இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 28 February 2026

தமிழ்நாடு முதல்வர் 73 வையைப்பதிப்பகம் தேனி

28-02-206
வையைப்பதிப்பகம் தேனி நாகலாபுரம் பதிப்பில் முனைவர் பெ.சித்ரா இளஞ்செழியன் அவர்களது தொகுப்பில் "தமிழ்நாடு முதல்வர் 73, தங்கப் பாப்பா" ஆகிய இரண்டு நூல்களும் திருச்சியில் காவேரி முத்தமிழ் சங்கமம் சார்பில் வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்த இந்த நிகழ்வுக்கு முன்னிலை வகித்தேன். 

தேனியில் இருந்து சுமார் ஐந்து 45 மணிக்கு கிளம்பி 9 40 மணிக்கு திருச்சி கருமண்டபத்தை அடைந்தேன். கருமண்டபத்தில் நற்றமிழ்ப் புலவர் பெருமகனாரும், ஐயா பிரகாசம் அவர்களும் அங்கு காத்திருந்தார்கள். மூவரும் காலை உணவை திருச்சி அசந்தா விடுதியில் முடித்துக் கொண்டு விழாவிற்கு சென்றோம். நிறைந்த தமிழ் உறவுகளை சந்திக்கின்ற விழாவாக அது இருந்தது. அதனைத் தொடர்ந்து கரியம்மால் கேசவன் ஐயா அவர்களுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.  அவர் விடுதியில் இருப்பதாகச் சொன்னார். அந்த விடுதியின் பெயர் "ராக் வியூ லாட்ஜ்" இது திருச்சி தெப்பக்குளத்தில் இருக்கிறது.

கேசவன் ஐயா அவர்களுடைய நட்பு எனக்கு கிடைக்காத நாளில் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு தேனியில் எனது அன்புக்குரிய போராளி பா.செந்தமிழன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வினுக்கு என்னுடைய ஆசான் செந்தமிழ் அந்தணர் அவர்களை அழைத்திருந்தேன். ஆதித்யா விடுதியில் தங்க வைத்தேன். அன்று மாலை நானும் வையைத் தமிழ் சங்கத்தின் துணைச் செயலருமான தம்பி மணிகண்டன், செந்தமிழன், அண்ணன் சித்தர் சிவா உள்ளிட்ட நண்பர்கள் பலரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக, இதழியல் தொடர்பாக, நிகழ்வு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தோம். இந்த பேச்சின் ஊடாக தவச்சாலை குறித்துப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஐயா அவர்களிடம் இருந்த தவச்சாலை அப்போது விற்பனை செய்யப்பட்டிருந்தது. தவச்சாலை பொறுப்புக்கு என்னை அழைத்தும் எனது சூழல் காரணமாக தவச்சாலை  பொறுப்பேற்று நான் நடத்த இயலாத நிலை குறித்தும் அன்றும் பேசினோம்.செந்தமிழ் அந்தணர் சொன்னார் "தம்பி என்னோடு இல்லை, தவச்சாலையும் என்னிடம் இல்லை" என்று.  இன்றும் அந்தச் சொல் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. "ஒரு நாள் அப்படி ஒரு தவச்சாலையை நிறுவுவேன்" என்று ஐயா அவர்களிடம் சொன்னேன். காலம் எப்பொழுது கணிக்கிறதோ தெரியாது. 

அன்று இரவு தேனி நிகழ்வு 9 மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவுப் பயணம் சற்று சிக்கலாக இருக்குமே என்று வருந்தினார். காலையில் அவருக்குத் திருச்சியில் நிகழ்வு. "ஒரு சிக்கலும் கிடையாது ஐயா நான் உடன் வந்து உங்களை திருச்சியில் விட்டு விட்டு வருவேன்" என்று சொன்னேன். ஒன்பது மணிக்கு மேல் கிளம்பி சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி நாங்கள் இருவரும் இந்த விடுதியை அடைந்த பொழுது மணி ஒன்றை நெருங்கி இருந்தது. அறையில் ஐயா அவர்களை விட்டுவிட்டு 15 நிமிடம் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். இரவோடு இரவாக தேனிக்குக் கிளம்பி வந்து காலையில் பணிக்கு அலுவலகம் சென்றேன். 

