திருவள்ளுவர் விருது அக்னி சிறகுகள் பத்தாம் ஆண்டு விழா சோழன் மழலையர் தொடக்கப்பள்ளி 23 ஆம் ஆண்டு விழா தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் நடைபெற்றது.
அக்னி சிறகுகள் அறக்கட்டளையின் தாளாளரும் சோழன் மழலையர் தொடக்கப்பள்ளியின் தாளாளருமான திரு சிவ சண்முகம் ஐயா அவர்களிடமிருந்து ஒரு நாள் அலைபேசி வந்தது. எங்களுக்குள்ளான இயல்பான உரையாடல்தான் அது. என்னுடைய தமிழ்ப்பணி குறித்தும், தமிழ் மீது எனக்கான ஆர்வம் குறித்தும், என் எழுத்துகள் தொடர்பாகவும், நான் பார்த்து வருகின்ற பணி தொடர்பாகவும் தொடர்ச்சியாகப் பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுக் கொண்டே உரையாடினார். அதற்கு முன்பு வரை அவர் யார் என்று எனக்குத் தெரியாது. முகநூலில் நட்பாக உள்ளார் அவ்வளவே.
இந்த உரையாடலின் நிறைவில் தற்போது நாம் பேசியது அனைத்தையும் எழுத்தாக்கம் பண்ணியிருக்கிறேன். அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். ஏதாவது தவறுகள் இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு பேரும் இயல்பாக பேசிக் கொண்டிருந்ததை ஏன் இவர் எழுத்தாக்கம் செய்தார்? என்று எண்ணிக் கொண்டே என்ன காரணம் ஐயா என்று கேட்டேன். அப்பொழுதுதான் அவர் சொன்னார் "உங்களை திருவள்ளுவர் விருதுக்குத் தேர்வு செய்து இருக்கிறோம்" என்று எனக்கு ஒரே வியப்பு. மீண்டும் அவர் சொன்னார் "உலகில் முதன் முதலில் தொல்காப்பிய மனனமுற்றவர்களுக்காக உங்கள் மாணவிகள் முதல்வரிடம் பரிசு பெற்ற போது, முதல்வர் தளத்தில் பின்னூட்டத்தில் அன்றே நான் எழுதியிருந்தேன். இவருக்கு நாம் சிறப்பு செய்ய வேண்டும் என்று, அதன் தொடர்ச்சியாக உங்களுடைய பணிகளைப் பார்த்துக் கொண்டே வந்தவன் தற்போது நடைபெறவிருக்கின்ற விழாவில் உங்களுக்கு விருது தருவதாக முடிவு செய்து இருக்கிறேன்" என்றார்.
பொதுவாக விருதுக்காக நான் சென்று காத்திருந்து வாங்குவது அரிது. தவிர்க்க முடியாத என் தோழமைகள் சொல்லும்போது மட்டுமே செல்கிறேன். நான் விழாவில் பங்கெடுத்துப் பெறுகின்ற விருது வேறு. இப்படியான சூழலில் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து விருதுக்காக தேர்வு செய்திருப்பதை எண்ணி ஒத்துக் கொண்டேன். அதற்குப் பின்பாக இந்த விருதுக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒருவர் மிகச் சிறந்த தமிழ் அறிஞர் புலவர் கலியபெருமாள் ஐயா, இன்னொருவர் 50 ஆண்டு காலம் தொடர்ச்சியாக திருக்குறள் தொடர்பாக இயங்கி வருகின்ற மதிப்பிற்குரிய புலவர் நாவை சிவம் ஐயா. இருவரும் எண்பது வயதைக் கடந்த மீச்சிறந்த அறிஞர்கள். இவர்களோடு 50 வயதை கடந்திருக்கும் நானும் விருது பெறுவது மகிழ்ச்சியைத் தந்தது.
இப்பொழுது உலகத் தாய்மொழி நாள் அன்று காலை 10:30 மணிக்கு தேனியில் இருந்து கிளம்பினேன். சரியாக ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்கு திருக்கருகாவூர் சோழன் மழலையர் பள்ளியை அடைந்தேன். நுழைந்தவுடன் என் கண்களில் பட்டது இயற்கை வேளாண் அறிவியல் ஞானி நம்மழ்வார் ஐயா சிரித்தபடியே வரவேற்றார். பின்பு சிவ சண்முகம் ஐயா அவர்களுக்கு அலைபேசி செய்துவிட்டு மேலே உடைமாற்றுவதற்காகச் சென்றேன். அங்கு இயற்கையாய் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைக் கொண்டு உணவு தயாராகிக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்கிறேன் உணவுக் கூடத்தில் வள்ளலார் சிரித்துக் கொண்டிருந்தார். வள்ளலாருக்கு வணக்கம் சொல்லிவிட்டு என்னை தயார்படுத்திக் கொண்டு மேடைக்குச் சென்றேன். பெரும் பேராளுமைகள் பலரும் பங்கேற்ற நிகழ்வு அது.
