இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 23 August 2024

திருக்குறள் நெறியில் திருமணம் - ச.ந.இளங்குமரன்

மூன்று நாடுகளை இணைத்த 
#முப்பால்திருமணம்

மணமக்கள் 
#ஜெ.#சக்திவேல் (எ) அலெக்சு பாண்டியன் - போடி தேனி மாவட்டம்

#கோ.#சசிதா - சுகார்போரோ ஒன்றாரியோ, ரொறன்ரோ, கனடா.

காதலாகி கசிந்த இவர்களது திருமணம் பெற்றோர்கள் ஒப்புதலோடு, சான்றோர் முன் உறுதி ஏற்று, திருக்குறள் நெறியில் தேனி வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் ச.ந. இளங்குமரன் அவர்களால்  நிகழ்த்தப்பட்டது. 

தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற இத்திருமணம், மனம் நிறை மகிழ்வோடும், நெகிழ்வோடும் நெஞ்சில் நிற்கக் கூடியதாக இருந்தது. 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனடா நாட்டின் தமிழுறவுகள் குடும்பம் குடும்பமாக வந்து குழுமி இருந்த நிகழ்வு. உள்ளூரிலிருந்து மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் உறவு முறையினர் மிகச் சிறக்கப் பங்கேற்ற நிகழ்வு. 

சுமார் ஒரு மணி நேரம் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும், நிகழ்வுக்கு வந்திருந்த சான்றோர் பெருமக்களும், அமைதி காத்து முழு ஒத்துழைப்பு வழங்கிய நிகழ்வு இது. மணமக்களின் முழுமையான தமிழ்ப்பற்றும் மக்களின் வாழ்வு நலன் கருதி பெற்றோர்கள் அளித்த முழுமையான ஒத்துழைப்பும் மறக்கவியலாது. 

திருமண வழிபாட்டு முறை குறித்து நான் ஒவ்வொரு முறையும் பேசும்போது குழுமியிருந்தோர் மிகு உற்சாகத்தோடு கைதட்டியும், ஆர்ப்பரித்தும் வியந்ததுமான நிகழ்வு. 

திருமண விழா நிறைவுக்குப் பின்பாக மேடைக்கு முன்பிருந்த சான்றோர் பெருமக்கள் பலரும் அருகில் வந்து திருமண முறை குறித்து வியந்து பேசி, கை கொடுத்து, வாழ்த்துச் சொல்லி எங்கள் இல்லத் திருமணமும் இப்படியே நடைபெற வேண்டும் என்று தொடர்பு எண் பெற்றுக் கொண்டதுமான நிகழ்வு இது. 

தமிழீழ உறவுகள் மொழி குறித்து அளவளாவிப் பேசி உற்சாகத்தோடு தற்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு. மணவீட்டார் இருவரும் ஒத்த உணர்வோடு திருமண மேடையில் எனக்கும் மாலையிட்டு மதிப்பு செய்து நிகழ்வு இது... எனக்குநானே வியந்த நிகழ்வு.  

மணமகனின் உடன்பிறப்பான ஜெகதீசு பாண்டியன்,  சொக்கலிங்கம் உட்பட அனைவரது விருந்தோம்பும் பண்பும்,  மணமகளின் அண்ணன் மாமா என அனைத்து உறவுகளின் பாசப் பிணைப்பும் ஏதோ திரைப்படத்தில் பார்த்தது போன்றே இருந்தது. அன்பும் பாசமும் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்குச் சான்றாக நடந்து இத்திருமணம் மூன்று நாடுகளைச் சேர்ந்த உறவுகளை இணைத்து,  முப்பால் திருமணமாக மலர்ந்து நெஞ்சில் நிறைந்தது. இத்திருமணம் திருக்குறள் உலகப் பொதுமறை என்று மீண்டும் ஒரு முறை நிறுவக் காரணமாக இருந்தது. 

எல்லாப் புகழும் என்னுள் இருந்து இயங்கும் தமிழ்தாய்க்கும், என்னை வழிநடத்தும் ஆசான் மார்களுக்குமே உரியது.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.
98423 70792
நாள் 22-08-2024

Friday, 9 August 2024

தொல்காப்பியர் விருது

*தொல்காப்பியர் விருது*
தொல்காப்பியத் தொண்டர்களுக்கு அர்ப்ணிக்கின்றேன்... புலவர் ச.ந.இளங்குமரன்.

1-தொல்காப்பியர் விருது
2-உலக தொல்காப்பிய சாதனையாளர் பேரவையின் தலைவர். 

