிதையையே எழுத ஆரம்பித்த இவருக்கு, 2022 - லேயே கவிதை நூல் போட்டு, வெளியிடும் வாய்ப்பமைந்திருப்பது, இறைவனின் ஆசியென்றே கூறலாம்.

தன் உள்ளக் கிடக்கையை சொற்களில் வடித்து அருமையாக கவிதைகளாக் கியிருக்கிறார் கவிஞர்.

தன் பெற்றோர், கணவர், குழந்தைகள் குறித்த கவிதைகள் உணர்வுப் பூர்வமானவை, அவைகள் மூலம் அவர் கொடுத்து வைத்தவர் என்பதை அறியமுடிகிறது.

காதல் கவிதைகள், மற்றும் சமூகம் பற்றிய கவிதைகள் என்று, இந்நூலில் உள்ள கவிதைகள் அனைத்தும் சிந்தனையைக் கிளருவதாக அமைந்திருகிறது. இந்நூலின்

அட்டைப்படம், அச்சாக்கம் ஆகியவற்றின் நேர்த்தி, வையைப் பதிப்பகம் ஒரு கைதேர்ந்த பதிப்பகம் என்பதைக் காட்டுகிறது.

இது, அனைவரும் படிக்க வேண்டிய கவிதை நூல்.

கவிஞருக்குப் பாராட்டுகள்!

தொடர்ந்து நூல்கள் எழுதி தமிழ்த் தொண்டு புரிய வாழ்த்துகள்!

ம.கவிக்கருப்பையா

Sunday, 20 March 2022

உயிரை உருக்கும் தேன்

உயிரை உருக்கு தேன்.

மலையில் தேன் எடுத்து விற்கும் வெள்ளந்தி மனிதன், இன்னொரு மலையில் வாழும் நாயகி. இரண்டு மலைவாசிகள் காதலித்து ஊரின் எதிர்ப்பை மீறி, வாழைமட்டையின் மூலமாக வரம் தர மறுத்த கடவுளையும் தாண்டி காதலர்கள்  திருமணம் செய்து வெற்றி பெற்று சமூக அவலங்களோடு போட்டியிட முடியாமல் வாழ்வை இழந்த நிலையை புடம் போட்டுக் காட்டும் தேன் திரைப்படம் அருமை.

இந்த வெற்றிப் படக் கூட்டனியில் யாரைப் புகழ்வது? நடிகர்கள், இயக்குனர், கதாசிரியர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், என ஒவ்வொருவரும் தங்களது பணியைத் திறம்படச் செய்திருக்கின்றனர்.

பன்னாட்டுக் குழுமங்கள் பணம் சம்பாதிப்பதற்காக மலைப்பகுதியை ஆக்கிரமிப்பதும், கழிவுகளை அருவிநீரில் கலக்கவைத்து மலைவாழ் மக்களின் வாழ்வைச் சீரழிப்பதையும்,

மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கின்ற அரசியல்வாதிகளின் அப்பட்டமான வேடத்தையும்,

அரசுத்துறை அதிகாரிகள் மனிதாபிமானமற்ற நிலையில் குறைவின்றிக் கையூட்டுப் பெறும் மிகக் கேவலமான நிலைப்பாட்டையும் தோலுரித்துக் காட்டும் தேன்.

தனது காதல் மனைவியின் உடல்நலக் குறைவினைப் போக்க அரசு அதிகாரிகளை அணுகி கால் பிடித்துக் கெஞ்சும்  கதாநாயகனின் வெகுளித்தனமான ஒவ்வொரு கட்ட நடிப்பும் உச்சம்...

இயல்பான கிராமத்துப் பெண்ணாகவே மாறி இருக்கின்ற கதாநாயகியின் நடிப்பும், வசனமும், உடல்மொழியும் அதி உச்சம்.

இந்த இருவரையும் தாண்டி இவர்களது குழந்தை தன்னுடைய தாயைப் பறிகொடுத்த நிலையி அழுகின்ற அவலநிலை,

இலவச அமர் ஊர்தியில் அம்மாவின் பிணத்தை ஏற்றுவதற்கு காசு கேட்கின்ற நிலையில் கையேந்தி அழும் குழந்தையின் நடிப்பு வியப்பின் எல்லை...

தேன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒருவர் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாமல் வெளியே வந்தாரென்றால் அவரது இதயம் கல்லால் செதுக்கப்பட்டு இருக்கிறது என்று முடிவு செய்து விடலாம்.

தேன் திரைப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், வசனமும் ஊனில் கலந்து உயிரினை உருக்குகின்றது.

மண் மணம் மாறாத வசனங்கள், சிற்றூர் மக்களின் புழங்கு சொற்கள், நடை, உடை நடவடிக்கைகள், பேச்சுமுறைகள் என அருமையாக திரைக்கதை வசனம் எழுதிய எமது மதிப்பிற்குரிய தோழமை அண்ணன் கவிஞர் ராசி தங்கதுரை அவர்களது வெற்றிப்படக் கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்

Monday, 14 March 2022

தேனி கிட்னி செண்டரில் நூல்வெளியீட்டுவிழா

13-02-2022 இன்று தேனி கிட்னி செண்டர் நடத்திய முப்பெரும்  விழாவில் வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில நானும் அண்ணன் சித்தர் சிவக்குமார், அண்ணன் க.ஜெயராம், அண்ணன் சர்ச்சில்துரை ஆகியோர் கலந்துகொண்டோம். நிகழ்வில் மருத்துவர் காமராசு அவர்கள் எழுதிய "டயாலிசிஸ் பின்னும் வாழ்க்கை இருக்கிறது" என்னும் நூல் குறித்துப் பேசிய இனிய பொழுது...

Friday, 4 March 2022

தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் - திண்டுக்கல்

தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் 03,04-03-2022 ஆகிய இரண்டு நாட்களாக தின்ண்டுக்கல் ஆட்சியர் வளாக அரங்கில நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 04-03-2021 ஆம் நாள் ஆட்சி மொழி பயிலரங்கில் ஓய்வு பெற்ற துணை கலெக்டர் வரதராசன், 'அலுவலக குறிப்புகள் வரைவுகள், செய்முறை ஆணைகள் தயாரித்தல்' எனும் தலைப்பில் பேசினார்.

உலகத் தமிழ்ச்சங்க மேனாள் இயக்குனர் சந்திரா, 'ஆட்சி மொழி ஆய்வும் குறைகளைவு, நடவடிக்கைகளும்'எனும் தலைப்பிலும், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, ‘ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள்' எனும் தலைப்பிலும் பேசினர்.

இதில் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய பழநி மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் திவ்யா, திண்டுக்கல் தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக உதவியாளர் பாபுவுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலா ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இலதா, நேர்முக உதவியாளர் இராணி, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் குயிலன், எழுத்தாளர் இளங்கோவன், தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர் இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.