இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 28 January 2023

தூய தமிழ்ப்போற்று - கவிதை

*தூய தமிழ்ப் போற்று*

தமிழ்நாட்டில் தனித்தமிழைப் போற்றுதற்கு 
தஞ்சையிலே கூடியுள்ளோம் பாவரங்கில் 
இமிழ்கடல்சூழ் உலகாண்ட இன்மொழிக்கு 
இப்படியோர் நிலைதன்னை ஈந்தவர்யார்?
அமிழ்தினிய செந்தமிழில் அயல்மொழியை
உமிழ்ந்தவர்கள் தமிழரென்று அறிந்திலரோ?
தமிழென்றும் தமிழரென்றும் மேடைங்கும் 
முழங்கியதன் னலக்கேடர் செயலன்றோ.

ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதுகின்றார் 
அயல்மொழியில் பெயர்சூட்டி மகிழ்கின்றார் 
தீங்கில்லா செந்தமிழில் நாள்தோறும் 
தீங்கிழைக்கும் பிறசொல்லைக் கலந்தெழுதி
பாங்குறுநல் தமிழ்மொழியைச் சிதைக்கின்றார் 
பழம்பெருமை தனைமூடிப் புதைக்கின்றார்
ஈங்கிவர்கள் செயல்தன்னைத் திருத்துதற்கு
இவ்வரங்கில் பாவலர்கள் பாடுகின்றோம்.

தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் கல்விவேண்டும் 
தமிழ்நாட்டின் கடைகளிலே பொருட்பெயர்கள்
தமிழிலேயே இருக்கவேண்டும். எந்நாளும்
தமிழ்நாட்டு வணிகரது நிறுவனங்கள் 
தமிழ்ப்பெயரே தாங்கவேண்டும். ஏடெல்லாம்
தமிழ்மொழியில் எழுதவேண்டும் இசையெல்லாம்
தமிழாக இருக்கவேண்டும் எங்கெங்கும்
தமிழ்வளர்ச்சி காணவழி செய்குவமே!

புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம்,
தேனி, நாகலாபுரம்.

Saturday, 21 January 2023

பன்னாட்டுத் திருக்குறள் திறன்போட்டி...

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் வையைப் பதிப்பகம் சார்பில்  திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு இணைய வழியிலான பன்னாட்டுத் திருக்குறள் திறன் போட்டி புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, அமெரிக்கா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ மாணவியர் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

போட்டியின் நடுவர்களாக கவிஞர் லட்சுமிகுமரேசன், முனைவர் பத்மினிபாலா,  மூ.செல்வம், ஆ.முத்துக்குமார் ஆகியோரும், மதிப்பீட்டாளராக தமிழ்ச்செம்மல் முத்துமணி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முனைவர் முகமது நாசர் வாழ்த்துரை வழங்கினார்.

போட்டியில் பொருட்பாலில் முதல் 10 அதிகாரங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. போட்டியின் விதிமுறையாக குறள்எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்வது குறளைச் சொன்னால் எண்ணைச் சொல்வது, முதல் சொல்லைச் சொன்னால் முழுக் குறளையும் சொல்வது, கடைசிச் சொல்லைச் சொன்னால் முழுக் குறளையும் சொல்வது, அதிகாரத்தைச் சொன்னால் 10 குறளையும் சொல்வது என பல்வேறு வகைகளில் மாணவர்களின் திறன் போட்டி நடைபெற்றது. 

பன்னாட்டுத் திருக்குறள் திறன்போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவர்தன் முதல்பரிசும் அமெரிக்காவைச் சேர்ந்த ரக்சித்சீத்தாராமன் இரண்டாம் பரிசினையும், காரைக்குடியைச் சேர்ந்த சாம்பவிகா/ சம்யுக்தா ஸ்ரீ, தேனி வடபுதுப்பட்டியைச் சேர்ந்த 
சஹானா/ சங்கரேஸ்வரி, காரைக்குடியைச் சேர்ந்த
ஸ்ரீ தா/ சந்தோஷிஸ்ரீ ஆகியோர் முறையே மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசினை ஆசிரியப்பெருமக்கள் திருமலைக் குமரன், சண்முகநாதன், கற்பூர பூபதி, ரேணுகாதேவி ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர். போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

பொங்கல் திருநாள் (கவிதை)

பொங்கல் திருநாள்

உலகெங்கும் செழிப்பதற்கும் உலகுயிர்கள்
உவப்புற்று வாழ்வதற்கும் நாளெல்லாம்
உலவுகின்ற பகலவனைப் போற்றுகின்ற
ஒளித்திருநாள் ஒப்பற்ற தைமுதல்நாள்
நிலவெனவே நெஞ்சமது குளிர்ந்திருக்கும்
நினைவுகளில் மகிழ்ச்சிவெள்ளம் நிறைந்திருக்கும்
கலகலப்பாய் உறவெல்லாம் ஒன்றுகூடி
கரும்போடு வைப்பர்கா ணுப்பொங்கல்

மாடாக உழைக்கின்ற             மாண்புமிகு
உழைப்பாளர் உழைப்பினுக்கு உறுதுணையாம்
மாடதனின் பாடதனைக் கொண்டாடும்
பாங்குறுநல் திருநாளாம் பைந்தமிழர்
நாடெங்கும் கொண்டாடும் நல்லுழவர்
திருநாளில் வீதியெல்லாம் தோரணங்கள்
வீடெல்லாம்  காண்கிறது விழாக்கோலம் 
பட்டியெலாம் பொங்குதம்மா பாற்பொங்கல்.

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி 

திருக்குறள் முற்றோதல்

10-01-2023 தேனி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்து கொண்ட இனிய  பொழுது. இன்றைய திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் சிறப்பான முறையில் திருக்குறள் முற்றோதல்  போட்டியில் கலந்துகொண்டு முற்றோதல்  செய்து விருது/பரிசு பெறத் தேர்வாகினர். நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் திரு.இளங்கோ ஐயா அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கும் நடுவர்களாக பணியாற்றிய பேராசிரியப் பெருமக்களுக்கும், ஆ.முத்துக்குமார்,  மூ.செல்வம் உள்ளிட்ட  தோழமைகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்தினை உரித்தாக்கு கின்றோம்.