இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 26 September 2018

காந்தியின் கடிதம்

காந்தியடிகளுக்கு நெருக்கமானவர் இராச கோபாலாச்சாரியார்.
அவருடைய  மகன் காந்தி
யடிகளின் ஆசிரமத்தில் பயின்று வந்தார்.
மகனுக்கு இராசாசி கடிதம் எழுதி இருக்கிறார்.
இக் கடிதம் காந்தியடிகளின் பார்வைக்கு
வந்து விட்டது.
உடன் இராசாசிக்கு காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதினார்.
அக் கடிதம்.

   அன்புள்ள சி.ஆர்.
இப்போது காலை 3.30மணி.
இரவு 12-மணிக்கு மேல் எனக்கு உறக்கம் வரவில்லை.
நேற்று உங்கள் மகனுடன் பேசிக் கொண்டிருந்த போது, நீங்கள் அவருக்கு எழுதிய கடிதத்தை பார்த்தேன்.

எந்த மொழியில் கடிதம்-என்று கேட்டேன்.
ஆங்கிலத்தில்-என்று பதில் அளித்தார்.
கேட்டவுடன், என் இதயம் சுக்கு நூறாக
வெடித்து விட்டது.

இது பற்றி உங்கள் மகனுடன் விவாதித்தேன்.  அறிவியல்
சிந்தனைகளை தமிழில் எழுத
இயலாது என்று அவர் கூறியதைக் கேட்டு, அதிர்ந்து போனேன்.

எனக்கு பெரிய நம்பிக்கையாக
இருப்பவர் நீங்கள்.
பெரிய குறைபாடாக இதைக்
கருதுகிறேன்.
தாய் மொழியைப் புறக்கணிக்கப்பது,
தாய் தந்தையர்களைப்
புறக்கணிக்கப்பது போல அல்லவா.

தங்களின் சிறந்த புதல்வர்கள்
தங்களைப் புறக்கணித்து
விட்டது போலத் தெரிகிறது.

பாவம். உங்கள் மகன் இராமசாமிக்கு
என்ன எதிர் காலம் இருக்க
முடியும்.

எனக்கு தெளிவுபடுத்துங்கள்.
அல்லது, உங்களுடைய சிறந்த
தமிழில் உங்கள் மகனுக்கு
கடிதம் எழுதுவதாக உறுதி
அளியுங்கள்.
                       மோ.க. காந்தி.

(நன்றி தமிழறிஞர் வீ.நா.சோ.)
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்.நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம் & செயலர் திருவள்ளுவர் மன்றம் நாகலாபுரம், தேனி.

Thursday, 13 September 2018

விநாயகன். விகார்+நாயகன்

போதி மரத்துப் *'புத்தனை'* விநாயகனாக்கிய ஆரிய வரலாற்றுத் *திருட்டுச் சூழ்ச்சி :-*

பாபாசாகேப் டாக்டர்  *அம்பேத்கர்* அவர்கள் சொல்லுவார்...

"The history of India is nothing , the battle between Buddhism and Brahmanism'
என்று.

அதாவது
இந்திய வரலாறு என்பது எதுவுமில்லை.

பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான போரே இந்த இந்திய வரலாறு என்று...!

இந்திய வேத ,
பூத, பார்ப்பனப் புளுகு மூட்டைகளான வேதங்கள், ஷ்மிருதிகள், ஆரண்யங்கள், உபநிடத்துக்கள் , என சமஸ்கிருதத்திலுள்ள புராணக் குப்பைகள்,
வரலாற்றுத் திருட்டுகளையெல்லாம்
சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்று ஆராய்ந்தறிந்து  கற்றுணர்ந்து சொன்னவர்தான் *பாபாசாகேப் அம்பேத்கர்* அவர்கள்...!

சரி...

*யார் இந்த விநாயகன்...?*

பார்ப்பனியம் சொன்ன அதே கதைகளை வைத்து அழுக்கில் உருவானவன்,
யானைத்தலைகளைப் பொருத்தியவன்...
என்றெல்லாம் அவர்கள் சொன்ன கதைகளை வைத்தே நாம் நையாண்டிகள் செய்வது ஒரு புறம் இருக்கட்டும்...!

