இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 26 August 2021

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - ச.ந.இளங்குமரன்


தேனி மாவட்டத்தில் வரலாற்றுக் காலத்தில் குழந்தைநகர் என்றும், தற்காலத்தில் பெரியகுளம் என்றும் போற்றப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், அகமலையின் அடித்தளமாகவும் இருக்கின்றது.

பெரியகுளத்தை வளப்படுத்தும் வராக நதியின் தென்கரையில்   அமைந்திருக்கிறது அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில். 

இக்கோயில் சோழர்காலக் கட்டடக் கலைக்குச் சான்றாகவும்,  தேனிமாவட்டத்தின் பெரியகோயில் என்றும் பேசப்பட்டு வருகிறது. முழுமைக்கும் கற்களால் ஆன கோயில் இது. இக்கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

ஒரு காலத்தில்  சோழ நாட்டிற்கு உட்பட பகுதியாக பெரியகுளம் இருந்திருக்கிறது.  சோழ மன்னன் இராசேந்திர சோழன் என்பவன் ஆட்சி செய்து வந்தான், இராசேந்திரச் சோழன் ஒருமுறை பெரியகுளத்திற்கு அருகே உள்ள அகமலைக் காட்டுப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். வேட்டையின் போது அவன் எய்த அம்பு ஒன்று, குட்டிகளை ஈன்றிருந்த பன்றியின் மீது பட்டதல்  பன்றி இறந்து போனது. தன் தாயை இழந்த பன்றிக் குட்டிகள் பசியால் துடித்தன. பசிக்குப் பால் கிடைக்காமல் சத்தமிட்டன. 

பன்றிக் குட்டிகளின் கதறலைக் கண்ட மன்னன், ‘தாய்ப் பன்றியைக் கொன்று, அதன் குட்டிகளுக்குப் பால் கிடைக்காமல் செய்து விட்டோமே’ என்று மனம் வருந்தினான்.

இந்தச் சூழலில்  அந்தப் பன்றிக் குட்டிகளின் மேல் இரக்கம் கொண்ட குன்றக் கடவுள் குமரன் அவ்விடத்தில் தோன்றி, பன்றிக்குட்டிகளின்  பசியைப் போக்கினார். குட்டிகளின் மேல் பரிவு கொண்ட குமரக் கடவுளின் கருணையைக் கண்ட மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்ற தனது பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கு அருளிய முருகப்பெருமானின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், அகமலையின் கீழ் தரைப்பகுதியில் புதிய கோயில் ஒன்றைக் கட்டினார்.

அந்த ஆலயத்தில்  சிவபெருமான், மலைமகள் (பார்வதி) ஆகியோருடன் முருகப்பெருமானையும் சேர்த்து மூன்று தெய்வங்களை முதன்மையான தெய்வங்களாக்கி வழிபட்டான் என்று இக்கோயில் அமைக்கப்பட்ட தல வரலாறு சொல்கிறது.

அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் இக்கோயில் குறித்த சிறப்புனைப் பாடியுள்ளார். 

இராசேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்தக் க இக்கோயிலில், மூலவராக இறைவன் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரை ‘இராசேந்திர சோழீசுவரர்’ எனும் பெயரில் வழிபடுகிறார்கள். அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் தனித கருவறையில் இருக்கிறார். மற்றொரு கருவறையில் முருகப்பெருமான் ஆறு முகங் களுடன் ‘பாலசுப்பிரமணியாக’ வள்ளி-தெய்வானை யுடன் சேர்ந்து அருள்காட்சி தருகிறார்.

இந்தக் கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரையிலும், நேரெதிராகப் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் இருக்கின்றன. காசிக்கு அடுத்ததாக இங்கு மட்டுமே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பயணிக்கிறது என்கின்றனர். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், பெரியகுளம் முருகப் பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

திருமணத்தடை உள்ளவர்கள், வராக நதியில் நீராடி, பின்னர் கோவிலுக்குச் சென்று, இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் அவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும். இதே போல், குழந்தைப்பேறு வேண்டும் கணவன் - மனைவி இருவரும் இங்கு நீராடிவிட்டு, கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பெரியகுளம் மக்களிடையே பேச்சு வழக்காக இருக்கிறது.

Thursday, 19 August 2021

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். தமிழ்நாடு முதல்வர்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்துச் சாதியினரும் வழிபாடு நடத்தலாம் என்று ஆணை வழங்கிப் பணி நியமனமும் வழஙமிகிய தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களுக்கு நிறைந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

ழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோயில்கள்  ஆகம முறைப்படி கட்டப்பட்டு, ஆகம முறைப்படியே பூசைகள் நடத்தப்படுகின்றன; வேத முறைப்படியல்ல.
தமிழக அரசு அமைத்துள்ள பயிற்சி மையங்களில் ஆகம முறைகள், தமிழில் வழிபாடு ஆகியவற்றில் நன்கு பயின்று சான்றிதழ்கள் பெற்ற பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்கள் 38 கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்து ஆணை பிறப்பித்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்.
திருநாவுக்கரசர், இராமானுசர் போன்றவர்கள் காலத்திலிருந்து வள்ளலார், பெரியார் காலம் வரை இறைவழிபாட்டில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதையும், தமிழில் வழிபாடு நடத்தப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்த கனவு இப்போது நனவாகியுள்ளது.  இது உள்ளபடியே பெருமையைத் தருகிறது. அதே நேரம் இச்செயல்பாட்டுக்கு எதிராக சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்டவர்கள் எதிர்ப்புக் கூச்சலிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

குறிப்பாக, சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் முடிவு தவறானது என்றும், இந்த ஆணையை திரும்பப் பெறாவிட்டால் உரிய நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என தமிழக அரசை மிரட்டுவது வெட்கக் கேடானதாகும். 

2011ஆம் ஆண்டு இந்திய அரசு எடுத்த மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி 133கோடி மக்களில் சமற்கிருத மொழியை எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,821 மட்டுமே ஆகும். தமிழ்நாட்டில் இவர்களின் எண்ணிக்கை வெறும் 803 ஆகும். இவர்களில் ஆண்கள் 402பேரும், பெண்கள் 401பேரும் ஆவார்கள். அர்ச்சகர்களாக பெண்களை ஆதிக்க சாதியினர் அனுமதிப்பதில்லை. எனவே, தமிழ்நாட்டில் சமற்கிருதம் தெரிந்த அர்ச்சகர்களின் எண்ணிக்கை வெறும் 402 மட்டுமே ஆகும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள 32,000க்கும் மேற்பட்ட கோயில்களில் வடமொழியில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களில் மிகப்பெரும்பாலோருக்கு வடமொமொழி தெரியாது என்பதே அப்பட்டமான உண்மையாகும். அது இப்போது வெளிப்பட்டுள்ளது. 

சமற்கிருத மந்திரங்களைத் தமிழிலேயே எழுதி வைத்துக்கொண்டு தப்பும், தவறுமாக ஓதுகிற அர்ச்சகர்களே இங்கு அதிகம். எனவே, வடமொழியில் அர்ச்சனை செய்பவர்களுக்குத் தேர்வு நடத்தி, அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும். தேர்வு பெறாதவர்களை நீக்கிவிட்டு அந்த இடங்களில் அரசு பயிற்சி மையங்களில் தமிழ் அர்ச்சனை செய்வதில் தேர்ச்சிப் பெற்றவர்களை உடனடியாக நியமிக்கும்படி முதல்வர் அவர்களை தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம்.

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Wednesday, 18 August 2021

எல்லாப் புகழும் தமிழுக்கே - ச.ந.இளங்குமரன்

எல்லாப் புகழும் தமிழுக்கே...