அன்று இரவு நடந்து சென்ற அந்த விடுதி தான் "ராக் வியூ லாட்ஜ்". அந்த விடுதியின்உரிமையாளர்தான் கரியமால் கேசவன் ஐயா அவர்கள். அந்த விடுதியில் அறை எண் 115 என் ஆசனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் தான் வாழும் காலம் மட்டும் அவருக்கு வாடகை எதுவுமே இல்லாமல் கொடுக்கப்பட்ட அறை அது. நேற்று நானும் நற்றமிழ்ப் புலவர் பெருமகனாரும், பிரகாசம் ஐயா அவர்களும் சென்று சந்தித்தோம்.
விடுதியில் சுமார் 2 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கேசவன் ஐயா அவர்களுக்கான தனி அறையில் பெரும்பகுதியாக நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் நெடிய படிப்பாளர் என்பதற்கு அந்த நூல்கள் சான்று. இன்னொன்று நாங்கள் உள்ளே போகும்போது அவர் கம்பராமாயணத்தில் ஒரு பகுதியைப் படித்துக் கொண்டிருந்தார். முழுக்க முழுக்க பெரியார் சிந்தனையாளர். ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டிய நிலை இருக்கிறது. அதற்கு படிப்பே துணையாக நிற்கும் என்பது பலரும் அறியாதது. அறிந்திருந்தாலும் கடைப்பிடிக்காதது. அவ்வகையில் நெடிய நேரம் ஐயாவோடு இலக்கியங்கள் குறித்தும், செந்தமிழ் அந்தணரின் நினைவுகள் குறித்தும், உரையாடிக் கொண்டிருந்தோம்.

பின்பு நான் நெடுநாளாக தேடிக் கொண்டிருந்த அரிய நூல் ஒன்று அய்யாவிடம் இருந்தது. அது திருக்குறள் முதல் குறளுக்கு இருநூறு பக்கம் ஆய்வுரையாக இருந்தது அந்த நூல். அதை எழுதியவர் கோ.தண்டபாணிப் பிள்ளை அவர்கள். இப்படி ஒரு நூல் குறித்து எனக்குச் சொன்னது ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.  அந்த நூலை ஐயா அவர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அவர் சொன்னார் "நீங்கள் நூலகம் வைப்பதாக இருந்தால் சொல்லுங்கள் நான் ஆயிரம் நூல்கள் உங்களுக்குத் தருகிறேன்" என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் திருச்சிக்கு வந்தால் தங்குவதற்கு இடம் இல்லை என்று எண்ண வேண்டாம். செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்களுக்கு ஒதுக்கியதைப் போலவே உங்களுக்கும் அறையை ஒதுக்கி கொடுக்கிறேன்க் நீங்கள் வரும்பொழுது சொல்லிவிட்டு வாருங்கள் என்று சொன்னார். பின்பு பிரியா விடை பெற்றுக் கிளம்பினோம். வ.சுப மாணிக்கம் ஐயா அவர்களுடைய மாணவர், குன்றக்குடிப் பெரியவரிடம் அணுக்கத் தொடர்பில் இருந்தவர். அறிவு கருவூலம் நற்றமிழ்ப் புலவர் பெருமகனார் அவர்களிடமும், பிரகாசம் ஐயா அவர்களிடமும் விடைபெற்று தேனியை இல்லத்தை அடைந்த  பொழுது மணி 9:30. 

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி

Tuesday, 24 February 2026

திருவள்ளுவர் விருது

திருவள்ளுவர் விருது அக்னி சிறகுகள் பத்தாம் ஆண்டு விழா சோழன் மழலையர் தொடக்கப்பள்ளி 23 ஆம் ஆண்டு விழா தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் நடைபெற்றது.

அக்னி சிறகுகள் அறக்கட்டளையின் தாளாளரும் சோழன் மழலையர் தொடக்கப்பள்ளியின் தாளாளருமான திரு சிவ சண்முகம் ஐயா அவர்களிடமிருந்து ஒரு நாள் அலைபேசி வந்தது. எங்களுக்குள்ளான இயல்பான உரையாடல்தான் அது. என்னுடைய தமிழ்ப்பணி குறித்தும், தமிழ் மீது எனக்கான ஆர்வம் குறித்தும், என் எழுத்துகள் தொடர்பாகவும், நான் பார்த்து வருகின்ற பணி தொடர்பாகவும் தொடர்ச்சியாகப் பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுக் கொண்டே உரையாடினார். அதற்கு முன்பு வரை அவர் யார் என்று எனக்குத் தெரியாது. முகநூலில் நட்பாக உள்ளார் அவ்வளவே.