புத்தன் தன் அரச வாழ்வைத் துறந்து அதன் மரத்தடியில் அமர்ந்த காரணத்தினாலே...
அது
*அரசமரம்* என்றாயிற்று...!

ஆங்கிலத்தில்
Bothi tree என்றழைக்கப்படுகிறது.

பின்னாளில் *பௌத்தப் பண்பாட்டு வாழ்வியல் முறைகளை* அழிக்கத் தொடங்கிய இந்துஆரியம்,

நம் மக்களின் பழக்க, வழக்கங்களாய் ஊறிப்போன செயல்களை மாற்ற இயலாத காரணத்தினால்,

பௌத்தமுறைப் பழக்க வழக்கங்களைத் தன்பால் ஈர்த்துக்கொண்டு விழுங்க (கபளீகரம் செய்ய)த் தொடங்கியது,

பௌத்த அடையாளங்களைத் தமதாக்கிக்கொள்ள
அதில் சில இடைச்செருகல்கள், கட்டுக் கதைகள், அடையாளச் சிதைப்பு ஆகியவற்றைக் கொண்டுவந்தது,
*அரசமரத்தடியில் அமர்ந்த குருவான புத்தரிடம்* சென்று அறநெறிக் கருத்துகள்,
தம்ம போதனைகள் கேட்டுவந்த மக்களிடம்,

புத்தருக்குப் பின் அவரது நினைவைப் போற்றும் முகமாக

மதிப்புச் செலுத்துவதற்காக
அரசமரமருகே சென்றுவந்த இடத்தில் *புத்தரின் உருவம் பொரித்த சிலைகளை* அழிக்கத்
தொடங்கியிருந்தனர்.

விகார் + நாயகன்= விநாயகன் ;

அதாவது எங்களின் *விகாரின் நாயகனான புத்தனே*
இங்கு விநாயகனாக்கப்பட்டார்....!

இதன் இன்னொரு பெயர் 'பிள்ளையார்'                     என்றழைக்கப்படுகிறது.

திருச்சியில் கூட உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது.

*அதன் உச்சியில் இருந்ததும் புத்தர்தான்.*

திரி+ சரணம்+ பள்ளி = திரிசரணப்பள்ளி ,
இப்பொழுது திருச்சிராப் பள்ளி என்று வழக்கானது.

*(திரிசரணங்கள் என்பது புத்தம், தம்மம், சங்கம் என்பதுதான்)*

இந்த மூன்று அறநெறிகளைப் போதித்த பள்ளி (பாலி சொல்) தான் அங்கு இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

சீலம் என்றால் பாலி மொழியில் *ஒழுக்கம்* எனப்படும்,
பழைய சீலமே பின்னாளில் சேலமாகியுள்ளது.

திருப்பதியிலுள்ள சாமிக்கு திருவேங்கடன் என்ற பெயருண்டு திரு+ வேங்கட+ மலையான் திரி புத்தம், தம்ம, சங்கம்  என்ற திரிரத்தினங்கள் திரு என்றாகி ,

வேங்கடம் என்றால் மலை, அதாவது திரி பீடகத்தில் மலையின் உச்சத்தை அடைந்தவன்....

ஆக இதுவும் பௌத்தப் பெயர்தான்.

பகவான் என்பதும் பாலிச்சொல்தான்,

அதன் பொருள் ஆசைகளை அறுத்தெரிந்தவன் என்று.

திருவள்ளுவர் கூறிய
*ஆதி பகவன்*...
புத்தர்தான்...

அதன் பொருள் *ஆதி-என்றால்= முதல் ;*

*பகவன்என்றால்= பற்று அற்றவன்* என்பதாகும்.

இன்று *திருமணங்களில் கூட அரசங்கால் நடுவது வழக்கமாக உள்ளது.*

இதனை இந்துக்கள் பின்பற்றுவதால் அதனை மூடநம்பிக்கையாக நாமும் எதிர்க்கிறோம்,
ஆனால்  அது நமது வழக்கமாக முன்பு இருந்துள்ளது ,

நமக்கெல்லாம் அறகருத்துகளைப் போதித்து நல்வழிப்படுத்திய *புத்தரின் தலைமையின்பால்  எங்களின் திருமணம் நிகழ்கிறது*
என்பதைக் குறிக்கும்
உள்ளார்ந்த
அன்பின், மதிப்பின்,
நன்றியுணர்வின் வெளிப்பாடுகளைக் குறிக்கும் செயல்கள்தாம் என்பதை 
நாம் அனைவரும் உணர்தல் வேண்டும்.