தேவாரம் பகுதியைச் சேர்ந்த அறிவுச்செல்வம் ஜெயமணி இணையரின் செல்வக்குழந்தைகள்  சாலினி, சாமினி, ரோசினி ஆகிய 3 பேரும் இன்று திருக்குறளில் வலம் வருகின்றனர். 1330 குறட்பாக்களையும் சுமார் 1 - 30 மணி நேரத்தில் சொல்லி சாதனை படைத்து வருகின்றனர். இந்தக் குழந்தைகள் நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றத்தில் திருக்குறள் முற்றோதல் செய்து மன்றத்தின் சார்பில் 1330  ரூபா பரிசு பெற்றனர். பின்பு தேனி வையைத் தமிழ்ச்சங்கம்  மூலமாக ரூபாய் ஈராயிரம் தொழிலதிபர் கல்வி வள்ளல் கருணாகரன் அவர்களால் கொடுத்துப் பெருமைப் படுத்தப்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளுக்கும் வையைத் தமிழ் சங்கத்தின் மூலமும், நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றத்தின் மூலமாகவும் விருதுகளை வழங்கி சிறப்பித்த நிலையில்,  தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் போட்டியிலும் நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு போட்டியில் கலந்துகொண்டு  வெற்றி  பெற்று அரசின் பரிசுத்தொகை ரூபாய் 10 ஆயிரம் பரிசு பெற்றுள்ளனர். தற்பொழுது இந்த குழந்தைகளுக்கு சென்னை தமிழ்நாடு திருவள்ளுவர் கலை இலக்கியச் சங்கம் சாதனையாளர் விருது அளித்து சிறப்பித் இருக்கின்றது. இந்த குழந்தைகளைப் பற்றிய நீண்ட கட்டுரை தம்பி கதிர்மாயக் கண்ணன் அவர்களின் மூலம் தினத்தந்தியில் வெளியானது. தற்போது தினமலர் நாளிதழில் அக்கம்பக்கம் பகுதியில் இந்தக் குழந்தைகளைப் பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த செய்தியை பார்த்தவுடன் எனக்கு வியப்போடு கண்ணீர் பெருக்கெடுத்தது.   காரணம் இந்த மூன்று குழந்தைகளையும் அரும்பாடுபட்டு திருக்குறளின் பால் பற்றுக் கொள்ள வைத்து அந்த பெற்றோர்களுடைய  பேட்டியில் "எனக்கு திருக்குறளில் ஆர்வம் ஏற்படக் காரணம் குறளாய முறையில் திருமணம் நடத்தி வரும் வையைத் தமிழ்ச்சங்கம் இளங்குமரன் என்று எனது பெயரைப் பதிவு செய்துள்ளதை பார்த்தேன். கண்கள் குளமாகின. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தமிழுக்கும் குறளுக்கும் தொண்டு செய்வதையே இலக்காக கொண்டு  மொழிக்கும், இனத்திற்குமான மீட்சியைக் கருத்தில் கொண்டு இயங்கி வருகின்ற இளங்குமரன் எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ நடத்திவைத்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அந்தத் தாய் ஜெயமணி அவர்கள் திருக்குறளின் பால் பற்று கொண்டு தன்னுடைய குழந்தைகளை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் நாம் செய்கின்ற தமிழ்த்தொண்டு ஏதோ ஒரு மூலையில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது, எங்கோ ஒரு மூலையில் அது விதையாகி முளைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். அதே பொழுது இதைப் போன்று எத்தனை பெற்றோர்கள் முன்னெடுத்து இருக்கிறார்கள்? என்று கேள்வியும் எனக்குள் எழுகிறது. இயல்பாக ஜெயமணி அம்மையார் அவர்களிடம் இருந்த தமிழ் உணர்வு அந்தத் திருமணத்தின் மூலமாக முடுக்கி விடப்பட்ட தாகவே எண்ணுகிறேன். இதில் என் பங்கு எதுவும் இல்லை. எல்லாமே தமிழின் பங்கு, திருவள்ளுவர் பங்குமாம். என்னை இவ்வழியில் உருவாக்கிய என் ஆசான்மார்கள் ச.சிவசங்கர், இரா.இளங்குமரனார்க்கும், தமிழ்ப்பெருமாட்டி ஜெயமணி அம்மையார்க்கும் அவரின் கணவர் அறிவுச் செல்வத்திற்கும் எனது நன்றியும் வாழ்த்தும்.

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன்.

Thursday, 12 August 2021

கேரளா திருவள்ளுவர் ஞானமடம் நிறுவனர் சிவானந்தர் அவர்களோடு ச.ந.இளங்குமரன்

கேரள திருவள்ளுவர் ஞானமடத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.சிவானந்தர் அவர்கள் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பலனிற்றி இறந்து விட்டார் . 09/08/2021.

அன்னாரின் இறப்பு அனைத்து ஞானமடத்திற்க்கும் பேரிழப்பு , திருக்குறள் பற்றாளர்களுக்கும், வள்ளுவ வாழ்வியலாளர்களுக்கும், தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் பேரிழப்பாகும்.

ஐயா சிவானந்தர் அவர்கள் நடத்திவந்த ஞானமடத்திற்குச் சென்று நேரடியாகவே ஒரு நிகழ்வில் கலந்திருக்கிறேன். சென்னை, கன்னியாகுமரி, தஞ்சை உட்பட பலநிகழ்வுகளில் சந்த்திதுப் பேசியிருக்கிறேன். அத்தோடு, தேனி வையைத் தமிழ்ச்சங்கம், நாகலாபுரம் திருவள்ளுவர் மன்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்தி இருக்கிறேன்.

