இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 7 June 2021

சிலப்பதிகாரம்

நூல்

1.சிலப்பதிகாரம்-அகம் காட்டும் முகம்

'சிலப்பதிகாரம்' என்பது காப்பியப் பெயர்.

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரம் என்னும் பெயர் பதிகத்தின் 59 ஆம் அடியிலும் நூற்கட்டுரையின் 18ஆம் அடியிலும் இடம் பெறுகின்றது.

சிலப்பதிகாரத்தில் 'சிலம்பு' என்னும் சொல் 40 இடங்களில் இடம் பெறுகின்றது. பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய பதினெட்டு நூல்களிலும் 123 இடங்களில் 'சிலம்பு' என்னும் சொல்லாட்சி உள்ளது.

இவ்விடங்களுள் எவ்வோர் இடத்தும் 'சிலப்பு' என்னும் சொல் இடம் பெறவில்லை.

சிலம்பு என்பதில் உள்ள 'ம் ஆகிய மெல்லினம், 'ப்' ஆகிய வல்லினமாக வருதல் செய்யுளில் உண்டு என்று கொள்ள வாய்ப்புண்டு.

''அந்நாற் சொல்லும் தொடுக்கும் காலை வலிக்கும் வழி வலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும் விரிக்கும் வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும் நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர்"

(சொல்.403)

என்பது தொல்காப்பியம். இதன்படி, வலிக்கும் வழி வலித்தலாய்க் கொள்ளலாமா என ஆராய வேண்டும்.

இவ்வறுவகை விகாரமும் இன்னுழியாம் என்று வரையறுக்கப்படா; செய்யுள் செய்யும் சான்றோர் அணிபெற நாட்டலைத் தமக்கு வலியாகவுடைய செய்யுளின்பம் பெறச் செய்வான் நாட்டுதலை வலியாக உடைய' என்பார் சேனாவரையர்.


மெல்லெழுத்தினை வல்லெழுத்தாகத் தொடுக்க வேண்டும் வர வல்லெழுத்தாகத் தொடுத்தல் என்பார் தெய்வச்சிலையர்

முந்தை என்பதை முத்தை என்று வழங்கும் தொல்காப்பியம் (சொல். 194).

"குறுங்கை' என்பதைக் 'குறுக்கை" என்று வழங்கும் ஐாங் 266.

'பரம்பு, பரப்பு என்றும்; வரம்பு, வரப்பு/ என்றும்; 'கரும்பு, கருப்பு: என்றும்; 'இரும்பு' 'இருப்பு' என்றும்; இருவகை வழக்குகளிலும் பெருக வழங்குகின்றன.

குரங்கு என்பதைக் குரக்கு எனக் காட்டல் முறையாகாது. குரக்கு என்பதே குரங்கு ஆயது. 'சூர்க்குர் என்று ஒலிக்கும் அதனைக் குர்க்கு, 'அரக்கு' என்று சொல்லிக் குரங்கு என நிலைத்து விட்டது. அதன் ஒலியே இதனை மெய்ப்பிக்கும் சான்று.

"சிலப்பதிகாரம்: இப்பெயர் மென்றொடர்க் குற்றியலுகரம் இயல்பு கணத்துக்கண் திரிந்து வந்தது” என்கிறார் நச்.குற்.9).

சிலம்பு முன் குன்றம், சாரல், தடை பள்ளம் என்பது போல காதய வல்லினம் சிலப்பதிகாரம்/ என்னும் புணர்ப்பில் வந்திலது அ” கர உயிரே வருமொழி முதல் ஆயது. இதனை. “விதப்புக்கிளவி வேண்டியது விளைக்கும் ”என்னும் விதியால்,

"ஒற்றென்ற மிகுதியான் இயல்பு கணத்துக்கண்ணும் குரக்கு ஞாற்சி நிணம், முகம், விரல், உகிர் என மெல்லொற்றுத் திரிந்து வருமாறு கொள்க; சிலப்பதிகாரம் என்பதும் அது என்கிறார். நச்.எழுக்குற்.9.

சிலம்பு என்னும் சொல் சிலம்பிலோ, அதற்கு முந்து நூல்களாகக் கிடைத்துள்ள நூல்களுள்ளோ "சிலப்பு” என வலிக்கும் வழி வலித்தல் என்னும் இலக்கணம் பெற வரவில்லை.

நூற்பெயர் சொல்லும் இடங்கள் இரண்டில் மட்டுமே 'சிலப்பு அதிகாரம்’ எண வந்தமை 'ஒரு குறிப்பை உள்ளடக்கிய ஆட்சியாக இருக்க வேண்டும்" என்று கொண்டு சிந்தித்தல் முறை. மற்றும் வரம்பு, வரப்பு: பரம்பு பரப்பு என்பவை போல, மக்கள் வழக்கிலும் சிலம்பு சிலப்பு என 
என்றும் எங்கும் வழங்கப்பட்டதில்லை என்பதையும் எண்ண வேண்டும்.

