இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Sunday, 5 December 2021

தேனீக்கள் அறக்கட்டளை விழா

தேனிக்கள் அறக்கட்டளை இரண்டாமாண்டு தொடக்கவிழா!

தேனீக்கள் அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில்  கூடியிருக்கின்ற அவையோர் அனைவருக்கும் தேனி வையைத் தமிழ்ச் சங்கத்து இளங்குமரனின் இனிய வணக்கம். 

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து தனித்தனியே இயங்கி கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து, தேனி மாவட்ட அளவிலான ஒரு மிகப்பெரும் எழுச்சியை உண்டாக்கி இருக்கின்ற தேனீக்கள் அறக்கட்டளை செயல் வீரர்களையும், ஜெயம் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கச் செயல் வீரர்களையும்,  வின்னர் ஸ்போர்ட்ஸ் குழுவினரையும் மிகுந்த மகிழ்வோடு நிறைந்து பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

பொதுவாக உலக வரலாற்றில் பெரும்பான்மையான இடத்தில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து இருப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள் என்பதுதான் பேருண்மையாகு.  இது கடந்த காலமாக இருந்தாலும் சரி, தற்கால மாக இருந்தாலும் சரி எக்ககாலத்திற்கும் பொருந்தும்.

இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்கு கொடுத்தவர்கள் மாற்றுத்திறனாளி களாகவே இருந்திருக்கின்றனர்.  இசை தொடர்பான நுணுக்கங்களை கொடுத்தவர்களும் மாற்றுத்திறனாளிகள். மேலும்  உலக நாடுகளை யெல்லாம் வென்று, ஒரு குடையின் கீழ் ஆள நினைத்து, போர் தொடங்கி பெரும் வெற்றியைப் பெற்ற பேரரசர்கள் பலரும் மாற்றுத்திறனாளிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாமஸ் ஆல்வா எடிசன்,  கெலன் கெல்லர், பீதோவான், அலெக்சாண்டர், கிட்டலர் என பல வரலாற்று நாயகர்களைப் பற்றி விளக்கிச் சொன்ன்னால் நேரம் நீளும்  எனவேதான் மேலோட்டமாகவே சொல்லிச் செல்கிறேன். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் என் உரையை நிறைவு செய்ய வேண்டும். நிறைவு செய்வேன்.

இன்றைய காலத்தில்  சக்கர வண்டியில் உட்கார்ந்து கொண்டு உலகின் பெரு வெடிப்புக் கொள்கை குறித்து பேசியவர் ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர். அதைப்போல உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டிற்கு தங்கப்பதக்கம் தேடித்தந்த மாரியப்பன் மாற்றுத்திறனாளி. தற்பொழுது எனக்கு முன்பாக வெங்கட்பூபதி அய்யா அவர்கள் பேசினார். அவர்களுடைய அறக்கட்டளையில் இருந்து பயிற்சி பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான கூடைப்பந்துப் போட் டியில் குறிப்பாக இந்திய அளவிலான போட்டிக்குத் துணை தளபதியாக இருந்தவர் நம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை பெருமையோடு பகிர்கிறேன்.

இப்படி திறன் மிக்கவர்கள் பலரும் நமது தேனி மாவட்டத்தில் இருப்பது நமக்குப் பெருமை. நான் அறிந்தவரையில் அங்கங்கே சில போட்டிகள் நடைபெற்றது மாற்றுத் திறனாளிகளுக்காக. ஆனால் இன்றைக்கு பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் மாற்றுத்திறனாளிகளை கலந்து கொள்ளச் செய்து அவர்களுக்கான போட்டியை நடத்தி வென்றவர்களுக்கு மட்டுமல்ல, கலந்து கொண்டவர்களுக்கும் பரிசு வழங்கும் பெரும் முயற்சியை, பெரும் ஊக்கத்தை வழங்கி இருக்கின்ற தேனீக்கள் அறக்கட்டளை நண்பர்களையும் அதன் செயல் வீரர் களையும் மீண்டும் வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 
உலகப் பேராசான் சொல்வார் "

"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி"

என்று சொல்வார் உடலில் அக உறுப்புகளும், புற உறுப்புகளும் மிகச் சரியாக இருந்தும் பயனில்லை அக உறுப்பாகிய கண்ணுகுத் தெரியாத மனமென்னும்  உறுப்பும் மனத்தின் உள்ளுறுப்புகளான தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை சரியாக இருக்க வேண்டும். அப்படிச் சரியாக இருந்தால் மட்டுமே, இருப்பவர் மட்டுமே மட்டுமே இந்த உலகில் சாதனைகளை நிகழ்த்த முடியும். அந்தச் சாதனைகளை மாற்றுத் திறனாளிகள் மிகச் சரியாகச் செய்து வருகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் நமது உலகப்பேராசன் வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாக இருக்கின்றனர் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். புற உறுப்புகளும், அக உறுப்புகளும் மிகச்சரியாக இருக்கின்ற எத்தனையோ மனிதர்கள் சாதிக்காத பலவற்றையும் மாற்றுத்திறனாளிகள் சாதித்து வருகின்றனர். 

சாதாரண மனிதர்களிடம்  புற உறுப்புகள் நன்றாக இருந்தாலும் கூட, மனத்தின் உள்ளுறுப்பான விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் ஊக்கமும் தொடர் பயிற்சியும் இல்லாத நிலை பலருக்கு இருக்கிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகள்  இவற்றைச் சரியாக இயக்குகின்றனர் அல்லது மாற்றுத்திறனாளிகளால் சரியாக இயக்கப்படுகிறது. அந்த இயக்கமே அவர்களுக்கான வெற்றியாக வளர்கிறது என்பது வரலாற்று நெடுகிலும் அறியக்கிடக்கின்ற உண்மையாகும்.

இன்றைக்கு தேனி மாவட்டத்தில் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அவர்களின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள, அவர்களை  உலகம் அறிந்துகொள்ள ஊக்கப்படுத்தி வருகின்ற தேனீக்கள் அறக்கட்டளை தலைவர் பாண்டி, செயலர் அழகேசன், பொருளாளர் எமது அன்பு மகன் போட்டோ பாண்டி உளிட்ட அனைவரையு, மற்றும் தோழமை அமைப்பினரையும் பாராட்டுவதோடு, வாழ்த்துவதோடு இன்னொரு செய்தியையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

அதாவது இன்று உலகப்பேராசன் திருவள்ளுவர் இயற்றிய 1330 குறட்பாக்களையும் 29 நிமிடங்களில் சொல்லி உலக சாதனை படைத்து இருக்கின்ற இரட்டையர்கள் முத்தமிழ்சாமினி, செந்தமிழ் சாலினி ஆகிய இருவரும் நம்மோடு இதே மேடையில் இருக்கிறார்கள். திருக்குறள் தொடர்பான உலகச் சாதனை வரலாற்றில் தேனி மாவட்டத்திற்கு ஒரு மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்திருக்கின்ற இந்த குழந்தைகளை தேனீக்கள் அறக்கட்டளை பாராட்டுவது மகிழ்வுக்கும், போற்றுதலுக்கும் உரியதாகும்.

நமது இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று இருக்கின்ற கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதிப்பிற்குரிய இராமகிருட்டினன் ஐயா அவர்கள் இந்த குழந்தைகளுக்கான அரசு நலத் திட்டங்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டுமாய் தேனீக்கள் அறக்கட்டளையின் சார்பாகவும்,  தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

ஐயா கம்பம் இராமகிருட்டினன் அவர்களோடு ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு முன்னால் பல்வேறு அரசியல் காலங்களில் களப்பணிகள் செய்திருக்கிறேன். அன்று என் அரசியல் தலைவன் புரட்சிப்புயல் வைகோ அவர்களது அமைப்பில் ஒருவனாக.

தற்போது தொடர்ந்து இன்றைக்கு வையை தமிழ் சங்கத்தின் நிறுவனராக இந்த மேடையில் பேசுவதை பெருமையாகக் கருதுகிறேன். அருமையான விழாவினை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கு. தேனீக்கள் அறக்கட்டளை உள்ளிட்ட அனைத்துத்  தோழமைகளுக்கும்  தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றி கூறி எனது வாழ்த்துரையினை நிறைவு செய்கிறேன்.  நன்றி

வாழ்க வள்ளுவம்! வாழ்க வையகம். 
இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன், நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி.

No comments:

Post a Comment