அவரின் குடும்பத்தார் மற்றும் ஞானமடத்தின் பொறுப்பாளர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கள் மற்றும் ஆறுதல் கூறிக்கொள்கிறோம் -   

புலவர் ச.ந.இஇளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம்-தேனி, & திருவள்ளுவர் மன்றம் நாகலாபுரம்.
98423 70792

************************************

திருவள்ளுவர் எங்கள் ஞானகுரு திருக்குறள் எங்கள் வேதம்!

இது கேரள ஆச்சரியம்

திருவள்ளுவரை நாம் எந்த அளவு மதிக்கிறோம்? கேரளாவில் அவர் கடவுள். வள்ளுவ மதம் அங்கே வேகமாக வளர்கிறது.

வாழ்க்கைக்கான அத்தனை அறங்களையும் உள்ளடக்கியுள்ள நூல் திருக்குறள். அதை வெறும் மனப்பாடப் பாடலாக பிள்ளைகளுக்கு போதிப்பதைத் தவிர வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் தமிழர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் கேரளத்தில் திருவள்ளுவர் ஒரு இறைவனாகவே கொண்டாடப்படுகிறார். திருக்குறள் வேதமாக போற்றப்படுகிறது.

கேரளாவின் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறது ஆதிபகவான் திருவள்ளுவா¢ கோயில். திருக்குறளை மந்திரமாக ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை தெய்வமாக வணங்குகிறார்கள். திருவள்ளுவர் கோயிலை ‘ஞானமடம்’ என்கிறார்கள். கருவறையில் வள்ளுவரின் சிலை அல்லது படம் உள்ளது. வெளியே கல்விளக்குத் தூண். எந்நேரமும் பஞ்சமுக விளக்குகள் எரிகின்றன.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல வள்ளுவ மதத்தை கேரளாவில் ஸ்தாபித்திருக்கிறார் இடுக்கியை அடுத்த மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த சிவானந்தர். தனியொரு மனிதராக இதை சாதித்த சிவானந்தர், குடுமியும் தாடியுமாக குட்டி திருவள்ளுவரைப் போலவே இருக்கிறார். ‘தமிழ் நமக்கு அம்மா மொழி. அம்மா மொழியில் வல்லிய கவிதை பாடிய திருவள்ளுவர் ஞானகுரு. திருக்குறள் வேதப்புத்தகம். ஞானமடம், தேவாலயம்’ - இதுதான் வள்ளுவ மதத்தின் உள்ளடக¢கம்.

சிவானந்தரின் பெற்றோர் கிறிஸ்தவர்கள். மிகவும் ஏழைப்பட்ட குடும்பம். 8 பிள்ளைகளில் சிவானந்தருக்கு மட்டும் கிறிஸ்தவத்தில் பிடிப்பு இல்லை. ‘‘பூப்பாறை தேயிலைத் தோட்டத்தில 1974ல வேலை செஞ்சேன். அங்க ஒரு தமிழர் டீக்கடை வச்சிருந்தார். அந்தக் கடையில இயேசு, திருவள்ளுவர், புத்தர் படங்களைப் போட்டு ‘உலகத்தைத் திருத்திய உத்தமர்கள்’னு எழுதி இருந்தது.

 எனக்கு இயேசுவையும் புத்தரையும் தெரியும். தாடி மீசையோட உக்கார்ந்திருந்த வள்ளுவரை அதுவரை பார்த்ததில்லை. ஆனா, பார்த்ததும் பெரிய மரியாதை வந்துச்சு. கடைக்காரர்கிட்ட விசாரிச்சேன். ‘அவரு எங்க நாட்டில பெரிய புலவர். பேர் திருவள்ளுவர், அவர் எழுதிய திருக்குறள் புகழ்பெற்ற புத்தகம்’னு சொன¢னார்.

ஆறு மாதமா கடை கடையா அலைஞ்சேன். கடைசியா வெண்ணைக்குளம் நாராயண குரூப் மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகம் கிடைச்சது. ஒரு மாசம் படிச்சேன். நான் தேடுன எல்லாமும் அதில் இருந்தது. அப்பவே வள்ளுவர்தான் ஞானகுருன்னு முடிவு பண்ணிட்டேன். திருவள்ளுவர் படம் வாங்கினேன். 1975 சித்திரை முதல¢ தேதி, நான் வேலை செஞ்ச சேனாபதி கிராமத்தில திருவள்ளுவர் படத்தை வச்சு வணங்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வரத் தொடங்கினாங்க’’ என்கிறார் சிவானந்தர்.