இந்த உரையாடலின் நிறைவில் தற்போது நாம் பேசியது அனைத்தையும் எழுத்தாக்கம் பண்ணியிருக்கிறேன். அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். ஏதாவது தவறுகள் இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு பேரும் இயல்பாக பேசிக் கொண்டிருந்ததை ஏன் இவர் எழுத்தாக்கம் செய்தார்? என்று எண்ணிக் கொண்டே என்ன காரணம் ஐயா என்று கேட்டேன். அப்பொழுதுதான் அவர் சொன்னார் "உங்களை திருவள்ளுவர் விருதுக்குத் தேர்வு செய்து இருக்கிறோம்" என்று எனக்கு ஒரே வியப்பு. மீண்டும் அவர் சொன்னார் "உலகில் முதன் முதலில் தொல்காப்பிய மனனமுற்றவர்களுக்காக உங்கள் மாணவிகள் முதல்வரிடம் பரிசு பெற்ற போது, முதல்வர் தளத்தில்  பின்னூட்டத்தில் அன்றே நான் எழுதியிருந்தேன். இவருக்கு நாம் சிறப்பு செய்ய வேண்டும் என்று, அதன் தொடர்ச்சியாக உங்களுடைய பணிகளைப் பார்த்துக் கொண்டே வந்தவன் தற்போது நடைபெறவிருக்கின்ற விழாவில் உங்களுக்கு விருது தருவதாக முடிவு செய்து இருக்கிறேன்" என்றார். 

பொதுவாக விருதுக்காக நான் சென்று காத்திருந்து வாங்குவது அரிது. தவிர்க்க முடியாத என் தோழமைகள் சொல்லும்போது மட்டுமே செல்கிறேன். நான் விழாவில் பங்கெடுத்துப் பெறுகின்ற விருது வேறு. இப்படியான சூழலில் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து விருதுக்காக தேர்வு செய்திருப்பதை எண்ணி ஒத்துக் கொண்டேன். அதற்குப் பின்பாக இந்த விருதுக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒருவர் மிகச் சிறந்த தமிழ் அறிஞர் புலவர் கலியபெருமாள் ஐயா, இன்னொருவர் 50 ஆண்டு காலம் தொடர்ச்சியாக திருக்குறள் தொடர்பாக இயங்கி வருகின்ற மதிப்பிற்குரிய புலவர் நாவை சிவம் ஐயா. இருவரும் எண்பது வயதைக் கடந்த மீச்சிறந்த அறிஞர்கள். இவர்களோடு 50 வயதை கடந்திருக்கும் நானும் விருது பெறுவது மகிழ்ச்சியைத் தந்தது.

இப்பொழுது உலகத் தாய்மொழி நாள் அன்று காலை 10:30 மணிக்கு தேனியில் இருந்து கிளம்பினேன். சரியாக ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்கு திருக்கருகாவூர் சோழன் மழலையர் பள்ளியை அடைந்தேன். நுழைந்தவுடன் என் கண்களில் பட்டது இயற்கை வேளாண் அறிவியல் ஞானி நம்மழ்வார் ஐயா சிரித்தபடியே வரவேற்றார்.  பின்பு சிவ சண்முகம் ஐயா அவர்களுக்கு அலைபேசி செய்துவிட்டு மேலே உடைமாற்றுவதற்காகச் சென்றேன். அங்கு இயற்கையாய் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைக் கொண்டு உணவு தயாராகிக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்கிறேன் உணவுக் கூடத்தில் வள்ளலார் சிரித்துக் கொண்டிருந்தார். வள்ளலாருக்கு வணக்கம் சொல்லிவிட்டு என்னை தயார்படுத்திக் கொண்டு மேடைக்குச் சென்றேன். பெரும் பேராளுமைகள் பலரும் பங்கேற்ற நிகழ்வு அது. 