ஒரு புறம் விருது, ஒரு புறம் பதவி என இரு பெரும் பணியினை "அகில இந்திய சாதனைப் புத்தகப் பதிவு" (All India book of record) நிறுவனத் தலைவர் ஐயா செ.வெங்கடேசன் அவர்கள் அறிவித்திருக்கிறார்.

கடந்த 26-07-2024 முதல் 01-08-2024 வரை சுமார் ஏழு நாட்கள் நடைபெற்ற உலக தொல்காப்பிய பல்சுவை பன்னாட்டுச் சாதனை நிகழ்வின் வெற்றி விழாவில் இப்படி (ச.ந.இளங்குமரன்) எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டு வாக்கில் தற்போது மதுரைத் தொல்காப்பியர் மன்றத்தின் தலைவராக இருக்கின்ற இருளப்பன் ஐயா அவர்களும் நானும் பேசிக்கொண்டது "திருக்குறள் சென்று மக்களை அடைந்த அளவிற்கு தொல்காப்பியம் சென்று சேரவில்லை. தொல்காப்பியம் அனாதைக் குழந்தையாகக் கிடக்கிறது. அறிவாற்றல் மிக்க தொல்காப்பியர் தூக்கிச் சுமப்பாரின்றிக் கிடக்கிறார்.  அவரைத் தூக்கிச் சுமக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தொல்காப்பியத்தின் பெருமையை எளிய மக்களுக்கும் உணர்த்த வேண்டிய கடமை நம்கண்முன் நிற்கிறது" என்று.

அதன் தொடர் சிந்தனை செயல்பாட்டில் இருளப்பன் ஐயா அவர்களால் மதுரைத் தொல்காப்பியர் மன்றம் உருவாக்கப்பட்டது. தேனி வையைத் தமிழ்ச்சங்கம் நற்றமிழ்ப் புலனம் இணைப்பில் உலகத் தமிழ்க் கூடல் வழியாகப் பல்வேறு தொல்காப்பிய உரைகள் வழங்கப்பட்டு வந்தன. வையைத் தமிழ் சங்கத்தின் முன்னெடுப்பில் உலகின் முதன் முதலாக தொல்காப்பிய மனன முற்றோதல்  செய்யப்பட்டது.  இச்சாதனையை  முத்தமிழ் சாமினியும் செந்தமிழ் சாலினியும் நிகழ்த்திக் காட்டினர். இதனை முதல் உலக சாதனையாக அகில இந்திய சாதனைப் பதிவுப் புத்தக நிறுவனர் வெங்கடேசன் ஐயா  அறிவித்ததோடு உலககின் முதல் தொல்காப்பிய தூதர் எனும் உயரிய விருதினையும் வழங்கிச் சிறப்பித்தார்.  தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இச்சாதனைச் செல்வங்களைப் பராட்டி பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.  இதன்பின்பு ஆங்காங்கே தொல்காப்பியம் தொடர்பாகப் பேசப்பட்டது. வலைத்தளங்களில்  தொல்காப்பியம் தொடர்பான செயல்பாடுகள் பெருகத் தொடங்கின.

இதன் நீட்சியாக வேலூர் முத்தமிழ் சங்கமம், சியாம் கலை மற்றும் கைவினைக் கூடம், அகில இந்திய சாதனைப் பதிவுப் புத்தக நிறுவனம் இணைந்து உலக தொல்காப்பிய பல் சுவை பன்னாட்டுச் சாதனை நிகழ்வை முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்வில் சுமார் 13 நாடுகளிலிருந்து 30க்கு மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.  3300 க்கும் மேற்பட்டவர்கள் தொல்காப்பிய நிகழ்வில் கலந்து கொண்டு கவிதை கட்டுரை பட்டிமன்றம் உரை ஆய்வுரை ஓவியம் என வழங்கி தொல்காப்பியத்திற்குப் பெருமை சேர்த்துச் சிறப்பித்திருக்கின்றனர்.  2018 ஆம் ஆண்டு நாம் எண்ணிய எண்ணம் ஆறு ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறி இருக்கிறது. இந்த வெற்றி கண்முன்னால் நாம் கண்ட வெற்றியாகும். இதில் என் பங்கு என்பது மிகக் குறைந்த அளவே. இன்னும் நிறைந்த களப்பணிகள் உள்ளன.

இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மாணவர்களிடையே பெரும் மாற்றத்தை உருவாக்கியவர் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தமிழ்ப்பேரறிஞர் மொழிப்போர் மறவர் சி.இலக்குவனார் என்பது குறிப்பிடத்தக்கது. இலக்குவனார் அவர்களது தமிழ்க்காப்புக் கழகத்தின் செயலாளராக விளங்கியவர் எமது ஆசான் செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் அவர்கள்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் மொழி தொடர்பாக எந்த ஒரு எழுச்சியோ முன்னெடுப்போ இல்லாமல் இருக்கிறது என்பதை சில களப்பணிகளின் மூலம் அறிந்தேன். அங்கங்கே சில தமிழ் அமைப்புகள் பணி செய்தாலும் கூட மாணவர்களிடத்திலோ மக்களிடத்திலோ மாற்றத்தைக் கொண்டுவர இயலவில்லை. அதற்கான அரசியல் சூழலும் இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக, தமிழ் இனவியல் தொடர்பாக, தமிழ் வரலாறு தொடர்பாக இயன்றவரை இளைய தலைமுறையினரிடம் இவறைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற தீராத அவாவின் விளைவாகவே வையைத் தமிழ்ச்சங்கம் எனும் அமைப்பு 2005 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதன் வழியாகச் செய்து வரும் பல்வேறு தமிழ்ப்பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பியப் பணியும். இதில் பல்வேறு தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகளது கூட்டு முயற்சியால் கிடைத்த சிறு வெற்றிதான் தொல்காப்பியச் சாதனை என்பது.

இந்நிலையில்தான் தொல்காபியர் விருதும் பொறுப்பும் எனக்கு  அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு நான் தகுதியானவனா? என்று என்னையே கேள்வி கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் தமிழ்ப்பணிக்கான கூடுதல் பொறுப்பும் இருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன். இத்தொல்காப்பிய விருதினை தொல்காப்பியம் பரப்புதல் தொடர்பாகப் பணி செய்து வருகின்ற அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன். தொல்காப்பியர் விருதினை எமக்கு வழங்க முன் வந்த வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகின்றேன்.

இனிய அன்புடன்
புலவத் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

"அனல்". ச.ந.இளங்குமரன்

அனல்

இத்தூய செந்தமிழ்ச் சொல்லை வடசொல் என்றே சில அறிஞர்கள் எண்ணுகின்றனர். 

அனல் என்பது தன்னைச் சார்ந்த அல்லது தன்னை ஒட்டிய எதனையும் எரிப்பதும், அழிப்பதும், கரியாக்குவதும் அனல் ஆகும்.

தன் முன் வைத்தது என்னவாயினும் அதனை உண்டு அழிப்பது அனல்.

இவ்வனலானது சமைக்கவும் கருவிகள் அமைக்கவும் ஒளி வழங்கவும் குளிர் போக்கவும் உதவுகிறது என்றாலும் அதன் முன்னுள்ள பொருளை அதன் தன்மையை அகலச் செய்தலை விடாமல் இருக்கிறது.  அரிசி காய்கறி ஆகியவற்றைப் பக்குவப்படுத்தினாலும் அவற்றின் இயல்பை மாற்றி அமைத்தலை எண்ணினால்  உண்மை நமக்கு தெற்றெனப் புலப்படும்.

நமது தமிழ்நாடு வெப்பமண்டில பகுதி. இவ் வெப்பமண்டிலப் பகுதியில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தேய்ந்து பொருந்துதல் வழியாக தீ உண்டாவதைத் தெளிய உணர்ந்து தீ யினுக்குரிய பல்வேறு அடிப்படையான பெயர்கள் பலற்றையும் உருவாக்கிக் கொண்டனர். 

தழு > தழு + வு > தழுவு
தழு + அல் > தழல்

கய் (இது பொருந்துதல் கருத்து வேர்) 
கய்+அல்>கயல்>கஞல்
கஞலுதல் = நெருங்குதல்  "புதுமலர் கஞல"  (புறம் :143) கஞல் > கனல் > அனல்

தகு : பொருந்து, சேர் 
தகு + அம் > தகம் : நெருப்பு
தகு + அனம் > தகனம் எரிப்பு
தகனம் எனும் சொல் இன்றும் சிற்றூர்ப் புறங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இறந்து போன ஒருவரின் உடலை எரிப்பது தொடர்பாக அவர் உடலை தகனம் பண்ணியாச்சா என்று கேட்பது வழக்கம். அனல் அது தூய செந்தமிழ்ச் சொல்லே அன்றி வடசொல் அல்ல...

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார்
சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்களது நேரிய நெறியில்...

இனிய அன்புடன் ச.ந.இளங்குமரன்.
09-08-2024