கால் அணியாகிய சிலம்பு, ஒலி வகையால் பெற்றது இப்பெயர். இவ்வாறே கோலெடுத்து ஆடும் சிலம்பாட்டமும் ஒலிவழிப்பட்டதே. மேலும், பல்வகை ஒலிக்கு இடமாகவும், எதிரொலி தருவதாகவும் உள்ள மலையைச் சிலம்பு எனல் அறியலாம். அதன் மெல்லொலி விளங்க.

"தினைச்சி லம்புவ தீஞ்சொல் இளங்கிளி;

நனைச்சி லம்புவ நாகிள வண்டு: பூம் புனைச்சி லம்புவ புள்ளினம்; வள்ளியோர் மனைச்சி லம்புவ மங்கல வள்ளையே

எனக் கம்பர் (பால.63) இசைக்கிறார். இம் மென்சிலம்புக்கு வலித்தல் (வன்மை) ஏற்றியது ஏன்? 'வலித்தல் விகாரம் பெற்றது' என்று, இலக்கணம் கூறுவதற்காகவா?

இளஞ்செல்வியர் காலணி தண்டை ; அவர் குமரிநிலையடையும் போது அணிவது, சிலம்பு: அச்சிலம்பு மண நாளுக்கு முன் நாள் கழற்றப்படும். அக்கழற்றுதல் நிகழ்வு, 'சிலம்பு கழி நோன்பு' எனப்பட்டது. மகளிர் காலில் சிலம்பு உள்ளமை, இல்லாமை கொண்டே மணமானவர், மணமாகாதவர் என அறிந்து கொள்ள வாய்த்த காவல் ஏற்பாடு அஃதாம்.

கண்ணகியார் காற்சிலம்பு காலில் இல்லை; ஏனெனில், சிலம்பு கழி

நோன்பு நிறைந்து 'மண அணி'பூண்டவர் அவர். காலணிகலம் கழற்றி. கழுத்தணி பூண்ட நிலை அது. ஆதலால், சிலம்பு காப்புப் பெட்டகத்தில் இருக்கும் பொருளாயிற்று. அச்சிலம்பு பொருளாக ஈட்டும் திட்டம் கொண்டே மதுரைக்குக் கிளர்ந்தனர் கோவல கண்ணகியர்.'வான் பொருட் குன்றம் தொலைந்தது' என வருந்திய கோவலனிடம், சிலம்புள கொண்ம் என்னும் கண்ணகி வாக்கே சிலம்பு சிலப்பதிகாரத்தில் முதற்கண் தலைகாட்டும் இடமாம்!

சிலம்பு ஒலி செய்தலைச் சிலப்பதிகாரம்,

"சிலம்புவாய் புலம்ப"

என்கிறது. அஞ்சி அலமந்து ஓடுவாரை,

"நாபுரம் புலம்பிடச் சிலம்பு நொந்தழக் கோபுரந்தொறும் குறுகினார் சிலர்"

என்பார் கம்பர் (உயுத்3897).

இவற்றொடு தொல்காப்பியர், புலம்பே தனிமை' என்பதை நோக்க ஓர் உள்ளீடு புலப்படுகின்றது. சிலம்பு முதலாகச் சென்று கலன் ஈட்டத் செல்லும் கோவலன், ஒற்றைச் சிலம்பைப் பெற்றுச் செல்வானேன். ஒற்றை மிதியடி கேட்பாரார்? தருவாரார்? கண்ணகியார் சிலம்பு பயன்படுத்தார். பிறர்க்குத் தர நேரினும் ஒன்றைத் தாரார்; பெறார். பெறினும் பயனும் கொள்ளார்.

இணை பிரியா இரட்டை, இணை பிரித்து விற்கச் செல்லல் கோவலன் வரலாற்றில் அன்றி உண்டோ? கோவலன் விலையிடக் கொண்டு சென்றது ஒற்றைச் சிலம்பு எனின், களவு கோள்பட்ட சிலம்பும் ஒன்றாக இருந்தது ஏன்?

கள்வனுக்கு இரண்டில் ஒன்றை எடுக்க நேர்ந்தது என்ன?

எந்தக் கால் சிலம்பைக் கோவலன் விற்கக் கொண்டு சென்றானோ, அதே காற்சிலம்புதான் களவாக வேண்டுமா?

சிலம்புகளுள் வலக்கால் சிலம்பு, இடக்கால் சிலம்பு எனத் தனித்

தனி அமைப்பு உண்டு அல்லவோ, மிதியடியைப் போல!