சோழன் பள்ளி மாணவ மாணவியரின் நடனம், வில்லிசை, பட்டிமன்றம், பேச்சு, பாட்டு, வினாடி வினா என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இது மழலையர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளா? அல்லது பெரும் பேரறிஞர்கள் மழலையராகக் கூடி இருக்கின்ற கலை மன்றமா? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பிக்கொண்டேன் அரங்கில்  தமிழ்ச்செம்மல் நாவை சிவம் ஐயா வரவேற்றார். அருகில் அமர்ந்து கொண்டு சில நிகழ்வுகளை பேசினோம். இப்பொழுது மேடை தயாரானது.

பல்வேறு சிக்கல்களுக்கு இடையே பள்ளியையும், தனித்திறன் சார்ந்த அறிஞர்களையும் புரந்து போற்றி வருகின்ற சிவ சண்முகம் ஐயா அவர்கள் மேடை நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார். அவருக்குத் துணையாக அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் பின்னால் நின்றது. ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் ஓரணியாய்த் திரண்டு நின்றனர். அவரின் எளிமை இயல்பான பேச்சு நடை அனைவரையும் ஈர்த்தது. விருது தொடர்பாக என்னைப் போல் ஒவ்வொருவரிடமும் பேசி அவர் ஆவணப்படுத்திய அத்தனை செய்திகளும் நூலாக வெளியிடப்பட்டது. ஒருவருக்கு விருது எதற்காகக் கொடுக்கப்படுகிறது? என்ற காரணத்தை விருத்தாளர்களுடைய ஒளிப்படம் அவர்களைப் பற்றிய இரண்டு பக்க குறிப்புகளோடு அந்த நூலை ஆவணப்படுத்தி இருந்தார் ஐயா சிவ சண்முகம். இது மிகப்பெரும் வியப்பை தந்தது. 

விருதுக்காய் நான் மேடை ஏறிய போது தஞ்சாவூர் மாவட்ட நீதியரசர் பரமசிவம் நாகராசன் அவர்கள் நீங்கள் ஆசிரியரா என்று கேட்டார். இல்லை நான் தையல் கலைஞன் என்று பதில் சொலல அவருக்கு வியப்பாக இருந்தது. என்னைப் பார்த்து  என்ன சொல்கிறீர்கள்? எப்படி இந்தத் தமிழுக்கு வந்தீர்கள் என்று கேட்டார். ஆர்வக்கோளாறில் வந்தேன் என்பதை விட நல்ல அறிஞர்கள் எனக்கு வாய்த்தனர். குறிப்பாக செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரும், திருக்குறள் தொண்டர் சிவசங்கரனாரும் ஆளுமை மிக்கவர்களாக எனக்கு வாய்த்தனர் என்று சொன்னவுடன் திருச்சி நம்ம ஐயாவின் மாணவரா  என்று கேட்டார். ஆம் என்றேன். இருவரும் கிடைத்த சில நிமிடங்களில் சில செய்திகளை பரிமாறிக் கொண்டோம்.

அக்கினிச் சிறகுகள் அறக்கட்டளையின் மூலம் நான் பெற்ற திருவள்ளுவர் விருது அரசு வழங்கும் விருதினைவிட மேன்மையானது என்று உணர்கிறேன். காரணம் எந்தப் பரிந்துரையும் இல்லை. இடைத்தரகர் இல்லை. தொகை இல்லை. தொகை தொடர்பாகப் பேசப்படும் ஒப்பந்தம் இல்லை. என்னுடைய 35 ஆண்டு கால பணிக்கு கிடைத்த பெரும் பரிசாகவே இதை நான் பார்க்கிறேன்.