வள்ளுவரை ஏற்றுக் கொண்டவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. மது, புகையிலை பொருட்களைப் பயன¢படுத்தக்கூடாது. பொய், களவு செய்யக்கூடாது. 33 வருடத்தில் திருவள்ளுவர் சாட்சியாக ஏராளமான காதல் திருமணங¢கள் நடந்துள்ளன. சிவானந்தரும் சரஸ்வதியுமே காதல் தம்பதி தான். ‘‘சரஸ்வதிக்கு சங்கிலி வேதனை நோய் இருந்தது. கோயில், குளம்னு அலைஞ்சும் நோய் தீரல. கடைசியா அவளோட அப்பா, எங்க திருவள்ளுவர் கோயிலுக்கு கூட்டி வந்தார். கொஞ்ச நாள்ல நோய் சரியாயிருச்சு. பிறகு வள்ளுவ மதத்துக்கே குடும்பத்தோட வந்துட்டா. ஒரு கட்டத்தில காதல்... கல்யாணம். இப்போ ரெண்டு குழந்தைங்களும் பிறந்தாச்சு’’ - சிரிக்கிறார் சிவானந்தர்.

ஞானமட திருமணத்தில் தாலி இல்லை. மோதிரம் மாற்றுவதும் இல்லை. மடத்தில் இருக்கும¢ திருமணப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். பெற்றோரும் மடபதியும் வாழ்த்த, இல்லற அதிகாரத்தில் உள்ள திருக்குறள் ஓதப்படும். அவ்வளவே! இறந்தவர்களை அடக்கம் செய்ய தனி இடுகாடு உண்டு. கோயிலில் உடலை வைத்து, நிலையாமை பற்றிய குறள்களை ஓதி, இறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து புதைக்கிறார்கள்.

‘‘திருவள்ளுவரை நாடி வந்த அனைவரும் ஒடுக்கப்பட்ட மக¢கள். அவங்க பிரதான உணவே மாமிசம்தான். கேரளாவில் எருமை மாமிசம்கூட சாப்பிடுவாங்க. சாராயம், கள்ளுன்னு போதைய போட்டுட்டு படுத்துருவாங்க. வள்ளுவர் சொன்னதை ஏத்துக்கிட்டு இப்ப சைவமாகிட்டாங்க. பல ஆயிரம் இளைஞர்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிச்சு நிம்மதியா வாழுறாங்க’’ என்கிறார் சிவானந்தர்.
ஆனால் ஞானமடங்கள் எழும்பத் தொடங்கியபோது இந்துத்துவ, கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்த்தன.

மடங்கள் உடைக்கப்பட்டன. மலையாள ஆர்வலர்கள் பலர், ‘தமிழ்நாட்டுக் கவிக்கு கேரளாவில் கோயிலா’ என்று கொதித்தனர். எல்லோருக்கும் பதில் சொன்னார் சிவானந்தர். ‘இன்றைக்கு இருக்கிற மதங்களின் பிதாக்கள் எல்லாம் இந்த நாட்டில் பிறந்தவர்களா? எங்கெங்கோ இருந்து வந்தவர்களை கடவுளின் அவதாரங்களாகவும், வழிகாட்டிகளாகவும் ஏற்றுக்கொண்ட நீங்கள் எங்களைக் குறை சொல்லாதீர்கள்’ என்றார். எதிர்ப்புகள் ஒடுங்கின.

கார்த்திகை மாதம் திருவள்ளுவருக்கு மாலை அணியும் திருநாள் நடக்கிறது. சபரிமலை செல்வது போலவே மாலை அணிந்து, 41 நாள் விரதமிருந்து தலைமை ஞானமடமான கூர்மலைக்கு யாத்திரை செல்கிறார்கள். கூர்மலை உச்சியில் பூக்களால் வள்ளுவர் சிலையை அலங்கரித்து வணங்குகிறார்கள்.

ஞானமடங்களின் ஆண்டு விழாக்களும¢ திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் செண்டை மேளம் முழங்க கொடியேற்றப்படும். பச்சைநிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம். இதுதான் வள்ளுவ மதத்தின் கொடி. கொடியேற்றலுக்கு பின் ஜெபம். மதியம் அனைவருக்கும் சம போஜனம். இரவு தாளப்பொலி. ஆண்கள் திருவள்ளுவரை சுமந்து வர, பெண்கள் பச்சை, சிவப்பு உடை அணிந்து பூக்கள் நிரம்பிய தாம்பாளத்தில் விளக்கேற்றி ஊர்வலமாக வருவார்கள். வள்ளுவரையும், திருக்குறளையும் போற்றி 300க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதித் தொகுத்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் தினமும் இருவேளை ஞானமடத்தில் சமூக ஜெபம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு மடத்துக்கும¢ ஒரு மடபதி. சிவப்பு வேட்டி, பச்சை மேலங்கி. இதுவே மடபதியின் சீருடை. மடபதிகளை மக்கள் ‘ஆச்சார்யா’ என்று அழைக்கிறார்கள்.