மீண்டு வந்த சிலம்பு கண்டு, 'தன்தேவி சிலம் பென மன்னன் மயங்கலாம்! அதற்குடைய மாதேவியும் மயங்கிப் போய்த் தன் சிலம்பெனக் கொள்வாளா! கொண்டாளே எதனால்?

மன்னவன் தேவி அணி சிலம்பும், வாணிகன் தேவி அணி சிலம்பும் ஒத்ததென அமைய ஓரிடத்து ஒருவரால் செய்யப்பட்டதா? இல்லையே!

கோவலன் சிலம்பும் கோவேந்தன் சிலம்பும் முறையே புகள் நகரிலும், மதுரை நகரிலும் உள்ள வெவ்வேறு பொன் வினைஞர்களால் அல்லவோ செய்யப்பட்டவை.

உள்ளீடு பரல் புலப்படா தொழியினும், புறத்தோற்றம் கலைநிலை அளவுப்பாடு என்பனவெல்லாம் ஏன்?

பழிவழிப் படாஅப் பஞ்சவன் பழிக்கு ஆட்படவா இவை? அறவோர் அவையம், ஆயம், அமைச்சு என்பவை எல்லாம் எட்டாதொழியக், கரவே காவல் கடன் கொண்டது போலக் குற்றம் சாற்றியவனிடமே. 'கொன்றச் சிலம்பு கொணர்க' என ஏவ ஓர் ஊடல் தவிர்ப்புத் தானா இடமாக வேண்டும்?

இளங்கோவடிகள் சார்ந்த சமண் சமயப் பிறப்புக் கோட்பாடு வினைக்கோட்பாடு-ஈர்த்துச் செல்ல முன்னை வினை முடிச்சுப்போட்டு முடிக்கிறார்! ஊழ் என்பதனொடு வினை' என்பதை இணைத்த முதல்வர் முன்னவர்-இளாங்கோவடிகளேயாவர். அவர் நூலுக்கு முன்னை நூல்களில் ஊழ் என்னும் சொல் 96 இடங்களில் இடம் பெற்றிருந்தும், வினை ஒட்டவில்லை. அடிகள் ஊழ்வினை என இணைத்ததுடன், “ ஊழ்வினை வந்து உருத்து ஊட்டும்" என்று நூலியல் நோக்கையும் உரைத்தார். சிலப்பதிகாரம் என வல்லொற்றிட்டு அதிகாரப்படுத்தினார். ஏன்?

1.கோவலன் கொல்லப்பட்டான்.

2.பாண்டியன் தேவியொடு முடிந்தான்.

3.கண்ணகி விண்ணகம் சென்றார்.

4.மாதவியும் மணிமேகலையும் துறவு பூண்டனர்.

5.கோவலன் தாயும் கண்ணகி தாயும் இறந்தனர்.

6.கோவலன் தந்தையும் கண்ணகி தந்தையும் துறவு பூண்டனர்.

7. நற்றுணையாய் வந்த துறவு மூதாட்டி.

காவுந்தி ஐயை பாடுகிடந்து உயிர் துறந்தார்.

8.தெய்வக் கோலம் கண்ட ஆயர்முதுமகள் மாதரி,

எரிவளர்த்து இறந்தாள்

9. மதுரை எரியுண்டது!

10.பொற் கொல்லர் உயிர்ப்பலி ஊட்டினர்.

11. மாடல மறையோன் தீர்த்த யாத்திரை சென்றான்.

12.செங்குட்டுவன் தன்னொத்த வேந்தனுக்கு நேர்ந்ததெண்ணி நைந்தான்!

13. கனக விசயர் கதிர்த்தலை முடியைக் கல் நெரித்தது. 14.கங்கைப் போரில் செங்குருதி வழிந்தது!

ஒற்றைச் சிலம்பின் - ஆம்!

மென் சிலம்பின் விளைவுகளா இவை?

அச்சிலம்பின் கொடுமையை நெற்றிப்

பொட்டென இட்டுவைக்கவே

இளங்கோ வடிகள்

'சிலப்பதிகாரம்' எனப் பெயர்ச்சூட்டு

நிகழ்த்தினர் என்க.

சிலம்பு செய்த வன்கொடுமைகளையெல்லாம்

அகத் தடக்கிய முகக் குறியீடே

'சிலப்பதிகாரம்'

என்னும் பெயரீடாம் என்க.

*இது முந்தையர் கண்டதும் காட்டியதுமாம் வலிக்கும்வழி வலித்தல் ஆகாமல், வலியாவழி வலித்தல் எனப் பெயரீடு பெற வேண்டுவதாம்.

(செந்தமி அந்தணர் இரா.இளங்குமரனார் அவர்களது பதிவிலிருந்து ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.)

No comments:

Post a Comment