ஒவ்வொருவரையும் அவரது தனித்திறன்களைச் சொல்லி மேடைக்கு அழைத்து அவர்களுக்கான விருதினை வழங்கிய நிகழ்வு பாராட்டுவதற்குரியது. பின்பு இரவு இயற்கை உணவினை உண்டு நாவை சிவம் ஐயா அவர்களுடைய மகிழுந்தில் திருச்சியை நோக்கிப் புறப்பட்டோம். திருச்சியில் பிரியா விடை பெற்றுத் தேனியை அடைந்தேன். புலவர் ஐயா அவர்களுடைய வரலாற்றுப் பயணங்களை இருவரும் பகிர்ந்து கொண்டே வந்தோம். சந்திரசேகரன் ஐயா உடன் வந்தார். புலவர் ஐயாவின் மகன் மகிழுந்தின் ஓட்டுநராக, பெயர்த்தி அருள் அருகில் அமர்ந்த வண்ணம் என்னை திருச்சியில் இறக்கி விட்டனர். அன்று அதிகாலை 3-45 மணியளவில் நாகலாபுரம் எனது இல்லத்தை அடைந்தேன். நான் அந்த நிகழ்வில் இருந்தது ஒரு மணி நேரம்தான் என்றாலும் மறக்க முடியாத நிகழ்வுகளில் அதுவும் ஒன்றாக அமைந்தது. அருமையான நிகழ்வினை ஒருங்கிணைத்து அனைவரையும் சிறப்பித்த சிவ சண்முகம் ஐயா அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும், பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் என்னுடைய நிறைந்த நன்றியை வாழ்த்தைத் தெரிவித்து மகிழ்கிறேன் வரலாற்றில் சோழன் மழலையர் தொடக்கப்பள்ளி நின்று நிலைக்க வாழ்த்துக்கள்.

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

Monday, 26 January 2026

மொழிப்போர் அறுபதாம் ஆண்டு

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைந்து நடத்திய மொழிப்போர் அறுபதாம் ஆண்டு விழா மற்றும் சி இலக்குவனார் சங்கத்தமிழ் விருது வழங்கல் விழா சென்னையில் திருவள்ளுவர் இலக்குவனார் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் மேனாள் துணைத் தலைவர் பா.மருதநாயகம், சட்டத் தமிழ் இயக்குநர் முனைவர் பேராசிரியர் முத்துவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் மொழிப்போர் உரை வழங்கி அனைவரையும் வரவேற்றார். தமிழ்க் காதலன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக மூத்த இதழாளர் மணா இயக்கிய "உயிருக்கு நேர்" எனும் மொழிப்போர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் சங்க இலக்கியம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் பரப்புரையும் விழிப்புணர்வும், படைப்பாக்கமும்  செய்து வருகின்ற அறிஞர்களுக்கு இலக்குவனார் சங்கத் தமிழொளி,  சங்கத்தமிழ், சங்கத் தமிழ்மணி, இளமணி உள்ளிட்ட பல விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. மொழிப்போர் வரலாறு தொடர்பான பராசக்தி எனும் திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்காரா, திரைக்கதை எழுதிய அர்ஜுன் ஆகியோருக்கு சிறந்த திரைப்பட இயக்கத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் புலவர் ச.ந.இளங்குமரன் அவர்களுக்கு சங்கத்தமிழொளி விருதும், ஆசிரியர் இலட்சுமி குமரேசன் அவர்களுக்கு சங்கத் தமிழ்மணி விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வில் முனைவர் சோமசுந்தரி விருதாளர்கள் குறித்த தகுதிவுரை வழங்க, இ.திருவேலன் நன்றியுரையாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

Monday, 8 December 2025

உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் மாநாடு

உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் முதல் மாநாடு 2025  

06-12-2025 இன்று வெற்றிகரமாக, கோபி கலை அறிவியல் கல்லூரியில் உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவையின் தலைவரும் தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநருமான புலவர் ச.ந.இளங்குமரன் அவர்களது தலைமையில் உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவையின் செயலர் ஜெகஜீவன்ராம் அவர்களது முன்னிலையில் வெற்றிகரமாக நடந்தேறியது.

இம்மாநாட்டினை மதிப்பிற்குரிய மரபுப் பாவலர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு ச.கந்தசாமி ஐயா  அவர்கள் தொடங்கி வைத்து, புலவர் ச.ந.இளங்குமரன் எழுதிய "தொல்காப்பியத் தேன்" கவிஞர் தி.மீரா எழுதிய மீராவின் பார்வையில் தொல்காப்பியம், கவிஞர் கோ.லதா எழுதிய தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டும்,  சாதனையாளர்களுக்கும், கவியரங்கில், கருத்தரங்கில், கலைநிகழ்ச்சிகளில்  பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்து விழாப் பேருரையாற்றினார். 

