தேனி வையைத் தமிழ்ச்சங்கம் தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்திய மொழிப்போர் அறுபதாம் ஆண்டு விழா மற்றும் சி இலக்குவனார் சங்கத்தமிழ் விருது வழங்கல் விழா சென்னையில் திருவள்ளுவர் இலக்குவனார் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் மேனாள் துணைத் தலைவர் பா.மருதநாயகம், சட்டத் தமிழ் இயக்குநர் முனைவர் பேராசிரியர் முத்துவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் மொழிப்போர் உரை வழங்கி அனைவரையும் வரவேற்றார். தமிழ்க் காதலன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக மூத்த இதழாளர் மணா இயக்கிய "உயிருக்கு நேர்" எனும் மொழிப்போர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் சங்க இலக்கியம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் பரப்புரையும் விழிப்புணர்வும், படைப்பாக்கமும் செய்து வருகின்ற அறிஞர்களுக்கு இலக்குவனார் சங்கத் தமிழொளி, சங்கத்தமிழ், சங்கத் தமிழ்மணி, இளமணி உள்ளிட்ட பல விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. மொழிப்போர் வரலாறு தொடர்பான பராசக்தி எனும் திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்காரா, திரைக்கதை எழுதிய அர்ஜுன் ஆகியோருக்கு சிறந்த திரைப்பட இயக்கத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் புலவர் ச.ந.இளங்குமரன் அவர்களுக்கு சங்கத்தமிழொளி விருதும், ஆசிரியர் இலட்சுமி குமரேசன் அவர்களுக்கு சங்கத் தமிழ்மணி விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வில் முனைவர் சோமசுந்தரி விருதாளர்கள் குறித்த தகுதிவுரை வழங்க, இ.திருவேலன் நன்றியுரையாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment