21-2-2023 இன்று தேனி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வினை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா அவர்கள் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். உடன் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உமேஷ் டோங்கரே அவர்களும் கலந்து கொண்டார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் இளங்கோ அவர்கள் ஆட்சி மொழிச் சட்டம் தொடர்பான அறிமுக உரையோடு வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு தமிழ் விழிப்புணர்வுச் சொற்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் தாங்கி ஊர்வலமாகச் சென்றனர்.
இந்நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம், சங்கத்தமிழ் அறக்கட்டளை, வராகநதி தமிழ்ச்சங்கம், நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம், பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம், தமிழ்நாடு புலவர் பேரவை உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பரப்புரையாக வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வு தொடர்பான முழக்கங்களை முழங்கினார. பட்டிமன்ற நடுவர் கவிக்கருப்பையா, கவிஞர் பாண்டியமகிழன் ஆகியோரும் தொடர்ந்து தமிழ் மொழி விழிப்புணர்வு முழக்கங்களை முழங்கியவாறு பரப்புரையில் தொடர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஊர்வலம் நடைபெற்றது.
பின்பு இந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி உதவி அலுவலர் புருசோத்தமன் அழகுமாரி, கண்ணன் ஆகியோர் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து விழா சிறப்புர ஒத்துழைப்பு நல்கினர்.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்,
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
(நன்றி ஒளிப்படம் அண்ணன் தேனி பாலா)