‘‘71 ஜாதியை சேர்ந்தவுங்க ஞான மடத்தில் அங்கமா இருக்காங்க. இங்க வந்த பின்னாடி யாருக்கும¢ ஜாதி, மத அடையாளமில்லை. 2015க்குள்ள கேரளாவில் உள்ள அத்தனை கிராமத்திலயும் எங்க ஆதிபகவானுக்கு ஞானமடம் கட்டணும்ங்கிற இலக்கோட செயல்படறோம்’’ என்ற சிவானந்தரை இடைமறித்து, ‘‘உங்களில் எத்தனை பேருக்கு 1330 திருக்குறளும் தெரியும்’’ என்றோம். ‘‘அத்தனை குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிச்சு பரிசு வாங்கறதால என்ன பயன்?

அந்த வேதப்புத்தகத்துல உள்ள பத்து குறளை ஆழப் படிச்சு, அந்தக் கருத்துகளை மனசுக்குள்ள வாங்கி, அதன்படி நடந்தாப் போதும்... அதைத்தான் நாங்க படிப்பிக்கிறோம்’’ -பொட்டில் அடித்தது போல் சொல்கிறார் சிவானந்தர். வள்ளுவர் சொன்னதை ஏத்துக்கிட்டு பல ஆயிரம் இளைஞர்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிச்சு நிம்மதியா வாழுறாங்க

 மலையாள ஆர்வலர்கள் பலர், ‘தமிழ்நாட்டுக் கவிக்கு கேரளாவில் கோயிலா’ என்று கொதித்தனர்