அழிக்கப்பட்ட எம் வரலாறு மீண்டெழும்....

தம்மச்சக்கரம் சுழலும்...!

*புத்தமே நம் நெறி..!*

இடைச் செருகலான
*விநாயகனை*

*எடுத்து எறி...!*

பாரதி தரிசனம் புத்தக மதிப்புரை

13 - 09 - 2018 இன்று பெரியகுளத்தில் நடைபெற்ற, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி அவர்கள் எழுதிய “பாரதி தரிசனம் “ புத்தக வெளியீட்டு விழாவில் தேனி வையைத்               தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு அடியவன் (புலவர் ச.ந.இளங்குமரன்) புத்தகம் குறித்துப்  பேசியதன் சுருக்கம்....

"பாரதி தரிசனம்" இந்தப் புத்தகம் அருள்மொழி பிரசுரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 9 பேர் இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கின்றனர். நூலாசிரியர் குப்புசாமி ஐயா  அவர்களுடைய எனது தரிசனம் என்கின்ற உரையோடு தொடங்குகிறது இந்த பாரதி தரிசனம். இந்த நூல்  நாற்பது உட்தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது. தரிசனம்  என்ற சொல்லுக்கு காட்சி என்ற ஒரு பொருள் உண்டு.   அந்த வகையில் நூலாசிரியர் பாரதியாரை நூல்முழுமைக்குமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.  பாரதியை  37 தலைப்புகளில் காட் சிப்படுத்தியதோடு 38, 39, 40 ஆகிய மூன்று தலைப்புகளில் பாரதியாரைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் பேசியதைத் தொகுத்து திருவள்ளுவமாலை  போல பாரதியாரைப் பற்றி பல்வேறு அறிஞர்களின் பாரதி புகழ் அஞ்சலி என்று கடைசி மூன்று தலைப்புகளில் கூறுகிறார். 37 தலைப்புகளில் பாரதியின் வாழ்வியலைப் பற்றி விளக்குகிறார். இந்த நூல் அறிஞர்களுக்கு உரிய நூல் என்று சொல்ல முடியாது. ஆனால் அடுத்த தலைமுறையினரான இளைஞர்களுக்கு உரிய நூல். பள்ளி மாணவ மாணவியர்கள் படித்து பயன்பெற வேண்டிய நூல். பாரதியின் வாழ்க்கையை ஏறக்குறைய 184 பக்கங்களில் மிகச்சரியாக, அழகாக, எளிய முறையில், இனிய நடையில், அருமையாக  இந்த நூலில் சொல்லியிருப்பது பாராட்டக்கூடியது.  அதைத் தாண்டி பாரதி ஒரு பத்திரிக்கை ஆசிரியராக, ஒரு மொழிபெயர்ப்பாளராக,  ஒரு கவிஞனாக, கட்டுரை ஆசிரியனாக, இந்திய தேசிய விடுதலைக்கு போராடுகின்ற ஒரு  போராளியாக, கண்ணம்மாவின் காதலனாக, வறுமையில் உழலும் ஏழைப் புலவனாக, இயலாதவர்களுக்கு உதவும் வள்ளலாக என்று பல்வேறு முறையில் பல்வேறு வகையில் பாரதி  இந்த நூலில் நமக்கு தரிசனம் தந்திருக்கிறார். நூலாசிரியர் நம்மையெல்லாம் பாரதியின் தரிசனத்தை பெற வைத்திருக்கிறார்.  பொதுவாக  ஒரு எழுத்தாலனுக்கு, ஒரு படைப்பாளனுக்கு உரிய அந்த தருவதோடு நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் போல் தாமும் பரிசு பெறவேண்டும் என்று எண்ணிய பாரதி ரவீந்திரநாத் தாகூர்  என்னோடு போட்டி போடத் தயாரா? என்று பாரதி முழங்கிய முழக்கம் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. மேலும் பக்கிம் சந்திர சட்டர்ஜி, காந்திஜி, அன்னை அரவிந்தர், வ.வே.சு.ஐயர், நாவலர் சோமா சுந்தரபாரதி, வ.உ.சி. போன்ற அறிஞர்கள் பற்றிய குறிப்புகளும் இந்நூலுள் இடம் பெற்றுள்ளது. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பாரதியார்  கைது செய்யப்படுகின்ற சூழ்நிலையில் அந்த ஏகாதிபதி அரசை ஏமாற்றி புதுச்சேரிக்கு புலம்பெயர்ந்து அங்கே வாழ்ந்து வந்த செய்திகளும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாரதி தரிசனம் என்ற மிக அருமையான இந்த நூல் பாரதியின் வரலாற்றை சுருக்கமாக எல்லோரும் தெரிந்து கொள்ளக்கூடிய அளவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  அதைப்போல இந்த நூலில்  உள்ள  குறைகள் என்று சொன்னால் ஐந்தாவது தலைப்பில் எட்டயபுரம் சிறப்பு என்கின்ற தலைப்பில் 41 வது பக்கத்தில் ஆறாம் பத்தியில் உள்ள செய்தி கொண்டு கூட்டியம் பொருள் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. அந்த பகுதியில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும். அதை போல பக்கம் 125 நீலகண்டர் மூன்று நாள் பாரதியின் வீட்டில் தங்கியிருந்தததாக செய்தி பதிவாகியுள்ளது. இது பாரதிக்கும் தெரியாது. பாரதியார் வீட்டுக்கு வரும் பொழுது வீட்டில் யாருமே இல்லாத நிலை இதற்கான காரணங்கள் சரிவர சொல்லப்படவில்லை. அடுத்து  பக்கம் 135 ல் பாரதியார் எந்த ஒரு விளையாட்டையும் பார்க்காமல் விளையாடமாட்டார் என்கின்ற செய்தி இடம் பெற்றிருக்கிறது. இது நமக்கு  படியாக இல்லை. 168 ஆம் பக்கத்தில்  அம்பிலிருந்து  விடுபட நாண் என்று தவராகப் பதிவாகியுள்ளது. வில்லிருந்துதான் அம்பு விடுபட வேண்டும். அடுத்த இந்த சிறு குறைகள் நூலில் சரி செய்யப்பட வேண்டியவையாகும். பாரதி தரிசனம் என்கின்ற இந்த நூலை எழுதிய நூலாசிரியர் நல்லாசிரியர் சு.குப்புசாமி அவர்கள் ஏறக்குறைய தேனி மாவட்டத்திலேயே 205 நூல்களை எழுதிய நூலின் முதல்வர். அவர்  மேலும் பல்வேறு நூல்களை இயற்றி தமிழ் கூறும் நல்லுலகிற்கு சிறப்பு செய்ய வேண்டும் என்று வையைத் தமிழ்சசங்கம் சார்பில் கேட்டுக் கொண்டு எனது இந்த மதிப்புரையை நிறைவு செய்கிறேன் நன்றி.

இனிய அன்புடன் புலவர் ச.ந.இளங்குமரன்.

Saturday, 1 September 2018

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை போட்டிகள்

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கான கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் திரு 
பெ. இளங்கோ அவர்கள் அனைவரையும்  வரவேற்றார். தமிழ் வளர்ச்சித்துறை உதவியாளர் பாப்பா லட்சுமி அவர்கள் நிகழ்வை தொகுத்தார். இந்நிகழ்வில் தேனி மாவட்டம் முழுமைக்குமாக 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கட்டுரைப்போட்டியில் 52 பேரும் கவிதையில் 50 பேரும் பேச்சு போட்டியில் ஐம்பது பேர் என 154 பேர் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கு தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அடியவன் நடுவராகக் கலந்து கொண்டதோடு பேச்சு கவிதை கட்டுரை தொடர்பாக ஒவ்வொரு மாணவரும் போட்டியினை எப்படி  எதிர்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கான ஊக்க  உரையாற்றினேன். நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளி தலைமையாசிரியர்  நன்றி உரையாற்றினார். நந்தகோபால் , கற்பூர பூபதி , திராவிடமணி, செந்தில்குமார் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.