13 - 09 - 2018 இன்று பெரியகுளத்தில் நடைபெற்ற, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி அவர்கள் எழுதிய “பாரதி தரிசனம் “ புத்தக வெளியீட்டு விழாவில் தேனி வையைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு அடியவன் (புலவர் ச.ந.இளங்குமரன்) புத்தகம் குறித்துப் பேசியதன் சுருக்கம்....
"பாரதி தரிசனம்" இந்தப் புத்தகம் அருள்மொழி பிரசுரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 9 பேர் இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கின்றனர். நூலாசிரியர் குப்புசாமி ஐயா அவர்களுடைய எனது தரிசனம் என்கின்ற உரையோடு தொடங்குகிறது இந்த பாரதி தரிசனம். இந்த நூல் நாற்பது உட்தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது. தரிசனம் என்ற சொல்லுக்கு காட்சி என்ற ஒரு பொருள் உண்டு. அந்த வகையில் நூலாசிரியர் பாரதியாரை நூல்முழுமைக்குமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். பாரதியை 37 தலைப்புகளில் காட் சிப்படுத்தியதோடு 38, 39, 40 ஆகிய மூன்று தலைப்புகளில் பாரதியாரைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் பேசியதைத் தொகுத்து திருவள்ளுவமாலை போல பாரதியாரைப் பற்றி பல்வேறு அறிஞர்களின் பாரதி புகழ் அஞ்சலி என்று கடைசி மூன்று தலைப்புகளில் கூறுகிறார். 37 தலைப்புகளில் பாரதியின் வாழ்வியலைப் பற்றி விளக்குகிறார். இந்த நூல் அறிஞர்களுக்கு உரிய நூல் என்று சொல்ல முடியாது. ஆனால் அடுத்த தலைமுறையினரான இளைஞர்களுக்கு உரிய நூல். பள்ளி மாணவ மாணவியர்கள் படித்து பயன்பெற வேண்டிய நூல். பாரதியின் வாழ்க்கையை ஏறக்குறைய 184 பக்கங்களில் மிகச்சரியாக, அழகாக, எளிய முறையில், இனிய நடையில், அருமையாக இந்த நூலில் சொல்லியிருப்பது பாராட்டக்கூடியது. அதைத் தாண்டி பாரதி ஒரு பத்திரிக்கை ஆசிரியராக, ஒரு மொழிபெயர்ப்பாளராக, ஒரு கவிஞனாக, கட்டுரை ஆசிரியனாக, இந்திய தேசிய விடுதலைக்கு போராடுகின்ற ஒரு போராளியாக, கண்ணம்மாவின் காதலனாக, வறுமையில் உழலும் ஏழைப் புலவனாக, இயலாதவர்களுக்கு உதவும் வள்ளலாக என்று பல்வேறு முறையில் பல்வேறு வகையில் பாரதி இந்த நூலில் நமக்கு தரிசனம் தந்திருக்கிறார். நூலாசிரியர் நம்மையெல்லாம் பாரதியின் தரிசனத்தை பெற வைத்திருக்கிறார். பொதுவாக ஒரு எழுத்தாலனுக்கு, ஒரு படைப்பாளனுக்கு உரிய அந்த தருவதோடு நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் போல் தாமும் பரிசு பெறவேண்டும் என்று எண்ணிய பாரதி ரவீந்திரநாத் தாகூர் என்னோடு போட்டி போடத் தயாரா? என்று பாரதி முழங்கிய முழக்கம் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. மேலும் பக்கிம் சந்திர சட்டர்ஜி, காந்திஜி, அன்னை அரவிந்தர், வ.வே.சு.ஐயர், நாவலர் சோமா சுந்தரபாரதி, வ.உ.சி. போன்ற அறிஞர்கள் பற்றிய குறிப்புகளும் இந்நூலுள் இடம் பெற்றுள்ளது. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பாரதியார் கைது செய்யப்படுகின்ற சூழ்நிலையில் அந்த ஏகாதிபதி அரசை ஏமாற்றி புதுச்சேரிக்கு புலம்பெயர்ந்து அங்கே வாழ்ந்து வந்த செய்திகளும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாரதி தரிசனம் என்ற மிக அருமையான இந்த நூல் பாரதியின் வரலாற்றை சுருக்கமாக எல்லோரும் தெரிந்து கொள்ளக்கூடிய அளவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதைப்போல இந்த நூலில் உள்ள குறைகள் என்று சொன்னால் ஐந்தாவது தலைப்பில் எட்டயபுரம் சிறப்பு என்கின்ற தலைப்பில் 41 வது பக்கத்தில் ஆறாம் பத்தியில் உள்ள செய்தி கொண்டு கூட்டியம் பொருள் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. அந்த பகுதியில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும். அதை போல பக்கம் 125 நீலகண்டர் மூன்று நாள் பாரதியின் வீட்டில் தங்கியிருந்தததாக செய்தி பதிவாகியுள்ளது. இது பாரதிக்கும் தெரியாது. பாரதியார் வீட்டுக்கு வரும் பொழுது வீட்டில் யாருமே இல்லாத நிலை இதற்கான காரணங்கள் சரிவர சொல்லப்படவில்லை. அடுத்து பக்கம் 135 ல் பாரதியார் எந்த ஒரு விளையாட்டையும் பார்க்காமல் விளையாடமாட்டார் என்கின்ற செய்தி இடம் பெற்றிருக்கிறது. இது நமக்கு படியாக இல்லை. 168 ஆம் பக்கத்தில் அம்பிலிருந்து விடுபட நாண் என்று தவராகப் பதிவாகியுள்ளது. வில்லிருந்துதான் அம்பு விடுபட வேண்டும். அடுத்த இந்த சிறு குறைகள் நூலில் சரி செய்யப்பட வேண்டியவையாகும். பாரதி தரிசனம் என்கின்ற இந்த நூலை எழுதிய நூலாசிரியர் நல்லாசிரியர் சு.குப்புசாமி அவர்கள் ஏறக்குறைய தேனி மாவட்டத்திலேயே 205 நூல்களை எழுதிய நூலின் முதல்வர். அவர் மேலும் பல்வேறு நூல்களை இயற்றி தமிழ் கூறும் நல்லுலகிற்கு சிறப்பு செய்ய வேண்டும் என்று வையைத் தமிழ்சசங்கம் சார்பில் கேட்டுக் கொண்டு எனது இந்த மதிப்புரையை நிறைவு செய்கிறேன் நன்றி.
இனிய அன்புடன் புலவர் ச.ந.இளங்குமரன்.
No comments:
Post a Comment