          தமிழர்களாகிய நாம் திருவள்ளுவரை எந்த அளவு போற்றி நடக்கிறோமோ தெரியாது. ஆனால் கேரளாவில் சில பகுதிகளில் அவர் கடவுள். வள்ளுவ மதம் அங்கே வேகமாக வளர்கிறது. திருக்குறள் வேதமாகப் போற்றப்படுகிறது.
          வாழ்க்கைக்கான அத்தனைஅறங்களையும் உள்ளடங்கியுள்ள நூல் திருக்குறள். அதை வெறும் மனப்பாடப் பாடலாக பிள்ளைகளுக்குப் போதிப்பதைத் தவிர வாழ்க்கையில் கடைபிடிக்கும் தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
          ஆனால் கேரளாவில் கோட்டயம், இடுக்கி, எர்ணா குளம், மூவாற்றுப்புழா போன்ற பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆதிபகவான் திருவள்ளுவர் கோயில் இருக்கிறது. திருக்குறளை மந்திரமாக ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை தெய்வமாக வணங்குகிறார்கள். திருவள்ளுவர் கோயிலை ஞான மடம் என்கிறார்கள். கருவறையில் வள்ளுவரின் சிலை அல்லது படம் உள்ளது. வெளியே கல் விளக்குத் தூண். எந்நேரமும் பஞ்சமுக விளக்குகள் எரிகின்றன.
          இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல வள்ளுவ மதத்தை கேரளாவில் ஸ்தாபித்திருக்கிறார்.இடுக்கியை அடுத்த மூவாற்றுப் புழாவைச் சேர்ந்த சிவானந்தர். தனியொரு மனிதராக இதைச் சாதித்த இவர், குடுமியும் தாடியுமாகக் குட்டி திருவள்ளுவரைப் போலவே இருக்கிறார்.
          ‘தமிழ் நமக்கு அம்மா மொழி’. அம்மா மொழியில் வல்லிய கவிதை பாடிய திருவள்ளுவர் ஞானகுரு. திருக்குறள் வேதப்புத்தகம். அவரது கோயில் ஞான மடம், தேவலாயம் – இது தான் வள்ளுவ மதத்தின் உள்ளடக்கம் என்கிறார் அவர்.
          சிவானந்தரின் பெற்றோர் கிறிஸ்தவர்கள். மிகவும் ஏழ்மையான குடும்பம். எட்டு பிள்ளைகளில் சிவானந்தருக்கு மட்டும் கிறிஸ்தவத்தில் பிடிப்பு இல்லை.
          வள்ளுவர் மீது தமக்கு ஈர்ப்பு உண்டானதை சிவானந்தர் கூறுகிறார். “பூப்பாறை தேயிலைத் தோட்டத்தில் 1974 ல் வேலை செஞ்ச்சேன். அங்க ஒரு தமிழர் டீக்கடை வச்சிருந்தார். அந்தக் கடையில் இயேசு, திருவள்ளுவர், புத்தர், படங்களுக்குக் கீழ் , “உலகத்தைத் திருத்திய உத்தமர்கள்” னு எழுதி இருந்தது.
          “எனக்கு இயேசுவையும் புத்தரையும் தெரியும். தாடி மீசையோட உக்காந்திருந்த வள்ளுவரை அதுவரை பார்த்ததில்லை. ஆனா பார்த்ததும் பெரிய மரியாதை வந்துச்சு. கடைக்காரர்கிட்ட விசாரிச்சேன். அவரு எங்க மாநிலத்தில் பெரிய புலவர். பேர் திருவள்ளுவர். அவர் எழுதிய திருக்குறள் புகழ் பெற்ற புத்தகம்” னு சொன்னார்.
          “ஆறு மாதம் கடை கடையா அலைஞ்சேன். கடைசியா நாராயணகுரு மலையாளத்தில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகம் கிடைத்தது. ஒரு மாதம் படிச்சேன். நான் தேடுன எல்லாமும் அதில் இருந்தது. அப்பவே வள்ளுவர் தான் ஞான குருன்னு முடிவு பண்ணிட்டேன். திருவள்ளுவர் படம் வாங்கினேன். 1975 சித்திரை முதல் தேதி, நான் வேலை செஞ்ச சேனாபதி கிராமத்தில் திருவள்ளுவர் படத்தை வச்சு வணங்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வர ஆரம்பிச்சாங்க.”
          வள்ளுவரை ஏற்றுக் கொண்டவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. மது, புகையிலை பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. பொய், களவு, கூடாது. 33 வருடத்தில் வள்ளுவர் சாட்சியாக ஏராளமான திருமணங்கள் நடந்துள்ளன. சிவானந்தருக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் இங்கே தான் திருமணம் நடந்தது.
          “சரஸ்வதிக்கு ஒரு நோய் இருந்தது. எங்கு அலைஞ்சும் நோய் தீரல. கடைசியா அவளோட அப்பா, எங்கள திருவள்ளுவர் கோயிலுக்குக் கூட்டி வந்தார். கொஞ்ச நாள்ல நோய் சரியாயிருச்சு. பிறகு வள்ளுவ மதத்துக்கே குடும்பத்தோட வந்துட்டா. ஒரு கட்டத்தில் கல்யாணம்… இப்போ ரெண்டு குழந்தைகள் ….”சிரிக்கிறார் சிவானந்தர்.
          ஞான மட திருமணத்தில் தாலி இல்லை. மோதிரம் மாற்றுவதும் இல்லை. மடத்தில் இருக்கும் திருமணப் பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்படும். பெற்றோரும் மடாதிபதியும் வாழ்த்த, இல்லற அதிகாரத்தில் உள்ள குறள்கள் ஓதப்படும். அவ்வளவே! இறந்தவர்களை அடக்கம் செய்ய தனி இடுகாடு உண்டு. கோயிலில் உடலை வைத்து, நிலையாமை பற்றிய குறள்களை ஓதி, இறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து புதைக்கிறார்கள்.
          “திருவள்ளுவரை நாடி வந்த அனைவரும் பிற்படுத்தப்பட்ட மக்கள். அவங்க பிரதான உணவே மாமிசம் தான்.சாராயம், கள்ளுன்னு போதைய போட்டுட்டு படுத்துருவாங்க. வள்ளுவர் சொன்னதை ஏத்துக்கிட்டு இப்ப சைவமாயிட்டாங்க. பல ஆயிரம் இளைஞர்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிச்சு நிம்மதியா வாழுறாங்க என்கிறார்” சிவானந்தர்.
          ஆனால் ஞானமடங்கள் எழும்பத் தொடங்கிய போது கிறிஸ்தவ மற்றும் சில அமைப்புகள் எதிர்த்தன. மடங்கள் உடைக்கப்பட்டன. மலையாள ஆர்வலர்கள் பலர் “தமிழ்நாட்டுக்குக் கவிக்கு கேரளாவில் கோயிலா?” என்று கொதித்தனர். எல்லோருக்கும் பதில் சொன்னார் சிவானந்தர். இன்றைக்கு இருக்கிற மதங்களின் பிதாக்கள் எல்லாம் இந்த நாட்டில் பிறந்தவர்களா? எங்கெங்கோ இருந்து வந்தவர்களைக் கடவுளின் அவதாரங்களாகவும், வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொண்ட நீங்கள் எங்களைக் குறை சொல்லாதீர்கள் என்றார்.
கார்த்திகை மாதம் திருவள்ளுவருக்கு மாலை அணியும் திருநாள் நடக்கிறது. சபரிமலை செல்வது போலவே மாலை அணிந்து, 41 நாள்    விரதமிருந்து தலைமை ஞானமடமான கூர்மலைக்கு யாத்திரை செல்கிறார்கள்.
          கூர்மலை உச்சியில் பூக்களால் வள்ளுவர் சிலையை அலங்கரித்து வணங்குகிறார்கள்.
          ஞான மடங்களின் ஆண்டு விழாக்களும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் செண்டை மேளம் முழங்க கொடி ஏற்றப்படும். பச்சை நிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம். இது தான் வள்ளுவ மதத்தின் கொடி. கொடியேற்றலுக்கு பின் ஜபம். மதியம் அனைவருக்கும் சம போஜனம். இரவு தாளப் பொலி ஊர்வலம். ஆண்கள் திருவள்ளுவரைச் சுமந்து வர, பெண்கள் பச்சை, சிவப்பு உடை அணிந்து பூக்கள் நிரம்பிய தாம்பளத்தில் விளக்கேற்றி ஊர்வலமாக வருவார்கள்.
          வள்ளுவரையும், திருக்குறளையும் போற்றி 300 – க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதித் தொகுத்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் தினமும் இரு வேளை ஞானமடத்தில் சமூக ஜெபம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு மடாதிபதி. சிவப்பு வேட்டி, பச்சை மேலங்கி. இதுவே அவர்களின் சீருடை மடாதிபதிகளை மக்கள் ஆச்சார் என்று அழைக்கிறார்கள்.
          “71 ஜாதியை சேர்ந்தவுங்க ஞான மடத்தில் அங்கமா இருக்காங்க. இங்க வந்த பின்னாடி யாருக்கும் ஜாதி, மத அடையாளமில்லை. சில ஆண்டுகளுக்குள் கேரளாவில் உள்ள அத்தனை கிராமத்திலயும் எங்க ஆதிபகவானுக்கு ஞானமடம் கட்டணும்ங்கிற இலக்கோட செயல்படறோம்” என்கிறார் சிவானந்தர்.
          அவரிடம் “உங்களில் எத்தனை பேருக்கு 1330 திருக்குறளும் தெரியும்?” என்று கேட்கப்பட்டது.
          அத்தனை குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிச்சு பரிசு வாங்கிறதில் என்ன பயன்? அந்த வேதப் புத்தகத்துல உள்ள ஏதேனும் பத்து குறளை ஆழப்படிச்சு, அந்தக் கருத்துகளை மனசுக்குள்ள வாங்கி, அதன்படி நடந்தாப் போதும்… அதைத்தான் நாங்க கடைப்பிடிக்கிறோம்”என்று சொல்கிறார் சிவானந்தர்

