தெருவெங்கும் தமிழ் வளர்ப்போம்.
ஆட்சிமொழிச் சட்டத்தில் தமிழும் உண்டு
ஆட்சியர்கள் தமிழாலே வளர்ந்த துண்டு
காட்சியிலும் ஆட்சியிலும் தமிழ்தான் இல்லை
கச்சியிலும் கல்வியிலும் தமிழே இல்லை
பாட்டினிலும் பைந்தமிழைக் காண வில்லை
பாட்டெழுதும் ஏட்டினிலும் தமிழே இல்லை
வீட்டினிலும் வெளியினிலும் தமிழைக் காணோம்
வீழ்ந்தனையோ நீதமிழா எங்கே மானம்?
ஆண்டுகளோ ஒருபோதும் நிற்ப தில்லை
அகவையதும் அவ்வாறே மாற்ற மில்லை
ஆண்டவரும் ஆள்பவரும் தமிழைக் காவார்
அந்நியரும் அடிமையரும் அதுபோ லாவார்
மீண்டுமொரு புரட்சியொன்று தேவை இங்கு
மீட்டிடுவோம் தமிழ்த்தாயை சினந்து பொங்கு
மாண்புநிறை தமிழ்மக்காள் வாரீர் வாரீர்
மண்டுதமிழ்க் காத்திடுவோம் விரைந்து வாரீர்.
கற்றாரின் உள்ளமெலாம் களிப்புற் றாட
கவியருவி மனதுக்குள் கட்டற் றோட
உற்றாரும் உறவினரும் உவந்து போற்ற
உலகாண்ட தமிழ்த்தாயின் உள்ளம் தேற்ற
அற்றாரின் அழிபசியைத் தீர்க்கும் வண்ணம்
அருந்தமிழை வளர்த்திடுதல் நம்மின் எண்ணம்
வற்றாத வாரியெனத் திரண்டு வாரீர்
வண்டமிழைத் தெருவெங்கும் வளர்க்க வாரீர்!
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.