சோழன் பள்ளி மாணவ மாணவியரின் நடனம், வில்லிசை, பட்டிமன்றம், பேச்சு, பாட்டு, வினாடி வினா என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இது மழலையர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளா? அல்லது பெரும் பேரறிஞர்கள் மழலையராகக் கூடி இருக்கின்ற கலை மன்றமா? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பிக்கொண்டேன் அரங்கில் தமிழ்ச்செம்மல் நாவை சிவம் ஐயா வரவேற்றார். அருகில் அமர்ந்து கொண்டு சில நிகழ்வுகளை பேசினோம். இப்பொழுது மேடை தயாரானது.
பல்வேறு சிக்கல்களுக்கு இடையே பள்ளியையும், தனித்திறன் சார்ந்த அறிஞர்களையும் புரந்து போற்றி வருகின்ற சிவ சண்முகம் ஐயா அவர்கள் மேடை நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார். அவருக்குத் துணையாக அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் பின்னால் நின்றது. ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் ஓரணியாய்த் திரண்டு நின்றனர். அவரின் எளிமை இயல்பான பேச்சு நடை அனைவரையும் ஈர்த்தது. விருது தொடர்பாக என்னைப் போல் ஒவ்வொருவரிடமும் பேசி அவர் ஆவணப்படுத்திய அத்தனை செய்திகளும் நூலாக வெளியிடப்பட்டது. ஒருவருக்கு விருது எதற்காகக் கொடுக்கப்படுகிறது? என்ற காரணத்தை விருத்தாளர்களுடைய ஒளிப்படம் அவர்களைப் பற்றிய இரண்டு பக்க குறிப்புகளோடு அந்த நூலை ஆவணப்படுத்தி இருந்தார் ஐயா சிவ சண்முகம். இது மிகப்பெரும் வியப்பை தந்தது.
விருதுக்காய் நான் மேடை ஏறிய போது தஞ்சாவூர் மாவட்ட நீதியரசர் பரமசிவம் நாகராசன் அவர்கள் நீங்கள் ஆசிரியரா என்று கேட்டார். இல்லை நான் தையல் கலைஞன் என்று பதில் சொலல அவருக்கு வியப்பாக இருந்தது. என்னைப் பார்த்து என்ன சொல்கிறீர்கள்? எப்படி இந்தத் தமிழுக்கு வந்தீர்கள் என்று கேட்டார். ஆர்வக்கோளாறில் வந்தேன் என்பதை விட நல்ல அறிஞர்கள் எனக்கு வாய்த்தனர். குறிப்பாக செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரும், திருக்குறள் தொண்டர் சிவசங்கரனாரும் ஆளுமை மிக்கவர்களாக எனக்கு வாய்த்தனர் என்று சொன்னவுடன் திருச்சி நம்ம ஐயாவின் மாணவரா என்று கேட்டார். ஆம் என்றேன். இருவரும் கிடைத்த சில நிமிடங்களில் சில செய்திகளை பரிமாறிக் கொண்டோம்.
அக்கினிச் சிறகுகள் அறக்கட்டளையின் மூலம் நான் பெற்ற திருவள்ளுவர் விருது அரசு வழங்கும் விருதினைவிட மேன்மையானது என்று உணர்கிறேன். காரணம் எந்தப் பரிந்துரையும் இல்லை. இடைத்தரகர் இல்லை. தொகை இல்லை. தொகை தொடர்பாகப் பேசப்படும் ஒப்பந்தம் இல்லை. என்னுடைய 35 ஆண்டு கால பணிக்கு கிடைத்த பெரும் பரிசாகவே இதை நான் பார்க்கிறேன்.
ஒவ்வொருவரையும் அவரது தனித்திறன்களைச் சொல்லி மேடைக்கு அழைத்து அவர்களுக்கான விருதினை வழங்கிய நிகழ்வு பாராட்டுவதற்குரியது. பின்பு இரவு இயற்கை உணவினை உண்டு நாவை சிவம் ஐயா அவர்களுடைய மகிழுந்தில் திருச்சியை நோக்கிப் புறப்பட்டோம். திருச்சியில் பிரியா விடை பெற்றுத் தேனியை அடைந்தேன். புலவர் ஐயா அவர்களுடைய வரலாற்றுப் பயணங்களை இருவரும் பகிர்ந்து கொண்டே வந்தோம். சந்திரசேகரன் ஐயா உடன் வந்தார். புலவர் ஐயாவின் மகன் மகிழுந்தின் ஓட்டுநராக, பெயர்த்தி அருள் அருகில் அமர்ந்த வண்ணம் என்னை திருச்சியில் இறக்கி விட்டனர். அன்று அதிகாலை 3-45 மணியளவில் நாகலாபுரம் எனது இல்லத்தை அடைந்தேன். நான் அந்த நிகழ்வில் இருந்தது ஒரு மணி நேரம்தான் என்றாலும் மறக்க முடியாத நிகழ்வுகளில் அதுவும் ஒன்றாக அமைந்தது. அருமையான நிகழ்வினை ஒருங்கிணைத்து அனைவரையும் சிறப்பித்த சிவ சண்முகம் ஐயா அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும், பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் என்னுடைய நிறைந்த நன்றியை வாழ்த்தைத் தெரிவித்து மகிழ்கிறேன் வரலாற்றில் சோழன் மழலையர் தொடக்கப்பள்ளி நின்று நிலைக்க வாழ்த்துக்கள்.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment