இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 11 June 2021

மதுரை பெயர்க்காரணம், ச.ந.இளங்குமரன்

மதுரை பெயர்க்காரணம்..

மதுரை என்று முதலாவது பெயர் பெற்றது பஃறுளி ஆற்றங்கரைத் தலைக்கழக இருக்கையே.  அதுவும் இடைக்கழக இருக்கையாகிய கபாட புரமும் (அலைவாய்)  மூழ்கிப் போன பின்பே இற்றை  வைகைக் கரை மதுரை அமைந்தது. அதுவும் மூன்றாம்  மதுரையே.

பாண்டியர் மதிக் குலத்தவராகலின் தம் குல முதலாகக் கருதிய மதியின் பெயரால் தம் முதல் தலைநகருக்கு மதிரை எனப் பெயரிட்டனர். அது பின்னர் மதுரை எனத் திரிந்தது.

ஒ.நோ: குதி-குதிரை, எதிர்கை-எதுகை

குமரிமலை முழுகுமுன்போ, முழுகிய பின்போ குமரி நாட்டில் இருந்து வடக்கே சென்ற தமிழர் வழியினரே, கண்ணபிரான் வாழ்ந்த மதுரையையும் அமைத்தனர். அதற்கு அவர்கள் அப்பெயரிட்டது அவர் தம் முன்னோர் இடத்தை நினைவு கூர்தல் பொருட்டாகும். கண்ணபிரான் ஒரு திராவிட மன்னன். 

கண்ணபிரான் காலமாகிய பாரதக் காலத்தில் வைகை மதுரையில்லை. ஆதலால், நாவலந் தேயத்தில் இரண்டாவது ஏற்பட்டதும்,  வடமதுரையென பட்டதும் கண்ணன் மதுரையே, அதன் பெயர் அந்நாட்டு மொழிக்கேற்ப மத்ரா எனப் பின்னர் திரிந்தது.

சிவபெருமான் தன் சடைமுடியில் உள்ள மதியினின்று மதுவைப் பொழிந்த இடம் மதுரை என்று சொல்லப்படுவதும் உண்டு. அது தொல்கதைகட்டு.

வைகை மதுரையைச் சார்ந்த திருமருத முன்றுறையால் மதுரைப் பெயர் வந்ததென்பது, பேரன் பெயரால் பாட்டன் பெயர் பெற்றான் என்னும் கூற்றை ஒக்கும். என்பது மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் ஆய்வாகும்.

மதுரையின் நாகரிக வளர்ச்சிக்கு பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் இலக்கியச் சான்றுகள் உள்ளது. கி.மு நூற்றாண்டிலேயே மதுரை என்ற பெயர் இருந்துள்ளது. அழகர் மலையில் கி.மு.2ஆம் நூற்றாண்டில் மதிரை என்ற சொல் வருகின்றது. (மொழிஞாயிறு பாவாணர் பதிவிலிருந்து....)

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
தேனிவையைத் தமிழ்ச்சங்கம்

No comments:

Post a Comment