கோபி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு வேணுகோபால் அவர்கள் தலைமை உரை வழங்க, தமிழ்த் துறைத் தலைவர் மு.கருப்புசாமி அவர்கள் வரவேற்புரையில் தமிழ்த் துறைப் பேராசிரியர் தெய்வேந்திரன் அவர்களது நெறியாள்கையில் அகில இந்திய உலக சாதனைப் பதிவு புத்தக நிறுவனத் தலைவர் செ.வெங்கடேசன் அவர்கள் மாநாட்டின் நோக்க உரை வழங்ககினார். 

கவியரங்கில் 10 கவிஞர்களும் கருத்தரங்கில் எட்டுப் பேரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடந்தேறின. பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த அறிஞர் பெருமக்கள் என 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துணைத்தலைவர் அதனி அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

(குறிப்பு : இந்த மாநாட்டில் பங்கேற்ற சாதனையாளர்கள், கவிஞர்கள், கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்தோர் என யாரிடமும் எந்தப் பணமும் பெறாமல் நடத்திய நிகழ்வு இது)

இனிய அன்புடன்
 ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.
உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவை.

Saturday, 29 November 2025

திருக்குறள் நெறியில் திருமணம்

மனிதநேய இல்லவிழா....
திருக்குறள் நெறியில் திருமணவிழா...

மணமக்கள் :
செல்வி க.சர்மிளா
செல்வன் : சா.பிரசாத்.

மனிதநேயக் காப்பகத்தின் முதல் திருமண விழா. தன் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையைச் சாதித்துக் காட்டிய மதிப்பிற்குரிய காப்பகத்தின் இயக்குநர் அண்ணன் பால்பாண்டி அவர்களுக்கு பேரன்பும் வாழ்த்தும். தான் பெற்ற குழந்தையைப் படிக்க வைத்து, பணியில் அமர வைத்து, திருமணம் செய்விப்பவரைத் தான் இதுவரை பார்த்திருக்கின்றோம். ஆனால் தான் பெறாமல் பெற்ற குழந்தைக்கு ஒரு தந்தை என்னென்ன கடமைகள் செய்ய முடியுமோ அதை விடப் பன்மடங்கு மேலாகச் செய்து காட்டி இருக்கின்ற  மனிதநேயருக்குப் பின்புலமாக உள்ள மனித தெய்வங்களாம் உதவும் உள்ளங்களை வணங்குகிறேன். காப்பகத்தில் இருக்கின்ற அத்தனை பேரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு திருமண விழாப் பணியில் ஈடுபட்டிருந்தது இன்னும் சிறப்பு. எங்கள் காப்பகச் செல்வங்களை நெஞ்சார வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.  உயர் நீதிமன்ற நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், கல்வியாளர்கள், தேனி மாவட்டத்தின் முதன்மையான தொழில் முதலாளிகள், சாமான்ய மக்கள், பொதுநல அமைப்புகள், எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த விழா.  வசந்தம் மகால் முழுமைக்கும் நிரம்பி வழிந்த கூட்டம், நிற்பதற்குக் கூட இடமில்லாமல் ஒரு மிகப்பெரிய திருவிழாவில் கூடிய கூட்டத்தை விட அதிகம். அவ்வளவு பெரிய கூட்டத்தை அரை மணி நேரம் கட்டி வைத்தது தமிழ். ஆம் அதுதான் திருக்குறள் வழியில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வு. தமிழ்நாடு முழுமைக்குமாக திருக்குறள் நெறியில் நானூருக்கும் மேற்பட்ட திருமண நிகழ்வுகளை நடத்தி வைத்திருந்த பொழுதும் இந்த நிகழ்வு என்னை நெகிழ வைத்ததும் உருக வைத்ததுமான நிகழ்வாகவே பார்க்கிறேன். அனைவருக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்...

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுனர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.
பேச : 9842370792
23-11-2025

தமிழ்க்கூடல் விழா ஒக்கரைப்பட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் ஒக்கரைப்பட்டி #அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற #தமிழ்க்கூடல் விழாவில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் (புலவர் ச.ந.இளங்குமரன்) கலந்து கொண்டு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு உரை வழங்ககினேன். விழாவில் மாணவ மாணவிகள் 17 பேர் பேச்சு, கட்டுரை, ஓவியம் எனப் பல்வேறு விதமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தனர். அவர்களில் பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த வர்சிதா, மனிசா, பிரணிதா ஆகிய மூன்று மாணவிகள் விழா மேடையில் பேசினர். மொழி ஆளுமையும், எழுத்து உச்சரிப்பும், உடல் மொழியும், தமிழ் மொழியின் செறிவும்  நிறைந்து கிடந்தன. அந்தக் குழந்தைச் செல்வங்களுக்கும், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் என்னுடைய நிறை வாழ்த்து. மேலும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகளும்,  வையைத் தமிழ்ச் சங்கம், தேனி   திருக்குறள் நூல்களையும் வழங்கி வாழ்த்தினேன். பின்பு ஒரு மாணவி அருகில் வந்து என்னுடைய தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு என்னோடு ஒளிப்படம் எடுக்க விரும்பினார். எடுத்துக்கொண்டோம். நான் மேற்கொண்டு ஏதாவது படிக்கின்ற பொழுது எனக்கான உதவிகள் செய்ய முடியுமா? என்று கேட்டார். படிப்புத் தொடர்பாக என்னால் இயன்ற உதவியினைக் கட்டாயம் செய்வேன் என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தேன். விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முதுகலைத் தமிழாசிரியர் சுசீலா அம்மா அவர்களுக்கும், இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி.

இனிய அன்புடன் ச.ந.இளங்குமரன்.

Monday, 17 November 2025

தொல்காப்பியம் முற்றோதல்

16 11 2025 இன்று சிவகாசி அருகில் தனியார் கல்லூரியில் தொல்காப்பிய முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. சென்னை மாநகராட்சி இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வையைத் தமிழ்ச்சங்கம் தேனி உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவை, அகில இந்திய சாதனைப் பதிவு புத்தக நிறுவனம், மதுரைத் தொல்காப்பியர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளிலிருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் பத்தாம் வகுப்புப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவி செல்வி ப.உமாகேஸ்வரி மிகச்சிறப்பாகத் தொல்காப்பியம் முழுவதையும் 144 நிமிடத்தில் முற்றோதல் செய்தார்.

செல்வி உமா மகேஸ்வரி அவர்களுக்கு அகில இந்திய உலக சாதனைப் பதிவுப் புத்தக நிறுவனம் சார்பில் உலக தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவைத் தலைவர் புலவர் ச.ந.இளங்குமரன், ஒருங்கிணைப்பாளர் சி.கலைவாணி ஆகியோர் இணைந்து "இளம் சாதனையாளர்" எனும் விருது வழங்கிச் சிறப்பித்தனர். நிறுவுநர் செ.வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு நன்றி. 

இந்த மாணவியை ஈராண்டு காலமாக உருவாக்கிய ஆசிரிய இணையர் திருமதி சான்சிராணி -  இராசசேகர் ஆகியோர் மிகவும் போற்றுவதற்குரியர். இவ்விணையர் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்காக ஆசிரியராகப் பணி செய்துவிட்டு இயல்பாக அவரவர் பணியைப் பார்க்கலாம். ஆனால் உண்மையாகவே ஒரு ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்று உணர்ந்து திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் முற்றோதல் எனத் தொடர்ச்சியாக மாணவச் செல்வங்களை உருவாக்கி வருவதோடு, அவர்களது முற்றோதலுக்கும் காரணமாக இருந்து உயரிய பரிசையும்  தங்களுடைய சொந்தப் பணத்திலிருந்து வழங்குவது நம்மை வியக்க வைக்கிறது,  மெய்சிலிர்க்க வைக்கிறது.  இவ்விணையருக்கு நெஞ்சம் நிறை வாழ்த்து. 

எங்களோடு தொல்காப்பியர் மன்றத் தலைவர் அ.இருளப்பன், பொருளாளர் சக்கையா செயலாளர் கரு.முருகேசன், வையைத் தமிழ்ச்சங்கத்தின் அரசியல் நாயகன் என் இளவல் பா.செல்வக்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

அனைவருக்கும் பேரன்பும் வாழ்த்தும். 

புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
தலைவர் உலக தொல்காப்பியச் சாதனையாளர்கள் பேரவை.