Monday, 2 August 2021

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமர் நினைவேந்தல்

கருத்துகள் - views
search
AUG
2
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21
 அகரமுதல


இலக்குவனார் திருவள்ளுவன்      02 August 2021      No Comment



(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021)



தமிழே விழி!                                                                                                      தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்
புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
நினைவேந்தல்
ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி
தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை :
 இலக்குவனார் திருவள்ளுவன்
இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு
தொடக்க நினைவுரை :
முனைவர் மறைமலை இலக்குவனார்
முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ
நினைவுரைஞர்கள்:
திருமிகு பா. ஆனந்து, தலைமையாசிரியர், மு.மு.மே.பள்ளி, திருநகர்
முனைவர் இரேவதி இராகவன்
புலவர் ச.ந. இளங்குமரன்
முனைவர் மு.இளங்கோவன்
திருவாட்டி சீதா இராமச்சந்திரன்
திருமிகு செயக்கொடி, ஆசிரியர் (ஓய்வு), மு.மு.மேனிலைப்பள்ளி.
திருமிகு பி.பாண்டியன்
திருமிகு பொன். மனோகரன்
முனைவர் கரு.முருகேசன்
சிறப்பு நினைவுரை :
முனைவர் ச.சு. இராமர் இளங்கோ
நிறைவு நினைவுரை: 
கவிஞர்  முனைவர் பொன்னவைக்கோ
குடும்பத்தினர்  பகிர்வுரை : இளங்கோ இளங்குமரன்