புடவிப் பெரும்பரப்பினுள் மிகவும் பொருள் பொதிந்துள்ளதாகத் தென்படும் உலகவுருண்டையில், வீறொடு உலவி இதனையே ஆண்டு கொண்டிருக்கும் மாந்தவுயிரனின் தோற்றமும் - இயக்கமும் இயற்கை வளர்ச்சியின் படிமலர்ச்சிகளை உடையன! இம் மலர்ச்சி நிலையில், மாந்தவுயிரன் இவ்வாறு உருவாகி நிலைத்துப் பல்கித் தொடர்ந்து பெருகியோங்கி நிற்பதனுள், இவ்வுயிரனின் முன்னைய படிநிலையுயிரிகள் யாவும் பெற்றிருந்த பல்வேறு தன்மைகளும் அல்லது பண்புகளுங் கூடப் படிப்படியே மலர்ச்சியெய்தி வந்துள்ள உண்மையும், இவனின் வளர்ச்சி பற்றிய வரலாற்றில் விளக்கமாகவும் துலக்கமாகவும் புலனாகின்றது.
ஒன்றன் வளர்ச்சிக்கு ஊட்டம் மட்டும் இருந்துவிட்டால் போதுமா?! வளர்ச்சிக்குரிய உயிரிக்கு அதன் வளர்ச்சிநிலைக்கு இடையிடையே பிறிதொன்றால் தாக்கம் நேர்கையில், -- அதற்கு நேர்நிற்கும் எதிரியை எதிர்த்துத் தடுத்து அல்லது தாக்கி -இயலுமானால் அழித்துச் செல்வதுங்கூடத் தேவையாகின்றது! இல்லெனில், அதன் வளர்ச்சிநிலை தடைப்படுவது மட்டுமன்று; இருப்பே கூட இல்லாமற் போய்விடலாம்! எனவேதான், வளர்ச்சிக் குரியவை யாவும், தம்மை எதிர்ப்பனவற்றை எதிர்க்கும்; தம்மைத் தாக்குவனவற்றைத் தாக்கும்; தம்மை அழிக்க முற்படுவனவற்றை அழிக்க முற்படும்; அழிக்கும்! அல்லது, தாம் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்க்கும்; தாம் தாக்க வேண்டியவற்றைத் தாக்கும்; தாம் அழிக்க வேண்டியவற்றை அழிக்க முற்படும்; அழிக்கும்! இவை யாவும் இயற்கை நெறிகளே!
''மறம்'' என்னும் வீரப் பண்பானது, தமிழர்க்குரிய மிகச் சிறப்புடைய கூறுகளிலொன்றாக மிகவும் பெரிதுபடுத்திப் பேசப்படுகின்றதே!... அம் "மறம்" என்றால், என்ன தெரியுமா? (-"தடுப்பு'--தடுக்கும் ஆற்றல் --- தடுக்குந் திறம் --- ) மறுக்கும் திறம் என்பதேயாகும் (அதாவது, மறு + அம்> மறம்.) தாக்க வருமொன்றைத் தடுப்பது, முதல் செயல்! தாக்க வருகின்ற ஒன்றை, நாமும் அவ்வாறே தாக்குவோமேயானால் -அதனின் தாக்கம் நம் மேல் விழும்! நம் தாக்கம் அதன்மேல் விழும்! இரு நிலைகளுக்கும் அவற்றின்வழி அழிவு நேரலாகும்! தாக்கற்கு எதிராகச் செயத்தக்க முதல் வினை, தாக்குதல் அன்று; தடுப்பே! தடுப்புக்கு அடுத்தே தாக்குதல் தொடுக்க வேண்டும்! இரு மோதுயிரிகளும் - ஒத்த வலிமையும் ஒத்த திறமையும், ஒத்த மதிமையும் கொண்டிருந்தாதாம் இந்நிலை ஒக்கும்! இவ்விரண்உருவில்தான் மிகுவலிமையுடைய தாகவிருப்பின், பிறிதொன்றாகிய எளியவுயிரியை வலியது எளிதே வீழ்த்திவிடும்! அங்குத் தாக்குதலுக்கெதிரான தடுப்பே பயன்படாது! வலிய ஒன்று - எளிய ஒன்றைத் தடுக்கையினாற் கூட வீழ்த்த வழியுண்டு! தாக்குதலுக்கு எதிர்வினை தாங்குதல்![ஒநோ : தாங்கு தல் = பொறுத்தல்;பொறுத்தலால் அதாவது தாங்குதலால் தடுத்து நிறுத்தல் ஒ.நோ தாங்கு + அல் தாங்கல் = வெளியேறாவாறு நீரைத் தடுத்துவைத்துக்கொண்டிருக்கும் பெருங்குளம். (காண்க:) வேடன் தாங்கல். தாங்கல்> (English ) Tank.
காண்க : நூல்:'தகுதி”---அருளி (1979)] தடுப்பதிலும் மிகப்பல முறைகள் உள! தடுப்பதற்கும் மிக்க ஆற்றல் வேண்டும்! தாக்க முற்படும் உயிரியினும் - தாக்குதலுற நிற்கும் உயிரிக்குத் தடுக்குந்திறன் வேண்டும். இல்லெனில், தாக்குற்றுத் தடுக்குற்றுத் தலை சாயலாகும்!
ஒருயிரி தாக்க முற்படுகையில் --- அதனைத் தாங்கித் தடுக்கும் பிறிதோர் உயிரியின் எதிர்முயற்சிள் பல திறத்தன! படிப்படியே,-இருப்பு விருப்பு பற்றி உயிரிகளிடம் இத் திறன்கள் வளர்ந்தன! பிற உயிரிகளின் தாக்குதல் -- தடுத்தல் வினைமுறைகளை நன்கு கூர்ந்து நோக்கி வந்த மாந்தவுயிரன் தன் அறிவுத் திறத்தால் அவற்றிடையிலான நுண்ணுட்பங்களை மேலும் மேலும் விளங்கிக் கொண்டவனாய் அவ்வாறே அவற்றைப் பின்பற்றவும் -சில நிலைகளில் அவற்றை மேலுந் திருத்திச் செப்பஞ்செய்து கொண்டநிலையில் பயன்படுத்தவுந்தொடங்கி, மிக மிக வளர்ந்தான்! [தமிழகத்துக்கே உரிய பண்டைய சண்டை முறைகளில் சிலவற்றைப் பயிலும் வாய்ப்பு நேர்ந்தபோது, தடுக்கும்போதே -தடுக்கும் அதே முறைமையிலேயே, அதே கணத்திலேயே தாக்குதலையும் உடன் நிகழ்த்தி விடும் நுண்வினைப் போக்கின் கணக்கு முறையானது -- எனக்கு மிகவும் வியப்பளித்தது!] [இம் முறைமை, - அவனே தனக்குத்தானே எண்ணி உருவாக்கிய ஒன்றன்று! கண்டு பிடித்தது! அதாவது, பிற போருயிரிகளின் தாக்குதல் - -தாங்குதல் (தடுத்தல்) முறைகளைக் கண்டு நன்கு உட்கொண்டு, தானும் அவற்றைப் பயின்று பயன் கொண்டது, அது!]
வலிமையற்ற உயிரியொன்று, வலிமையார்ந்த பிற உயிரி யொன்றின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து எதிர்த்து நிற்கத் திடாரிக்கமும் இல்லாநிலையில் திராணியும் --- என்ன செய்யும் ? அவ்விடத்தினின்று பிரிந்து தப்பித்து ஓடும் ! இவ் வினையுங் கூட - ஒரு வகையில் காப்பு வினையே!
இப்பொழுது நாம் காணும் குதிரை,-- மிகு பண்டைய தொடக்கக் காலத்தில் நரியளவான உருவில்தான் இருந்தது! அதனைப் போலும் கருவமைந்திருந்த பிற விலங்குகளுக்குப் பெரும்பாலும் கொம்புகள் அமைந்திருந்தன! அவற்றில் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தான் - அவற்றைக் கண்டு பறக்கப்பறக்க ஓடி ஓட்டத்திலேயே - அல்லது ஓட்டத்தினாலேயே தப்பித்துக் தப்பித்துத் தன் இன வளர்ச்சிலையே காத்துக்கொண்டது! இன்றைக்கு ஆற்றல் அலகையே குதிரையின் வலிமைக்கு ஈடாகக் கணக்கிடக்கூடிய நிலைக்கு அதவின் தற்காப்பு முயற்சியான ஓட்டமே காரணமாக அமைந்தது? (Horse-Power பரித்திறன்)
விலங்குகளுக்குத் தலைமீது வாய்த்திருக்கும் கொம்புகள் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கால்விரல்களின் துனிப்பகுதிகளில் வல்லிதாக வாய்த்திருக்கும் உகிர்கள்[நகங்கள்)ஊருபிரிகளான நண்டு. தேன், நட்டுவக் காலி முதலியவற்றுக்கு வாய்த்திருக்கும் கொடுக்குகள்' போன்றன யாவும். - அவையலையும் தற்காப்புக்கௌத் தாம் முயன்ற முயற்சி வினைகளுக்குப் பரிசுகளாகப் படிப்படியே இயற்கை தந்த எழுச்சிக் கருவிகளாகுவளவே! அலையே- அவற்றின் தற்காப்புப்படைக் கலங்களும் -க்கற்கலங்களும் ஆகி நீடினர்
செடி கொடி மரங்களாகிய நிலைத்திணைகள் சிலவற்றின் மீது கரிதாக நீடி முனைத்திருக்கும் முன்ளெழுச்சிகள் கூட— அவற்றின் தற்காப்புக்கெனத் தோற்றிக் கொண்ட படைக்கலங்களேயாகும்!
தவிர்க்க முடியாவாறு வளர்ந்து கொண்டேயிருக்கும் விரல் உகிர்களை (நகங்களை) இன்றைக்குத் தேவையற்றனவாக நாம்தெளிந்த நிலையில் சீவியெறிந்து குப்பையொடு சேர்க்கின்றோமே, இவ்வுகிர்கன்யாவும் --- தம்மின் பண்டைய முன்னுயிரிகள் தம் தற்காப்புக்கெளவும் ---தாக்கற்கெளவும் தாமே வளர்த்தெடுத்த கூர்ங் கருவிகளின் எச்சவினைவுகளின் இன்றைய காட்சிப் பொருள்களே!
தாக்கு என்பதுவும் - தற்காப்பு என்பதுவும் ஒரு காசின் இரு பக்கங்கள் போல்வன ! இரண்டு முயற்சிகளுமே - உயிரியின் படிநிலை மலர்ச்சியிலும் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றிய மூலவினைகளாகும்! உயிரிக்கு உள்ள உணர்ச்சிகளில் அடிப்படை உணர்ச்சிகளான பசியும் காமமும் போன்று — புற வினைமுறைகளில் இவை மூலவினைகள்
வலிய உயிரியொன்று - எனிய உயிரியொன்றை ~ அல்லது தன் இனத்தில் வலிவற்ற உயிரியொன்றைத் தாக்க முற்படுகையில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத தேர்உயிரி. அதன் முன்னீடாக வளைவது அல்லது கருள்வது என்பது இயற்கை வினை ! இவ் " வளைவு என்பது,[வலியதன் முன் எளியதானது -) ஒடுங்குவதன் அல்லது அடங்குவதன் அடையாளக் காட்சியாகும்! இவ்வியற்கை வினைமுறை, தோற்ற ஒற்றைப் புரையன் (one cellular object ] தொடங்கி - மாந்தவுயிரன் ஈறாக அனைத்துயிரிகளிடத்தும் படிவுகொண்டு தொடர்ந்தது; தொடர்கின்றது; தொடரும்!
தாக்கத்தை எதிர்கொள்ள முடியாத உயிரி, - அத்தாக்கத்தின்வழி நேரவுள்ள விளைவெண்ணி - அதற்கும் முன்னரேயே தான் உள்ளங் கொள்ளுவதாகிய வளைவு உணர்ச்சியே - மனவளைவே “அச்சம்” என்னும் பெயரால் தமிழமாந்தனால் சுட்டப்பெற்றது!
இவ்வுணர்ச்சியைக் குறித்துத் தமிழர் வழங்கிய சொற்களாக -
1. அஞ்சு 2. அச்சு 3. அச்சம் 4. அச்சலிப்பு 5. வெருவு (வெரூஉ) 6. வெருட்சி 7.உட்கு 8.சூர் 9. கொன் 10.நடுக்கம் 11. அதிர்ப்பு 12. விதிர்ப்பு 13. விதர்ப்பு 14. பனிப்பு 15. உரு 16. உரும் 17. உரும்பு 18. பலம்பு 19. கவலை 20. கலங்கள் 21. கலக்கு 22. கலக்கம் 23. பேம் 24. அணங்கு 25. அடுப்பு 26. விறப்பு 27. பிறப்பு 28. வெறி 29.வெறுப்பு 30, வெடி 31.நாம் 32.நாமம் - என்னும் முப்பத்திரண்டு எண்ணிக்கையின, தமிழ் இலக்கிய இலக்கண நூல்களிலும் சொற்றொகை நூல்களிலும் விரவலாகப் பரவிப் படர்ந்து காட்சியளிக்கின்றன!
(தமிழரிமா ப.அருளியார் ஐயா அவர்களது பதிவிலிருந்து ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம்.